இந்துமதம் எங்கே போகிறது? - 12
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)
சரி… சபாவில் குழப்பம்
குளறுபடி வந்தால்?
“சங்க சத்வம்
சம்ப கத்வம்
சம்போ மனாம்ஸி ஜானதாம்”
ஒரே பாதையில் நடங்கள், ஒரே வழியில் சிந்தியுங்கள்,
ஒன்றாக பேசி முடிவெடுங்கள் (Walk united, Think United, Talk United) என ஒற்றுமையாக
வலியுறுத்தி சபாவை ஸ்திரப்படுத்தச் சொல்கிறது ரிக் வேதம்.
அதாவது... வேதகாலத்தில் சமூக கூட்டமைப்புக்குள்
கட்டுப்பட்டு வளர்ந்த மக்களின் பிரச்சனைகளை தீர்துக்கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான்
சபா. இந்த சபாவில் சிந்தனை சக்தி மிகுந்த ரிஷிகள் அமர்ந்திருப்பார்கள். அந்தந்த குழுமத்தை
சேர்ந்தவர்கள் ஒன்றாக கூடி தத்தமது எண்ணங்களை எடுத்துரைப்பார்கள்.
இறுதியாக ரிஷிகள் இதற்கொரு முடிவு சொன்னார்கள்.
சரி… இங்கு பெண்களைப் பற்றியே எங்கும் சொல்லக் காணோமே… பிறகு பெண்கள் எப்படி வருவார்கள்?
உங்கள் கேள்விக்கு இன்னொரு வேத ஸ்லோகம் விடை சொல்கிறது.
“தம்பதிஇவ க்ரஹிபிதா ஜனோஸிட்”
அதாவது நீ எங்கு சென்றாலும்… யாரைப் பார்க்கச்
சென்றாலும்… ஏன் கடவுளையே பார்க்கச் சென்றாலும் உன் மனைவியை பத்தினியை உடன் கூட்டிப்போ.
வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைக்கச் சொன்ன
வேதம், கால வளர்ச்சியில் இதனை சொல்கிறது என நாம் எடுத்துக்கொள்ளலாம். (ஏனென்றால் வேதங்கள்
திடுதிப்பென திடீரென்று ஒரே பொழுதில் உண்டாக்கப்பட்டவை அல்ல)
இதன்படி ஒவ்வொருத்தனும் சபாவுக்கு வரும்போது
தன் மனைவியை கூட்டிவர ஆரம்பித்தான். அப்படி வரும்போதுதான் பெண்கள் சபாவுக்கு வரத் தொடங்கினார்கள்.
அப்போது வெளியுலக பிரச்சனைகள் அவர்கள் காதிலும்
விழுந்தது. கணவனின் கட்டளைகளாலேயே நிரம்பிப் போயிருந்த காதுகளில் சமூகப் பிரச்சனைகள்
வந்து விழுந்தன.
வாயில்படி தாண்டியிராத பெண்களின் வாயிலிருந்து
பொதுக் கருத்துகள் புறப்பட ஆரம்பித்தன.
பிரச்சனைகளைப் பற்றி பெண்கள் பேசிய பேச்சுகளை
கேட்ட ஆண்கள் அசந்து போய்விட்டனர். எப்படி இவளுக்கு இப்படி யெல்லாம் பேசத் தோன்றுகிறது?
என வியந்தனர்.
“அபிப்ராவந்த்தா சமனே இவயோஷாஹத்
கல்யாண்யஹ ஸ்மயமானாஹா அக்னிம்…”
‘எல்லாம் கூடியிருக்கிற இடத்திலே பெண்கள்
ஆண்களுக்கு சமமாக உட்கார்ந்திருக்கிறார்கள். அது மட்டுமா? அங்கே வெளிச்சத்துக்காக வளர்க்கப்பட்டிருக்கும்
அக்னியைச் சுற்றி பெண்கள் அமர்ந்து கொண்டு சிரித்தப்படியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதைப் பார்த்துதான்… அழைத்து வந்த ஆண்கள்
வியப்படைந்து போய்விட்டார்கள். அவர்களின் வியப்புக்கு வேதம் விளக்கம் சொல்கிறது கவனியுங்கள்.
