இந்துமதம் எங்கே போகிறது? - 7
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)
அடுத்ததாக... பெருமாளே
இறங்கிவந்து 'என்னை இப்படி இப்படியெல்லாம் பூஜிக்க வேண்டும், புனஸ்காரம் பண்ண வேண்டும்,
அர்ச்சிக்க வேண்டும், அலங்காரம் பண்ணவேண்டும் என தன்னை வழிபடும் முறைகளை அந்த பெருமாளே
ஐந்து ராத்திரிகளில் வந்து சிலரிடம் கூறியதாக ஒரு கருத்துரு காணப்படுகிறது. இதுவே பாஞ்சராத்ர
ஆகமம் எனப்படுகிறது.
சைவ சம்பிரதாயத்துக்கு
63 ஆகமங்கள் உள்ளன. அவற்றில் பலவற்றை இப்பொழுது புழக்கத்தில் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது.
சரி... இவைதான் ஆகமங்கள்.
அதாவது விக்ரக வடிவிலான தெய்வத்தை எப்படி ஆராதனை செய்யவேண்டும் என போதனை செய்த மந்திரங்கள்தான்
ஆகமங்கள். இதையெல்லாம் சொன்ன ஆகமங்கள்... இதோடு இன்னொன்றையும் கூறின. 'இப்படியெல்லாம்
க்ரமங்களோடு பகவானை வழிபட்டால்தான் மோட்சம் கிட்டும் என்பதுதான் அது.
இங்கேதான் ஆதிசங்கரர் குறுக்கிட்டார்.
கண்டித்தார் என்றுகூட சொல்லலாம்.
கடவுள் மட்டும்தான் நிஜம் மற்ற அனைத்தும்
மாயம், பொய். ஆகமங்கள் பொய்களை திரட்டிவந்து உண்மையை பூஜிக்கச் செய்கின்றன. அந்த உண்மையைக்கூட
விக்ரகம் என்னும் பொய்வடிவமாகவே பார்க்கின்றன. இப்படியெல்லாம் ஆகமக்காரர்களின் அறிவுரைகளை
நம்பிக்கொண்டிருந்தால் மோட்சம் கிட்டாது. கடவுளின் கடாட்சமும் கிட்டாது.
ஆகமங்கள் தவறு. அதை அடியொற்றுவதும் தவறு
என வாதிட்டார் ஆதிசங்கரர்.
அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி?...
சொன்னார்.
"சத்ஸங்கத்வே நித்ஸங்கத்வம்
நித்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர்மோகத்வே நித்ஸலசித்தம்
நித்ஸலசித்தே ஜீவன்முக்தி..."
இந்த வரிகளுக்குள் வாழும் பொருள் என்ன?
சந்யாசிகள், சாதுக்கள், ஞானிகளின் தொடர்பு
கிடைக்கும்போது உனக்கு உலகியல் மீதான நாட்டம் குறைகிறது.
உலகியல் பற்று குறையும்போது உன் மனம்
மோகத்தை முழுமையாக விட்டுவிடுகிறது.
மோகத்தை நீ விட்டுவிட்டபோது உனக்கு சலனம்
இல்லாத சித்தம் வாய்க்கிறது.
சித்தத்தில் சலனம் இல்லாமல் இருந்தாலே
உனக்கு மோட்சம் கிடைக்கும்.
இதற்காக கர்மா, வழிபாடு எல்லாம் தேவையில்லை
என்கிறார் சங்கரர்.
இப்படியாக வாழும் முறையிலிருந்து, மோட்ச
தத்துவம் வரை பல இடங்களுக்கும் தன் காலடியில் கடந்து பரப்பிய ஆதிசங்கரர்...
தனது 32-ஆம் வயதிலேயே மோட்சம் அடைந்ததாகச்
சொல்கிறார்கள்.
