காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி”
என்னும் இணைய இதழில் ‘ஜூன்-2017’ அன்று வெளியான “கெளரவ ஆசிரியரின் தலையங்கம்”.
ஜீவகாருண்யம்
சீவகாருண்ய ஒழுக்கம் மிகவும் வழங்காமையால்
துஷ்டப் பிறவிகளே பெருகித் தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன.
முன்தேகத்தில் சீவகாருண்யம் இல்லாத பாவ
சீவர்கள் எல்லாம் அவரவர் பாவச் செய்கைக்குத் தக்கப்படி, சிலர் நரகவாசிகளாகவும், சிலர்
சமுத்திரவாசிகளாகவும், சிலர் ஆரண்யவாசிகளாகவும், சிலர் புலி, கரடி, சிங்கம், யாளி,
யானை, கடா, பன்றி, நாய், பூனை முதலிய துஷ்ட மிருகங்களாகவும் சிலர் காக்கை, கழுகு முதலிய
பட்சி சண்டாளங்களாகவும், சிலர் பாம்பு, தேள் முதலிய துர்ச்செந்துக்களாகவும், சிலர்
முதலை, சுறா முதலிய கடின செந்துக்களாகவும், சிலர் எட்டி கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும்
பிறந்திருக்கின்றார்கள்.
அதனால் தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன
என்று அறிய வேண்டும்.
-
திருவருட்பிரகாச வள்ளலார்
அரிது… அரிது… மானிடராதல் அரிது… என்பார்
ஒளவையார். நாமெல்லாம் மனிதப்பிறப்பை பெற்றிருக்கின்றோம் என்றால் அதற்கு காரணம் நாம்
நமது முற்பிறவியில் ஏதோ ஒரு வகையில் ஜீவகாருண்யத்துடன் இருந்திருக்கின்றோம் என்பது
உண்மை. பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமை, பிற உயிர்களை கொல்லாமை போன்றவை ஜீவகாருண்யத்தின்
முக்கிய இயல்புகளாகும். இப்பிறப்பில் மனித தேகத்தை பெற்றுக்கொண்ட நாம் ஜீவகாருண்யத்தை
கடைபிடிக்க வில்லையெனில் என்ன நேரும் என்பதை வள்ளற்பெருமான் மேற் காணும் தமது உரைநடைகளில்
மிகத் தெளிவாக நம்மை எல்லாம் எச்சரிக்கின்றார்.
ஜீவகாருண்யம் இன்றி இப்பிறப்பிலே பிற
உயிர்களை கொன்றும் தீங்கு செய்தும் முக்கியமாக புலால் உண்டு உடல் வளர்த்து வந்தால்
வருகின்ற அடுத்த பிறவியில் நமக்கு மனித தேகம் கிடைக்காது. நாம் செய்த கடின செயல்களுக்கு
ஏற்றவாறு காட்டு விலங்காகவோ கடல் விலங்காகவோ நாட்டு விலங்காகவோ பறவைகளாகவோ தாவரவகைகளாகவோ
புல் பூண்டாகவோ பிறவி கிடைக்கும் என்று உண்மை உரைக்கின்றார்.
மனிதப் பிறப்பு எடுத்துவிட்டால் அதிலிருந்து
கீழ் நிலைக்கு மீண்டும் செல்லுதல் அழகல்ல. மனிதப் பிறப்பின் நோக்கமே மரணமில்லா பெருவாழ்வுதான்.
அதனை நோக்கியே நமது ஒவ்வொரு செயலும் இருக்க வேண்டும். அல்லது ஜீவகாருண்ய ஒழுக்கத்தை
முடிந்தவரையாவது கடைபிடிக்க வேண்டும். இன்றைய மக்கள் தங்களின் உணவு பழக்கத்தை எதற்காகவும்
விட்டுக்கொடுக்க மறுக்கின்றார்கள். பிற உயிர்களின் மாமிசம் உண்பது எங்களின் உரிமை என்கின்றார்கள்.
இவர்களின் அடுத்த பிறப்பு என்னவாக இருக்கும் என்பதை மேலே விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.
ஆனாலும் அடுத்தப் பிறப்பில் எமக்கு நம்பிக்கை இல்லை என்று சில மக்கள் கூச்சலிடுகின்றனர்.
அப்படியே அடுத்தப் பிறப்பில் நான் பன்றியாக பிறந்தாலும், சென்ற பிறவியில் மனிதனான நான்தான்
இப்போது பன்றியாக பிறந்துள்ளேன் என்பது எனக்கு அப்போது தெரியப்போவதில்லை. நான் பன்றிகளின்
உலகத்தில் வாழ்ந்துவிட்டு போகிறேன் என்று ஒரு சிலரும் நினைத்துக்கொண்டிருக்கலாம். சில
மக்கள் மட்டுமே அதனை தவறு என்று உணர்ந்து தாவர உணவாளர்களாக மாறுகின்றார்கள்.
புலால் உண்ணக்கூடாது என்று ஆட்சியாளர்கள்
சட்டம் போட்டு மக்களை கட்டுப்படுத்த முடியாது. கூடாது. மேலும் ஒரு உயிரினத்தை மட்டும்
மேலானதாகக் கருதி அதனை மட்டும் கொல்லுதல் கூடாது என சட்டம் இயற்றுதல் அறியாமை. இப்படி
சட்டம் இயற்றினல் அது ஒரு எதிர் வினை தாக்குலை மக்களிடம் உண்டாக்கும். கருணை இல்லா
ஆட்சி கடுகி ஒழிந்தாலும் ஒழியும்! கருணை இல்லா மக்கள் இவ்வுலகில் இருந்துக்கொண்டுதான்
இருப்பார்கள். இவ்வுலகம் அவர்களுக்கும் சேர்த்தே இரவையும் பகலையும் தந்துக்கொண்டிருக்கின்றது.
காற்றைம் மழையையும் தந்துக்கொண்டிருக்கின்றது. எனவே அவர்களே திருந்தி வரும்வரை நாம்
ஜீவகாருண்ய ஒழுக்கத்தை பிரச்சாரம் செய்யலாம். கேட்பவர்கள் கேட்கட்டும்… கேட்காதவர்களுக்காக
நாம் இறைவனிடம் வேண்டுவோம். தனிப்பெருங்கருணை நியதியால் எல்லாம் செயல்கூடும்.
n தி.ம.இராமலிங்கம்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.