Showing posts with label கடவுளும் கந்தசாமியும். Show all posts
Showing posts with label கடவுளும் கந்தசாமியும். Show all posts

Thursday, June 6, 2013

கடவுளும் கந்தசாமியும்

கடவுளும் கந்தசாமியும்






நண்பர்களே! நம்து கந்தசாமிக்கு நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம் இருந்துவந்தது. அந்த சந்தேகத்தை தீர்க்க கடவுளாள்தான் முடியும் என்று தீர்மானித்தார். எனவே கடவுளைச் சந்திக்க திட்டம் தீட்டினார். கடவுளே! எமது நீண்டநாள் சந்தேகத்தை தங்களால்தான் தீர்க்கமுடியும், எனவே நான் உங்களைச் சந்திக்க தங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கித் தரவேண்டும். பூலோகத்தில் ஒதுக்குவதுபோல பத்து நிமிடமெல்லாம் போதாது, ஒரு அரைமணி நேரமாவது ஒதுக்கும்படி தங்களடிபணிந்துக் கேட்டுக்கொள்கிறேன். அப்போதுதான் என்னுடைய சந்தேகத்தின் விளக்கத்தை தங்களிடமிருந்து நான் பெறமுடியும், என்று கடவுளுக்கு ஒரு மின்னஞ்சலை www.kadavul@goinner.com என்ற முகவரிக்கு தமது மடிக்கணினியிலிருந்து தட்டச்சுசெய்து அனுப்பிவைத்தார்.



இதனை படித்துப் பார்த்து கடவுளும் உடனே, அடுத்த வாரம் உங்களோடு அரைமணி நேரம் பூலோகத்தில் இருந்து உங்கள் சந்தேகத்தைப் போக்க யாம் வருகிறோம், என்று நமது கந்தசாமிக்கு மின்னஞ்சல் மூலம் நேரம் ஒதுக்கியதை தெரியப்படுத்திவிட்டார் கடவுள்.



கந்தசாமி எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. கந்தசாமியை கடவுள் வந்து சந்தித்தார். கந்தசாமியும் தமக்கு அரைமணிநேரமே உள்ளதால் வேறு எந்த பேச்சும் பேசாமல் உடனே தனது சந்தேகத்தை கடவுளிடம் கேட்க ஆரம்பித்தார்.



கடவுளே! இங்குள்ள அருளாளர்கள், 'இப்பூலோகத்தில் உள்ள பொருட்களெல்லாம் மாயை, ஏன் இந்த உலகமே ஒரு மாயைதான் என்கிறனர்'. அதற்கு அவர்கள் கூறும் எடுத்துக்காட்டு, 'நாம் உறங்கும்போது உண்டாகும் கனவுலகில் நடக்கும் நிகழ்ச்சிகள் அந்த கனவுலகை பொறுத்தமட்டில் நமக்கு உண்மையாகவே இருக்கிறது. கண் விழித்ததும் இப்பூலோக நிகழ்சிகள் நமக்கு உண்மையானதாக தெரிகிறது. கனவுலகில் நமக்கு ஏற்படும் தாகத்திற்கு கனவுலக தண்ணீர்தான் தீர்த்துவைக்கிறது. பூவுலகில் ஏற்படும் தாகத்திற்கு பூவுலக தண்ணீர் தீர்த்துவைக்கிறது. இவ்விரண்டில் எது உண்மை என்றால் இரண்டுமே மாயை என்கிறார்கள். ஏனென்றால் கனவுகத்தில் நாம் இருக்கையில் நமக்கு இப்பூவுலகம் மாயை. பூவுலகத்தில் நாம் இருக்கையில் நமக்கு இந்த கனவுலம் மாயையாய் இருப்பதால், இவையிரண்டுமே மாயைதான், மாயையை அறிய முடியாது என்கின்றனர்.'



என்னால் இதனை நம்பமுடியவில்லை. எனக்கு இந்த பூவுலகம் உண்மையென்றே தோன்றுகிறது. இது எவ்வாறு மாயை என்று சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. கடவுளே! தாங்கள்தான் இதற்கு ஒரு நல்ல தீர்வு சொல்லவேண்டும்.



அறியமுடியாத மாயையை நீ அறியமுயலுகிறாய்! உம்முயற்சிக்கு எமது வாழ்த்துகள்! வா, நாம் இருவரும் சற்று உலாவிக்கொண்டே சந்தேகத்தைத் தீர்ப்போம். இப்போது கடவுளும் கந்தசாமியும் நடக்க ஆரம்பித்தனர்.



