Monday, July 17, 2017

“மாதம் ஒரு மகான்” - கண்ணப்ப சுவாமிகள்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘ஜூலை-2017’ அன்று “மாதம் ஒரு மகான்” என்ற தலைப்பில் வெளியானது. 
கண்ணப்ப சுவாமிகள்


கண்ணப்ப சுவாமிகள் பிறந்தது கேரள பூமி என்று கூறப்படுகிறது. கண்ணனூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார் சுவாமிகள். இவரின் தாயார் எரமத்து என்னும் கிராமத்தையும், தந்தை யார் செனியஞ்சால் என்ற கிராமத்தையும் சேர்ந்த வர்கள். இந்தக் கூற்றை மெய்ப்பிப்பது மாதிரி பின்னாளில் காவாங்கரையில் தான் தங்கி இருந்த குடிசையின் முகப்பில், 'எரமத்து செனியஞ்சாலு பிறந்தது மௌனகுரு கண்ணப்ப சுவாமிகள்' என்று எழுதி வைத்திருந்தாராம்.

சிறு வயதிலேயே கப்பல் ஏறி சிங்கப்பூர், மலேயா முதலான நாடுகளுக்குச் சென்று விட்டார். பல வருடங்கள் அங்கேயே இருந்தார். இதன் பின் ஒரு கட்டத்தில் சென்னை திரும்பிய அவர் செங்குன்றம் (ரெட்ஹில்ஸ்) பகுதிக்கு வந்தார். சென் னையில் இருந்து கொல்கத்தா செல்லும் டிரங்க் ரோட்டில் சுமார் 14 கி.மீ. தொலைவில் இருக்கிறது செங்குன்றம்.
1948- ஆம் வருடம்... காவாங்கரையில் ஓரிடத்தில் அமர்ந்திருந்தார் கண்ணப்ப சுவாமிகள். அப்போது அவருடன் கோவிந்தராவ் சுவாமிகள் (இவர் தற்போது இல்லை. கண்ணப்ப சுவாமிகளின் நினைவாலயத்தில் இவருக்கும் சமாதி இருக்கிறது), நாகப்ப ரெட்டியார் போன்ற வேறு சில அன்பர்களும் இருந்தனர். திடீரென்று சுவாமிகள், ரெட்டியாரைப் பார்த்து ''ரெட்டியாரே... நைனா காந்தியை சுட்டுக் கொன்று விட்டார்கள்'' என்றார் (எல்லோரது பெயருக்கும் முன்னால் 'நைனா' என்று சேர்ப்பாராம் கண்ணப்ப சுவாமிகள்).
சுதந்திரம் கிடைத்து, காந்திஜியின் புகழ் உச்சத்தில் இருந்த நேரம் அது... 'காந்திஜியை சுட்டு விட்டார்கள்' என்று சுவாமிகள் சொன்னதும், ரெட்டியார் உட்பட அனைவரும் பதறி விட்டனர். 'என்ன சாமீ... பெரிய குண்டா தூக்கிப் போடுறீங்க?' என்றனர். சுவாமிகள் எதுவும் பதில் சொல்ல வில்லை. ஆனால், அடுத்த அரை மணி நேரத்தில் 'காந்திஜி சுடப்பட்டதாக' செய்தி வந்தது.
இது போல், ஸ்ரீரமண மகரிஷி ஜீவமுக்தி ஆன நிகழ்வையும் நாகப்ப ரெட்டியாரிடம் முன்கூட்டியே சொல்லி இருக்கிறார் கண்ணப்ப சுவாமிகள். அன்றைய தினம் இரவு வானில் ஒரு ஜோதி மிகப் பிரகாசமாக இவருக்குத் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் காணக் கிடைத்த அந்த ஜோதியைத் தரிசித்தார். பிறகு, ரெட்டியாரிடம், 'ஒரு மகான் மறைந்து விட்டார். ஜோதி சொரூபமாக அவர் பயணிக்கிறார்' என்று ஆகாயத்தைப் பார்த்துச் சொன்னாராம்.
