மாதப்பூசம் - 2026
Wednesday, December 10, 2025
Tuesday, December 9, 2025
பஞ்சாக்கரம்
பஞ்சாக்கரம்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
=++++++++++++
வள்ளலார் தமது உரைநடை நூலில் தலைப்பு எண்-52-ல் பஞ்சாக்கரம் பற்றி சற்று விளக்கி சொல்லியிருப்பார். அந்தத் தலைப்பை நாம் இங்கு இன்னும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.அதற்கு
முன்னர் நாம் சன்மார்க்கம் என்பதன் பொருளை அறிந்துக்கொண்டு பின்னர் பஞ்சாக்கரம் பற்றி
விளக்கினால்தான் நன்கு புரியும்.
சைவ சமயத்தில்
மார்க்கம் என்பது நான்கு வகைப்படும், அவை;
1. தாச மார்க்கம்
2. சற்புத்திர மார்க்கம்
3. சக மார்க்கம்
4. சன்மார்க்கம்
முதல் மூன்று நமக்கு தேவையற்றதாக உள்ளதால், நான்காவதாக உள்ள சன்மார்க்கத்தைப் பற்றி மட்டும் இங்கு பார்க்கலாம்.
சத்மார்க்கம் (உண்மை துவாரம் / வழி) என்பதே சன்மார்க்கம் என்று மருவியது என்க. சத்து என்னும் பொருளின் உண்மையை தெரிவிக்கின்ற மார்க்கமே சன்மார்க்கம். எல்லாம் வல்ல சர்வ சித்தியோடு ஞான சித்தியை பெறுதல்,
"நெல்லை விளைவித்தான்" என்பதன் பொருள், நிலத்தை சீர் செய்து, உரமிட்டு, உழுதல் தொடங்கி, அரிசியை அண்ணமாக்கி அனுபவிக்கும் காலம் வரை அச்சொல்லில் அடங்கியிருப்பது போன்று,
சன்மார்க்கம் என்பது சாதாரணம் முதல் அசாதாரணம் ஈறாக அடங்கிய பொருள் எனக் கொள்க.
நாம் தற்போது சன்மார்க்க வகைகளைப் பற்றி பார்க்கலாம்.
சன்மார்க்கம் மூன்று வகைப்படும் என்று வள்ளலார் கூறுகிறார், அவை :-
1. சமய சன்மார்க்கம்
2. மத சன்மார்க்கம்
3. சுத்த சன்மார்க்கம்
1. சமய சன்மார்க்கம் என்பது, சத்துவகுணத்தைச் சார்ந்து விளங்குவது சமய சன்மார்க்கமாகும். அதாவது,
# சத்போதம் - உண்மையான அறிவு / ஞானம் / போதனை - விளக்கம்
# சத்கர்மம் - உண்மையான ஒழுங்கு / சீர் /
முறைமை
# சத்சங்கம் - உண்மையான கூட்டம் / கழகம்
# சத்காலம் - உண்மையான நேரம் / பொழுது
# சத்விசாரம் - உண்மையான ஆராய்ச்சி /
சிந்தனை / எண்ணம் / யோசனை
# சத்பாத்திரம் - உண்மையான உறுப்பினர் /
ஒருமையுள் ஒன்றிவிடும் நபர்
# சத்ஜனம் - உண்மையான மக்கள் /
பிறப்புகள்
# சத்செய்கை - உண்மையான வெளிப்பாடு
மேற்கண்ட எட்டு வகைகளும் சத்துவ குணத்தை சார்ந்தது,
# கொல்லாமை
# பொறுமை
# சாந்தம்
# அடக்கம்
# இந்திரிய நிக்கிரகம் - (ஐம்
பொறிகளையும் அடக்கி ஆளுதல்)
# ஜீவகாருண்யம்
மேற்கண்ட ஆறு வகைகளும் சத்துவ குணத்தின் இயல்பாகும் / குணமாகும். இவ்வகை உண்மையைக் கொண்டு சத்துவகுணத்தின் இயல்புகளை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம் ஆகும்.