“ஸ்த்ரீநாம் த்விகனம் ஆஹாரம் புத்தீஸ் சாபி
சதுர் குணம்” அதாவது வீட்டில் ஆண் கள் சாப்பிட்டு மிச்சம் வைத்துவிட்டு வெளியே போய்விடுவார்கள்.
இதை யெல்லாம் பெண்தான் சாப்பிடுவாள். அதனால், அந்த ஆண் சாப்பிட்ட சாப்பாட்டைவிட கிட்டத்தட்ட
இரண்டு மடங்கு அதிகமாகவே அவன் ஆஹாரம் புசிப்பாள். இரண்டு மடங்கு உணவு அதிகமாக உண்ணும்
பெண்… ஆணைவிட நான்கு மடங்கு அதிகமாக அறிவைப் பெற்றிருப்பாள்.
இந்த நான்கு மடங்கு அறிவுதான் பெண்களை சபாக்களில்
தைரியமாக பேசவைத்தது. இப்போதுகூட செய்தித்தாள்களில் நாம் படிக்கிறோம். பரிட்சைகளில்
பையன்களை விட பெண்கள்தான் அதிகம் பேர் தேர்ச்சி பெற்று, முதலாம் ஸ்தானத்தை கைப்பற்றுகிறார்கள்
என்ற செய்திகளை அது ஏன் என்பதற்கு அன்றே வேதம் தந்த விளக்கம்தான் இந்த ஸ்லோகம்.
இவ்வாறு ஆண்களைவிட நான்கு மடங்கு அதிகமாய்
புத்தி பெற்ற பெண்கள் வேத மந்த்ரங்களையும் இயற்றினார்கள். அத்யயணம் செய்தார்கள் என்பது
வேதமே ஒப்புக்கொள்ளும் அளப்பரிய உண்மை.
“அபகேஸ்ம ஸ்த்ரியோ
மந்த்ர கிருத ஆசுஹீ
ப்ரா கல்பேது நாரீனாம்
பெளஞ்ச்சீ பந்தது இஷ்யரே
அத்யாபனந்த வேதானாம்…”
பெண்கள் வேதமந்தரங்களையும் இயற்றியுள்ளார்கள்.
பெண்கள் இயற்றிய வேத மந்த்ரங்களை பெண்களே அத்யயணம் அதாவது தினசரி உச்சரித்தும் வந்துள்ளார்கள்.
குறிப்பாக அத்ரேய கோத்ரத்துப் பெண்கள் இதில் சிறப்பாக விளங்கினார்கள். ஆத்ரேயெ கோத்ரம்
என்றால் ஆத்ரேயர் என்ற ரிஷியின் வழிவந்தவர்கள் என்று பொருள்.
கோத்ரம் என்றால் என்ன?... ஒன்றும் பெரிய
அர்த்தம் இல்லை. வேத காலங்களில் மாடுகளை குழுக்குழுவாக கட்டிவைத்திருப்பார்கள். ஒரு
ரிஷியின் குழுவினர் மாடுகளை ஓரிடத்தில் சேர்த்து கட்டி வைத்திருப்பார்கள். ‘கோ’க்களை
அதாவது மாடுகளை கட்டி வைப்பவர்களின் அடிப்படையில் குழுவாக பிரிக்கப்பட்டதுதான் கோத்ரம்.
இப்படியாக ஆத்ரேய கோத்ர பெண்கள் அறிவில்
மிகச் சிறந்தவர்களாக விளங்கினர். இப்படிப்பட்ட பெண்கள்தான் ஸ்த்ரி சம்ஸாதம் அதாவது
பெண்களுக்காக மட்டும் கூட்டங்களை கூட்டினர். இதுதான் பெண்களின் மாநாடு. ஒரு நாள் இந்த
மாநாட்டில்…?