கண்ணப்ப சுவாமிகள் காவாங்கரையில் குடிசை யில் வசித்த காலத்தில், அந்த வழியே செல்லும் சிலர் அவரது வீட்டுக்குள் எட்டிப் பார்த்து, ஆசி வாங்கிச் செல்வது வழக்கம். அதிகாலை நேரத்தில் வயலை உழுவதற்காக மாடுகளை ஓட்டிச் செல்லும் விவசாயிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி ஒரு நாள் உள்ளூர் விவசாயிகள் சுவாமிகளின் குடிசையைக் கடந்தபோது, 'எட்டிப் பார்த்து இவரிடம் ஆசி வாங்கிச் செல்வோம்' என்று உள்ளே நுழைந்தனர்.
உள்ளே- கண்ட காட்சி அவர்களை உறைய வைத்தது. அந்த நேரத்தில் அகண்ட யோகத்தில் இருந்தார் சுவாமிகள். கை, கால், தலை, உடல் என்று அனைத்து உறுப்புகளும் தனித் தனியாக இருப்பதைப் பார்த்த விவசாயிகள் கலப்பையை அப்படியே போட்டு விட்டு, 'நம்ம சாமியை யாரோ கொன்னு போட்டுட்டாங்க...' என்று ஊருக்குள் தகவல் பரப்பினர். சற்று நேரம் கழித்துத் தன் அகண்ட யோகத்தை முடித்து கண்ணப்ப சுவாமி கள் குடிசையை விட்டு வெளியே வந்தார். தன் குடிசை முன் ஏராளமானோர் திரண்டு நிற்பது ஏன் என்று கேட்டார்.
சற்று முன் அவரை அக்கு வேறு ஆணி வேறாகப் பார்த்த விவசாயிகள், முழு உடலுடன் பார்த்த போது, குழம்பிப் போனார்கள். அதன் பிறகே சுவாமிகள் அவர்களிடம், அகண்ட யோகம் பற்றிச் சொல்லித் தெளிய வைத்தார்.
கண்ணப்ப சுவாமிகளின் பக்தர் ஒருவரால் குடும்ப சூழ்நிலை காரணமாக ஒரு வருடம் சபரிமலைக்குச் செல்ல முடியவில்லை. அந்த பக்தருக்கு வருத்தம். சபரிமலையில் 'மகர ஜோதி' தென்படும் நாளன்று அந்த பக்தர், காவாங்கரைக்கு வந்தார். பக்தனின் குறை யையும் அறிந்தார் சுவாமிகள். 'என்னப்பா... சபரிமலைக்குப் போய் ஜோதி பாக்க முடியலேன்னு வருத்தமா?' என்று கேட்டார்.
'ஆமா சாமீ' என்றார் பக்தர். உடனே 'வா, எம் பின்னால..' என்ற சுவாமிகள், விறுவிறுவென்று அருகில் இருக்கும் ஏரிக் கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை. எனினும், சுவாமிகளை பின்தொடர்ந்தார். ஒரு மேடான இடத்தை அவர்கள் அடைந்தபோது மாலை நேரம். சூரியன் இறங்கி விட்டிருந்தது.
பக்தனை அருகே அழைத்த சுவாமிகள் மேலே ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டி, 'அங்கே பார்... நீ காண விரும்பிய காந்தமலை ஜோதி. நன்றாகத் தரிசித்துக் கொள்' என்றார். சுவாமிகள் காட்டிய திசையைக் கவனித்த பக்தர் விதிர்விதிர்த்துப் போய் விட்டார். சபரிமலையில் இருந்தால், எப்படி ஜோதியைத் தரிசிக்க முடியுமோ, அதுபோல் காவாங்கரையில் இருந்தபடியே அந்த அற்புதக் காட்சியைத் தரிசித்தார் பக்தர்.