அவர் பிறந்த இடம் காலடி என உறுதிபடச்
சொல்வதுபோல்... அவர் இன்ன இடத்தில்தான் இறந்தார் என்பதற்கு எவ்வித தகவல் ஆதாரங்களும்
கிடைக்கவில்லை. இமயமலைப் பக்கம் சென்றவர் திரும்பவேயில்லை என உறுதியற்ற தகவல்தான் நிலவுகிறது.
ஒருவேளை கிடைத்திருந்தால்... அவருக்கு
அங்கே அவரை பின்பற்றியவர்கள் நினைவுச்சின்னம் அமைத்திருப்பார்களே, அதுவும் இல்லை. அதனால்...
ஆதிசங்கரர் இங்குதான் உயிர்நீத்தார் என்பதும் எங்கே எனத் தெரியவில்லை.
இந்த யூகங்கள் ஒருபுறம் இருக்க... சங்கரரின்
காலம் பற்றியும் பல கணிப்புகள்! தனது "Discovery of India" என்னும் வலுவான
வரலாற்று நூலில் ஆதிசங்கரர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நேருஜி கூறுகிறார்.
இன்னும் சிலர், நான்காம் நூற்றாண்டு,
ஆறாம் நூற்றாண்டு என்றெல்லாம் சொல்கிறார்கள். இவர்களைத் தூக்கி சமைக்காமலே சாப்பிடுவதுபோல்
இன்னும் சிலர் சங்கரர் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முற்பட்டவர் என்கிறார்கள்
சகஜமாக.
இப்படி சில கணிப்புகள் திணிக்கப்பட்டாலும்
பொதுவாக சங்கரர் கி.பி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டுக்காரர்தான், அதாவது இன்றிலிருந்து
1200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் என்பதுதான் வரலாற்றை வடிகட்டிப் பார்க்கும்போது
கொடிகட்டி நிற்கும் நிஜம்.
என்ன இது சங்கரர் அவதரித்தது முதல் முக்தியடைந்தது
வரை சொல்லி முடித்துவிட்டாரே! சங்கரர் என்றால் மடங்கள்தானே ஞாபகம் வரும். அவற்றைப்
பற்றி ஒருவரிகூட சொல்லவில்லையே? என நீங்கள் கேட்பது என் செவிகளில் தீர்க்கமாக தெறிக்கிறது.
சங்கர மடங்கள் அனைத்தும் சங்கரருக்குப்
பிறகுதானே ஆரம்பிக்கப்பட்டன. அதை எப்படி சங்கரர் வாழ்க்கை வரலாற்றில் சொல்ல முடியும்?
அப்படியானால்...
சங்கரர் சகாப்தம் முடியும் வரை சங்கர
மடங்கள் தோன்ற வில்லையா?... அந்த மடங்களையெல்லாம் சங்கரரே ஸ்தாபித்தார் என்ற கருத்து
உண்மையில்லையா?... அவ்வாறே வைத்துக்கொண்டால் அத்வைத மடங்கள் மலர்ந்த கதை என்ன?...
இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை சங்கரருக்குப்
பிறகான நூற்றாண்டு காலம்தான் சொல்கிறது.
தான் போதித்த அத்வைத கருத்துக்களை தன்
காலத்துக்குப் பின்னாலும்... உலகம் முழுவதும் சென்று பரப்புமாறு தன் சிஷ்யர்களுக்கு
ஆணையிட்டார் ஆதிசங்கரர்.
புத்தரிடமிருந்து தனக்கான அத்வைதத்தின்
சாரத்தை பெற்ற சங்கரர், வைஷ்ணவர்களால் 'ப்ரசன்ன பெளத்தர்' என்றே அழைக்கப்பட்டார். அதாவது
புத்தரின் கருத்துக்களை மறைமுகமாக சொன்னவர் என்பதால் இப்பெயரால் அழைக்கப்பட்டார். இதேபோல்
ஆதிசங்கரரின் சிஷ்யர்களும்... 'ப்ரஸன்ன பெளத்தர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள்.