சமய சன்மார்க்கத்தின் / சத்துவ குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-
1. தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல்
2. புத்திரனாகப் பாவித்தல்
3. சிநேகிதனைப் போலப் பாவித்தல்
4. தன்னைப்போலப் பாவித்தல்
இது ஜீவ நியாயமாகும்.
2. மத சன்மார்க்கம் என்பது, நிர்க்குண லட்சியம் செய்வதாகும்.
நிர்குணம் என்பது யாதெனில், மேற்படி சமய சன்மார்க்கத்தின் எண் குணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் (சொல் அனுபவம்) பெற்று அதிலிருந்து மேலேறி லட்சியானுபவம் (பொருள் அனுபவம்) பெறுதல் ஆகும்.
லட்சியம் / லட்சியானுபவம் யாதெனில்,
# சிவோகம் / சிவமே நான் என பாவித்தல்
# தத்வமசி / தத்துவ வடிவன்
# சிவத்துவமசி / சிவம் நீ ஆனாய்
என்னும் மேற்படியான வாக்கியத்தில் அமைந்த முக்கிய அனுபவமாகும்.
முக்கிய அனுபவம் என்பது, மத சன்மார்க்கத்தின் / நிற்குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-
1. தான் கடவுளுக்கு அடிமையாதல்
2. தான் கடவுளுக்கு புத்திரனாதல்
3. தான் கடவுளுக்கு சிநேகனாதல்
4. தான் கடவுளுக்கு நிகராதல்
(கடவுளேதானாதல்)
இது சத்துவ மற்றும் நிற்குணத்தின் / சமய மற்றும் மத சன்மார்க்கத்தின் அனுபவம்ஆகும்.
சமய சன்மார்க்கம் என்றால் என்ன? மத சன்மார்க்கம் என்றால் என்ன என்பதை ஒருவாறு பார்த்தாயிற்று. இனி நாம் பஞ்சாக்கரம் பற்றி பார்ப்போம்.
பஞ்சாக்கரம் அல்லது பஞ்சாசஷரம் என்பது,
சாக்கரம் என்றால் நினைத்தல்,
ஷரம் என்றால் தொடர்ச்சியாக.
பஞ்ச என்றால் ஐந்து.
ஐந்தை தொடர்ச்சியாக நினைத்தல் என்பது பொருள்.
ஐந்து என்பது சி வா ய ந ம.
பஞ்சாக்கரம் என்றால் ”சிவாயநம” என்ற ஐந்து எழுத்தினை தொடர்ச்சியாக சிந்தை செய்தல் என்பது
பொருள். இந்த ஐந்தெழுத்தானது சமய சன்மார்க்கத்திற்கும் மத சன்மார்க்கத்திற்கும் உரியது.
‘சமயசூக்குமம்” என்று வள்ளலார் குறிப்பிடுவது “சமய சன்மார்க்க சூக்குமம்” எனப் பொருள்
படும்.
"சமயசூக்குமம்"
என்பதன் பொருள் – சமய சன்மார்க்கத்தில் குறிப்பிடும் மிக நுண்ணிய உடலைக் குறிக்கும்.
அதாவது ஒளி உடலைக் குறிப்பது சூக்குமம் ஆகும்.
"தாத்பர்யம்” என்றால் - மறைபொருள்
என்பதாகும்.
’சமயசூக்கும பஞ்சாசஷரத்தின் தாத்பர்யம்’ என்றால், “சமய மற்றும் மத சன்மார்க்கத்தின்
ஒளி உடல் கொண்ட சிவனை அல்லது சிவத்தை ஐந்தெழுதுக்கொண்டு சிந்திப்பதின் அல்லது வணங்குவதில்
மறைந்துள்ள உட்பொருள் என்ன?’ என்பதை விளக்குவதாகும்.
