காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க
விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘ஜூலை-2017’ அன்று “ திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் – உரை” என்ற தலைப்பில் வெளியானது.
சாகாக் கலைநிலை
தழைத்திடு வெளியெனும்
ஆகா யத்தொளி
ரருட்பெருஞ் ஜோதி – 52
சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமான
சாகாக் கலையானது எங்கே துளிர் விடுகிறது? கற்று தெரிந்துக்கொள்ள வேண்டிய அனைத்திற்கும்
‘கலை’ என பெயர். ‘கலைக் கல்லூரி’ (Arts College) என்றால் பல்வேறுபட்ட பாடங்களை படித்து
தெரிந்துக்கொள்ளக்கூடிய வளாகம் என்று பார்க்கிறோம். நாம் படிக்கும் / படித்த கலைக்
கல்லூரிகளிலே சாகாக் கலையினை அறிவிக்கும் படிப்பு என்பது இல்லை. இனிமேல் ‘சாகாக் கலைக்
கல்லூரி’ அல்லது ‘சாகாக் கலை’ பட்டப்படிப்பு நமது கலைக் கல்லூரியில் வர இருக்கின்றது.
ஆனால், இந்த சாகாக் கலையானது நமது ஆகாயமான சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதியாக ஒளிர்ந்துக்கொண்டே
இருக்கின்றது. அந்த ஆகாயத்து ஒளியை நிலை எனக் கொண்டொழுகினால் நமக்குள் ஒரு புதிய வெளி
தழைத்திடும். அந்த வெளிதான் சாகாக் கலைக் கல்லூரி வளாகமாக விளங்கும்.
சாகாக்
கல்வியை கற்கும் நிலை தழைத்திட, வெளி எனும் ஆகாயத்தில் ஒளிர்ந்திடும் அருட்பெருஞ்ஜோதி
இறைவனே.
காரண காரியங்
காட்டிடு வெளியெனும்
ஆரணச் சிற்சபை
யருட்பெருஞ் ஜோதி – 54
‘காரண காரியம்’ என்பது ஒரு முடிவில்லா கல்வியாகும். காரியம் நமது பார்வைக்கு
தெரியும். ஆனால் அதன் காரணம் என்னவென்று அறிதல் அரிது. அனைத்து காரியத்திற்கும் காரணம்
இறைவன் என்றால், இறைவனுக்கு காரணம் எது? இதற்கான ஆராய்ச்சியினை வெளிப்படுத்துவதே ஆரணம்
என்கின்ற வேதங்கள் ஆகும். இவ்வேதங்கள் அனைத்தும் நமது சிற்சபையிலிருந்து தோன்றியதே
ஆகும். சிற்சபையாளர்கள்ளின் தரத்திற்கு ஏற்ப வேதங்களின் தரமும் விளங்கி வருகின்றன.
இறைவன் அனாதி என்பதால், இறைவனுக்கு காரணம்
இறைவனே ஆகும். “காரியத்தால் உள்ளனவே காரணத்தால் உள்ளன” (5699) என்கிற திருவருட்பாவின்
வரிகள் வேதத்தின் சாரமாகும்.
வெளி என்னும் ஆகாயத்தின் காரியம் என்ன? அந்த
ஆகாயத்தில் உள்ள விண்மீன்கள், கோள்கள் ஆகியவையே ஆகாயத்தின் காரியமாக உள்ளது. அவை உருவாக
காரணம் என்ன? அதற்கு காரணம் அருவான ஆகாயம். அதாவது அருவான ஆகாயமே காரணமாக இருந்து தன்னிடத்தே
உருவாக நட்சத்திரங்களையும் கோள்களையும் உருவாக்கிக்கொண்டது. எனவே அனாதியான அந்த ஆகாயமே
காரணமும் காரியமுமாக தன்னை காட்டிக்கொண்டிருக்கிறது. வேதங்கள் கூறுகின்ற இறைவனின் இருப்பிடமான
சிற்சபை / பரமாகாசம் என்பது அந்த ஆகாயத்தில்தான் உள்ளது. அங்கே முதன்மை அனாதியான அருட்பெருஞ்ஜோதி
விளக்கமாக உள்ளார்.