சங்கரர் காலத்துக்குப் பிறகு... அத்வைதத்தை
பரப்ப முழுக்க முழுக்க முனைந்தார்கள் இந்த ப்ரஸன்ன பெளத்தர்கள். சங்கரரை போலவே ஊர்
ஊராக சுற்றினார்கள்.
'வாழ்வே பொய், எதையும் நம்பாதே... சந்யாசம்
பெறு...' என சுற்றிச் சுற்றி வலியுறுத்தினார்கள்.
'தனேஷனே... பார்யஷனே... புத்ரேஷனே...'
என சொல்லித்தான் அவர்கள் சந்யாசம் ஏற்றார்கள். அதாவது செல்வ ஆசையை துறந்தேன். மனைவி
(பெண்)இச்சையை மறந்தேன். அதன் மூலம் புத்ர விருப்பத்தை மறந்தேன்.' என்பதுதான் இந்த
மூன்று வார்த்தைகளின் முழக்கம். இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டு சங்கரரை பரப்புவதற்காக
நடந்த சிஷ்யர்கள் அலைந்து அலைந்து ஓர் முடிவுக்கு வந்தார்கள்.
"நமது குருநாதர் புத்தரிடமிருந்த
'சர்வம் சூன்யம்' என்ற உபதேசத்தைத்தான் கைக்கொண்டு கடவுள் மட்டும் உண்மை மற்ற அனைத்தும்
பொய் என சொன்னார்.
அப்படிப்பட்ட சங்கரரின் புத்தோபதேசத்தை
பரப்ப.. நாமும் புத்தரை பின்பற்றியவர்களின் யுக்தியை பின்பற்றலாமே..." என ஆலோசித்தனர்.
என்ன யுக்தி?...
"இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே
பேசப்படுகின்றதே... இது போன்ற மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்துதான்
பெற்றார்கள்" என இத்தொடரின் நான்காவது அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
அதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த
புத்த யுக்தியைதான் சங்கரரின் சிஷ்யர்கள் பின்பற்றலாமா என ஆலோசித்தனர்.
அதன்படியே ஆதிசங்கரரின் சிஷ்யர்கள்...
புத்த விஹார்களை முன்னோடியாக வைத்து மடங்களை நிர்மாணிக்க ஆரம்பித்தனர். மடம் என்றால்
என்ன? சந்யாசிகளின் இருப்பிடம் என்று பொருள்.
அதாவது ஆதிசங்கரரின் அத்வைதத்தை பரப்ப
ஆங்காங்கே சந்யாசிகள் தங்கி அந்த வேலையை மட்டும் முழு மூச்சாக செய்ய வேண்டும். அதற்காக
மடம் என ஒரு அமைப்பில் தங்கிக் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட ஆதிசங்கரரின் அத்வைத சிஷ்யர்கள்...
திசைக்கு கொஞ்சம் பேராய் கொத்து கொத்தாய் நடந்தனர்.
தெற்கு திசை நோக்கி நடந்தவர்கள் சிருங்கேரியில்
ஒரு மடத்தை எழுப்பி... அத்வைத பிரச்சாரத்துக்கு அடிக்கல் நாட்டினார்கள். கிழக்கு பக்கமாக
மாயாவாதத்தை பரப்ப சென்றவர்கள் பூரியில் மடத்தை நிர்மானித்தார்கள். மேற்குப் பக்கமாய்
அத்வைதம் பரப்புவதற்காக துவாரகையில் துவக்கப்பட்டது மடம்.
வடக்குப் பகுதிக்கும் சென்றனர். பத்ரியில்
சங்கரரின் கொள்கைகளை விரிவாக்க ஒரு மடத்தை நிர்மானித்தனர்.
இவ்வாறு... சங்கரரின் முக்கியமான சிஷ்யர்களான
சுரேஷ்வரன், ஆனந்தகிரி, பத்மநாபர், ஹஸ்தாமலகர் போன்றவர்கள் உள்ளிட்ட பல சிஷ்யர்கள்
இந்த நான்கு மடங்களையும் நிர்மாணிக்கிறார்கள்.