ஸ்த்ரீ ஸம்ஸாதம் அதாவது பெண்கள் மாநாடு பற்றி
போன அத்தியாயத்தில் பார்த்தோம். ஆணைவிட 4 மடங்கு அறிவு கொண்ட பெண்கள் ஒன்றாக கூடி விவாதங்கள்
செய்து… வேத காலத்தில் சிறந்து விளங்கினார்கள்.
கார்க்கி, வாஸக்நவி, யாக்ஞவல்கியரின் மனைவி
மைத்ரேயி போன்றவர்கள் இந்த விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் நமக்கு
அறியக் கிடைக்கிறது. இவ்வளவு முற்போக்காகவா பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்கிற நம்
ஆச்சரியக்குறியை ஒடித்துப் போடுகிற அளவுக்கு அடுத்த தகவல் அதிர்ச்சி தருகிறது.
அது என்ன? பெண்களுக்கு இயற்கை மாதாமாதம்
அளிக்கும் ஒரு துன்பம்… வலி! உடலியல் காரணங்களால் வெளியேற்றப்படும் கழிவாகிய ‘மாதவிடாய்’
என்பதை காரணம் காட்டி பெண்களை வெறுத்து ஒதுக்கியது வேதகாலம். அவள் தீட்டு அவளை விலக்கிவையுங்கள்.
அசிங்கமானவள், சுத்தமில்லாதவள் என்றெல்லாம் சுடுசொற்களால் பெண்களை ஒதுக்கி வைத்தது.
ஏற்கனவே இயற்கை தந்த துன்பத்தை சகித்துக் கொண்டிருக்கும் பெண்கள்… அறியாமையால் ஆண்கள்
தந்த தீண்டாமை துன்பத்தையும் சகித்துக் கொண்டார்கள்.
கரு உருவாகுவதற்காக கர்ப்பப்பையை சுத்தம்
செய்யும் விதமாக… மாதாமாதம் இயற்கையே அதிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஏற்பாடுதான் மாதவிடாய்.
ஆனால்… இதை வேதகாலம் எதனோடு ஒப்பிட்டு என்ன காரணம் கண்டுபிடித்தது தெரியுமா? பார்ப்பதற்கு
முன்…
மீண்டும் ஸ்த்ரீ சம்ஸாதம்… பெண்கள் கூடிப்
பேசிக்கொண்டிருக்கிறார்கள். சிரிப்பொலி காற்றில் சிணுங்கல்களாக மிதந்து கொண்டிருக்கிறது.
அந்த வேளையில் திடும்மென அவ்விடத்தில் ஒரு பிரகாசம். வெளிச்சப் புகைக்கு நடுவே அங்கே
வந்திறங்குகிறாள் இந்திரன்.
இந்திரன்…? ஆம். தேவர்களின் அரசன் சர்வ சந்தோஷங்களையும்
அனுபவித்து… அனுதினமும் பகட்டில் வாழும் அவன் முகமே பார்க்க முடியாத அளவு கோரமாய் காட்சியளித்தது.
செம்பட்டு இழையான தலைமுடி கொண்ட இந்திரன் செம்பட்டையும் பரட்டையுமாக மாறிப் போயிருந்தான்.
புன்னகை வெளிப்பட்ட வாயிலிருந்து கோரப்பற்கள் கறுத்து இருண்ட மேனியுடன் வந்த இந்திரனின்
முகத்தில் சங்கட ரேகைகள். கண்கள் மட்டும் அல்ல. அங்கங்கள் அனைத்தும் அழுதன. நடுக்கம்
அவன் நெற்றியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது.
என்ன ஆச்சு இந்திர ராஜாவுக்கு?
ப்ரம்மஹத்தி தோஷம் அப்படியென்றால்…
குற்றங்களிலேயே மிகக் கொடிய குற்றம் உச்சபட்ச
தண்டனைக்கு உள்ளாகும்படியான குற்றம். தலைமைக் குற்றம் என்று கூட சொல்லலாம். இக்குற்றத்தை
செய்தவனுக்கு எந்த பரிகாரமும் இல்லை. பித்துப் பிடித்து அலைவதைத் தவிர.
