இந்துமதம் எங்கே போகிறது? - 6
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)
இதெல்லாம் சங்கரரின் இளமைகாலம். ஆண்
பொய், பெண் பொய், அனைவரும் பொய் என்ற சங்கரர் கல்யாணம் பண்ணிக்கொள்ளவும் மறுத்தார்.
அம்மா எவ்வளவோ சொல்லியும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இளமை பொங்கும் வயதில் சந்யாசம் போனார்.
தான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட... உலகையே மாயம் என ஒப்புக்கொள்கிற இளைஞர்களை திரட்டினார்
சங்கரர்.
அவருக்கு முதன்முதலில் கிடைத்தவர்கள்
நான்குபேர். ஆனந்தகிரி, சுரேஷ்வரன், பத்மநாபர், ஹஸ்தாமலகர். இவர்கள் தன்னை பின் தொடர
ஒவ்வொரு ஊராய் சென்றார். உலகே மாயம் எதுவுமே உண்மையில்லை. எதற்கும் கலங்காதே.
தனது அத்வைதத்தை ஊர் முழுக்க பரப்பினார்
ஆதிசங்கரர்.
'எல்லாமே பொய். எதுவும் மெய்யில்லை'
என அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்த ஆதிசங்கரரை அந்த சம்பவம் அழுத்தமாக உலுக்கியது.
"வேதம், கர்மாக்கள் பொய்"
என்று சொல்லி பிரச்சாரம் உபந்யாசம் என அருளிக்கொண்டிருந்த ஆதிசங்கரரை அழுத்தமாகப் பாதித்த
சம்பவம்.
இளைமைப் பருவத்திலேயே... அவரது தாயாரும்
இறந்ததுதான், அனைத்தையும் பொய் என்றபோதும் அன்னையின் இறப்பு சங்கரரை ரொம்பவே பாதித்தது.
வைதீகர்கள் வந்தார்கள். 'பார்ப்பா உன்
அம்மாவுக்குரிய இறுதிச் சடங்குகளை நீதான் செய்யவேண்டும். வழக்கம்போல அதுபொய், இதுபொய்
என உளறாதே...' என அவர்கள் பலவந்தப்படுத்தியதையடுத்து தன் அம்மாவுக்கான கடைசிக் காரியங்களை
தான் இதுவரை உபதேசித்து வந்த கருத்துக்களுக்கு மாறாக இருந்தபோதும் செய்துமுடித்தார்
சங்கரர்.
'இனி நமக்காக, நம்மை நம்பி யாருமில்லை...'
என்ற நிலைமை அன்னையின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டதால் சந்யாசத்தில் தீவிரமானார் ஆதிசங்கரர்.
மறுபடியும் ஒவ்வொரு ஊராகச் சுற்றினார்.
சந்யாசம் வாங்க வேண்டியதன் அவசியத்தை
ஒவ்வொரு இளைஞனுக்கும் சூடான ஸ்லோகங்கள் மூலம் மூலம் பரப்பினார்.
பிற்பாடு... கேரளாவைத் தாண்டியும் சங்கரர்
பயணம் மேற்கொண்டு அத்வைதத்தையும் சந்நியாசத்தையும் உபதேசித்தார் என்றும் சங்கரரின்
வாழ்க்கை வரலாற்றில் தகவல்கள் வழிகின்றன.
சங்கரர், சந்யாசிகள் எப்படி வாழவேண்டும்
என கடும் நிபந்தனைகளை தனக்கும் விதித்துக்கொண்டு... தன்னைப் பின்பற்றும் அதாவது சந்யாசத்தைப்
பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.
சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்திருக்கக்கூடாது.
தனக்கு உணவு தேவையென்றால்கூட பொருட்களை வாங்கி அவன் சமைக்கக்கூடாது. நமக்கென்று உலகில்
எதுவும் இல்லை என்பதோடு... மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு.
சந்யாசி அக்னியைக்கூட தேவைக்காக நெருங்கக்கூடாது.
