Tuesday, January 28, 2025

கைவிடேன் உனையே

அருட்பெருஞ்ஜோதி                    அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 

கைவிடேன் உனையே
(திரு ருதூர் ராமலிங்க பிள்ளை)


தூங்காமல் தூங்கும் தூக்கம் அறியேன்
            திருவருட் பாக்காட்டும் திசை அறியேன்
ஓங்கி உத்தமனாகும் ஓட்டம் அறியேன்
            ஒன்றினில் ஒன்றிய ஒருவனை அறியேன்
ஏங்கிய ஏக்கமெலாம் ஏனென்று அறியேன்
            என்பெயரும் உயிரும் நீஎன்று அறியேன்
காங்குவாய் ஆகாயக் காட்சியை அறியேன்
            கருத்தில்லேன் எனினும் கைவிடேன் உனையே. (26012025)



 
நிலைத்து உடல் நிற்குமென நாளும்
            நன் மார்க்கம் நடக்க அறியேன்
மலைசுற்றி வந்தும் மாநதிகள் நீராடியும்
            முக்கூட்டில் மனம் மறைய அறியேன்
சிலை வழிபாட்டில் சிவனைத் தொழுது
            சவம் ஆவதே சைவமென அறியேன்
கலை உறைத்த கற்பனையால் மதி
            கலங்கினே னாயினும் கைவிடேன் உனையே. (27012025)



 
சாத்திரச் சடங்குகள் சாதி சமயங்கள்
            சொல்லும் சூத்திரங்களின் சூது அறியேன்
பூத்திருக்கும் பூக்களால் பூஜை செய்தும்
            பூஎழில் மாறாமல் பார்த்து அறியேன்
கூத்தாடி கூத்தாடி கூடு உடைந்தாலும்
            கூற்றை எதிர்க்கும் காற்றை அறியேன்
காத்திருக்க இலவங் காய் பழுக்கறியேன்
            காரிருளுள் சென்றாலும் கைவிடேன் உனையே. (27012025)



 
பேயென அலைந்தேன் பாரினில் பிறர்புகழ
            பொய்யாய் நடித்தேன் பேரருள் அறியேன்
நாயென மலத்தையே நாடி உண்டேன்
            நாதன் உள்ளிருப்பதை நொடியும் அறியேன்
தாயெனத் தலைவன் தாங்கும் திறத்தையும்
            தான்நானாகும் அறத்தையும் தழைக்க அறியேன்
காயெனக் கசந்தேன் காமத்தில் விழுந்தேன்
            காயமே வீழினும் கைவிடேன் உனையே. (27012025)



 
மண்ணில் மங்கையர் மணம் புரியுமொரு
            மாந்தராய் இல்லாதெனை மீட்டத்திறத்தை அறியேன்
எண்ணத்தில் நிறைத்து என்னுயிர் வளர்த்தும்
            எங்குமாய் விளங்கும் என்னுறவை அறியேன்
உண்மை உரைக்கவே ஊமைஎனை பேசும்
            உயிராய் உருவாக்கிய உன்னருளை அறியேன்
கண்ணில் நீர்ப்பெருகி குருவைப் பாடிக்
            களிக்க இயலேனெனினும் கைவிடேன் உனையே (27012025)





இன்றிருக் கின்றேன் என்றிறப் பேனென்று
            ஏதும் அறியேன் என்றும் இறவாவரம்
அன்பர்க்கே கொடுப்பாய் என்றிருக்க எனது
            ஐம்பது அகவையிலும் என்மீது ஐயமோ
உன்னை அறியேன் உன்செயலை அறியேன்
            உண்மை அறியேன் உயிரை அறியேன்
கன்றாகினும் மடியறியாது கலங்கிப் பசியால்
            குலைந்தே னாயினும் கைவிடேன் உனையே. (31012025)

கல்வி அறியேன் கலைகள் அறியேன்
            கற்றது எதிலும் கடவுளை அறியேன்
வல்லான் தனைஏற்கும் வந்தன மறியேன்
            வன்மனக் குரங்கின் வீரியம் அறியேன்
நல்லான் எனநடிக்கும் நாடகமும் அறியேன்
            நன்றியெனச் சொல்ல நாயகனை அறியேன்
கல்லென இருந்தேன் கருநிலை கடவேன்
            குருடன் என்றாயினும் கைவிடேன் உனையே. (11022025)


திருக்கோயில் அறியேன் திருக்கதவம் அறியேன்
            தனித்திருக்க அறியேன் தன்நிலை அறியேன்
பெருமந்திரம் அறியேன் பெரும்புகழ் அறியேன்
            பெருவாழ்வு அறியேன் பெண்ணின்பம் ஒன்றே
சருமத்தில் காணும் சழக்கை விட்டறியேன்
            சபலத்தால் அலைந்தேனெனினும் சாமி உந்தன்
கருணை நிறைந்ததென் கடவுள் பிறந்துவிட்டார்
            கடலூர்வட லூராகியதினி கைவிடேன் உனையே. (17022025)


 
 
-TMR


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.