சரி… என்ன செய்தால் இந்த குற்றம் வரும்?
ப்ராமணனை கொலை செய்வதுதான் ப்ரம்மஹத்தி குற்றம். பிரம்மம் – பிராமணன். ஹத்தி – கொலை.
அதாவது பிராமணனை கொலை செய்யும் குற்றம்தான் ப்ரம்மஹத்தி.
இப்பேர்ப்பட்ட குற்றத்தைத்தான் இந்திரன்
செய்துவிட்டான். இப்போது இந்த காலத்தில் காஞ்சிபுரம் கோவிலுக்குள்ளேயே வைத்து சங்கரராமன்
என்னும் பிராமணனை கத்தி, அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் ஹத்தி (கொலை) செய்தார்களே…
அவர்களும்கூட வேதத்தின் நீதிமன்றம் முன்பு ப்ரம்மஹத்தி (தோஷம்) குற்றம் செய்தவர்கள்தான்
அதாவது அவர்கள் இக்கால ப்ரம்மஹத்திகள்.
சரி… நாம் இந்திரன் விஷயத்துக்கு வருவோம்.
ப்ரம்மஹத்தி குற்றம் செய்யும் அளவுக்கு இந்திரன் என்ன செய்தான்? காஸ்யபன் என்றொரு முனிவர்
அவருக்கு திதி, அதிதி என இரண்டு மனைவிகள். திதியின் பிள்ளைகள் தைத்யர்கள். அதாவது அசுரர்கள்.
திதி அசுர குலத்தை சேர்ந்தவள். இன்னொரு மனைவி அதிதியின் பிள்ளைகள் தேவர்குலத்தைச் சேர்ந்தவர்கள்.
அதிதிக்குப் பிறந்த 12 புதல்வர்களில் ஒருவரான
தொஷ்டா, அசுர குலத்தைச் சேர்ந்த ரஸனா என்னும் பெண்ணை மண முடிக்கிறார். தேவனாகிய தொஷ்டாவுக்கும்
அசுரப்பெண்ணாகிய ரஸனைக்கும் பிறந்தவன் விஸ்வரூபன். இந்திரன் ராஜ்யத்தில் புரோகிதனாக
இருந்தான் விஸ்வரூபன்.
புனித
யாகங்கள் முடிந்தபின் கிடைக்கும் ‘ஹவிஸ்’ என்ற பெரும் நலம் கொடுக்கக்கூடியப்
பொருளை இந்திரனுக்குத் தெரியாமல் தன் மாமாவான அசுரர்களுக்கு கொடுத்துவிட்டான்
விஸ்வரூபன். இது தெரிந்த இந்திரன், அசுரர்களுக்கு ஏனடா ஹவிஸ்ஸை கொடுத்தாய்? என
விஸ்வரூபனின் 3 தலைகளையும் கோபப்பட்டு வெட்டி வீழ்த்திவிட்டான்.
விஸ்வரூபன் ஒரு பிராமணணும்கூட… கொலை செய்தவன் இந்திரன் சும்மா விடுமோ?
பிடித்தது ப்ரம்மஹத்தி. எங்கெங்கோ போய் சுத்தி பார்த்தான், அலைந்தான், திரிந்தான்.
கடைசியில் ‘ஞானம்’ வந்த இந்திரன் தனது ப்ரம்மஹத்தி தோஷத்தை யாரிடமாவது கொடுத்து
விடுதலை பெறலாம் என நினைத்தான். முதலில் பூமாதேவியை போய் பார்த்து அழுதான்
இந்திரன். என்னவென்று கேட்டாள் பூமாதேவி.