கடவுள் பேசிக்கொண்டே நடந்தார், 'காரணம் இல்லையேல் காரியம் இல்லை. இங்கு காரணம் என்பது உண்மையாக உள்ளது, காரியம் என்பது மாயையையாக உள்ளது. காரணம் கடவுளாகவும் காரியம் கந்தசாமியாகவும் உள்ளன. காரியம் மட்டுமே அனைவராலும் பார்த்து அனுபவிக்கும்படி உள்ளதால் அது உண்மைபோன்று தோன்றுகிறது. அதற்கான உண்மையான காரணம் என்னவென்று அறிய யாரும் முற்படுவதில்லை. முற்பட்டவர்கள் அருளாளர்கள். எனவேதான் அவர்கள் காரியங்களை மாயை என்கின்றனர். கந்தசாமி காரணப்பட்டில் ஏன் பிறந்தான் என்ற காரணத்தைக் கடவுள் அறிவான். கந்தசாமியான காரியம் அறியுமா? இதுதான் மாயை.'



உடனே கந்தசாமி, ஐயோ, கடவுளே! எனக்கு சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை. புரியும்படி சொல்லுங்களேன், என்றார்.



இப்படியாக இருவரும் பேசியப்படியே வெகுதூரம் நடந்து வந்துவிட்டார்கள். கடவுளுக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. நடந்துவந்த களைப்பும் தாளாமல் கடவுள் அங்கேயே அமர்ந்துவிட்டார். (கடவுளுக்கு நடந்து பழக்கம் இல்லைபோலும். சொகுசு வாழ்க்கை வாழ்பவர்... ஹீம்...)



'கந்தசாமி, எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது, தயவுசெய்து எனக்கு எங்கேனும் சென்று குடிக்க தண்ணீர் கொண்டுவாருங்கள்,' என்றார் கடவுள்.



கந்தசாமி அடுத்த நொடியே, கடவுளுக்கே தாகமா? கடவுளே... கடவுளே... என்று சொல்லிக்கொண்டே தண்ணீரைத் தேடி ஓடினார்.



ஆனால், அருகில் எவ்விடத்திலும் கந்தசாமிக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே நீண்ட நேரம் தண்ணீரை தேடிக்கொண்டே சென்றார். அப்போது தூரத்தில் ஒரு ஆறு ஓடிக்கொண்டிருந்தது தெரிந்தது.



கந்தசாமி ஆற்றை நெருங்கியபோது, அங்கே கண்ணையும் கருத்தையும் ஐம்பொறிகளையும் கலங்கவைக்கும் கட்டழகு பொருந்திய ஒரு இளம் பெண் ஒருத்தி அமர்ந்திருப்பதை கண்டார். அவளைப் பார்த்த அடுத்த கணமே கந்தசாமிக்கு அவள்மீது காதல் ஏற்பட்டது. தனது அருகில் கந்தசாமி வந்ததும் அந்தப்பெண் தமது இனியக் குரலில் பேச ஆரம்பித்தாள். இருவரும் நேரம் போவதே தெரியாமல் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். முடிவில் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டார்கள்.



பிறகு கந்தசாமி அவளை திருமணம் செய்துக்கொண்டு இல்லற வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். ஆண்டுகள் பல ஓடின, இல்லறத்தின் விளைவாக கந்தசாமிக்கு ஆண்குழந்தை ஒன்றும் பெண்குழந்தை ஒன்றுமாக இரண்டு அழகான குழந்தைகள் பிறந்தன. அவைகள் அந்த அழகான ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீட்டில் துள்ளி விளையாடி மகிழ்ந்திருந்தன. இப்படியாக கந்தசாமி தனது அழகான மனைவி மற்றும் அன்பான குழந்தைகளுடன் குதூகலித்து தமது இல்லற வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாய் நடத்திவந்தார்.



