Monday, December 15, 2025

வேண்டுதல்

                                       அருட்பெருஞ்ஜோதி                          அருட்பெருஞ்ஜோதி
                                          தனிப்பெருங்கருணை                     அருட்பெருஞ்ஜோதி
 
                                                           எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

 
வேண்டுதல்
 
குற்றம் நினையாத மனமும்
            குறை வில்லாத அறிவும்
பற்று இல்லாத உலகும்
            பய மில்லாத நடையும்
சற்றும் கூடாத வயதும்
            சக்கை இல்லாத உணவும்
சுற்றம் சூழாத உடம்பும்
            சுத்த சித்தனாக வேண்டுவனே.
 
குற்றம் நினையாத மனம்:
 
‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற” மனதினில் மாசு படியாது இருத்தலே முதல் அறம். மற்றய அறங்களெல்லாம் அதற்குப் பிறகுதான் என்பார் திருவள்ளுவர். ”மனத்தால் செய்யும் பாவங்களுக்கு சண்டாளாதி சரீரம் (இழிவான பிறவிகள்) உண்டாகும் என்பார் வள்ளலார். ஆதலால் நாம் மனத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள முயற்சி செய்துக்கொண்டே இறைவனிடமும் வேண்டுவோம்.
 
குறைவில்லாத அறிவு:
 
அறிவு கடலுக்கு முன்னால் ஒரு மனிதன் என்னவாக நிற்கிறான்? “கல்வி கரையில கற்பவர் நாள் சில” என்பது நாலடியார். குறைவில்லாத சதம் நிறைந்த அறிவுடைய மனிதர் வள்ளலாரைத் தவிர வேறு யாருமில்லை. அதனால்தான் அவர் பூரண அறிவை வணங்க வேண்டுமென வடலூரில் ஞான சபை எழுப்பி அருளினார். அறிவு தேகமும் (ஞான தேகம்) ஆனார். வள்ளாருக்கு முன்பிருந்த எவரும் அறிவுக்கு என ஒரு அமைப்பை இவ்வுலகில் ஏற்படுத்தவில்லை. அறிவு விளங்கியவர்களுக்கு ’உயிர் இரக்கமே” கடவுள் வழிபாடு என்பார் வள்ளலார்.
 
எனவே வள்ளலாரைப் போன்று குறைவற்ற அறிவை நாம் இறைவனிடம் வேண்டுவோம்.
 
பற்று இல்லாத உலகம்:
 
உலகியல் என்பது ஒரு மாமாயை. நாடு, மொழி, கலாச்சாரம், அரசியல், சட்டம், மதம், இனம், ஜாதி, பசி, தாகம், செல்வம், காமம், கோபம், தயவு, கருணை, இரக்கம், அறிவு, கணவன், மனைவி, சடங்குகள், ஜாதகம், அம்மா, அப்பா, பிள்ளைகள், நண்பர்கள், எதிரிகள், சகோதர சகோதரிகள், பொது மக்கள், நம்முடன் உலகில் வாழும் உயிரிகள்  இவை போன்ற பல மாயைகளுடன் நாம் இவ்வுலகில் வாழ வேண்டியிருக்கின்றது. அதுதான் இயற்கை. இந்த இயற்கை உண்மையை அறிந்து, நாம் மேல் சொன்னவற்றில் சிலதுடன் இணைந்தும், சிலவற்றை நீக்கியும் அவரவர்களின் அறிவுக்கேற்ப வாழ்கிறோம். இப்படிப்பட்ட உலகில் எதிலும் பற்றுதல் இன்றி “இச்சை அற்று நுகர்தல் வேண்டும்”.    
 
   
பயமில்லாத நடை:
 
இரக்கம், தயவு வரக்காரணமே பயம்தான். பயம் இல்லை எனில் தயவு வராது. எனவேதான் வள்ளலார் தனது திருவருட்பாவில் பயந்தேன்… பயந்தேன்… என பாடல்கள் பாடியிருப்பார். ஐயாவை பின்பற்றி நானும் “பயந்தேன்” என சில பாடல்களை பாடியிருக்கின்றேன். அப்படிப்பட்ட பயம் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. “பயம் பூஜ்ஜியமாக வேண்டும்” என வள்ளலார் வேறொரு இடத்தில் குறிபிடுவார். மேலும் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கியத் தடையாக இருப்பதில் ’பயம்’ என்பதும் அடங்கும். இங்கே பயம் என்பது ’தெளிவின்மை அல்லது அறிவின்மை’ என்ற பொருளில் நோக்கலாம். எனவே தெளிந்த அறிவு கொண்ட நடத்தைகள் நமக்கு அருள வேண்டும் என வேண்டுவோம்.
 
சற்றும் கூடாத வயது:
 
சுத்த சன்மார்க்கத்திற்கு “மூப்பு’ என்பதும் ஒரு தடையாக இருக்கின்றது. “நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும் உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே”, “என்றே யென்னினு மிளமையோ டிருக்க நன்றே தருமொரு ஞானமா மருந்தே” என இளமை என்றும் வேண்டும் எனப் பாடுவார் வள்ளலார். இளமையை வலியுறுத்தேயே நாம் இங்கு ‘சற்றும் கூடாத வயது” வேண்டுமென இறைவனிடம் வேண்டுவோம்.
 
சக்கை இல்லாத உணவு:
 
’உண்பதெல்லாம் மலமே” என்பார் வள்ளலார். அதாவது மலம் என்பது சக்கை. நாம் அசைவம் உண்டாலும், சைவம் உண்டாலும் இவை இரண்டுமே மலம் தான். “மலம் காணா உடல் தாராய் வெண்ணிலாவே” என நானும் வெண்ணிலாக் கண்ணியில் பாடியிருப்பேன். மலம் இல்லாத உடம்பே சுத்த உடம்பாகும். இதற்கு நாம் சைவமும் உண்ணுதல் கூடாது, அசைவமும் உண்ணுதல் கூடாது. சைவமும் அசைவமும் இவை இரண்டுமற்ற உணவானது எது எனில்? இறையருளால் நம் உள் நாக்கிற்கு மேலே ஊறி வழியும் அமுது ஆகும். இந்த அமிழ்து உண்டுவிட்டால் பசி இருக்காது. சக்கை உணவு தேவைப்படாது. மலம் ஜலம் உடம்பில் இராது.
 