"காரணம் இதுபுரி காரியம் இதுமேல்
காரண காரியக் கருவிது பலவாய்
ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே
அளந்திடும் நீஅவை அளந்திடன் மகனே
பூரண நிலைஅனு பவமுறில் கணமாம்
பொழுதினில்
அறிதிஎப் பொருள்நிலை களுமே
தாரணி தனில்என்ற தயவுடை அரசே
தனிநட ராஜஎன் சற்குரு மணியே."
(திருவருட்பா-3695)
காரண நிலையிலும் ஒரு காரியம் உண்டு.
காரியம் எங்கிருந்தோ திடீரென புதிதாகத் தோன்றுவது கிடையாது. அது உற்பத்திக்கு முன்னரும்
உள்ளது. இதுவே சற்காரிய வாதம் என்கிறது சைவ சித்தாந்தம். 'இல்லது தோன்றாது; உள்ளது
அழியாது' என்பது சற்காரிய வாதம். இதன் விளக்கம் பலவாக விரியும். இதன் பொருள் நமக்கு
புரியவே புரியாது. எனவே தம் மகனான வள்ளற்பெருமானுக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி
ஆண்டவர், காரண காரியத்தால் அளப்பதை விட்டுவிட்டு பூரண நிலை பெறுவதில் முழு ஈடுபாடு
காட்டுக; பூரணம் அடைந்துவிட்டால் அவையெல்லாம் கணப் பொழுதில் உனக்குத் தெரியவரும் என்று
அறிவுறுத்துகிறார்.
"காரணம் இன்னது, அக்காரணத்தால் செய்கின்ற
காரியம் இன்னது, அதற்கும்மேல் அக்காரண காரியத்தின் மூலகாரணம் இன்னது என்று இன்னும்
பலவகையில் அக்காரண காரியத்தை அளப்பதில் கைதேர்ந்தது இந்த வேதங்களும் அதன் விளக்கமான
ஆகமங்களும் ஆகும்.
நீ அவ்வாறு காரண காரிய கேள்விகளைக் கேட்டு
அளந்துக்கொண்டு காலத்தை வீண் செய்யாதே மகனே. உனது நோக்கம் பூரண நிலை அனுபவம் பெறுவதே
ஆகும். அந்த அனுபவம் கிடைத்துவிட்டால் கணப் பொழுதில் எப்பொருளின் நிலைகளையும் நீ அறிந்துவிடுவாய்."
வள்ளற்பெருமானும் இறைவன் அளித்த உபதேசம்
இதுவே. ஆகவே நாமும் காரண காரிய சிக்கலில் மாட்டிக்கொண்டு இது உண்மையா? அது உண்மையா?
என்று குழம்புவதைக் காட்டிலும் அதிலிருந்து விடுபட்டு பூரண நிலை அனுபவம் பெறுவதே குறிக்கோளாக
இருக்க வேண்டும். வேத வழியினை விட்டுவிட்டு திருவருட்பாவை கைகொள்வோம். இறைவன் அனாதி
என்றால் அனாதிதான். அதற்கான காரண காரியத்திற்குள் இறங்க வேண்டாம் என்கிறார் வள்ளற்பெருமான்.
அனுபவம் கிடைக்கப் பெற்றால் எல்லாம் தானாக வெட்ட வெளிச்சமாக தெரியவரும். எனவே அந்த
அனுபவம் கிடைக்க முயலவேண்டும்.
எனவே காரணமும் அதன் காரியமும் காட்டிடும்
வேத வெளியாகிய பரமாகாசத்தில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
ஏக மனேக மெனப்பகர்
வெளியெனும்
ஆகமச் சிற்சபை
யருட்பெருஞ் ஜோதி – 56
வேதத்தை விளக்க வந்த ஆகமங்கள் இறைவன் ஒருவனே
என்றும், இறைவன் பலர் என்றும் பல்வேறு விதமாக எடுத்தியம்புகின்றது. சைவ ஆகமங்கள் மொத்தம்
28 ஆகும். இவைகளில் ஒன்றிரண்டு தவிர மற்ற ஆகமங்கள் வழக்கொழிந்துவிட்டன. அந்த ஒன்றிரண்டு
ஆகமங்களைக் கொண்டுதான் தற்போது சைவ கோவில்களில் வழிபாடு நடந்து வருகின்றது. இவ்வாகமங்கள்
எல்லாம் சிற்சபையிலிருந்தே உருவாகின. இதனை சைவ சமயமானது, வேதமும் ஆகமமும் சிவபெருமானின்
நெற்றியிலிருந்து தோன்றியது என்று சொல்லும். மனிதனுள் விளங்கக்கூடிய சிற்சபை அறிவினால்தான்
வேதங்களும் ஆகமங்களும் வெளிப்பட்டன. சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்குவதால்
அவ்வேதங்களும் ஆகமங்களும் இறைவனால் வெளிப்பட்டது
என்கிறோம்.