இதுபோல்தான் ப்ரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளாகி விட்டேன் தேவி. என் தோஷத்தை நீதான்
எடுத்துக்கொண்டு எனக்கு அருள வேண்டும் என்றான் இந்திரன். எல்லா தோஷத்தையும் தானே எடுத்துக்கொண்டால்
என்மேல் வசிக்கும் ஜீவராசிகளுக்கு ஏது சந்தோஷம். நீ கேட்கிறாய் என்பதற்காக
ஒப்புக்கொள்கிறேன். ஒரு பகுதி தோஷத்தை என்னிடம் கொடு… என்கிறாள் பூமாதேவி. அதன்படி…இந்திரன் தன் கொலைக் குற்றத்தில்
ஒரு சிறுபகுதியை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான். அதுதான் தானியங்கள் விளைய தகுதி
இல்லாத தரிசு நிலங்களாகவும், பாலை வனங்களாகவும் மாறிப்போய் விட்டன. தோஷத்தை
வாங்கிக்கொண்டதற்கு பரிகாரமாக… பூமி பிளந்தால் ஒன்று சேரக்கூடிய வரத்தை
வழங்கினானாம் இந்திரன்.
குற்றத்தில் கொஞ்சம் குறைந்த திருப்தியில்… விருட்சங்களை நோக்கி போனான்
இந்திரன். விருட்சங்களே… என் ப்ரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக் கொள்ளுங்களேன்… என
கெஞ்சினான். அப்படியானால்… எங்களை வெட்டிப் போட்டாலும் வெட்டிய இடத்திலிருந்து
துளிர்க்க வரம்தா… என கேட்டன மரங்கள். வரம் கொடுத்த இந்திரன்… கூடவே தம்
ப்ரம்மஹத்தி தோஷத்திலும் பாதியை கொடுத்தான்.
அதுதான் மரங்களின் பிசினாக (கோந்து) வழிந்து கொண்டிருக்கிறது. பெருங்காயமும்
ஹிங்கு என்ற மரத்திலிருந்து வந்த ஒரு பிசின்தான். அதனால்தான் பிராமணர்கள் முக்கிய
விழா, சிரார்த்தம் (தவசம்) போன்ற காரியங்களில் சமையலில் பெருங்காயத்தை உபயோகப்படுத்த
மாட்டார்கள். ஏனெனில் அது பிரம்மஹத்தி தோஷத்தின் அடையாளமாம்.
இன்னும் பாதி ப்ரம்மஹத்தி தோஷத்தை
வைத்திருந்த இந்திரன்
கடைசியாக ஸ்த்ரீ சம்ஸாதம் …. அதாவது பெண்களின் மாநாட்டில் பிரவேசிதான்.
பூமாதேவியிடம் கொஞ்சம் ப்ரம்மஹத்தி தோஷத்தையும், விருட்சங்களிடம் கொஞ்சம்
ப்ரம்மஹத்தி தோஷத்தையும் கொடுத்த இந்திரன்… மீதி வைத்திருந்த அந்த குற்ற தோஷத்தை
எங்கே கொண்டு போய் கொட்டுவது என யோசித்தான்.
யோசித்து யோசித்துதான் அந்த ஸ்த்ரி ஸம்ஸாதத்தில் பிரவேசித்தான். எப்படி
பிரவேசித்தான் என்பதை சென்ற அத்யாயத்தில் படித்திருப்பீர்கள். அழகு குன்றி, கர்வம்
இன்றி, வாழ்ந்து கெட்ட செல்வந்தனைப் போல அந்த ஸ்த்ரீகளிடையே தோன்றினான் இந்திரன்.
அவர்களிடமும் தனது வழக்கமான வேண்டுகோளை இறக்கி வைத்தான்.
‘எனது ப்ரம்மஹத்தி தோஷத்தில் ஒரு பங்கு
இன்னும் என்னிடம் பாக்கியுள்ளது. நீங்கள் அதை தயை கூர்ந்து ஏற்றுக்கொண்டால்
பழையபடி இந்திரனாகி விடுவேன்’ என காலில் விழாத குறையாக கெஞ்சினான் இந்திரன்.
‘எங்களுக்கென்ன தருவாய்?’