‘திருவருள் தேன் உண்டே யானும் நீயுமாய்க் கலந்துறவாடும் நாள் எந்தநாள் அறியேனே’
 
’தேனே எனும் அமுதம் தேக்க உண்டேன் ஊனே ஒளி விளங்கப் பெற்றேன்’
‘மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே…”
 
என வள்ளலார் இந்த அமுதத்தை பற்றி பல பாடல்களில்  பாடியிருப்பார்.
எனவே நாமும் இந்த சக்கை இல்லாத உணவான அமுதை வேண்டி இறைவனிடம் இறைஞ்சுவோம்.
    
சுற்றம் சூழாத உடம்பு;
 
சுற்றம் என்றால் நமது உறவினத்தார்கள் மற்றும் நமது நலம் விரும்பிகள் எனலாம். இவர்கள் நம்மை சூழ்ந்து இருப்பது எப்போது? நாம் உயிரற்ற உடம்பாக இருக்கையில் இவர்கள் எல்லாம் நமது உடம்பை சூழ்ந்துக்கொண்டு துக்கத்தில் இருப்பார்கள். அல்லது உயிரோடு இருக்கையில் நோய் கொண்டு படுத்தால் சூழ்வார்கள். இவ்வாறு நாம் நோய் கொண்டு படுக்காமலும், உயிரற்று படுக்காமலும் இருக்கின்ற பொன்னுடம்பு, பிறரின் துக்கத்திற்கு ஆட்படாத சுத்த உடம்பு, என்றும் இளமையோடு இருக்கின்ற ஞான உடம்பு வேண்டும் என அதற்கான முயற்சியுடன் நாம் இறைவனிடம் வேண்டுவோம்.  
 
இவ்வாறு நாம் ’சுத்த சித்தன்’ என ஆவதற்கு பயிற்சியுடன் கூடிய வேண்டுதலை இறைவனிடம் வைப்போம். for PDF 
https://drive.google.com/file/d/1-Qh0eJtWv6IfnsN8r15XHtw47CsD227Z/view?usp=sharing

            குற்றம் நினையாத மனமும்
            குறை வில்லாத அறிவும்
பற்று இல்லாத உலகும்
            பய மில்லாத நடையும்
சற்றும் கூடாத வயதும்
            சக்கை இல்லாத உணவும்
சுற்றம் சூழாத உடம்பும்
            சுத்த சித்தனாக வேண்டுவனே.
 
சித்தம் ஒடுங்கும் தவமும்
            சத்தியம் சொல்லும் திறமும்
செத்தாரை எழுப்பும் திடமும்
            சிவத்தை பாடும் வரவும்
தத்துவா தீதமேல் நிலையும்
            தந்தருளி நான்நீயாக நின்று
சுத்த சன்மார்க்க உலகில்          
            சுற்றித் திரிய வேண்டுவனே.
 
அரியும் அரனும் அறியாஇடமாய்
              ஐந்தொழில் புரிகின்ற பணியாய்
சரியும் தவறும் இல்லாச்செயலாய்
             சன்மார்க்க சத்துவ குணமாய்
விரியும் அண்டத்து வீச்சாய்
            வலிமை பெறும் சாதுவாய்
எரியும் தீபஒளி யாயென்றும்
            இருக்க நான் வேண்டுவனே.

 

உயிரெல்லாம் எனக்கே உறவாக

            உயிர்நலம் பரவ வரம்வாங்க

பயிரெல்லாம் செழித்து வளமோங்க

            பாரினில் வறுமைகள் புறம்போக

வயிரெல்லாம் மகிழ்ந்து பசியாற

            வள்ளலாய் உலகினில் விளையாட

துயிலெழுந்து சாகாக்கல்வி பெறநான்

            தயவாய் இருக்க வேண்டுவனே.

 

கடவுள் நிலை யறிந்ததும்

            கண்ணீர் பெருகி ஓடுதே

கடலெனும் பிறவி அறுந்ததும்

            கருணை எங்கும் நிறைந்ததே

நடனம் என்னுள் கண்டதும்

            நல்லமுதம் எனக்குள் ஊறுதே

இடமும் வலமுமாகி நடுவாய்

            இறை மயமாக வேண்டுவனே.

             

நினைத்தவை எல்லாம் நடக்குதே

            நிலைத்தவை என்றும் வருகுதே

வினைகள் எல்லாம் பயந்தோடுதே

            விதைத்தவை என்னுள் மலருதே

எனைமறந் துள்ளம் உனைநாடுதே

            என்றும் உனக்கடிமை என்றானதே

மனையெல்லாம் தீபம் ஒளிரவே

            மங்களமாய் இருக்க வேண்டுவனே.

 

புலையும் கொலையும் விடாது

            புரியும் தெய்வீகம் நீடாது

இலையில் தானம் போடாது

            அறங்கள் செய்யக் கூடாது

மலைகள் சுற்றினால் போதாது

            மனங்கள் சுத்தம் ஆகாது

சிலைகள் என்றும் பேசாதுஎன்

            சிவத்தின் ஓசைகேட்க வேண்டுவனே.

.

  

ஆவது ஒன்றுமில்லை என்னால்

            உனக்கு கிஞ்சித்தும் புகழில்லை

ஈவது எனையன்றி வேறில்லை

            உனையன்றி எனக்கு பெயரில்லை

சாவதும் பிறப்பதும் வழக்கில்லை

            சுத்த சன்மார்க்கமிருக்க பயமில்லை

போவது பிணமென பிறர்இழியாத

பொன்னான மேனி வேண்டுவனே.

 

ஆயிரம் ஆயிரம் கோடி

            அணி விளக்கு ஏற்றுவித்து

பாயிரம் பலகோடிப் பாடி

            பாரினில் அற்புதம் செய்வித்து

தாயினும் தயவுடையத் தமிழ்

            தந்த ஒளியேஎன் வள்ளலே

ஆயினும் அருட்பெருஞ் ஜோதி

            அருளாலர் வர வேண்டுவனே.

 

தருகின்றேன் உனக்கே எனது

            தேக போகஜீவ சுதந்தரத்தை

பெருங் கருணையால் நீதான்

            பெற்றுக் கொண்டு உனது

அருட் பெருஞ்ஜோதி அருளால்

            என்னை நீதான் ஆளும்

திருவருள் சுதந்தரம் பெறும்

திருநாள் வர வேண்டுவனே.