ஆதிசங்கரரின் உபதேசத்திற்கு இணங்க...
இம்மடங்களில் எந்தவிதமான பூஜை புனஸ்காரங்களுக்கும் இடம் கிடையாது. அத்வைதம் காட்டும்
ஞான மார்க்கத்தின் படி... விக்ரக வழிபாடு கிடையாது. பூஜைகள் கிடையாது. கோவில்களுக்கும்
மடங்களுக்கும் சம்பந்தம் கிடையாது, ஆகமங்கள் கிடையாது. வேதங்கள் சொன்ன கர்மாக்கள் கூடாது.
சங்கர கொள்கைகளை பரப்புவதற்கான இம்மடங்களில்
சமையல் செய்யக்கூடாது. பிச்சை எடுத்து சாப்பிடும் சந்யாசிகள் தங்கும் இடத்தில் எதற்காக
சமையல்?... சமையல் இல்லையென்றால், அதாவது நைவேத்யம் இல்லையென்றால் பிறகு அங்கே பூஜை
எப்படி நடக்கும். பூஜை இல்லையென்றால் அங்கே விக்ரகம் எப்படி இருக்கும்?...
ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால்...
'Shankara Mutts are only for proclamation of Advayeam..."
அதாவது சங்கரரின் சிஷ்யர்களால் நிர்மாணிக்கப்பட்ட
மடங்களின் முதல் மற்றும் முழுமையான பணி... அத்வைத கொள்கையை பறைசாற்றி... உலகெங்கும்
பிரச்சாரம் செய்வதற்காகத்தானே மட்டுமன்றி... வேறெதற்கும் அல்ல.
இப்போது நீங்கள் கேட்கலாம். மடங்களுக்கான
நோக்கம் இப்போதும் அதே அளவில் இருக்கிறதா?... சங்கரர் மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு
என்ன ஆதாரம்?...
ஆதிசங்கரர் போதித்தபடிதான் அவர்தம் சிஷ்யர்களால்
சிருஷ்டிக்கப்பட்ட மடங்கள் நடக்கின்றதா...? ஆதி சங்கரரே மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு
என்ன ஆதாரம்?
இரண்டாவது கேள்விக்கான பதிலை முதலில்
பார்ப்போம்.
வரலாற்றுச் செய்திகளை, வதந்திகளை தூக்கிப்
பிடித்துக்கொண்டு, அப்படியே அண்ணாந்து பார்த்து ஆமாம் போடுவதல்ல அறிவு. அதிலே சொல்லப்பட்டவற்றின்
உள்ளே போய் உட்கார்ந்து சிந்தனை செய்து சரிபார்ப்பதுதான் முறை.
அந்த முறையில்... சங்கரர், சங்கர மடங்களை
ஸ்தாபித்தாரா?... என்பதை முதலில் பார்க்கக் கடவோம்.
ஆதிசங்கரர் தனது முப்பத்து இரண்டாவது
வயதிலேயே மோட்சமடைந்து விட்டார் என கொண்டு பார்த்தால்...
சாலை வசதிகள் தெளிவான பூகோள வழிகாட்டுதல்கள்
என எவ்வித போக்குவரத்து தகவமைப்பும் துளிகூட இல்லாத சங்கரரது காலத்தில் அவர் தேசம்
முழுமையும் சுற்றியிருக்க முடியுமா என்பதே சிந்திக்கத் தகுந்ததாகிறது.
இன்றுகூட நெடுஞ்சாலைகளிலிருந்து கோபித்துக்
கொண்டது போல் எத்தனை சிறுசிறு வீதிகள் விலகிச் செல்கின்றன. அவற்றின் வழியே எத்தனை கிராமங்கள்
கல்லும் மண்ணும் கலந்த சந்துகளால் கட்டப்பட்டு கிடக்கின்றன. அந்த சின்னச் சின்ன சாலைகளை
கடந்து அந்த கிராமங்களுக்குள் செல்வதற்கு...