         
          கண்ணப்பசாமிகள் தமது பக்தர்களின் குறைகளை அவர்கள் சொல்லாமலேயே தீர்த்து வைத்துள்ளார். அவரது தீவிர பக்தரான பொற்கொல்லர் ஒருவர் தமது வாடிக்கையாளர் நகை செய்வதற்குக்  கொடுத்த பணத்தைக் குடும்பச் செலவுக்காகப் பயன்படுத்திவிட்டதாகக் குற்ற உணர்வுடன் வந்து அவரிடம் முறையிட்டார். சாமிகள் தனது பக்தனின் கையில் மூன்று கூழாங்கற்களைக் கொடுத்தார். அவை தங்கக் கட்டிகளாக மாறி ஜொலித்தன.

          காவல்துறையில் பணிபுரிந்த என். கோவிந்தஸ்வாமி என்கிற அன்பர், கடும் எலும்புருக்கி நோயால் அவஸ்தைப்பட்டார். 'நான்கு விலா எலும்புகளை எடுத்தால்தான் உயிர் பிழைக்க முடியும்' என்று மருத்து வர்கள் அவருக்கு தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள். உடல் நோய் காரணமாக பணியில் இருந்து அவரை விலக்கி வைத்து விட்டார்கள்.

வாழ்க்கையில் நம்பிக்கை இழந்த நிலையில் இருந்தார் கோவிந்தஸ்வாமி. இனியும் தான் பிழைப்போம் என்கிற நம்பிக்கை அவருக்கு இல்லை. இந்த நிலையில் கண்ணப்ப சுவாமிகள் பற்றி யாரோ சிலர் அவரிடம் சொன்னார்கள். நம்பிக்கை இல்லாத நிலையில்தான் சுவாமிகளிடம் வந்தார் கோவிந்தஸ்வாமி. கவலையுடன் காணப்பட்டவரை அருகே அழைத்து, ஒரு பாக்கெட் சிகரெட்டைக் கொடுத்துப் புகைக்கச் சொன்னார். பதறிப் போய் விட்டார் கோவிந்தஸ்வாமி. ''ஐயையோ.... எலும்புருக்கி நோயால் தவிக்கும் என்னை, சிகரெட்டைக் கொடுத்து ஏன் புகைக்கச் சொல்கிறீர்கள்...? ஏற்கெனவே எனக்கு இருக்கிற நோயின் தன்மையை இது அதிகப்படுத்தும் அல்லவா? ஆபத்தை வலியச் சென்று தேடுவதாக அல்லவா உங்களது செயல் இருக்கிறது?'' என்று சுவாமிகளிடமே கேட்டு விட்டார்.
புன்னகைத்த சுவாமிகள், ''இதைப் பிடி அன்பனே... உனது நோய் எல்லாவற்றையும் இது போக்கி விடும்'' என்று பதில் சொல்லி இருக்கிறார். அதன்படியே சிகரெட்டு களை வாங்கித் தவிப்புடன் புகைத்தார் கோவிந்தஸ்வாமி.
மூன்று மாதங்கள் ஓடின... வழக்கம்போல் ஒரு நாள் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றார் கோவிந்த ஸ்வாமி. இவரை முழுக்கச் சோதனை செய்த மருத்துவர்கள், ''உங்கள் உடலில் வியாதி இருந்ததற்கான அடையாளமே இல்லை. நீங்கள் பூரணமாக நலம் பெற்று விட்டீர்கள். ஏதோ ஒரு சக்திதான் உங்களை இந்த அளவுக்குக் குணமாக்கி இருக்கிறது'' என்று கூறி, சந்தோஷத்துடன் அனுப்பி வைத்தனர். அதிலிருந்து கோவிந்தசாமி கண்ணப்பசாமிகளின் பக்தரானார். கோவிந்தஸ்வாமி ஓர் உதாரணம்தான். இப்படி எத்தனையோ பேரைப் பல வியாதிகளில் இருந்து காப்பாற்றி வாழ வைத்திருக்கிறார் காவாங்கரை ஸ்ரீகண்ணப்ப ஸ்வாமிகள்.