ஒவ்வொரு வீடாய் போய் பிச்சையெடுக்க வேண்டும். அதில் கிடைப்பனவற்றை சாப்பிட்டுக்கொள்ள
வேண்டும்.
என்ற சங்கரர்... சந்நியாச ஸ்மிருதி வகுத்த
விதிகளை கடுமையாக பின்பற்றினார்.
சந்நியாச
ஸ்மிருதியா? அது என்ன சொல்கிறது?...
ஆசையைத் துறந்த சந்யாசிகள்
எப்படி வாழவேண்டும், வாழக்கூடாது என்பவற்றை வகுத்ததுதான் சந்யாச ஸ்மிருதி.
'பதநீ அஸோவ் ஸ்வயம்
பிக்க்ஷஹீ யஸ்ய ஏதது
த்வயம் பவேது...'
சந்யாசியானவன் பணத்தை
கையால் தொட்டால்கூட அது மிகப்பெரிய பாவம், என்று சொன்ன சந்யாச ஸ்மிருதி, சந்யாசிகள்
எவ்வளவு எளிமையாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறது. எங்கு போனாலும்
சந்யாசி கால்நடையாகத்தான் செல்லவேண்டும். அல்லது பல்லகில் போகவேண்டும். இதைத் தவிர்த்து
வேறு எந்த வசதிகளையும் சந்யாசிகள் பயன்படுத்தக்கூடாது என்பதை பின்வரும் ஸ்லோகத்தில்
சொல்கிறார்கள்.
'வாகனஸ்த்தம் யதீம் திருஷ்ட்வா
சஜேஸ ஸ்தான மாசரேது...'
என போகும் இந்த ஸ்லோகத்தின்
உள்ளர்த்தம் என்ன தெரியுமா?
சந்நியாசியானவன் எத்தனை
மாற்றங்கள் உலகியலில் வந்த பின்னாலும் தன்னை மாற்றிக் கொள்ளாதவனாக இருக்க வேண்டும்.
கால்நடையாக திரிந்து உன் உபதேசங்களைப் பரப்பவேண்டும்.
அதை விட்டுவிட்டு வண்டி
வாகனங்களை தேடிக்கொண்டிருக்காதே. அவற்றில் ஏறி ஜம்மென உட்கார்ந்துகொண்டு ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்காதே.
அதைவிட மிகப்பெரிய பாவம் வேறேதும் இருக்க முடியாது.
உண்மையான சந்யாசி ஒரு
குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது பார்வைகூட அந்த வண்டிகளில்
பயணம் செய்யக்கூடாது. பிறகு அவர் எப்படி பயணம் செய்ய முடியும்? தவிர்க்க முடியாத, துரதிருஷ்டவசமாக
சந்யாசி அப்படிப்பட்ட வண்டிகளைப் பார்த்துவிட்டால் அந்த கணமே தலைமுழுகி ஸ்நானம் செய்து
அப்பாவத்தை தீர்த்துக்கொள்ள வேண்டும்.
என 'வாகன'த் தீட்டு
பற்றி சந்யாசிகளுக்கு அப்போதே அறிவுறுத்தியிருக்கிறது சந்யாச ஸ்மிருதி.
இத்தனைக் கட்டுப்பாடுகளையும்,
நியதிகளையும் துளிகூட வழுவாமல் தன் சந்யாசத்தை மேற்கொண்டிருந்தார் சங்கரர்.
இந்த இடத்தில் நானொரு
விஷயத்தை சொல்வது மெத்தப் பொருத்தமாயிருக்கும். மகா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி
சுவாமிகள் இந்த வாகனத்தீட்டு விஷயத்தில் ரொம்ப கவனமாயிருந்தார். தான் இருக்கும்வரை
எவ்வித இயந்திர வாகனத்திலும் அவர் பயணித்ததில்லை. (பல்லக்குகளில்தான் ஏறி சென்றுக்கொண்டிருந்தார்)
இளமையிலேயே இவ்வாறு
சந்யாச ஸ்மிருதிகள்படி வாழ்ந்து வந்த ஆதிசங்கரர் இதோடு இல்லாமல் தானே பஜகோவிந்தம் என்னும்
சாஸ்திர நூலையும் இயற்றினார்.