T.M.RAMALINGAM

VALLALAR


இராமலிங்கம்

Vallalar

TMR







Saturday, December 13, 2025

ஒரு தேசத்தை அழிக்க,


 

ஒரு தேசத்தை அழிக்க,


அந்த தேசத்தின் எல்லைகளில் பீரங்கிகளை நிறுத்தத் தேவையில்லை...

அணுகுண்டுகள் வீசத் தேவையில்லை....

அந்த நாட்டின் இளைஞர்களைப் போதைக்கு அடிமையாக்கினால் போதும்.

இந்தக் கொடூரமான யுத்தியை மிகத் துல்லியமாக மிக மிகக் கொடூரமாக வரலாற்றில் அரங்கேற்றியது
யார் தெரியுமா?

அது தான் #பிரிட்டிஷ்சாம்ராஜ்ஜியம்....

பாதிக்கப்பட்ட நாடு== #சீனா... பயன்படுத்தப்பட்ட ஆயுதம்== #அபின்... அந்த ஆயுதம் விளைவிக்கப்பட்ட இடம்==#நமதுஇந்தியா....

இன்று நாம் பேசப்போவது, சீனாவின் நூற்றாண்டு கால அவமானம் பற்றியும்...

அதில் இந்தியாவின் ரத்தமும், இந்தியத் தொழிலதிபர்களின் (டாட்டா உட்பட) மறைக்கப்பட்ட பங்கும் பற்றிய ஒரு கசப்பான வரலாற்றைத்தான்...

18-ம் நூற்றாண்டில்...
சீனா உலகப் பொருளாதாரத்தின் ஒரு தனித்தீவு போல இருந்தது....

சீனப் பேரரசர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தும் தங்களிடமே உள்ளன. காட்டுமிராண்டிகளான வெளிநாட்டவர்கள் தங்களுக்குத் தேவையில்லை என்ற கர்வத்துடன் தங்கள் வணிகக் கதவுகளை
மூடி வைத்திருந்தனர்....

ஆனால், பிரிட்டனுக்குச் சீனா தேவைப்பட்டது.... ஏன்?
#தேயிலை (Tea)....

இங்கிலாந்து மக்களுக்குத் தேயிலை ஒரு வெறியாகவே மாறியிருந்தது....

அவர்கள் சீனாவிலிருந்து டன் கணக்கில் #தேயிலையையும், #பட்டுத்துணிகளையும், #பீங்கான்பாத்திரங்களையும்
இறக்குமதி செய்தனர்....

இங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது... பிரிட்டன், சீனாவிடமிருந்து
பொருட்களை வாங்கியது....
ஆனால், சீனா பிரிட்டனிடமிருந்து எதையும் வாங்க மறுத்தது....

உங்கள் கம்பளித் துணிகள் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்...

இதனால், பிரிட்டன் தன்னிடம் இருந்த வெள்ளி மற்றும் தங்கத்தைக் கொடுத்துத் தேயிலையை வாங்க வேண்டியிருந்தது..

இதனால், பிரிட்டனின் கஜானா காலியானது....
இதை ’வர்த்தகப் பற்றாக்குறை’ (Trade Deficit) என்பார்கள்...

இதைச் சரிசெய்ய பிரிட்டன் ஒரு நயவஞ்சகத் திட்டத்தைத் தீட்டியது....

சீனர்களிடம் விற்பதற்கு நம்மிடம் ஒரு பொருள் வேண்டும்....

அவர்கள் மறுக்கவே முடியாத ஒரு பொருள் வேண்டும்...
என்ன செய்யலாம் என்று சிந்தித்தார்கள். அந்தப் பொருள்தான் அபின் (Opium)....

அபின் என்பது ஒரு போதைப் பொருள். இது #பாப்பி(Poppy) செடியிலிருந்து கிடைக்கிறது... இதை விளைவிக்கச் சிறந்த இடம் எது?

அவர்கள் தேர்ந்தெடுத்தது அப்போது
பிரிட்டனின் காலனியாக இருந்த இந்தியாவைத் தான்....
#கிழக்கிந்தியக்கம்பெனி, இந்தியாவின் வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளில் இருந்த ஏழை விவசாயிகளை மிரட்டியது.

நீங்கள் நெல் பயிரிடக்கூடாது...
கோதுமையை விளைவிக்கக் கூடாது. அபின் மட்டுமே பயிரிட வேண்டும்...

விவசாயிகள் மறுத்ததால்,
அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன....

அவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது....

உணவு விளைவிக்க வேண்டிய நிலங்களில், விஷம் விளைவிக்கப்பட்டது....

பிரிட்டன், இந்திய விவசாயிகளை அடிமைப்படுத்தி அபினை விளைவித்தது...

அந்த அபினை, சீனாவிற்குக்
கடத்திச் சென்று விற்று,
அதற்குப் பதிலாகச் சீனர்களிடமிருந்து வெள்ளி நாணயங்களைப் பெற்றது...
அந்த வெள்ளியைக் கொண்டு, சீனாவிலிருந்து தேயிலையை வாங்கி, அதை இங்கிலாந்துக்கு அனுப்பியது...

சுருக்கமாகச் சொன்னால்
இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டினார்கள்,
சீனர்களின் அறிவை மழுங்கடித்தார்கள்,
இதன் மூலம்
பிரிட்டன் தனது தேநீர் கோப்பையை நிரப்பிக் கொண்டது.

#பிரிட்டன், அபினை நேரடியாகச் சீனாவிடம் விற்கவில்லை....

ஏனென்றால் சீனாவில் அபின்
தடை செய்யப்பட்டிருந்தது....

அவர்கள் கடத்தல்காரர்கள் மூலம்
இதைச் சந்தைப்படுத்தினார்கள்....

ஆரம்பத்தில் மருந்தாக அறிமுகப்படுத்தப்பட்ட அபின்,
விரைவில் ஒரு பழக்கமாகி,
பின்னர் ஒரு வெறியாக
மாறத் தொடங்கியது....

1830-களில், சீனாவின்
அரசு அதிகாரிகள், ராணுவ வீரர்கள், மாணவர்கள், சாதாரணக் கூலிகள்
எனச் சுமார் 1.2 கோடி சீனர்கள்
அபினிக்கு அடிமையாகியிருந்தார்கள்...