''ஒரு முறை, கோவிந்தராவ் சுவாமி களின் மகன் ஹரிசங்கருக்கு (கஞ்சிரா வித்வான்) பயங்கர காய்ச்சல். அப்போது அவன் ஆறு மாதக் குழந்தை. டவுனில் இருந்தார்கள். என்னென்னவோ வைத்தியம் செய்தும் குழந்தையின் ஜுரம் கொஞ்சமும் இறங்கவில்லை. குழந்தையின் உயிருக்கே ஆபத்தான நிலைமை... ஹரிசங்கரின் பெற்றோர் தவித்துப் போய் விட்டனர்.
அப்போது மனவேதனையுடன் இருந்த கோவிந்தராவ் சுவாமிகள், வீட்டில் சொல்லி விட்டு இரவு வேளையில் பஸ் பிடித்து 'மிண்ட்' வந்து, அங்கிருந்து ஒரு லாரி பிடித்து, காவாங்கரை வந்தார். கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த கண்ணப்ப சுவாமிகள் திடீரென எழுந்து உட்கார்ந்தார்.
யாரோ ஒரு பக்தன் அந்த இரவு வேளையில் தன்னைத் தேடி வந்து கொண்டிருக்கிறான் என்பது அவருக்குப் புரிந்து விட்டது. இருள் வேளையில் தட்டுத் தடுமாறி வந்த கோவிந்தராவ் சுவாமிகள், கயிற்றுக் கட்டிலின் அருகே அமர்ந்து சுவாமிகளைப் பார்த்து 'ஹோ'வென அழ ஆரம்பித்து விட்டார்.
'வீட்டுல ஊதுவத்தி (இவரின் பக்தர்களுக்கு இதுதான் பிரதான வழிபாடு. தினமும் இவரது படத்துக்கு ஊதுவத்தி ஏற்றிக் காண்பித்தாலே அவர் மகிழ்ந்து விடுவாராம்) ஏத்தி வச்சுட்டல்ல?' என்று மட்டும் கேட்டார் கண்ணப்ப சுவாமிகள். 'ஏத்தி வச்சுட்டேன் சாமீ... அவன் பொழைப்பானான்னு தெரியல...' என்ற கோவிந்தராவால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
'ஒண்ணும் இல்லே... முதல்ல நீ தண்ணி குடி. வீட்டுக்கு இங்கேர்ந்து போன் பண்ணிப் பாரு. அவன் இப்ப விளையாடிக்கிட்டு இருக்கான்; தூளில படுத்துகிட்டு சிரிச்சிக்கிட்டு இருக்கான். கண்ணைத் தொடச் சுக்க!' என்று கண்ணப்ப சுவாமி களின் வாயில் இருந்து நற்செய்தி வந்ததும், கோவிந்தராவ் சுவாமிகள் தெம்பானார். அவருடன் துணைக்கு ஒருவரையும் அனுப்பி வைத்தார் கண்ணப்ப சுவாமிகள்.
மெயின் ரோட்டை அடைந்த கோவிந்தராவ் சுவாமிகள், அங்குள்ள ஒரு லாரி ஆபீஸில் இருந்து தன் வீட்டுக்கு போன் செய்தார். அவர் மனைவி, கண்ணப்ப சுவாமிகள் சொன்ன அதே நற்செய்தியைச் சொன்னார்... 'நீங்க கிளம்பின அடுத்த நிமிஷமே இவன் விளையாட ஆரம்பிச்சுட்டான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை ஜன்னி கண்டு துவண்ட குழந்தையானு எனக்கு ஆச்சரியமா இருக்கு.' என்றாராம்!''
ஒரு குருவுக்குத் தெரியாதா, தன் சீடனின் கவலை?