‘கேட்டதை தருகிறேன்…’
‘அப்படியானால்… நாங்கள் குழந்தைகள் பிரசவிக்கும் வரை எங்கள்
புருஷன் எங்களோடு தேகஸம்பந்தம் வைத்துக் கொள்ள வசதி செய்து வரம் கொடு…’ என
வேண்டுகோள் வைத்தார்களாம் பெண்கள். மனிதனை தவிர மற்ற விலங்குகளில்… கர்ப்பம்
தரித்த நிமிடத்திலிருந்து ஆண் விலங்கு பெண் விலங்கை முகர்ந்துகூட பார்க்காது.
மனிதர்களில் தான் பிரசவத்துக்கு முன்பு வரை நெருங்கும் பழக்கம் இருக்கிறது.
இந்திரனும்… பிரசவத்துக்கு குறிப்பிட்ட காலம் முன்பு வரை பெண்கள் தங்கள்
புருஷனோடு தேகசம்பந்தம் கொள்ள வரம் கொடுத்தான். கூடவே ப்ரம்மஹத்தி தோஷத்தையும்
வழித்து துடைத்து அவர்களிடம் கொடுத்து விட்டான்.
இப்படியாக முடிகிறது அந்த வேதக்கதை.
இந்த இடத்தில்தான் நாம் முக்கியமான ஒன்றை கவனிக்க வேண்டும். தனது ப்ரம்மஹத்தி
தோஷத்தை இந்திரன் பெண்களிடம் முற்றாக ஒப்படைத்தான் அல்லவா? அந்த தோஷம்தான்
பெண்களுக்கு மாதாமாதம் மாதவிடாயாக வெளிவருகிறது என்கிறது வேதக்கதை.
அதனால்தான் அந்த மூன்று நாள்களை பகிஷ்டை என்றே சமஸ்கிருதத்தில்
குறிப்பிட்டார்கள். அதாவது பகிஷ்கரி… புறக்கணித்திடு… தள்ளி வை… ஒதுக்கி வை என்று
இதற்கு அர்த்தம். பிராமணனைக் கொன்ற ப்ரம்மஹத்தி கொலைக் குற்றத்தை தங்களுக்குள்
வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பெண்கள். அதனால் அவள் தோஷம் பிடித்தவள் என்றது
வேதம்.
அதாவது இயற்கை பெண்ணின் உடலில் நிகழ்த்தும் ஒரு நிகழ்ச்சியை…. ஒரு கற்பனைக்
கதையோடு தொடர்புபடுத்தி அந்த நாட்களில் பெண்களை ஒதுக்கிவைத்து
துன்புறுத்தியிருக்கிறது வேதம் வகுத்த வதி.
ஒரு பக்கம் இப்படி பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்… இன்னொரு
பக்கம் அழகிப் போட்டிய்யே நடத்தியிருக்கிறதென்றால் பாருங்களேன். அதாவது இன்று
மிஸ்வேர்ல்டு என்று சொல்வதை போல ‘மிஸ்வேதா’ என்று வேண்டுமானால் நீங்கள் கற்பனை
செய்து கொள்ளலாம்.
அந்த அளவுக்கு பெண்களை அழகுப் பதுமைகளாக முன்மொழிந்து வழிமொழிகிறது வேதகாலம்.
எப்படி?... இப்படித்தான்.
‘யதாஷவை யோஹாஹா
ஸ்வர்ணம் க்ரணியம் பேசலம்
விப்ரதீ ரூபானி ஆஸ்தி…’
வேதகால விதிகளில் பெண்கள் எப்படி நடந்து வந்தார்கள் தெரியுமா? முழுக்க முழுக்க
தங்க நகைகள்… ஆபரணங்கள் அணிந்து… மிக மென்மையான உடம்பை பாதங்களால் அளப்பது போல
நகர்த்தி நடந்து வருகிறாள் பெண். அவள் அழகு எப்படி ஜொலிக்கிறதென்றால்… ஜலத்தில் துளியளவில் நெய்
பட்டால் எப்படி மினுமினுவென்று தண்ணீர் தகதகக்குமோ… அதே போல தங்க ஆபரணங்களை தாங்கி
வரும் பெண்ணும் ஜொலிக்கிறான் என வர்ணிக்கிறது ஸ்லோகம்.