அபின் போதையால் சீனச் சமூகம் சீரழியத் தொடங்கியது...

குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்தன...

சீனாவின் வெள்ளிப் பணம் முழுவதும்
பிரிட்டனுக்குப் பாய்ந்தது...

ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியம், புகைப்பிடிக்கும் குழாய்களுக்கு முன்னால் மயங்கிக் கிடந்தது...

#சீனப்பேரரசர் இதைக் கண்டு கொதித்தெழுந்தார்...
அவர் லின் ஜெக்சு (Lin Zexu) என்ற ஒரு நேர்மையான அதிகாரியை நியமித்தார்.

லின் ஜெக்சு, 1839-ல், பிரிட்டிஷ் வியாபாரிகளிடமிருந்த 20,000 பெட்டி அபினைக் கைப்பற்றி, அதைக் கடலில் கரைத்து அழித்தார்....

விக்டோரியா மகாராணிக்கு
எங்கள் மக்களை அழிக்கும் இந்த விஷத்தை ஏன் விற்கிறீர்கள்?
என்று ஒரு கடிதமும் எழுதினார்...

பதிலுக்கு பிரிட்டன் என்ன செய்தது? மன்னிப்பு கேட்டதா? இல்லை.

எங்கள் சொத்துக்களை (அபினை) அழித்துவிட்டீர்கள்! தடையற்ற வர்த்தகத்தைத் தடுத்துவிட்டீர்கள்!" என்று கூறி, பிரிட்டன் தனது நவீனக் கடற்படையைச் சீனாவுக்கு அனுப்பியது...

சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே போர் தொடங்கியது. இதுவே முதல் அபினிப் போர் (1839-1842).
பழைய வாள்களையும், ஈட்டிகளையும் வைத்திருந்த சீன ராணுவம், பிரிட்டனின் நவீனப் பீரங்கிக் கப்பல்களை எதிர்க்க முடியாமல் படுதோல்வி அடைந்தது.
சீனா சரணடைந்தது.

அவமானகரமான #நான்கிங்ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது....
அந்த ஒப்பந்தத்தில் என்ன கூறப்பட்டது என்று தெரியுமா?

🌹 சீனா, பிரிட்டனுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்...
🌹சீனத் துறைமுகங்கள் பிரிட்டனுக்குத் திறக்கப்பட வேண்டும்...
🌹மிக முக்கியமாக, ஹாங்காங் (Hong Kong) தீவு, பிரிட்டனுக்குச் சொந்தமாக்கப்பட்டது....
இதுதான் சீனாவின் ’நூற்றாண்டு கால அவமானத்தின்’ (Century of Humiliation) தொடக்கம்...

இப்போது, இந்தக் கதையின்
இந்தியப் பக்கத்திற்கு வருவோம்...

பிரிட்டன் அபினை விளைவித்தது சரி, அதைச் சீனாவுக்குக் கொண்டு சென்று விற்றது யார்?
பிரிட்டிஷ் கப்பல்கள் மட்டுமல்ல. பல இந்திய வர்த்தகர்களும்
இதில் ஈடுபட்டனர்....

குறிப்பாக, மும்பையைச் சேர்ந்த #பார்சி (Parsi) மற்றும் #மார்வாடிசமூகத்தினர்
அவர்களில் முக்கியமானவர்கள் #டாட்டா (Tata) மற்றும் #ஜீஜீபாய் (Jeejeebhoy) குடும்பத்தினர்....

பார்சி இனத்தவரான டாட்டா குடும்பத்தினர் இப்படித்தான் செல்வம் கொழிக்கத் தொடங்கினார்கள்...
#ஜாம்செட்ஜிடாட்டா (Jamsetji Tata)
நவீன இந்தியத் தொழில்துறையின் தந்தை என்று அழைக்கப்படுபவர்...
இவரது தந்தை #நுஸர்வான்ஜிடாட்டா மற்றும் #ஜாம்செட்ஜிடாட்டா ஆகியோர், தங்கள் ஆரம்பகால மூலதனத்தை, சீனாவுடனான அபின் வர்த்தகத்தில்
தான் ஈட்டினார்கள்....

அவர்கள் #குஜராத் மற்றும் #மால்வா பகுதிகளில் விளைந்த அபினை, கப்பல்களில் ஏற்றிச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்தனர். #டாட்டாஅண்ட்கோ என்ற பெயரில் #ஷாங்காய் நகரில் கிளை அலுவலகம் கூடத் திறக்கப்பட்டது....

இந்த அபின் வர்த்தகத்தில் கிடைத்த அந்த அபரிமிதமான லாபம்தான் பின்னாளில் இந்தியாவின் முதல் இரும்பு எஃகு ஆலை (Tata Steel), தாஜ் ஹோட்டல், மற்றும் நீர்மின் நிலையங்கள் அமைப்பதற்கான
மூலதனமாக (Capital) மாறியது....

மும்பை நகரம் இன்று ஒரு பிரம்மாண்டமான வர்த்தக மையமாக இருப்பதற்கு, அன்று சீனாவில் விற்கப்பட்ட அபினின் பங்கும் உண்டு என்பது மறுக்க முடியாத,
கசப்பான உண்மை....

டாட்டா மட்டுமல்ல, பல பார்சி மற்றும் மார்வாடி வர்த்தகக் குடும்பங்கள் இந்த வழியில் தான் வளர்ந்தன
என்பதும் குறிப்பிடத்தக்கது....

இன்றைய சீனா ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கிறது?

ஏன் #தைவான் விஷயத்திலும்,
#தென்சீனக்கடலிலும்
பிடிவாதமாக இருக்கிறது?
என்பதைப் புரிந்து கொள்ள,
நாம் இந்த வரலாற்றை
அறிந்துகொள்ள வேண்டும்...

சீனப் பள்ளிகளில் இன்றும் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கப்படும்
முதல் பாடம் எது தெரியுமா?
’நூற்றாண்டு அவமானம்’
நாம் பலவீனமாக இருந்தோம்
அதனால் போதை மருந்து கொடுத்து நம்மை அழித்தார்கள்....
நம் நிலங்களைப் பறித்தார்கள்...
இனி ஒருபோதும் சீனா அப்படி ஏமாறக்கூடாது...
இனி ஒருபோதும் சீனா பலவீனமாக இருக்கக்கூடாது...