ஒரு முறை கண்ணப்ப சுவாமிகளைத் தரிசிக்க வெளியூரில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் பெரும் பசியோடு இருந்தனர். சுவாமிகளும் இதை உணர்ந்து விட்டார். அவர்கள் வந்திருந்த நேரம் பார்த்து சுவாமிகள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இது அல்ல விஷயம்! அப்போது அவரது தட்டில் இருந்தது அசைவ உணவு! வந்திருந்த பக்தர்களோ சைவ ஆசாமிகள். ஏகத்துக்கும் நெளிந்து விட்டனர்.
தங்களுக்குப் பசி என்று கூடச் சொல்லாமல், சுவாமிகள் முன்னே நெளிந்தவாறு தரிசனம் செய்து கொண்டிருந்தனர். முதலில் அவர் களைத் தன் எதிரே அமரச் சொன்னார். அவர்களுக்கு முன் வாழை இலைகளைப் போடச் சொன்னார்.
வந்தவர்கள் கூனிக் குறுகிப் போனார்கள். சிலர் விஷயத்தை எப்படிச் சொல்வது என்று குழம் பினர். வீட்டில் அப்போது இருந்த அசைவ உணவை ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்து, தானே பரிமாற வந்தார் கண்ணப்ப சுவாமிகள்.
இவரது கையில் இருந்தது அசைவ உணவு. ஆனால், இலைகளில் விழுந்ததோ சைவ உணவு. மாமிசத் துண்டங்கள் எல்லாம் கத்தரிக்காய் பொரியலாக அவர்களது இலைகளில் விழுந்தன. இந்தக் காட்சியைத் தங்களது கண்களுக்கு நேராகப் பார்க்க நேர்ந்த அந்த பக்தர்கள், சாப்பிடுவதையும் மறந்து, சுவாமிகளின் திருப்பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, 'தங்களைத் தவறாக எண்ணிய எங்களை மன்னியுங்கள் பிரபோ' என்று தேம்பினர். பிறகென்ன, சைவ உணவு, ஏகத்துக்கும் அங்கே மணம் பரப்பியது.
இது போல், வந்திருப்பவர்கள் அசைவ விரும்பிகள் என்று தெரிந்து, கைவசம் இருக்கும் சைவ உணவையே அசைவமாக்கியும் பரிமாறி இருக்கிறாராம் கண்ணப்ப சுவாமிகள்!
பாம்புகள், கண்ணப்ப சுவாமிகளை அடிக்கடி வந்து சூழ்ந்து கொள்ளுமாம். சுவாமிகளின் உடலில் பாம்பு ஊர்ந்து செல்வதைப் பல பக்தர்களும் பார்த்துள்ளனர். ஒரு முறை, சுவாமிகள் தெருவில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு கருநாகம் புற்றில் இருந்து வெளிப்பட்டு, சுவாமிகளைக் கொத்தி விட்டு ஊர்ந்து சென்றது. அவருடன் இருந்த பக்தர்கள் பதைபதைத்துப் போய் அந்தப் பாம்பை அடிக்க ஓடினார்கள். இன்னும் சிலரோ, விஷம் ஏறிய சுவாமிகளுக்கு என்ன ஆகுமோ என்ற கவலையில் தவித்தனர். அப்போது சுவாமிகள் அமைதியாகச் சொன்னார்: 'கவலைப்படாதீர்கள். அந்தப் பாம்பின் விதி இதோடு முடிந்து விட்டது. அதை நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டி இருக்காது.'
பாம்பைத் துரத்திக் கொண்டு ஓடிய பக்தர்கள் விரைவாக சுவாமிகளிடம் வந்து, 'சாமீ... அந்தப் பாம்பு சற்று ஓடிய பின் சுருண்டு விழுந்து செத்து விட்டது' என்றனர். 'இதைத்தானேப்பா நானும் சொன் னேன்' என்று சிரித்தாராம்.