மூடமதே... அதாவது மூடமனமே
என மனங்களை அழைக்கும் பஜகோவிந்தத்தில் ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகங்கள் இன்றளவும் சராசரி
புருஷர்களுக்கும், சந்யாசிகளுக்கும் புத்தி சொல்லக்கூடியதாக... அறிவூட்டக்கூடியதாக
அமைந்திருக்கின்றன.
பணத்தாசை பிடித்தால்
என்ன நேரும்? பெண்பித்து பிடித்தால் என்ன நேரும்? என பல சூடான கருத்துக்களை பல கோணத்தில்
(பஜகோவிந்தம் என்றால் கோவிந்தனை பஜனை செய்கிறேன் என பொருள்) எடுத்துக்காட்டியிருக்கிறார்
ஆதிசங்கரர்.
அதில் சில தேவையான
ஸ்லோகங்களைப் பார்ப்போம். அவை சொல்லக்கூடிய விதத்தில் இன்றைய சந்யாசிகள் இருக்கிறார்களா
என்றும் அந்த ஸ்லோகங்களின் ஜன்னல்களைத் திறந்து தரிசிப்போம்.
பஜகோவிந்தத்தில் ஆதிசங்கரர்
சொன்ன சேதிகளையெல்லாம்... அவரை பின்பற்றக்கூடியவர்கள் நிஜ கோவிந்தமாக காதில் வாங்கினார்களா...?
கடைபிடித்தார்களா...?
பானை சோற்றுக்கு பதச்
சோறாக சில ஸ்லோகங்களை மட்டும் பார்க்கலாம்.
'அர்த்தம் அனர்த்தம்
பாவைய நித்யம்
நாஸ்தி ததஹா
கக வேஸஹா சத்யம்...'
இதுவும் 'பண' பக்தி
பற்றிய ஸ்லோகந்தான்.
பணம் என்பதற்கு ஒன்றுமில்லை
என்றுதான் பொருள். பணத்தால் திவலை அளவுகூட நன்மையில்லை. பணத்தை தேடித்தேடி அலையாதே...
பணத்தால் சத்யம் சாகடிக்கப்படும். உனக்குள்ளேயே கலகங்கள் நடக்கும். பணம் சம்பாதிப்பதைவிட
அதை காப்பாற்றுவது கஷ்டம். நீ பணக்காரன் ஆனால் மித்ரன்கூட சத்ரு ஆகிவிடுவான். அதாவது
நண்பன்கூட பகைவன் ஆகிவிடுவான்.
என்ற ஆதிசங்கரர்...
'புத்ராதபி தனபாஜாம்
பீதிஹி...' என்றும் சொல்கிறார். இதற்கென்ன அருஞ்சொற்பொருள்?...
பணக்காரனுக்கு தன்
மனைவி மக்களால்கூட ஆபத்தும் பீதியும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு... மண்ணாசை,
பொன்னாசை உள்ளிட்ட ஆசைகளுக்கு அடித்தனமான பணத்தை பற்றி குறிப்பிட்டுக் காட்டி எச்சரிக்கும்
ஆதிசங்கரர்... அடுத்தது முக்கியமாக பெண்ணாசையைப் பற்றி பொட்டில் அறைந்தார் போல ஒரு
ஸ்லோகத்தில் சொல்கிறார்...
'நாரீஸ் தனபர நாபீதேசம்
த்ரிஷ்டவா மாதா மோஹாவேஸம்...'
என்று போகிற இந்த சமஸ்கிருத
கவிதையின் சாராம்ஸமே... 'பெண்களை நம்பாதே' என்பதுதான்.