#ஜிஜின்பிங் பேசும், #சீனக்கனவு
(Chinese Dream) என்பது,

இந்த 150 ஆண்டுகால அவமானத்தைத் துடைத்து, மீண்டும் உலகத்தின்
உச்சிக்குச் செல்வதுதான்...

வரலாறு விசித்திரமானது.
அன்று இந்தியா விளைவித்த அபின், சீனாவை அழித்தது....

அன்று ஈட்டிய லாபம், இந்தியாவின் நவீனத் தொழில்துறைக்கு அடித்தளமிட்டது....

அன்று அவமானப்பட்ட சீனா, இன்று அந்த வடுக்களைச் சரிசெய்ய, உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது...

"வரலாற்றை மறப்பவர்கள், அதை மீண்டும் வாழச் சபிக்கப்படுவார்கள்" என்பதுதான் உண்மை...
இது சீனாவிற்கு மட்டுமல்ல, தமிழ் இனத்துக்கும் பொருந்தும்...

"வரலாறு நமக்குக் கற்பிக்கும்
பாடம் மிகக் கடினமானது...

ஓர் இனத்தை வேரறுக்கப் பெரும்
போர் தேவையில்லை..

போதை ஒன்றே போதும்" என்பது சீன வரலாறு நமக்குக் கற்பிக்கும் பாடம் என்பதை மீண்டும்
குறிப்பிட விரும்புகிறேன்....

அன்று சீனா அபின் புகையில் சரிந்தது...
இன்று நம் #தமிழ்நாடு கஞ்சா புகையிலும், டாஸ்மாக் மதுவின் பிடியிலும்
சிக்கித் தள்ளாடுகிறது....

இப்போது சீரழிந்ததைப் போல போதையில் தள்ளாடும் தமிழ்நாடு
இதுவரையிலும் கிடையாது...

#கஞ்சா எளிதாகக் கிடைக்கிறது....

கார்ப்பரேட் பார்ட்டிகள் எதுவும் கஞ்சா இல்லாமல் நடைபெறுவது இல்லை.

பள்ளிக்கூடங்கள் முன்பு கூட கஞ்சா புழங்கத் தொடங்கிவிட்டது...

அன்று சீனாவைச் சீரழிக்க பிரிட்டிஷ் எனும் அந்நிய சக்தி இருந்தது....

ஆனால் இன்று?

நம் சொந்த மண்ணிலேயே, நம் வருங்காலத் தலைமுறையானது,
கல்வி கற்க வேண்டிய வயதில் போதைக்கு அடிமையாகி,
சிந்தனை மழுங்கி வீதியில் திரிகிறது....

அன்று குடித்தாலே பாவம்,
தவறு என்று யாருக்கும்
தெரியாமல்
மறைத்துக் குடித்தார்கள்....

ஆனால், இன்று மீசை முளைப்பதற்கு முன்பே சாலையோரங்களில் அமர்ந்து குடித்துக் களிக்கிறார்கள்
நமது விடலைகள்....

நூற்றாண்டு கால அவமானத்திலிருந்து சீனா மீண்டு, இன்று வல்லரசாகிவிட்டது.

ஆனால், உலகம் போற்றும்
அறிவுச் சமூகமாகத் திகழ்ந்த தமிழினம்,
இன்று தன் இளைய தலைமுறையைப் போதைக்குப் பலிகொடுத்துவிட்டு, மீள முடியாத இருளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது...

உலகிற்கே வணிகத்தையும், அறத்தையும் கற்றுக்கொடுத்த ஓர் அறிவுச்சமூகம், இன்று போதைப்பிடியில் சிக்கித் தன் சுயத்தை இழந்து நிற்பது தான் காலத்தின் கோலம்....

அன்று பிரிட்டிஷார் அபினைக் கொண்டு சீனாவை அழித்தார்கள்...

ஆனால், இன்று கழக அரசுகளே
நமது மக்களை கஞ்சா மயக்கத்திலும், மது போதையிலும் தள்ளி
வேரறுத்துக் கொண்டிருக்கிறார்கள்....

'நம் பிள்ளைகளுக்குப் பொன்னையும் பொருளையும் சேர்த்து
வைப்பதை விட, போதையில்லாத தெளிவான புத்தியையும், சுயமரியாதையையும் சேர்த்து
வைப்பதே மிகச் சிறந்த சொத்து....

இல்லையேல், நாளைய வரலாறு நம்மை 'வீரத் தமிழினம்' என்று எழுதாது; 'மது மயக்கத்தில் வீழ்ந்த இனம்'
என்றே பதிவு செய்யும்!'
விழித்துக்கொள் தமிழா!

இந்த வரலாறை அனைவரும் அறிந்து கொள்ளட்டும் படித்தவுடன் பகிருங்கள்..

நாளைய நமது தமிழினம் வாழட்டும்..

இலங்கையில் நடந்தது போல் கு*ண்டு மழை பொழிந்து மக்களை அழிப்பது மட்டும் இனப்படுகொ*லை அல்ல.. குடிக்க வைத்து மக்களை கொ*ல்வதும் ஒரு இனப்படுகொலையே...

Wednesday, December 10, 2025

மாதப்பூசம் - 2026

 மாதப்பூசம் - 2026

வள்ளலார்

நான் இருக்கும் இடத்தில்
நீ அமரக் கண்டேன்
வான் கலந்த யாவரும்
வாயாற போற்றும் என்
ஊன் செய்த புண்ணியம்
ஊரார் யாவரும் அறிய
சான்றாய் நடுவில் கூடும்
சுத்த சன்மார்க்க சங்கமே.
--TMR



Tuesday, December 9, 2025

பஞ்சாக்கரம்

                                                                     பஞ்சாக்கரம்

T.M.RAMALINGAM

அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை     அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

=++++++++++++

வள்ளலார் தமது உரைநடை நூலில் தலைப்பு எண்-52-ல் பஞ்சாக்கரம் பற்றி சற்று விளக்கி சொல்லியிருப்பார். அந்தத் தலைப்பை நாம் இங்கு இன்னும் சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

அதற்கு முன்னர் நாம் சன்மார்க்கம் என்பதன் பொருளை அறிந்துக்கொண்டு பின்னர் பஞ்சாக்கரம் பற்றி விளக்கினால்தான் நன்கு புரியும்.