இந்நிலையில் அந்நாட்டில் கொள்ளை நோய் பரவியது. இதன் காரணமாக அந்நாட்டில் பல ஆயிரம் பேர் செத்து மடிந்தார்கள். இந்த கொள்ளை நோய் மெல்ல மெல்ல அந்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவத்தொடங்கியது. இதனையறிந்த கந்தசாமி தமது அன்பான குடும்பத்தைக் காப்பாற்ற, தனது மனைவி குழந்தைகளுடன் வேறு தேசத்திற்குச் செல்ல முடிவெடுத்தார். அவரது மனைவியும் கந்தசாமியின் யோசனைக்கு சம்மதித்தார். எனவே கந்தசாமி தனது மனைவி குழந்தைகள் மூட்டை முடிசுகளுடன் இடம்பெயரத் தொடங்கினார். அந்த அழகான வீட்டையும் ரம்மியமான ஆற்றங்கரையையும் விட்டு போகவே கந்தசாமிக்கு மனம் வரவில்லை. வேறு வழியின்றி கனத்த இதயத்துடன் உயிருக்கு பயந்தும், தமது குடும்பத்தைக் காப்பாற்றும் கடமையும் இருந்ததால் அவ்விடத்தைவிட்டு அகன்றார்.



அவ்விடத்திலிருந்து வெகுதூரம் சென்றநிலையில் அடுத்த தேசத்தின் எல்லை வெகுதூரத்தில் கண்ணில்பட ஆரம்பித்தது. இதற்கிடையில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. அந்த ஆற்றின் குறுக்கே பாதி தொலைவில் மூட்டை முடிச்சுடன் தனது மனைவி, குழந்தைகளுடன் கடந்துக்கொண்டே இருக்கையில், திடீரென அந்த ஆற்றில், பக்கத்தில் உள்ள அணை உடைந்தக்காரணத்தால் யாரும் எதிர்பாராமல் வெள்ளம் வர ஆரம்பித்தது.



காட்டாற்று வெள்ளத்தில் கந்தசாமியின் குடும்பம் அகப்பட்டுக்கொண்டது. தனது இரு குழந்தையையும் காப்பாற்றுவதற்காக தனது கையில் இருந்த மூட்டை முடிச்சுகளையெல்லாம் ஆற்றின் நீரில் விட்டுவிட்டு தனது குழந்தைகளை இரு தோள்களிலும் தூக்கி வைத்துக்கொண்டு மனைவியையும் பிடித்துக்கொண்டு மெல்ல தள்ளாடி முன்னேறினார் கந்தசாமி.



தொடர்ந்து வந்த வெள்ளத்தில் கால் தடுமாறி தனது இரண்டுக் குழந்தைகளையும் கைதவறி வெள்ளத்தில் விட்டுவிட்டார். அந்தோ பரிதாபம்! தனது இரண்டு ஆசையான குழந்தைகளும் வெள்ளத்தில் அடித்துச் சென்றதை பார்த்து கந்தசாமி வ்வோஓஓஒ என அலறினார். சற்று நேரத்தில் தனது மனைவியும் வெள்ளம் அடித்து செல்வதை அவரால் தடுக்க முடியவில்லை. ஆனால் கந்தசாமி மட்டும் எப்படியோ நீச்சல் அடித்து மறுகரைக்கு வந்துவிட்டார்.



கந்தசாமிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. அவரது உள்ளம் இடிந்து விட்டது. தனக்கு இன்பத்தை அளித்து வந்த மனைவி எங்கே? ஆசை முகம் பார்த்துக்கொண்டே மழலை சொல் கேட்டுக்கொண்டே கொஞ்சி குலாவிய அழகான குழந்தைகள் எங்கே? ஐயோ அனைத்து இன்பமும் என்னைவிட்டு போய்விட்டதே என ஆற்றங்கரையில் உட்கார்ந்து கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.



அப்போது கடவுள் அவரது முன்னால் தோன்றி,



கந்தசாமி! தண்ணீர் கொண்டுவருகிறேன் என்றுச் சொல்லி சென்று, அரை மணிநேரமாகிறது! எங்கே தண்ணீர்? என்று கேட்டார்.



கந்தசாமிக்கு பகீர் என்று தூக்கிப்போட்டது. என்ன அரை மணிநேரம்தான் ஆனதா? அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டதா?



கந்தசாமிக்கு தாம் மாயையின் வலையில் சிக்குண்டதை உணரமுடிந்தது. உடனே கந்தசாமி கடவுளின் காலில் விழுந்து,



கடவுளே! மாயை என்றால் என்ன என்பதனை அரை மணிநேரத்தில் உணர்த்திவிட்டீர். மாயை எவ்வளவு துக்ககரமானது என்பதை நான் அறிந்தேன். இதிலிருந்து நான் மீண்டுவிட்டேன். இனி இந்த உலகியல் மாயையில் சிக்கி மாளமாட்டேன், என்றதும் கடவுள் விடைபெற்றுக்கொண்டார்.