விஞ்ஞானம் வளர்ந்த இக்காலத்திலேயே நமக்கு
எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது?... கால விரயம் ஆகிறது?
அப்படியென்றால் விஞ்ஞானம் வளராத...
'ஞானம்' வளர்ந்த காலத்தில் வாழ்ந்த சங்கரர் தன் காலத்தில் எத்தனை வ்யாக்யானங்கள், பாஷ்யங்கள்
செய்திருக்கிறார். இவ்வளவையும் மூல நூல்கள் பார்த்து படித்து உணர்ந்து, தெளிந்து...
பாஷ்யமாக மாற்றி இயற்றுவதற்கு சங்கரருக்கு குறிப்பிட்ட காலம் நிச்சயமாக பிடித்திருக்கும்.
இந்த பெருங்காரியத்தோடு... ஊரெங்கும்
சுற்றி... கால்நடையாகவே சுற்றி... அத்வைதத்தை பரப்பியும் வந்திருக்கின்றார். காலதேவனின்
குளிர், வெப்ப ஜாலங்களில் பயணித்து... இன்று இந்தியா என்று சொல்கிறோமே... இவ்வளவு பெரிய
நிலப்பரப்பையும் பரவலாக சுற்றி வந்திருக்க சங்கரருக்கு எவ்வளவு காலம் பிடித்திருக்கும்?...
ஊர்
ஊராக போய் உடனே மடம் நிர்மானிப்பதை சங்கரர் முக்கிய கடமையாக கருதவில்லை. சென்ற உடனேயே
அங்கே மடம் ஆரம்பிக்க வேண்டிய அவசியமும் சங்கரருக்கு இருந்திருப்பதாக தெரியவில்லை.
இந்த நிலையில்... தெற்கே சிருங்கேரியிலிருந்து வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே
துவாரகா என திக்குக்கு ஒன்றாய்... எக்கச்சக்க தொலைவுகளை... இவ்வளவு இளவயதில் முக்தியடைந்த
சங்கரர் பயணித்து மடங்களை நிர்மாணித்தார் என்பதை காலக்கணக்கு கேள்வி கேட்கிறது.
அடுத்ததாக,
சங்கரர்
முக்தியடைந்த அந்த 'புண்ணிய பூமி' எங்கே இருக்கிறதென இதுவரை இறுதியாக தெரிய வரவில்லை.
ஒருவேளை சங்கரரே இந்த நான்கு மடங்களை தன் ஆயுளுக்குள் ஸ்தாபித்ததாக கருதிக் கொள்வோம்.
அப்படியானால்
சங்கரர் முக்திபெற்ற பிறகு... அவர்மேல் கொண்ட பக்தியின் காரணமாக, மரியாதையின் காரணமாக
அவர் போதனையை கேட்டவர்கள் என்பதன் காரணமாக சிஷ்யர்கள் சங்கரருக்கு அவர் ஸ்தாபித்த ஏதாவது
ஒரு மடத்தில் அவருக்கு சமாதி அமைத்திருப்பார்களே. அவர் ஸ்தாபித்த மடத்துக்கு இதைவிட
வேறென்ன பெருமை கிடைத்திருக்க முடியும்?
சரி... சங்கரரே 'என் இறப்பும் ஒரு பொய்தான்.
அதனால் என்னை நான் நிர்மாணித்த மடங்களில் ஒன்றில் அடக்கம் செய்து மடத்தின் நோக்கத்தை
கெடுத்துவிடாதீர்கள்' என்று சிஷ்யர்களிடன் சொல்லியதாக வைத்துக் கொள்வோம்.
அப்படியிருப்பின்... சங்கரர் முக்தி
பெற்ற ஸ்தலத்திலேயே அவருக்கு ஜீவசமாதி எழுப்பியிருக்க மாட்டார்களா?... அதுவும் தேடலில்
காணக் கிடைக்கவில்லையே. இந்த கேள்விக் குறிகளையெல்லாம் ஒரு பக்கம் வையுங்கள். இன்னொரு
பக்கம் சங்கரர்... சங்கர மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு தெய்வங்களே சாட்சி சொல்கின்றன.