சைவ சமயத்தில் மார்க்கம் என்பது நான்கு வகைப்படும், அவை;

1. தாச மார்க்கம்

2. சற்புத்திர மார்க்கம்

3. சக மார்க்கம்

4. சன்மார்க்கம்

முதல் மூன்று நமக்கு தேவையற்றதாக உள்ளதால், நான்காவதாக உள்ள சன்மார்க்கத்தைப் பற்றி மட்டும் இங்கு பார்க்கலாம்.

சத்மார்க்கம் (உண்மை துவாரம் / வழி) என்பதே சன்மார்க்கம் என்று மருவியது என்க. சத்து என்னும் பொருளின் உண்மையை தெரிவிக்கின்ற மார்க்கமே சன்மார்க்கம். எல்லாம் வல்ல சர்வ சித்தியோடு ஞான சித்தியை பெறுதல்,

"நெல்லை விளைவித்தான்" என்பதன் பொருள், நிலத்தை சீர் செய்து, உரமிட்டு, உழுதல் தொடங்கி, அரிசியை அண்ணமாக்கி அனுபவிக்கும் காலம் வரை அச்சொல்லில் அடங்கியிருப்பது போன்று,

சன்மார்க்கம் என்பது சாதாரணம் முதல் அசாதாரணம் ஈறாக அடங்கிய பொருள் எனக் கொள்க.

நாம் தற்போது சன்மார்க்க வகைகளைப் பற்றி பார்க்கலாம்.

சன்மார்க்கம் மூன்று வகைப்படும் என்று வள்ளலார் கூறுகிறார், அவை :-

1. சமய சன்மார்க்கம்

2. மத சன்மார்க்கம்

3. சுத்த சன்மார்க்கம்

1. சமய சன்மார்க்கம் என்பது,  சத்துவகுணத்தைச் சார்ந்து விளங்குவது சமய சன்மார்க்கமாகும். அதாவது,

# சத்போதம் - உண்மையான அறிவு / ஞானம் / போதனை - விளக்கம்

# சத்கர்மம் - உண்மையான ஒழுங்கு / சீர் / முறைமை

# சத்சங்கம் - உண்மையான கூட்டம் / கழகம்

# சத்காலம் - உண்மையான நேரம் / பொழுது

# சத்விசாரம் - உண்மையான ஆராய்ச்சி / சிந்தனை / எண்ணம் / யோசனை

# சத்பாத்திரம் - உண்மையான உறுப்பினர் / ஒருமையுள் ஒன்றிவிடும் நபர்

# சத்ஜனம் - உண்மையான மக்கள் / பிறப்புகள்

# சத்செய்கை - உண்மையான வெளிப்பாடு

மேற்கண்ட எட்டு வகைகளும் சத்துவ குணத்தை சார்ந்தது,

# கொல்லாமை

# பொறுமை

# சாந்தம்

# அடக்கம்

# இந்திரிய நிக்கிரகம் - (ஐம் பொறிகளையும் அடக்கி ஆளுதல்)

# ஜீவகாருண்யம்

மேற்கண்ட ஆறு வகைகளும் சத்துவ குணத்தின் இயல்பாகும் / குணமாகும். இவ்வகை உண்மையைக் கொண்டு சத்துவகுணத்தின் இயல்புகளை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம் ஆகும்.

சமய சன்மார்க்கத்தின் / சத்துவ குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-

1. தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல்

2. புத்திரனாகப் பாவித்தல்

3. சிநேகிதனைப் போலப் பாவித்தல்

4. தன்னைப்போலப் பாவித்தல்

இது ஜீவ நியாயமாகும்.

2. மத சன்மார்க்கம் என்பது, நிர்க்குண லட்சியம் செய்வதாகும்.

நிர்குணம் என்பது யாதெனில், மேற்படி சமய சன்மார்க்கத்தின் எண் குணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் (சொல் அனுபவம்) பெற்று அதிலிருந்து மேலேறி லட்சியானுபவம் (பொருள் அனுபவம்) பெறுதல் ஆகும். 

லட்சியம் / லட்சியானுபவம் யாதெனில்,

 # சோகம் / ஒடுங்குதல்

# சிவோகம் / சிவமே நான் என பாவித்தல்

# தத்வமசி / தத்துவ வடிவன்

# சிவத்துவமசி / சிவம் நீ ஆனாய்

என்னும் மேற்படியான வாக்கியத்தில் அமைந்த முக்கிய அனுபவமாகும்.

முக்கிய அனுபவம் என்பது, மத சன்மார்க்கத்தின் / நிற்குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-

1. தான் கடவுளுக்கு அடிமையாதல்

2. தான் கடவுளுக்கு புத்திரனாதல்

3. தான் கடவுளுக்கு சிநேகனாதல்

4. தான் கடவுளுக்கு நிகராதல் (கடவுளேதானாதல்)

இது சத்துவ மற்றும் நிற்குணத்தின் / சமய மற்றும் மத சன்மார்க்கத்தின் அனுபவம்ஆகும்.

சமய சன்மார்க்கம் என்றால் என்ன? மத சன்மார்க்கம் என்றால் என்ன என்பதை ஒருவாறு பார்த்தாயிற்று. இனி நாம் பஞ்சாக்கரம் பற்றி பார்ப்போம்.

பஞ்சாக்கரம் அல்லது பஞ்சாசஷரம் என்பது,

சாக்கரம் என்றால் நினைத்தல்,

ஷரம் என்றால் தொடர்ச்சியாக.

பஞ்ச என்றால் ஐந்து.

ஐந்தை தொடர்ச்சியாக நினைத்தல் என்பது பொருள்.

ஐந்து என்பது சி வா ய ந ம.

பஞ்சாக்கரம் என்றால் ”சிவாயநம” என்ற ஐந்து எழுத்தினை தொடர்ச்சியாக சிந்தை செய்தல் என்பது பொருள். இந்த ஐந்தெழுத்தானது சமய சன்மார்க்கத்திற்கும் மத சன்மார்க்கத்திற்கும் உரியது. ‘சமயசூக்குமம்” என்று வள்ளலார் குறிப்பிடுவது “சமய சன்மார்க்க சூக்குமம்” எனப் பொருள் படும்.

"சமயசூக்குமம்" என்பதன் பொருள் – சமய சன்மார்க்கத்தில் குறிப்பிடும் மிக நுண்ணிய உடலைக் குறிக்கும். அதாவது ஒளி உடலைக் குறிப்பது சூக்குமம் ஆகும்.