இந்த அழகு மட்டும்தானா…? பெண்களுக்கு புற அழகுதான் பிரதானமா?
“சுப்ராஹா கன்யாஹா யுவதயஹா
சுபேஷசஹா கர்மகிருதஹா
சுகிர்தாஹா வீர்யாபதிஹி…”
பெண்ணானவன் ஒளி பொருந்தியவள். அவள் பார்த்தாலே பிரகாசம். அடுத்தவர்களை
கவர்ந்திழுக்கக் கூடியவள். இவளோடு சேர்ந்து வாழவேண்டும் என ஆண்களுக்கு ஆசையை
ஏற்படுத்தக் கூடியவள். எக்கச்சக்கமான அலங்காரங்கள் செய்து கொள்பவள் எப்போதும்
துருதுருவென ஏதாவது காரியம் செய்துகொண்டே இருப்பவள்.
எதிர்காலத்தைப் பற்றி கவலை
கொண்டு அதற்கேற்றவாறு வாழ்க்கையை
நிகழ்காலத்தில் திட்டமிட்டுக் கொண்டு செல்பவள். இவற்றையெல்லாம் விட உடல் உள்ளம்
இரண்டுமே பலம் மிக்கது பெண்களுக்குதான், என வேதகால பெண்களைப் பற்றி வரையறுக்கிறது
அந்த ஸ்லோகம்.
சரி சரி… தேகம் ஆரம்பித்து மனம் வரைக்கும் பெண்களை புகழ்ந்து தள்ளும் வேதம்…
வேதகாலத்தில் முக்கிய கர்மாவான யாகம் நடக்கும் போது பெண்களை எப்படி நடத்தியது?...
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
சில வருடங்கள் முன்பு திருச்சூரில் ஓர் யாகம் சோம யாகம். கிட்டத்தட்ட
நான்காயிரம் படித்த பெண்கள் அந்த யாகத்துக்கு வந்திருந்தார்கள். எல்லோரும் இக்கால
நவநாகரிக பெண்கள். நானும் அந்த சோம யாகத்தில் கலந்து கொண்டேன். யாகம்
நடத்துபவர்கள் யாக சாலையில் இவ்வளவு பெண்கள் நிறைந்திருப்பதை கண்டு ஒரு கணம்
யோசித்தார்கள்.
அம்மா… நீங்க எல்லாரும் உங்க சேலைத் தலைப்பால் காது முகத்தை மூடிக்கோங்கோ… என
பெருங்குரலில் ஆணையிட்டனர். உடனே பெண்கள் அனைவரும் தங்களது சேலை தலைப்பை எடுத்து
காதுகளோடு முகத்தை மூடிக்கொண்டார்கள். ஏன் இந்த மூடு காரியம்…? யாகங்களில்
சொல்லப்படும் மந்த்ரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்து விடக்கூடாது.
விழுந்துவிட்டால் யாகத்தின் பலன் கிடைக்காது. அதற்காகத்தான் சில வருடங்களுக்கு
முன் திருச்சூரில் நடந்த நிகழ்வு இது.
வேதத்திலிருந்தே உங்களுக்கு உதாரணத்தை என்னால்
காட்டமுடியும்.
ஆனால், இந்த காலத்திலேயே இவ்வளவு கட்டுப்பாடுகளுடன் நடந்த யாகம். வேத
காலத்தில் எப்படி நடந்திருக்கும் என உங்களின் யூகத்துக்கு விடத்தான் தற்கால
நிகழ்வைச் சொன்னேன். வேதகால பெண்களின் தேக லட்சணம், யாக லட்சணம் எல்லாம்
பார்த்தோம்… அன்று கல்யாணம் எப்படி? முதல் மணக
மள் யார்?