தெய்வ சாட்சியா...?
ஆமாம். மோட்சம் பெறுவதற்கு சங்கரர் அருளிய
ஸ்லோகத்தை நான் முதலில் சொல்லியிருந்தேன். அதாவது... சந்யாசிகளின் நற்சம்பந்தம் பெற்று
அதன்மூலம் உலகியல் பற்றை ஒழித்து... மோகத்தை துறந்து... அதன் அடிப்படையில் சித்தம்
சலனம் இன்றி இருந்தாலே மோட்சம் கிடைக்கும் என்று.
இதை சொன்ன சங்கரர்... விக்ரஹ வழிபாட்டை
வலியுறுத்திய ஆஹமக்காரர்களை கண்டித்த கதையையும் சொல்லியிருந்தேன். அதாவது... மனசு சுத்தமானால்
தான் மோட்சமே தவிர... அப்படி, இப்படி... என விக்ரக வழிபாடுகளால் அல்ல என்பது சங்கரோபதேசம்.
இப்படிப் பட்ட சங்கரர்... தான் மடங்களை நிர்மாணித்து அதில் ஆஹம ரீதியான வழிபாடுகளை
நடத்தியிருப்பாரா?
அதிலும் 'அகம் ப்ரம்மம்' என்று சொன்ன
சங்கரரின் மடங்களில் நிலவும் வழிபாடுகளை கவனியுங்கள்.
தெற்கே உள்ள சிருங்கேரி மடத்தில் சாரதாதேவி
வழிபாடு... கிழக்கே உள்ள பூரி மடத்தில் க்ருஷ்ண உபாசனை... வடக்கேயுள்ள பத்ரிநாத் மடத்தில்
சிவ வழிபாடு... மேற்கே இருக்கிற துவாரகையில் கிருஷ்ண துதி இப்படியாக நான்கு மடங்களிலும்
விக்ரக வழிபாடு... மூர்த்தி உபாசனை. அதுவும் வெவ்வேறு தெய்வ வழிபாடு...
சங்கரரே உண்மையில் மடங்களை ஸ்தாபித்திருந்தால்
இப்படிப்பட்ட முரண்பாடுகளை முடிச்சு போட்டிருப்பாரா? இதற்கெல்லாம் சிலர் பதில் சொல்லலாம்.
'சங்கரர் தான் மடங்களை ஸ்தாபித்தார். அவரது சிஷ்யர்கள் காலத்தில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்'
என்று...
சபாஷ் இந்த பதில்தான் முதல் கேள்விக்கு
பதில்... அதாவது, சங்கரர் போதித்தபடிதான் மடங்கள் நடக்கின்றதா? என்ற கேள்விக்கு...
'இல்லை' என்ற பதில் கிடைத்து விட்டதே.
அடுத்ததாக... நான்கு மடங்கள் தானா?...
காஞ்சி மடத்தைப் பற்றி சொல்லவே இல்லையே?... இந்த கேள்வி கேட்கிறது. எங்களைப் போன்றவர்களுக்கு
அது கும்பகோண மடம்தான்.
கும்பகோணம் மடமா? காஞ்சி மடமா? இந்தக்
கேள்விக்குள் நுழைவதற்கு முன்பு... 500 வருடங்கள் பின்னால் போய் அதோ அந்த சிருங்கேரி
மடத்தின் வாசலில் நில்லுங்களேன்.
இன்றைய பெங்களூரிலிருந்து சில மணித்துளிகள்
வாகனப் பயணம். அங்கே ஷிமோகா. இயற்கையின் அழகு அமோகமாய் மேற்குத் தொடர்ச்சி மலை மீது
ஏறி இறங்கி தவழ்ந்து கொண்டிருக்கின்றது. துங்கா நதியின் ஈரமடிக்கரையில் நனைந்து கிடக்கிறது
சிருங்கேரி.