"தாத்பர்யம்” என்றால் - மறைபொருள் என்பதாகும்.

’சமயசூக்கும பஞ்சாசஷரத்தின் தாத்பர்யம்’ என்றால், “சமய மற்றும் மத சன்மார்க்கத்தின் ஒளி உடல் கொண்ட சிவனை அல்லது சிவத்தை ஐந்தெழுதுக்கொண்டு சிந்திப்பதின் அல்லது வணங்குவதில் மறைந்துள்ள உட்பொருள் என்ன?’ என்பதை விளக்குவதாகும்.

இவ்வாறு அந்த ஒளி உடலை ஐந்தெழுத்துக் கொண்டு வணங்குவதின் மறைபொருளாக அல்லது உண்மை பொருளாக நான்கு உள்ளன.

1. பூர்வம் - முதன்மை
2. பூர்வ பூர்வம் - முதன்மைக்கும் ஆதியானது
3. உத்தரம் – மேன்மையானது

4. உத்தரோத்தரம் – மேன்மைக்கும் உயர்வானது.

நாம் ஒருவரை சந்திக்கும்பொழுது, “ஐயா வணக்கம்” என முதன்மையாக சொல்வோம் அல்லவா. அந்த முதன்மையே பூர்வம்.

“சிவாயநம” என்றால், ”சிவனிற்கு வணக்கம்” என்று சொல்வதாகும். இது பூர்வம் / முதன்மை.

நாம் ஒருவருக்கு வணக்கம் சொல்கிறோம் என்பதை சற்று ஆழ்ந்து நோக்கினால், அந்த நபரின் ஆதியான அவரது முன்னோர்களுக்கும் சேர்த்துதான் நாம் ஒருவருக்கு வணக்கம் தெரிவிக்கிறோம் என்பதை புரிந்துக்கொள்ள முடியும். முன்னோர்கள் அருவம். நாம் வணக்கம் வைக்கும் நபர் உருவம். இவ்வாறு புரிந்து வணக்கம் வைப்பவர்களின் வணக்கமானது பூர்வ பூர்வத்தை சார்ந்த வணக்கமாகும்.

 அது போலவே பூர்வ பூர்வத்தில் “சிவாயநம’ என்றால், “அனாதியில் மலமில்லாத (அதாவது, ஆணவம், கன்மம், மாயை இல்லாத) எல்லாமுடைய சிவத்திற்கு என்னுடைய கரண உள்ளங்களை ஒப்படைக்கிறேன். கரண உள்ளங்கள் என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகும். இந்த நான்கினையும் “சிவாயநம” எனச் சொல்லி நான் சிவத்திடம் ஒப்படைக்கிறேன் எனப் பொருளாகும். இந்த வணக்கமானது சற்று மேம்பட்டவர்களின் (அதாவது, பூர்வ பூர்வத்தை நோக்குபவர்களின்) செய்கையாகும். இங்கே அவருக்கு சிவன் என்ற உருவம் மறைந்து சிவம் என்ற அருவம் அனுபவமாகும்.

’சிவாயநம” என்னும் ஐந்தெழுத்தை அதன் மேன்மை அறிந்து சொல்பவகள், சமய சன்மார்க்கத்தின் சத்துவ குணமும் அதன் இயல்பும் அவர்களுக்கு கைகூடும். ஏம சித்தி உண்டாகும். அதாவது பொன் செய்யும் வல்லபம் உண்டாகும். இது உத்தரம் ஆகும்.

‘சிவாயநம” என்னும் ஐந்தெழுத்தை அதன் மேன்மைக்கும் மேன்மையாகக் கருதி நினைப்பவர்கள், சமய சன்மார்க்கத்தின் அனுபவங்களை பெறுவார்கள். தேக சித்தி பெறுவார்கள். அதாவது சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் ஆகிய மூன்று தேகங்களை பெறுவார்கள். இது உத்தரோத்தரம் ஆகும்.

இது போலவே மத சன்மார்க்கத்திலும் “சிவாயநம” என்னும் ஐந்தெழுத்து வேலை செய்கின்றது.

மத சன்மார்க்கத்தில் சிவாயநம என்பது பூர்வத்தில்,

சி-என்பது பதி / இறைவன்

வா-என்பது சத்தி / ஆற்றல் / அருள் வடிவம்

ய-என்பது ஜீவன் / ஆன்மா

ந-என்பது திரோதை / மறைப்பு

ம-என்பது மாயை / பொய்

என்று பொருள்படும். அதாவது, மாயை, மறைப்புகள் நீங்கி ஜீவ போதம் இல்லாது அருள் வடிவமாய்ச் சிவமாவது. (எல்லாம் அவன் செயல் என சரணாகதி அடைவதே ஜீவ போதம் இல்லாது இருத்தல் ஆகும்.) மத சன்மார்க்கத்தில் பூர்வபூர்வத்தில் ‘சிவாயநம” என்பது,

சி – என்பது எல்லாம் உடையது

வா – என்பது அபிந்நமாகிய அருள் (பிரிக்க முடியாத அருள்)

ய – என்பது ஆன்ம சிற்சபை

ந – என்பது ஜீவன்

ம – என்பது பசு

பசுத் தன்மை கெட்டு, ஜீவ போதம் போய், ஆன்ம இயற்கை வடிவாய்ச், சத்துவ மயமாய், எல்லாம் உடையதுவாய்ப், பூரணமாய் நிற்றல். அதாவது மத சன்மார்க்கத்தின் அனுபவமாகிய “நிர்குண லட்சியம்” உடையதாய் விளங்குதல். இவர்கள் தேக சித்தி பெறுவார்கள். அதாவது சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் ஆகிய மூன்று தேகங்களை பெறுவார்கள்.

மத சன்மார்க்கத்தில் உத்தரத்தில் சிவாயநம என்போர்க்கு, மேற்காணும் அனுபவங்களுடன் இவர்களுக்கு ஏம சித்தியும் உண்டாகும். அதாவது பொன் செய்யும் வல்லபம் உண்டாகும்.

 மத சன்மார்க்கத்தில் உத்தரோத்தரத்தில் சிவாயநம என்போர்க்கு, ஏம சித்தியுடன், தேக சித்தியும் உண்டாகும். அதாவது சுத்த தேகம், பிரணவ தேகம், ஞான தேகம் ஆகிய மூன்று தேகங்களை பெறுவார்கள்.