பெண்களின்
இயற்கையான உடலியல் நிகழ்வை வேதம் எத்தனை கற்பனை முடிச்சுகளால் கட்டிப்போட்டு
வைத்திருக்கிறது என்பதை உணர்ந்தீர்களா? அடுத்து… நாம் பார்க்கப்போவது பெண்களின்
வாழ்க்கையில் முக்கிய தருணமான திருமணம்.
வேதத்தில் நில இடங்களில் விவாஹம் என்றும் பிறகு பாணிக்ரஹணம் என்றும்
குறிப்பிடப்படும் திருமணம் மிகவும் தடபுடலாக நடத்தப்பட்டிருக்கிறது. முதலில்…
விவாஹம் என்றால் என்னா அர்த்தம் என்று தெரிந்துக்கொள்வோம். ஏனென்றால் இன்றுவரையும்
திருமணம் பத்திரிகைகளுக்கு ‘விவாஹ சுபமுகூர்த்த பத்திரிகை’ என பெயரிட்டு
அச்சடிக்கிறார்கள். விவாஹம் என்றால் Tribal வார்த்தை அதாவது மலைப்பிரதேச பழங்குடியினர் வார்த்தை.
இதற்கு தூக்கிக்கொண்டு ஓடுதல் என்று அர்த்தம். இந்த அர்த்தத்தை நியாயப்படுத்த
வேண்டும் என்பதற்காகவே திருமணங்களில் உறவினர்கள் பெண்ணை தூக்கிக்கொண்டு போவது என்ற
ஒரு சடங்கை திணித்திருக்கிறார்கள்.
சரி… நாம் வேத திருமணத்துக்குப் போவோம். திருமண
நடவடிக்கைகள் எப்படி ஆரம்பிக்கின்றன. தரகரை அனுப்புகிறது வேதம். ‘முதலில் நீ போய்
பெண்ணை பார்த்துவிட்டு வா’ என்று,
“ப்ரதக் மந்தா திய ஸானஸ்ய
வராபி வராது
காசுப்ர தீத்தா ஆஸ்மா கமிந்த்ரா
உபயம் ஜீதோஷதீ…”
என போகும். இந்த வேத ம்ந்த்ரம்… தரகர் எப்படி பெண் பார்க்க செல்ல வேண்டும்
என்று வலியுறுத்துகிறது. நீ மிக பகட்டான ஆடம்பர ஆடைகளை அணிந்து பார்ப்பதற்கு
பணக்காரன் போன்ற தோரணையுடன் பெண் பார்க்க செல்ல வேண்டும். இல்லையென்றால்
மாப்பிள்ளை வீட்டாரை பிச்சைகாரன் என நினைத்துப் பெண் கொடுக்காமல்
இருந்துவிடுவார்கள் என மாப்பிள்ளை வீட்டாரின் பிரதிநிதியாக தரகரை வரையறை செய்து
வைத்திருக்கிறது வேதம்.
அவர்
பார்த்து பேசிவிட்டு வந்தபின்… அடுத்தது பெண்ணும் பையனும் பார்த்துக்கொள்கிறார்கள்.
பரஸ்பர பார்வை பரிவர்த்தனம். பிறகு கைபிடிக்கிறார்கள். அதாவது Mutual Meeting. அதாவது பாணிக்ரஹணம் எங்கே
பார்த்துக் கொள்கிறார்கள்? மண மேடையில்? அப்போது பெண்ணிடம் சொல்கிறார்கள்…
தொஷ்டா அஸ்பை துவாம்பதிம்
தொஷ்டா சகஸ்ரமாஹம் ஷிஹீ
தீர்க்கமாயு க்துனாவதாம்…
‘ஏ… பெண்ணே இவன்தான் உனக்கென தெய்வத்தால் அனுப்பி
வைக்கப்பட்டவன். இனி இவன்தான் உனக்கு எல்லாம். இவன்தான் உன் கணவன். இவன்
சொல்படிதான் இனி உன் சொர்க்கம். இவனை தெய்வத்தின் உத்தரவின் பேரில் நீ திருமணம்
செய்து கொள்வாயாக. நீ இவனோடு எதுவரைக்கும் வாழவேண்டும் என்றால்…
to be continue...
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.