இவ்வாறு அந்த ஒளி உடலை ஐந்தெழுத்துக் கொண்டு வணங்குவதின் மறைபொருளாக அல்லது உண்மை பொருளாக
நான்கு உள்ளன.
1. பூர்வம் - முதன்மை
2. பூர்வ பூர்வம் - முதன்மைக்கும் ஆதியானது
3. உத்தரம் – மேன்மையானது
4. உத்தரோத்தரம் – மேன்மைக்கும்
உயர்வானது.
நாம் ஒருவரை
சந்திக்கும்பொழுது, “ஐயா வணக்கம்” என முதன்மையாக சொல்வோம் அல்லவா. அந்த முதன்மையே பூர்வம்.
“சிவாயநம”
என்றால், ”சிவனிற்கு வணக்கம்” என்று சொல்வதாகும். இது பூர்வம் / முதன்மை.
நாம் ஒருவருக்கு
வணக்கம் சொல்கிறோம் என்பதை சற்று ஆழ்ந்து நோக்கினால், அந்த நபரின் ஆதியான அவரது முன்னோர்களுக்கும்
சேர்த்துதான் நாம் ஒருவருக்கு வணக்கம் தெரிவிக்கிறோம் என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.
முன்னோர்கள் அருவம். நாம் வணக்கம் வைக்கும் நபர் உருவம். இவ்வாறு புரிந்து வணக்கம்
வைப்பவர்களின் வணக்கமானது பூர்வ பூர்வத்தை சார்ந்த வணக்கமாகும்.
அது போலவே பூர்வ பூர்வத்தில் “சிவாயநம’ என்றால்,
“அனாதியில் மலமில்லாத (அதாவது, ஆணவம், கன்மம், மாயை இல்லாத) எல்லாமுடைய சிவத்திற்கு
என்னுடைய கரண உள்ளங்களை ஒப்படைக்கிறேன். கரண உள்ளங்கள் என்பது மனம், புத்தி, சித்தம்,
அகங்காரம் ஆகும். இந்த நான்கினையும் “சிவாயநம” எனச் சொல்லி நான் சிவத்திடம் ஒப்படைக்கிறேன்
எனப் பொருளாகும். இந்த வணக்கமானது சற்று மேம்பட்டவர்களின் (அதாவது, பூர்வ பூர்வத்தை
நோக்குபவர்களின்) செய்கையாகும். இங்கே அவருக்கு சிவன் என்ற உருவம் மறைந்து சிவம் என்ற
அருவம் அனுபவமாகும்.
’சிவாயநம”
என்னும் ஐந்தெழுத்தை அதன் மேன்மை அறிந்து சொல்பவகள், சமய சன்மார்க்கத்தின் சத்துவ குணமும்
அதன் இயல்பும் அவர்களுக்கு கைகூடும். ஏம சித்தி உண்டாகும். அதாவது பொன் செய்யும் வல்லபம்
உண்டாகும். இது உத்தரம் ஆகும்.
‘சிவாயநம”
என்னும் ஐந்தெழுத்தை அதன் மேன்மைக்கும் மேன்மையாகக் கருதி நினைப்பவர்கள், சமய சன்மார்க்கத்தின்
அனுபவங்களை பெறுவார்கள். தேக சித்தி பெறுவார்கள். அதாவது சுத்த தேகம், பிரணவ தேகம்,
ஞான தேகம் ஆகிய மூன்று தேகங்களை பெறுவார்கள். இது உத்தரோத்தரம் ஆகும்.
இது போலவே
மத சன்மார்க்கத்திலும் “சிவாயநம” என்னும் ஐந்தெழுத்து வேலை செய்கின்றது.
மத சன்மார்க்கத்தில்
சிவாயநம என்பது பூர்வத்தில்,
சி-என்பது
பதி / இறைவன்
வா-என்பது
சத்தி / ஆற்றல் / அருள் வடிவம்
ய-என்பது
ஜீவன் / ஆன்மா
ந-என்பது
திரோதை / மறைப்பு
ம-என்பது
மாயை / பொய்
என்று
பொருள்படும். அதாவது, மாயை, மறைப்புகள் நீங்கி ஜீவ போதம் இல்லாது அருள் வடிவமாய்ச்
சிவமாவது. (எல்லாம் அவன் செயல் என சரணாகதி அடைவதே ஜீவ போதம் இல்லாது இருத்தல் ஆகும்.)