இறைவனிடம் மன்றாடுதல், இறைவனிடம் பேசுதல், இறைவனுக்கு நன்றி சொல்லுதல், இறைவனிடம் வேண்டுதல், இறைவனை நாடுதல், இறைவனை போற்றி பாடுதல் இச்செயல்கள் எல்லாம் செபம் எனப்படும். இவ்வாறு செபம் செய்து, அதன் மூலம் கரண சுத்தி வந்து, அசர முன்னுதலை விடுத்து (அதாவது மூச்சை நிறுத்தும் பழக்கம் அதாவது ஜீவ சமாதி, சித்த வித்தை போன்றவைகளை விடுத்து), அறிவின் மயமாய், கருணையும் சிவமுமே பொருள் என்னும்படி நிற்றலுக்கு முதல் துவாரமாய் இருப்பது “சிவாயநம” என்னும் ’பஞ்சாக்கரம்” ஆகும். இவை எல்லாம் சமய, மத சன்மார்க்கத்தின் சடங்குகள் ஆகும்.

சுத்த சன்மார்க்கம் என்பது, மேற்கண்ட சத்துவகுணம், நிற்குணங்களின் வாச்சிய லட்சியார்த்தமாகிய சமய மதத்தின் அனுபவ மல்லாதது சுத்த சன்மார்க்கம் ஆகும்.

வள்ளலார் தெரிவித்த சுத்த சன்மார்க்கத்தில் பஞ்சாக்கரம் வேலை செய்யாது. சுத்த சன்மார்க்கத்தின் அனுபவமானது சமய மத சன்மார்க்கத்தின் அனுபவங்கள் அல்ல. ஆனால், சுத்த சன்மார்க்கத்திற்கு மேற்குறித்த மார்க்கங்கள் அல்லாதனவே அன்றி இல்லாதன அல்ல. அதாவது சமய மத சன்மார்க்கத்தின் அனுபவத்தை சுத்த சன்மார்க்கம் மூலம் அடைந்து, அதனையும் கடந்து மரணமில்லா பெரு வாழ்வு அளிக்கும் பேரணுபவமாகும்.  

ஆனால், சமய மத சன்மார்க்கங்களில் பஞ்சாக்கர உதவியுடன் ஏம சித்தி, தேக சித்தியெல்லாம் பெறக்கூடியதாக உள்ளதே! பெற்றிருக்கின்றார்களே! எற்றால், அச்சித்திகள் எக்காலத்தும் தொடர்வன அல்ல. அந்தந்த சமய மத கர்த்தாக்களின் ஆயுள் வரையே அச்சித்திகள் நிலை பெற்றிருக்கும். அதற்கு மேல் இராது. மீண்டும் பிறப்பு இறப்பு உண்டு.

ஏம சித்தி, தேக சித்தி ஆகிய இரண்டு சித்திகள் யாவும், எக்காலத்தும் அழியாமல் இருப்பது சுத்த சன்மார்க்கத்தின் முதன்மையாகும். அதாவது பூர்வமாகும். சுத்த சன்மார்க்கத்தின் பூர்வ பூர்வம், சுத்த சன்மார்க்கத்தின் உத்தரம், சுத்த சன்மார்க்கத்தின் உத்தரோத்தரம் என்பவைகளின் சிறப்புகள் எப்படிப்பட்டன? அற்புதங்கள் எப்படிப்பட்டன? என்பதெல்லாம் வள்ளலார் குறிப்பிடவில்லை. நாம் முயன்றுதான் அதனை அனுபவிக்க வேண்டும்.

’சிவாயநம எனச் சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை”

“சிவாயநம என செம்பு பொன்னாயிடும்”

போன்ற சொல்லாடல்களை ஆதாரமாக வைத்து ஏம சித்தியும், தேக சித்தியும் சூக்கும பஞ்சாக்கரத்தோடு இணைத்து சொன்னார்கள். ஆதலால் பஞ்சாக்கரத்தை மகான்கள் குழுக்குறியாக, வரிவடிவமாக சுட்டினார்கள்.

பஞ்சாக்கர தத்துவங்களை அறிந்த அக அனுபவிகள் அனுசந்தானஞ் செய்வார்கள். அனுசந்தானம் என்பது இடைவிடாது ஓதுதல்.

பஞ்சாக்கர தத்துவங்களை அறிந்த சாதகர்கள் அதனை நாவினால் சொல்லி தங்களது கரணங்களை

ஒடுக்கி தத்துவ வெற்றியை எய்தக்கூடும்.

பஞ்சாக்கர தத்துவங்களை அறிந்த உலகிகள் அதனை நாவினால் சொல்லி அவரகளது ஆசைகளை இச்சைகளை நிறைவேற்றிக்கொள்வார்கள்.

பஞ்சாக்கர தத்துவங்களை அறிந்த வகரவித்தை செய்பவர்கள், பவுதிகம் (ஐம்பூதங்கள்), லோகம் (உலோகங்கள்) ஓஷதி (மூலிகைகள்), லவணம் (உப்பு) முதலியவைகளை சேர்த்து தங்கம் செய்வார்கள்.

பஞ்சாக்கர தத்துவங்களை அறிந்த தகரவித்தை செய்பவர்கள், அதுபோலவே பவுதிகம், லோகம், ஓஷதி, லவணம் கொண்டு தங்களது தேகத்தை நீடிக்கச் செய்வார்கள்.

ஆதலால் பஞ்சாசஷரம் என்பது பரிபாஷை. அதாவது ஒரு குறியீட்டுச் சொல்லாகும்.

எனவே சுத்த சன்மார்க்கத்தில் மட்டுமே ஏம சித்திகளும் தேக சித்திகளும் எக்காலத்தும் விளங்குவதாய் உள்ளது. இதனது உண்மை யாவும் சுத்த சன்மார்க்க சகஜ சாத்திய ஞான அனுபவிக்களுக்கு மட்டுமே விளங்கும்.

 

(தி.ம.இராமலிங்கம் – கடலூர்)

9445545475

சுபம்

for PDF 

https://drive.google.com/file/d/1qst_M-_cBIKNTJonAG_zeUS8TJVBjbgd/view?usp=sharing