பெண்கள் தங்களது பாவங்களையும்,
பாகங்களையும் காட்டி உன்னை மயக்கப் பார்ப்பார்கள். அவள் இருண்ட கேஸத்தில் சிக்கிக்கொண்டு
நீ மோசம் போய்விடாதே... அந்த சிரிப்பு என்ற நெருப்பில் மாட்டிக்கொண்டு மாய்ந்து போய்விடாதே.
முக்கியமாக... பாவி...
பெண்களின் மேல் பாகங்களை பார்த்து மயங்கி விழுந்து விடாதே... பின்னர் அதிலிருந்து நீ
எழுந்திருக்கவே முடியாது. அதனால் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்... உலகில் யாவும் பொய்...
பெண்ணும் பொய்... அவளது மெய்யும் (உடம்பு)பொய்.
என அன்றே எச்சரிக்கை
விடுத்தார் ஆதிசங்கரர்.
இன்று நாம் சகஜமாக
செய்தித்தாளில் படிக்கிற பல செய்திகளையும் வைத்துப் பார்க்கிறபோது சந்யாசிகள் அறிவுரை
மற்றும் எச்சரிக்கை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.
ஒரு பக்கம் தீவிர கட்டுப்பாடுகளுடன்
சந்யாசத்தை தழுவிக்கொண்டே சங்கரர் வேத, கர்மாக்களை எதிர்ப்பதிலும் அதிதீவிரம் காட்டிக்கொண்டிருந்தார்.
அதற்காக... தான் சந்யாசியான
சஷணத்திலேயே தலையை மொட்டையடித்துக் கொண்டார். இதைவிட முக்கியமாக... பிராமணர்களுக்கு
வேத கர்மாக்களை செய்வதற்கு பிரதானமாக இருக்கக்கூடிய யக்ஞோபவிதம் அதாவது பூணூலை அவிழ்த்து
எறிந்தார் சங்கரர்.
வேதம் பொய், அதன் கர்மாக்கள்
பொய் என்ற நிலையில் தன் தோள்பட்டையில் பூணூல் என்னும் பொய்யை எப்படி தாங்கிக் கொண்டிருப்பது
என்ற சிந்தனையின் அடிப்படையில்தான் அதை கழற்றி எறிந்தார் சங்கரர்.
இந்த இரண்டு நடவடிக்கைகளும்தான்
சங்கரர் மீது வேதக்காரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில்... சிகை (குடுமி),
யக்ஞோபவிதம் (பூணூல்) ஆகிய இரண்டும் கர்மாக்கள் செய்கையிலே பிராமணர்களுக்கு பிரதானம்
என சாஸ்திரங்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில்...
சங்கரர் தடாலடியாக
குடுமியை மழித்து, பூணூலை கழித்து சந்யாசியான விதம் அவர்களை அதிருப்தியாக்கியது.
சங்கரரின் இந்த செய்கைகள்
ஏற்படுத்திய கோபத்தின் மீது இன்னொரு கோப அடுக்கை ஏற்படுத்தின அவரது உபதேசங்கள். இக்கட்டுரைத்
தொடரின் முற்பகுதியிலே நான் குறிப்பிட்டுக் காட்டியதைப்போல... 'குழந்தாய்... இந்தா
பால் இதைக் குடித்து வளமோடு வாழு...' என்கிறது வேதம்.
'உனக்கென உன்னை நம்பும்
பெண்ணோடு இணைந்து வாழ்க்கையை சுகமாக நடத்துவாயாக... இதெல்லாம் கூடாது என சந்யாசம் பேசி
வருபவர்களை சமூகத்துக்குள்ளேயே விடக்கூடாது, அவர்களை விரட்டியடியுங்கள்' என சொல்கிறது
வேதசாரம்.