மத சன்மார்க்கத்தில் பூர்வபூர்வத்தில் ‘சிவாயநம” என்பது,
சி – என்பது
எல்லாம் உடையது
வா – என்பது
அபிந்நமாகிய அருள் (பிரிக்க முடியாத அருள்)
ய – என்பது
ஆன்ம சிற்சபை
ந – என்பது
ஜீவன்
ம – என்பது
பசு
பசுத்
தன்மை கெட்டு, ஜீவ போதம் போய், ஆன்ம இயற்கை வடிவாய்ச், சத்துவ மயமாய், எல்லாம் உடையதுவாய்ப்,
பூரணமாய் நிற்றல். அதாவது மத சன்மார்க்கத்தின் அனுபவமாகிய “நிர்குண லட்சியம்” உடையதாய்
விளங்குதல். இவர்கள் தேக சித்தி பெறுவார்கள். அதாவது சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான
தேகம் ஆகிய மூன்று தேகங்களை பெறுவார்கள்.
மத சன்மார்க்கத்தில்
உத்தரத்தில் சிவாயநம என்போர்க்கு, மேற்காணும் அனுபவங்களுடன் இவர்களுக்கு ஏம சித்தியும்
உண்டாகும். அதாவது பொன் செய்யும் வல்லபம் உண்டாகும்.
மத சன்மார்க்கத்தில் உத்தரோத்தரத்தில் சிவாயநம என்போர்க்கு,
ஏம சித்தியுடன், தேக சித்தியும் உண்டாகும். அதாவது சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம்
ஆகிய மூன்று தேகங்களை பெறுவார்கள்.
இறைவனிடம்
மன்றாடுதல், இறைவனிடம் பேசுதல், இறைவனுக்கு நன்றி சொல்லுதல், இறைவனிடம் வேண்டுதல்,
இறைவனை நாடுதல், இறைவனை போற்றி பாடுதல் இச்செயல்கள் எல்லாம் செபம் எனப்படும். இவ்வாறு
செபம் செய்து, அதன் மூலம் கரண சுத்தி வந்து, அசர முன்னுதலை விடுத்து (அதாவது மூச்சை
நிறுத்தும் பழக்கம் அதாவது ஜீவ சமாதி, சித்த வித்தை போன்றவைகளை விடுத்து), அறிவின்
மயமாய், கருணையும் சிவமுமே பொருள் என்னும்படி நிற்றலுக்கு முதல் துவாரமாய் இருப்பது
“சிவாயநம” என்னும் ’பஞ்சாக்கரம்” ஆகும். இவை எல்லாம் சமய, மத சன்மார்க்கத்தின் சடங்குகள்
ஆகும்.
சுத்த சன்மார்க்கம் என்பது, மேற்கண்ட
சத்துவகுணம், நிற்குணங்களின் வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின்
அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம் ஆகும்.
வள்ளலார் தெரிவித்த சுத்த சன்மார்க்கத்தில் பஞ்சாக்கரம் வேலை செய்யாது. சுத்த சன்மார்க்கத்தின் அனுபவமானது சமய மத சன்மார்க்கத்தின் அனுபவங்கள் அல்ல. ஆனால், சுத்த சன்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே அன்றி இல்லாதன அல்ல. அதாவது சமய மத சன்மார்க்கத்தின் அனுபவத்தை சுத்த சன்மார்க்கம் மூலம் அடைந்து, அதனையும் கடந்து மரணமில்லா பெரு வாழ்வு அளிக்கும் பேரணுபவமாகும்.