இப்படிப் பல அற்புதங்களைப் புரிந்த கண்ணப்பசாமிகள் தாம் சமாதி அடையப்போகும் தருணத்தை முன்பே அறிந்தார். தமக்கான சமாதிக் குழியைத் தோண்டப் பணித்தார். தாம் சமாதி அடைந்து 41 நாட்களுக்குப் பிறகுதான் தன்னைப் புதைக்க வேண்டும் என அவரது பக்தர்களிடம் கூறினார். 09-10-1961-ஆம் ஆண்டு பிலவ வருடம் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று சோமவாரம், அஸ்த நட்சத்திரத்தில் சமாதிக் குழிக்குள் இறங்கிச் சின் முத்திரையுடன் பத்மாசனத்தில் அமர்ந்தனர்.

          சமாதிக் குழியைப் பலகையால் மூடி 41 நாளும் விளக்கேற்றி வழிபட்டனர். பின்னர் பலகையை அகற்றிவிட்டுச் சமாதியை மூடினர். சாமிகள் சொன்னது போல சமாதியின் மீது விநாயகர் சிலையைப் பிரதிஷ்டை செய்தனர். பின்னால் காஞ்சிப் பெரியவரின் ஆலோசனையின் பேரில் கண்ணப்பசாமிகளின் கற்சிலை ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது சிலை சமாதியின் முன்புறம் வைக்கப்பட்டு சமாதி மீது லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சமாதி அடைவதற்கு முன், தனக்கான இடத் தைத் தேடினாராம் கண்ணப்ப சுவாமிகள். அருகில் உள்ள ஓர் இடத்தைத் தேர்வு செய்தார். தன் சீடர்களை அழைத்து, 'இந்த இடம் ராஜா அண்ணாமலை செட்டியாருக்குச் சொந்தமானது. செட்டியாரிடம் சென்று பேசிப் பாருங்கள். நம் தேவையைச் சொல்லுங்கள்' என்றார்.
அதன்படி, ராஜா அண்ணாமலை செட்டி யாரை சந்தித்து, கண்ணப்ப சுவாமிகளின் விருப்பம் பற்றிச் சொன்னார்கள் சீடர்கள். அதற்கு, தங்களிடம் உள்ள ஆவணங்களைச் சோதித்த செட்டியார், 'நீங்கள் கூறும் காவாங்கரை இடத்தில் எங்களுக்குச் சொந்தமான நிலம் ஏதும் இல்லையே' என்று சொல்லி இருக்கிறார்.
சீடர்கள் கவலையுடன் கண்ணப்ப சுவாமிகளி டம் வந்து விஷயத்தைச் சொன்னார்கள். அப்போது, எரியும் தீக்குச்சி கொண்டு ஒரு சிகரெட் அட்டையில் ஒரு எண்ணை எழுதி, 'இது அவர்களுடைய நிலம் தான். இதுதான் சர்வே எண். மீண்டும் பேசுங்கள்' என்று அனுப்பினார் கண்ணப்ப சுவாமிகள். அதன்படி போய் மீண்டும், ராஜா அண்ணாமலை செட்டியாரிடம் பேச... அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானதுதான் என்கிற விவரம் அவர்களுக்கே புதிதாக இருந்தது. இதைக் கண்டுபிடித்தவர் சுவாமிகள்தான். அந்த இடத்திலேயே சமாதி அமைந்துள்ளது.
          புழல் செல்லும் சாலையிலிருந்து காவாங்கரையினுள் நுழைந்து சிறிது தூரம் சென்று வலது புறம் சென்றால் கண்ணப்பசாமிகளின் ஜீவசமாதியை அடையலாம். அங்கே சிவமாக வீற்றிருக்கும் சித்தரை உணர்ந்து கொண்டால் அவர் நம்முடன் பேசுவார். துன்பங்களுக்குத் தீர்வு கூறுவார். 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.