மத்திய கர்நாடகாவிலுள்ள இந்த சிருங்கேரியில்தான்
சங்கரத்துவத்தின் தென்பகுதி மடம். எளிமையாக அமைந்திருந்த குடில் போன்ற தோற்றம் கொண்ட
இம்மடத்தின் வாசலில் ஆங்காங்கே சில பிராமணர்களின் பேச்சுக்குரல்.
மடத்துக்கு உள்ளே சந்யாசிகள் அமர்ந்திருக்க...
அங்கேயும் சில பிராமணர்கள். பல நாட்களாய் வெளியே
சுற்றித் திரிந்த அத்வைத சந்யாசிகள் அன்றுதான் மடத்துக்கு வந்திருப்பார்கள் போலும்.
அதனால்தான் இந்த பக்தி பரபரப்பு.
இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்வது விசேஷம்.
சங்கர மடத்து சந்யாசிகள்... மடத்தை மையமாக வைத்தபடி அதைச் சுற்றியுள்ள சில பகுதிகளில்தான்
சுற்றித் திரிந்து அத்வைதம் பரப்பவேண்டும். அதேபோல... அதே பகுதிகளில் வாழ்பவர்கள்தான்
அம்மடத்துக்குள் வந்து ஸ்வாமிகளிடம் தரிசனமோ... தீட்சையோ பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு
ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு எல்லை வகுக்கப்பட்டுள்ளது.
அந்த எல்லையைவிட்டு மடாதிபதிகளும் வெளியே
போகக்கூடாது. அந்த எல்லையைத் தாண்டிய பக்தர்களும் அம்மடத்துக்கு வரக்கூடாது. இந்த இடத்தில்
'மடாதிபதி' என்றால் யார்...? என்ற கேள்வி எழும்.
மடங்களின் அதிபதி மடாதிபதி. அதிபதி என்றால்
மடத்துக்குப் பொறுப்பானவர். அதாவது இருக்கும் சந்யாச சிஷ்யர்களிலேயே சந்யாச காலத்தில்
மூத்தவரை மடாதிபதி என அழைக்கப்படுவார். அவருக்கு அடுத்தது அதிக சந்யாசகாலம் பெற்றவர்
அடுத்த மடாதிபதியாக வருவார். இதுதான் மடாதிபதி என்பதன் பொருள். மாறாக... மடத்துக்கு
வருவாய் ஆதாரங்களை திரட்டி வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்பவர் அல்ல. அதாவது... அந்த
காலத்திலெல்லாம் சங்கர மடங்களில் நிறைய சிஷ்யர்கள் இருந்திருக்கிறார்கள். சந்யாசம்
வாங்கிக்கொண்டு செயல் பட்டிருக்கிறார்கள்.
அவர்களில் அதிக அளவு சந்யாச காலம் பெற்றவர்
மடாதிபதியாகிறார். அதாவது The Senior Saint becomes cheer. இந்த சின்ன விளக்கத்துக்குப்
பிறகு மறுபடியும் சிருங்கேரி மடத்தின் வாசலுக்கு வந்துவிட்டீர்களா?
அப்படி ஒரு மூத்த சந்யாசி மடாதிபதியாக
வீற்றிருந்தார் மடத்தில், அவரைப் பார்த்து தரிசித்து, வணங்கி மகிழ்ந்துவிட்டு திருப்திப்பட்டுக்கொண்டவாறே
சில பிராமணர்கள் வெளியே வந்தனர்.
அப்போது சில யுவஸ்திரீகள் சங்கர மடாதிபதியை
சந்தித்து ஆசிர்வாதம் வாங்குவதற்காக உள்ளே நுழைய...
'நில்லுங்கள்' என்றது மடத்துக்காரரின்
குரல். நீங்களெல்லாம் உள்ளே வரக்கூடாது. ஸ்வாமிகள் உங்களை பார்க்கமாட்டார். நீங்கள்
கொண்டு வருபவற்றை ஸ்வீகரிக்கமாட்டார்... போய்விடுங்கள்...'
to be continue...
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.