ஆனால், சமய மத சன்மார்க்கங்களில் பஞ்சாக்கர உதவியுடன் ஏம சித்தி, தேக சித்தியெல்லாம் பெறக்கூடியதாக உள்ளதே! பெற்றிருக்கின்றார்களே! எற்றால், அச்சித்திகள் எக்காலத்தும் தொடர்வன அல்ல. அந்தந்த சமய மத கர்த்தாக்களின் ஆயுள் வரையே அச்சித்திகள் நிலை பெற்றிருக்கும். அதற்கு மேல் இராது. மீண்டும் பிறப்பு இறப்பு உண்டு.
ஏம சித்தி, தேக சித்தி ஆகிய இரண்டு சித்திகள் யாவும், எக்காலத்தும் அழியாமல் இருப்பது சுத்த சன்மார்க்கத்தின் முதன்மையாகும். அதாவது பூர்வமாகும். சுத்த சன்மார்க்கத்தின் பூர்வ பூர்வம், சுத்த சன்மார்க்கத்தின் உத்தரம், சுத்த சன்மார்க்கத்தின் உத்தரோத்தரம் என்பவைகளின் சிறப்புகள் எப்படிப்பட்டன? அற்புதங்கள் எப்படிப்பட்டன? என்பதெல்லாம் வள்ளலார் குறிப்பிடவில்லை. நாம் முயன்றுதான் அதனை அனுபவிக்க வேண்டும்.
’சிவாயநம எனச் சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை”
“சிவாயநம என செம்பு பொன்னாயிடும்”
போன்ற சொல்லாடல்களை ஆதாரமாக வைத்து ஏம
சித்தியும், தேக சித்தியும் சூக்கும பஞ்சாக்கரத்தோடு இணைத்து சொன்னார்கள். ஆதலால்
பஞ்சாக்கரத்தை மகான்கள் குழுக்குறியாக, வரிவடிவமாக சுட்டினார்கள்.
பஞ்சாக்கர தத்துவங்களை அறிந்த அக அனுபவிகள் அனுசந்தானஞ் செய்வார்கள். அனுசந்தானம் என்பது இடைவிடாது ஓதுதல்.
பஞ்சாக்கர தத்துவங்களை அறிந்த சாதகர்கள் அதனை நாவினால் சொல்லி தங்களது கரணங்களை
ஒடுக்கி தத்துவ வெற்றியை எய்தக்கூடும்.
பஞ்சாக்கர தத்துவங்களை அறிந்த உலகிகள் அதனை நாவினால் சொல்லி அவரகளது ஆசைகளை இச்சைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்.
பஞ்சாக்கர தத்துவங்களை அறிந்த வகரவித்தை செய்பவர்கள், பவுதிகம் (ஐம்பூதங்கள்), லோகம் (உலோகங்கள்) ஓஷதி (மூலிகைகள்), லவணம் (உப்பு) முதலியவைகளை சேர்த்து தங்கம் செய்வார்கள்.
பஞ்சாக்கர தத்துவங்களை அறிந்த தகரவித்தை செய்பவர்கள், அதுபோலவே பவுதிகம், லோகம், ஓஷதி, லவணம் கொண்டு தங்களது தேகத்தை நீடிக்கச் செய்வார்கள்.
ஆதலால் பஞ்சாசஷரம் என்பது பரிபாஷை. அதாவது ஒரு குறியீட்டுச் சொல்லாகும்.
எனவே சுத்த சன்மார்க்கத்தில் மட்டுமே ஏம சித்திகளும் தேக சித்திகளும் எக்காலத்தும் விளங்குவதாய் உள்ளது. இதனது உண்மை யாவும் சுத்த சன்மார்க்க சகஜ சாத்திய ஞான அனுபவிக்களுக்கு மட்டுமே விளங்கும்.
(தி.ம.இராமலிங்கம்
– கடலூர்)
9445545475
சுபம்
for PDF
https://drive.google.com/file/d/1qst_M-_cBIKNTJonAG_zeUS8TJVBjbgd/view?usp=sharing