இன்னும் உபநிஷது சொல்வது
என்னவென்றால்... 'ஜானாதீ இச்சதீ யததே...' அதாவது... நாம் பார்ப்பதின் மேல் அறிவானது
ஆசைகொள்ளும். ஆசையின் மிகுதியால் அந்த பொருளை அடைய பிரயத்தனம் செய்யும். பிரயத்தனம்
செய்து அந்த ஆசைப்பட்ட பொருளை அடைந்தால் அதுதான் ஆனந்தம். இந்த ஆனந்தமே வாழ்க்கை. ஒரு
பொருளின் மீது ஆசைப்பட்டு அடைய முயற்சிகள் செய்து, முயற்சியில் வெற்றி பெற்று ஆனந்தப்படுவதுதான்
அறிவு. என்கிறது உபநிஷது.
ஆனால் சங்கரரின் அத்வைதம்...
இவைகளுக்கு எதிரானவையாக இருந்ததால் வேதக்காரர்கள் சங்கரர் மீது சரமாரியாக கருத்து தாக்குதல்
நடத்தினார்கள். இந்நிலையில்தான் சங்கரரை பின்பற்றியவர்களிலேயே இரண்டாக சிறுபிளவு ஏற்பட்டது.
உலகமே மாயம் என்ற மாயாவாதத்தை
ஒரு பிரிவினரும்... மாயம் அல்ல... அது நம் அஞ்ஞானம் என்று ஒரு பிரிவினரும் முனைந்தனர்.
சங்கரர் முழுக்க முழுக்க தன் தத்துவத்தை 'Educated Class' அளவிலேயே கூறி வந்ததால்...
இந்த பிளவும் பெரிய
விளைவுகளை ஏற்படுத்தவில்லை. மாறாக... வேதக்காரர்களின் எதிர்ப்பை சமாளிக்க சங்கரரே ஒரு
முரண்பாட்டை சூடிக்கொண்டார்.
'வேதோ நித்யமதிய தாம்
ததுஉதிதம் கர்ம ஸ்வனுஷ்டேதாம்
காம்யே மதிஹி...'
அஃதாவது சித்த சுத்தியுடன்
வேதம் சொன்ன கர்மாக்களை செய்தால் மோட்சம் எளிதில் பெறலாம்... என்ற ரீதியில் சங்கரர்
சொல்லி அத்வைத குட்டையை குழப்பி விட்டார். குட்டைதான் குழம்பியது. அதில் குளித்தெழுந்த
சங்கரர் குழம்பவில்லை. தன்னளவில் மாயாவாதத்தை விட்டு விலகாமல்தான் இருந்தார்.
இது ஒருபக்கம் இருக்க...
ஆதிசங்கரருக்கும் ஆகமக்காரர்களுக்கும் இடையே கருத்துமோதல்கள் வெடிக்கத் தொடங்கியது.
ஆகமக்காரர்களா?...
முதலில் ஆகமம் என்றால் என்ன?
கடவுளை எப்படி வழிபடவேண்டும்.
என்னென்ன சம்பிரதாய சடங்குகள் விக்ரகத்துக்கு செய்யவேண்டும் என்பன போன்ற விதிமுறைகளையும்
மேலும் பிறப்புக்குப் பிறகிலிருந்து இறப்புக்குப் பிறகுவரை ஒரு மனிதனுக்கு செய்ய வேண்டிய
சடங்குகளையும் பற்றி சொல்வதுதான் ஆகமம். ஆக மொத்தம் ஆகமம் என்பதற்கு வழிமுறை என்று
பொருள்.
இதில் வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு
இரண்டு ஆகமங்களும், சைவ சம்பிரதாயத்துக்கு 63 ஆகமங்களும் இருக்கின்றன.
வைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு
வைகானச ஆகமம், பாஞ்சராத்ர ஆகமம்.
பெருமாளை எப்படியெல்லாம்
ஆராதனை செய்ய வேண்டும், அர்ச்சிக்க வேண்டும்... ஆகியவற்றை 'விகனசர்' என்பவர் வகுத்தார்.
எனவே இது வைகானச ஆகமம் ஆயிற்று.
to be continue.....
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.