வேதங்கள் காரண காரியத்தை விளக்குவது போல
ஆகமங்களானது ஒன்றான பரம்பொருளை பலவாக எடுத்துரைக்கிறது. இதற்கு ஆகமச் சிற்சபை பலவாக
உள்ளதே காரணம். அதாவது தமக்குள் சிற்சபையை
கண்டுகொண்ட பலரும் தமது அனுபவத்தின் கண் தோன்றிய கருத்துக்களை பல விதமாக பகர்ந்ததால்
/ வெளிப்படுத்தியதால் ஒன்றான இறைவன் பல விதமான கடவுள்களாக வெளிப்பட்டன. அக்கருத்துக்களை
ஆகமங்கள் என்று தொகுக்கப்பட்டன.
ஒன்றெனவும், பல எனவும் எடுத்துரைக்கப்பட்ட
ஆகமங்கள் உரைக்கும் இறைவனாக சிற்சபையில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
வேதா கமங்களின்
விளைவுகட் கெல்லாம்
ஆதார மாஞ்சபை
யருட்பெருஞ் ஜோதி – 58
நாம் மேலே கண்ட நான்கு வரிகளின் சுருக்கமாக
இங்கே இந்த இரண்டு வரிகள் அருளப்பட்டுள்ளன. வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் இவை இரண்டினாலும்
இவ்வுலகில் விளைந்த விளைவுகட்கெல்லாம் ஆதாரமாக சாட்சியாக இருப்பது சிற்சபையில் விளங்குகின்ற
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே ஆகும்.
வேதங்களினால் வந்த விளைவுகளையும் ஆகமங்களினால்
வந்த விளைவுகளையும் சுத்த சன்மார்க்கம் பொய் என்று உரைக்கின்றது. வேதங்களும் ஆகமங்களும்
சிற்சபையின் கண்ணே தோன்றினாலும், அவைகளின் விளைவுகள் இவ்வுலகிலே அசத்தியத்தை உண்டுபண்ணி
விட்டன. இவைகளின் உண்மை விளைவுகளை அறிய வேண்டுமாகில் இவற்றிற்கு ஆதாரமாக விளங்கக் கூடிய
சிற்சபையை வணங்க வேண்டும்.
வேதாகமங்களின் உண்மை விளைவுள் என்பது சுத்த
சன்மார்க்கந்தான். அதற்கு ஆதாரமாக இருந்து சிற்சபையுள் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
என்றா தியசுடர்க்
கியனிலை யாயது
வன்றாந் திருச்சபை
யருட்பெருஞ் ஜோதி – 60
“என்று
ஆதி அச்சுடர் இயல் நிலை ஆய அது அன்றாம் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி” என்று பிரித்துணர்க.
அச்சுடர் என்றால் முச்சுடரைக் குறிக்கும்.
சூரியன் சந்திரன் மற்றும் அக்னி ஆகியவைகளே முச்சுடர்களாம். இந்த முச்சுடர்களும் முதன்
முதலாக அதனது இயற்கை நிலையினை அதாவது ஒளிரும் தன்மையினை அடைந்தது எந்த நாளோ அன்றே அருட்பெருஞ்ஜோதி
விளங்கும் திருச்சபையும் உருவாயிற்று. புறத்திலே சூரியன் சந்திரன் மற்றும் அக்னி என்றால்,
அகத்திலே வலது இடது மற்றும் நடுக்கண் இவை மூன்றும் முச்சுடராக திருச்சபையிலே விளங்குகின்றது.
தொடக்கம் எதுவென தெரியாத வண்ணம் என்று முச்சுடர்களும்
தோன்றி அதன் இயற்கை நிலையினை அடைந்ததோ அன்றே அகத்திலும் திருச்சபை கொண்டு விளங்கும்
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
----- T.M.RAMALINGAM
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.