அன்பர்களே! நாம் இங்குள்ள எதையும் பொருளாக பார்க்கவேண்டாம். இறைவனின் அருளை மட்டுமே எதிர்நோக்கியிருப்போம். இவ்வுலகியல்கண் பொன்னாசை, பெண்/ஆண் ஆசை, மண்ணாசை முதலிய எவ்வித இச்சையிலும் ஓர் அணுதுணையும் பற்று வைக்காமல், எல்லா உயிர்களையும் பொதுமையினால் நோக்கி எல்லா உயிர்களும் இன்பமடைதல் வேண்டுமென்ற கருணை நன்முயற்சியில், சுத்த சன்மார்க்கத் தனி நெறி ஒன்றையே பற்றிக்கொண்டு எக்காலத்தும் நாசமடையாத சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் என்னும் சாகா தேகங்களைபெற்றுக்கொண்டு, நமது சுதந்திரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரும் வல்லபமும், கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை ஞானமும் பெற்று இந்த மாயா உலகில் மாயையை என்னவென்று அறிந்து அதனையெல்லாம் வென்று என்றும் நித்தியமாய் வாழ்வோம்.



பண்டிருந்த

ஊரார் பிணத்தின் உடன்சென்று நாம்மீண்டு

நீராடல் சற்றும் நினைந்திலையே - சீராக

இன்றிருந்தார் நாளைக் கிருப்பதுபொய் என்ற்றவோர்

நன்றிருந்த வார்த்தையும்நீ நாடிலையே



நாழிகைமுன்

நின்றார் இருந்தார் நிலைகுலைய வீழ்ந்துயிர்தான்

சென்றார் எனக்கேட்டும் தேர்ந்திலையே - பின்றாது

தொட்டார் உணவுடனே தும்மினார் அம்மஉயிர்

விட்டார் எனக்கேட்டும் வெட்கிலையே



தட்டாமல்

உண்டார் படுத்தார் உறங்கினார் பேருறக்கம்

கொண்டார் எனக்கேட்டும் கூசிலையே - வண்தாரார்

நேற்று மணம்புரிந்தார் நீறானார் இன்றென்று

சாற்றுவது கேட்டும் தணந்திலையே



நோவின்றிப்

பாலனென்றே அன்னைமுலைப் பாலருந்தும் காலையிலே

காலன் உயிர்குடிக்கக் கண்டிலையோ - மேலுவந்து

பெற்றார் மகிழ்வெய்தப் பேசிவிளை யாடுங்கால்

அற்றாவி போவ தறிந்திலையோ



வேளைமண

மாப்பிள்ளை ஆகி மணமுடிக்கும் அன்றவனே

சாப்பிள்ளை யாதலெண்ணிச் சார்ந்திலையே - மேற்பிள்ளை

மாடையேர்ப் பெண்டுடனில் வாழுங்கால் பற்பலர்தாம்

பாடைமேல் சேர்தலினைப் பார்த்திலையோ



தொக்குறுதோல்

கூடென்கோ இவ்வுடம்பைக் கோள்வினைநீர் ஓட்டில்விட்ட

ஏடென்கோ நீர்மேல் எழுத்தென்கோ - காடென்கோ

பாழென்கோ ஒன்பதுவாய்ப் பாவையென்கோ வன்பிறவி

ஏழென்கோ கன்மமதற் கீடென்கோ



புற்கென்ற

வன்சுவைத்தீ நாற்ற மலமாய் வரல்கண்டும்

இன்சுவைப்பால் எய்தி யிருந்தனையே - முன்சுவைத்துப்

பாறுண்ட காட்டில் பலர்வெந் திடக்கண்டும்

சோறுண் டிருக்கத் துணிந்தனையே



மாறுண்டு

கூம்புலகம் பொய்யெனநான் கூவுகின்றேன் கேட்குமிகு

சோம்பலுடன் தூக்கந் தொடர்ந்தனையே - ஆம்பலம்னோர்

நல்வாழ்வை எண்ணி நயந்தோர் நயவாத

இல்வாழ்வை மெய்யென றிருந்தனையே

(திருஅருட்பா)



அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி