Monday, July 31, 2017

இந்துமதம் எங்கே போகிறது? - 5

இந்துமதம் எங்கே போகிறது? - 5
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)
சரி... நல்லவனாக இருப்பது ஒரு தொழிலா...? அப்படியானால் மற்ற வர்ணத்தவர்கள் கெட்டவர்களா? இப்படியும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். சிலருக்கு ஒன்றாம் வகுப்பிலேயே எழுந்திருக்கலாம்.

அப்போது கேள்விகள் கேட்டால் வாத்யார் அதட்டி அமரவைத்துவிடுவார். ஆனால் சாஸ்திர புத்தகங்கள் அப்படியல்ல. பிராமணர்களின் கடமைகள், வேலைகள் என்னென்ன என்பது பற்றி அவைகளில் ரொம்ப விளக்கமாக விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்கள் சாஸ்திரக்காரர்கள்.

"அய்யர்-நல்லவர்" மாதிரி இங்கேயும் முதலில் இரண்டே இரண்டு பதங்கள்தான் யஜனம், யாஜனம். அப்படியென்றால்...?

யஜனம் - பண்ணுவது
யாஜனம் - பண்ணுவிப்பது, பண்ணிவைப்பது, எதை? மந்த்ரம், யாகம், ஹோமம் ஆகியவற்றைத்தான்.

எப்படி...? இங்கேயும் பள்ளிக்குழந்தைகளை உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது. சின்னக் குழந்தைகள் Time Table பயன்படுத்துவதுபோல ஒரு நாளில் இன்னின்ன சமயத்தில் இன்னதை செய்யவேண்டும். 'காலக்ரம'படி கர்மாக்கள் வகித்துள்ளது சாஸ்திரம்.

என்னென்ன என்று பார்ப்போம்!

காலை 4-30-ல் இருந்து 6 மணிக்குள் அதாவது சூரியோதயத்துக்கு முன் நித்திரையிலிருந்து எழுந்திருக்க வேண்டும்.

சிறுநீர் கழிக்கச் செல்லும்போது பூணூலை எடுத்து காதில் சுற்றிக்கொள்ள வேண்டும். காலைக்கடன்கள் கழித்தபின் கை, கால்களை அலம்பிக்கொண்டு சில மந்திரங்களை சொல்லவேண்டும்.

பிறகு ஸ்நானம் செய்வதற்கென சில மந்திரங்கள்.

சூரியோதயத்துக்கு முன்னரே செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான சடங்கு சந்தியாவந்தனம்.

சூர்யோதயத்துக்கு முன்னரே சூரியனை வழிபடுவதாக தொடங்கியது இந்த சந்தியாவந்தனம்.

இந்த சடங்கில் 'ப்ராணாயாமம்' என்ற மூச்சுப் பயிற்சியும் உண்டு. இதனை காலையிலும் மாலையிலும் செய்தால் உடம்புக்கு நல்லது என அன்றே அறிந்தவர்கள் பிராமணர்கள். இன்றைக்கும் அனைவருக்கும் தேவைப்படுவது இந்த மூச்சுப்பயிற்சிதான். {பின்னாளிலோ... ராட்சஸர்கள் சூரியனை மறைத்துக் கொண்டதாகவும், அதனால் ராட்சஸர்களிடமிருந்து சூரியனை மீட்பதற்காகவே... எல்லாரும் பிராமணர்களை தேடியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. பிறகு, பிராமணர்கள் சிறிது தீர்த்தத்தை எடுத்து மந்த்ரங்கள் சொல்லி தெளிக்க அதன் வலிமையினால் அசுரர்கள் ஓடிவிட்டனர். சூரியன் மெல்ல மெலெழுந்தான் என சந்தியா வந்தனத்துக்கும் ஒரு திரைக்கதை தயாரித்தார்கள் பின்வந்தவர்கள்}

அடுத்ததாக... யஜனம், யாஜனம். இரண்டும்தான் அன்று முழுக்க பிராமணர்களின் பிரதான பணி அதாவது தங்களுக்குரிய பிற கர்மாக்களை செய்யவேண்டும், பிறருக்கும் அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கர்மாக்களை செய்துவைத்து தட்சணைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இக்கர்மாக்களில் அக்னிஹோத்ரம், ஒளபாசனம் ஆகிய மந்த்ர சம்பிரதாயங்கள் அடங்கும்.

சூரியன் உச்சி வரும் வேளையில் போஜனம் முடித்து... பின் கொஞ்ச நேரம் சயனம், அதாவது தூக்கம். பிறகு சில சாஸ்திர புத்தகங்களை படிப்பது... மாலையில் சூரியன் சாயும் வேளையில் மறுபடியும் சந்தியாவந்தனம் செய்வது, பின் உண்டு உறங்குவது.

இதுதான் பிராமணர்களுக்கென சாஸ்திர புத்தகங்கள் வகுத்து வைத்த க்ரமம். இப்படி இருந்து கொண்டு மக்களை பிளவுபடுத்தி வாழ்ந்த பிராமணர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது.

பிராமணர்களிடையே பிளவா?

லோக சேமத்துக்காகவே தெய்வத்தின் அவதாரமாக வாழ்பவர்கள் எப்படி பிளவுபடுவார்கள்.

இதற்கான பதில் அறிவதற்கு முன்பு தமிழர்களின் முக்கிய வழிபாட்டு முறையைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்வோம்.

உலகிலேயே பக்தியை காதலிலும் காமத்திலும் தோய்த்தெடுத்தவர்கள் தமிழர்கள்தான் என்பதை முதலிலேயே பார்த்திருக்கிறோம். காதலையும் காமத்தையும் பக்தியாகப் பாவித்து கடவுளை ஆணாகவும் தன்னைப் பெண்ணாகவும்.... கடவுளை பெண்ணாகவும், தன்னை ஆணாகவும் உருவகித்து 'நாயக நாயகி பாவத்தை காட்டியது தமிழ் வழிபாடு.

பல வழிபாட்டு வடிவங்களுக்கு முன்னுதாரணமான இந்த நாயக நாயகி பாவ வழிபாட்டு முறைக்காக தமிழர்கள் வைத்துக்கொண்ட வடிவம்தான் லிங்கம்.

இன்னும் லிங்கத்தை பார்ப்பவர்கள் அது கடவுளின் உருவம் என்றும் அதில் கண்கூட வைத்திருக்கிறார்கள் என்றும் நினைக்கலாம். வழிபாட்டு முறையிலேயே அணுகப்போனால் லிங்கம் ஓர் உருவம் அல்ல, அது ஒரு சின்னம்.

ஆமாம்... காமமே பக்தியின் சின்னமாக காட்சியளிப்பதுதான் லிங்கத்தின் தத்துவம். ஆணும், பெண்ணும் ஆலிங்கனம் செய்து ஆனந்தத்தில் கூத்தாடும் போது அவர்களது அங்கங்களை மட்டும் தனியே வைத்தால் என்ன தோற்றம் தருமோ அதுதான் லிங்கம்.

தமிழர்களின் இந்த வழிபாட்டு முறைக்கு... ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை. ஆபாசத்தை.... அசிங்கத்தைச் சொல்லும் சிவ வடிவத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால்...

லிங்கத்தை மரத்தடிகள், குளத்தங்கரைகள், ஆற்றங்கரைகள் என இயற்கையின் மடியிலேயே வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கங்கே அன்றலர்ந்த பூக்களைக் கொண்டு பூசை செய்தும் வந்தனர். அதிலும் வில்வ மரத்தடிகளில்தான் லிங்கத்தை அதிக அளவில் வைத்து வழிபட்டனர் என்றும் ஒரு தகவல்.

இப்படி லிங்க வழிபாடு ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க... வேத வழிவந்த பிராமணர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வைஷ்ணவ சம்பிரதாயங்களில் ஈடுபட்டிருந்தார்கள்.

வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரம்மமாகிய விஷ்ணுவை வழிபடுபவன் சூத்திரனாக இருந்தாலும் பிராமணனாகிவிடுகிறான். விஷ்ணு பக்தி இல்லாத பிராமணன்கூட சூத்திரனாவான் என்கிறார் வேதாந்த தேசிகர்.

                   "நசூத்ரஜா பகவத் பக்தாஹா
                    லிப்ரா பாகவதா..."

என போகும் ஸ்லோகத்தில்தான் இப்படி விஷ்ணு பக்தியை பிரதானப்படுத்தி சொல்லப்பட்டிருக்கிறது.

ஆரியமதம்... வேதமதம்... ப்ராமணமதம்... வைஷ்ணவமதம் என வைஷ்ணவம் தழைத்திருந்த அந்த நேரத்தில்...

ஒரு குரல் எழுந்தது.

இன்றைய திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அடுத்து உள்ள அடையப்புலம் எனும் ஊரைச் சேர்ந்த அப்பய்ய தீட்சிதர் என்பவரின் குரல்தான் அது.

'வேதத்தில் ப்ரம்மம் என சொல்லப்பட்டிருப்பதெல்லாம் சிவனைத்தான் விஷ்ணுவை அல்ல'... என குரல் கொடுத்த அப்பய்ய தீட்சிதர் 'ஷிவோத்கிருஷ்டம்' என அழைக்கப்பட்டவர். அதாவது பரமசிவனையே போற்றிப் புகழ்பவர்... சிவனையே துதிப்பவர் என்பது இதன் பொருள்.
 
வேதத்தில் சிவன் தான் மையப்படுத்தப்பட்டிருக்கிறார் என்பதை நிறுவ அப்பய்ய தீட்சிதர் நீலகண்ட விஜயம் எனும் நூல் உட்பட பல புஸ்தகங்களை எழுதினார்.

தீட்சிதரும் பிராமணர்தான். ஆனாலும் சிவனே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கடவுள் என அப்பய்ய தீட்சிதர் வரையறுத்ததற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்தன.

வேதாந்த தேசிகன் உள்ளிட்ட வைஷ்ணவ வித்வான்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர்.

வேதத்தில் கர்மகாண்டம், ஞான காண்டம் என இரண்டு பிரிவுகள் உண்டு. கர்மாக்களை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைப் பற்றியது கர்ம காண்டம். கர்மாக்களை செய்தால் மட்டும் மோட்சம் கிடைத்துவிடாது. அதற்கு பகவான் நாராயணனை வழிபட வேண்டும். அப்போதுதான் மோட்சம் கிடைக்கும் என சொல்வது வேதத்தில் ஞான காண்டம் என அழைக்கப்படுகின்ற உபநிஷது.

இந்த உபநிஷத்திலுள்ள ஸ்லோகங்களை அடிப்படையாக எடுத்து வைத்துக்கொண்டு வேதத்தில் நாயகன் நாராயணனே என வைஷ்ணவ பிராமணர்கள் வாதிட்டனர்.

'நாராயணம் மகாக்நயம் விஸ்வாத்மானாம் பராயணம்
நாராயண பரம்ப்ரம்ஹா தத்வம் நாராயணா பரஹா...'

என்கிறது தைத்ரிய உபநிஷது. அதாவது உலகத்தை உய்விக்க ஒரே சக்தி நாராயணன்தான். அவன்தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள். 'அதனால் நாராயண தத்துவத்தை நாடிச்சென்று வழிபட்டு வழிபட்டு மோட்சத்தைப் பெறுங்கள்' என்கிறது தைத்ரிய உபநிஷத்தின் இந்த ஸ்லோகம்.

'மோட்ச மிச்சேது ஜனார்த்தனாது..." என்ற இன்னொரு ஸ்லோகமும் இதற்கு கட்டியம் கூறுகிறது.

சைவ சம்பிரதாயத்தினர் லிங்க வழிபாட்டை ஏற்றுக்கொள்ள...

வைஷ்ணவ சம்பிரதாயத்தினர் நாராயணனை மட்டும் வழிபடவேண்டும் என வாதிட...

சைவ வைணவ வாத பிரதிவாதங்களால் பிராமணர்களே பிளவுபட்டனர்.

விஷ்ணுவே முழு முதற்கடவுள் என வைணவர்களும், சிவனே முழு முதற்கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளை ஏற்படுத்தினர். அவைகள் ஒருபக்கம் இருக்கட்டும்.

இப்போது நாம் ஒரு புதியவரை தரிசிப்போம். இன்றுவரை இவரை மையமாக வைத்து ஒரு பக்தி உலகமே சுழன்று வருகிறது. இவர் எழுதியது என்ன?... செய்தது என்ன?... உபதேசித்தது என்ன?... இதெல்லாம் தெரிந்தோ... தெரியாமலோ இவரையே தெய்வமாக வழிபடும் ஓர் ஆன்மிக உலகம்தான் அது.

இவரைப் பின்பற்றும் சீடர்களும் இன்று இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீடர்கள் இருக்கிறார்கள். ஆன்மீக உலகில் இவரை மையமாக வைத்து ஸ்தோத்ரங்கள் மட்டுமல்ல கோஷங்களும்கூட எழுந்து கொண்டிருக்கின்றன.

யார் இவர்?...

கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சில தொலைவு போனால் ஆல்வே... அங்கிருந்து கொஞ்சம் திரும்ப வந்தால் அங்கமாலி என்கிற ஊர். அங்கெ மாலியிலிருந்து சில பல காலடிகள் எடுத்து வைத்து நடந்தால் வருவதுதான் காலடி. தற்போது தமிழ்நாட்டுக்கும் கேராளாவுக்கும் இடையே பிரச்சனைகள் எழும்பியிருக்கும் 'பெரியாறு' நதி அழகாக காலடி வழியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இயற்கை செழிப்பான இந்த காலடியில் சிவகுரு எனும் பிராமணர் இவருக்கு ஆரியாம்பாள் எனும் பத்தினி. இவர்களுக்கு மகனாக பிறந்து செழுமை பூமியில் தன் மழலை காலடிகளை பதித்தான் சங்கரன். காலடியே இவனைக் கண்டு துள்ளிக் குதித்தது. 'அழகான குழந்தை... கண்ணைப் பாருங்கள் ஞானம் சிரிக்கிறது. காதுகள் பாருங்கள் உலகத்தையே கேட்பது மாதிரி விரிந்திருக்கிறது...' என பார்த்த ஊர்ப்பெரியவர்கள் எல்லாம் சங்கரனுக்கு திருஷ்டி வைத்தார்கள்.

அப்பாவும், அம்மாவும் சங்கரனைப் பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தமாயிருக்க... ஆனந்தம் அக்குடும்பத்துக்கு நிரந்தரமாய் நீடிக்கவில்லை. சங்கரன் சிறு குழந்தையாய் இருக்கும் போதே அவனது அப்பா இறந்து போய்விட்டார்.

அதுவரை அக்குடும்பத்தை கொஞ்சிக் கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் விலகத் தொடங்கினர். விதவையாய் போன சங்கரனின் அம்மாவை பார்த்தாலே பாபம் என சாஸ்திர சாலையில் நடந்து போனார்கள். சங்கரனின் குடும்பம் ஏழ்மையில் விழுந்தது.

ஆனாலும்... சங்கரனின் ஞானத்தேடலுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை அவனது அம்மா.

அவனது வயிற்றுப் பசியையும் போக்கி... அறிவுப்பசிக்கும் பல்வேறு சாஸ்திர பண்டிதர்களிடம் சேர்த்து படிக்க வைத்தாள். உள்ளூர் பண்டிதர்களிடம் படித்துக் கொண்டிருக்கும் போதே எட்டு வயதில் சங்கரனுக்கு உபநயன சடங்கை செவ்வனே செய்து வைத்தாள் தாயார்.

இதன்பிறகு சங்கரனின் சாஸ்திர தேடல் வீரியம் கொண்டது. அம்மாவிடம் ஒருநாள் சங்கரன் சொன்னான்.

'அம்மா... உள்ளூர் பண்டிதர்களிடம் படித்தது போதும் அம்மா... நர்மதா நதிக்கரையில் சில பண்டிதர்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர்களிடம் பயில்கிறேன்...' அம்மாவிடம் சொல்லிவிட்டு...

பெரியாறு நதிக்கரையிலிருந்து நர்மதா நதிக்கரைக்கு பயணம் செய்தான் சங்கரன். அறிவு நதியில் குளிப்பதற்காக, மூழ்குவதற்காக நர்மதா நதிக்கரையில் கோவிந்த பாதர், பத்மபாதர், கெளடபாதர் போன்ற வித்வான்களிடம் அங்கேயே வாசம் செய்து கற்ற சங்கரர்... அங்கே பல விஷயங்களை தெரிந்து கொண்டார்.

அவர்கள் உபதேசித்த விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார். கற்ற வேதம், பகவத் கீதை, பிரம்மசூத்ரம் போன்றவற்றுக்கெல்லாம் பாஷ்யம் அதாவது உரை எழுதிய சங்கரர்... அப்போது புத்தரையும் வாசிக்க ஆரம்பித்தார்.

அதுவரை அவர் படித்த வேதம், பிரம்ம சூத்ரம், ஆகியவற்றை பற்றியெல்லாம் சங்கரரை மறுபரிசீலனை செய்ய வைத்தது புத்தம்.

புத்தர் சங்கரருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார்.

மறுபடியும் மற்ற சாஸ்திரங்களையும் வாசிக்க தொடங்கிய சங்கரர்... இறுதியில் ஒரு தெளிவிற்கு வந்தார்.

புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள அனைத்தும் பொய். அதுதான் எனக்கு கிடைத்த ஞானம்.

நம் பிறப்பு பொய். வாழ்வு பொய். இவ்வுலகத்தில் ஞானம், அஞ்ஞானம் ஆகிய இரண்டுதான் உண்டு. மற்ற எதுவுமே கிடையாது.

பாம்பு என நினைத்து பழுதை மிதித்து பயப்படுவது போலத்தான், உலக வாழ்க்கையை எண்ணி நாம் பயப்பட்டுக்கொண்டிருக்கிறோம். பழுது என்ற பொய்யான பாம்பு போலத்தான் உலகமும் பொய்யானது. நமது பயமும் பொய்யானது.

'சாப்பிடுகிற சாப்பாடும் பொய்' என தனக்கு கிடைத்த ஞானத்தை ஊருக்கெல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சங்கரர்.


'வேதம் அது சொன்ன கர்மாக்கள் எல்லாம் பொய் கடவுளைத் தவிர...' என சங்கரர் மேலும் உபதேசம் செய்யச் செய்ய வைதீகர்கள் சங்கரரை எதிர்க்க ஆரம்பித்தனர்.

                                         to be continue....  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.