காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க
விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘ஜூலை-2017’ அன்று “கண்மூடி வழக்கம்” என்ற தலைப்பில்
வெளியானது.
கடவுளால் வரும் துயரம்
இந்தியா ஒரு
மதச்சார்பற்ற நாடு என்று நம்முடைய அரசியல் சாசனம் தெளிவாக பிரகடனம் செய்கின்றது. அரசு
அலுவலகங்களில் ஒரு போதும் மதம் தலையிடக்கூடாது என்பதுதான் இதன் பொருள். அதே நேரத்தில்
குடிமக்கள் அவரவர் விரும்புகின்ற மத நம்பிக்கைகளை பின்பற்றுகின்ற உரிமைகளையும் அரசியல்
சாசனம் உறுதிசெய்கின்றது. எந்தவொரு மதத்தையும் பின்பற்றாமல் இருப்பதற்கான உரிமையையும்
உள்ளடக்கியது இது. இந்தியாவின் பல்வேறு மதங்களை பின்பற்றுபவர்கள் உள்ளனர். ஒருவகையில்
நம்முடைய நாட்டின் சிறப்பே இதுதான். அதே நேரத்தில் மதத்தின் பெயரால் பரப்படுகின்ற மூட
நம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்வு உண்டாக்கப்படுவதும் அவசியம்.
நாமக்கல் மாவட்டம் வெள்ளாளம்பட்டி என்ற கிராமத்தில்
விஜயதசமி நாளின் ஆண்டுதோறும் பேய் ஓட்டுகின்ற நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், அவ்வமயம்
400 மேற்பட்ட பெண்களை சாட்டையால் அடித்து பூசாரி பேய் ஓட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேய் பிசாசு என்ற பெயரில் அதிகம் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவது பெண்கள்தான். இன்றைய
சமூக குடும்பச் சூழலில் பெண்கள் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். இவர்களுக்கு
முறையான மனநல சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக பேய் ஓட்டுதல் என்ற பெயரில் அவர்கள் அடித்து
உதைக்கப்படுகின்றனர்.
இதனால் அவர்களது பிரச்சனை மேலும் அதிகமாகின்றது.
இதே கோவிலில் 50-க்கும் மேற்பட்டவர்களின் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டதாம். மனித
உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பது முதுமொழி. ஆனால் அந்த தலையில் தேங்காய் போன்ற கடுமையான
ஒன்றை உடைப்பதன் மூலம் மூளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய மூட நம்பிக்கைகள்
கிட்டத்தட்ட எல்லா மதத்தின் பெயராலும் பரப்பப்படுகின்றன. பின்பற்றப்படுகின்றன. சிவராத்திரி
பண்டிகையின் போது கொடூரமான பல வழிபாட்டு முறைகள் தமிழகத்தில் பின்பற்றப்படுகின்றன.
மயானக் கொள்ளை என்ற பெயரில் சுடுகாட்டுக்கு சென்று எலும்புகளை எடுத்து கடிப்பது இதில்
ஒன்று. அறிவியல் வெகுவாக முன்னேறியுள்ள சூழலில் இத்தகைய பழக்கங்கள் தொடர்வது வேதனையானது.
மூட நம்பிக்கைகளின் பெயரால் பின்பற்றப்படும் பழக்கங்களால் பெண்கள், குழந்தைகள்தான்
அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பில்லி, சூனியம், தோஷம் என்கின்ற பெயரில் பெரும் மோசடி
நடைபெறுகின்றது. இதற்கு காரணம் நாட்டில் அறிவியல் வளர்ந்த அளவிற்கு மக்களிடம் அறிவியல்
மனப்பாண்மை வளர்க்கப்படாததேயாகும்.
அறிவியல் பூர்வ சிந்தனையை வளர்க்க வேண்டும்
என்று நம்முடைய அரசியல் சாசனம் கூறிய போதும் அரசுகள் பெரும்பாலும் இதில் கவனம் செலுத்துவதில்லை.
மக்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளை ஆட்சியாளர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள
வேண்டும் என்ற அர்த்த சாஸ்திர விதியே இன்றளவும் பின்பற்றப்படுகின்றது. மூட நம்பிக்கைகள்
சாதாரண மக்களிடம் மட்டும்தான் இருக்கின்றது என்று கூறமுடியாது. நவீன கார்ப்பரேட் சாமியார்கள்
உற்பத்தியாகி புதிய புதிய வழிகளில் மூட நம்பிக்கைகளை கற்றவர்களிடம் கூட பரப்புகின்றனர்.
இது ஒரு சமூக பிரச்சனை. இதற்கு விரிவான அயர்வற்ற அறிவியல் பூர்வ பிரச்சாரம் தேவைப்படுகின்றது.
ஆனால் அறிவியல் பூர்வமாக மூடநம்பிக்கைகளை
மக்களிடையே பரப்பப்படுகின்றது. இதற்கு சில தனியார் தொலைக்காட்சிகள் சமூக அக்கறைகள்
ஏதுமின்றி ‘நம்பினால் நம்புங்கள்’, ‘மூன்றாவது கண்’ என்கின்ற நிகழ்ச்சிகள் உறுதுணையாக செயல்படுகின்றன.
இந்நிகழ்ச்சியினை பார்க்கும் மக்களில் பெரும்பாலோர், அந்நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திற்கு
சென்று வர ஆசைப்படுகின்றனர். சென்றும் வருகின்றனர்.
“தாந்தோன்றி ருத்ர ஸ்ரீ சீரடி சாய்பாபா இல்
ஆலயம்” என்பது மறைமலை நகர், சாமியார் கேட் என்ற பகுதியில் இயங்கி வருகின்றது. இங்கே
ஒருவரது இல்லத்தின் வாசலில் பூமியை பிளந்துக்கொண்டு சீரடி சாய்பாபா சிலை வந்ததாகவும்,
அச்சிலையை பூஜை செய்யும்போது விபூதி தானாக அச்சிலையில் மேல் கொட்டுவதாகவும் மக்கள்
நம்புகின்றனர். சிலை வரவழைக்கப்பட்டதா? விபூதி கொட்டவைக்கப்பட்டதா? என்றெல்லாம் யாரும்
சிந்திப்பார்கள் இல்லை. இக்கோவிலை நடத்தும் ‘தெய்வ வாக்கு சித்தர் காளிமாதாஜீ’ என்கிற
அம்மையார் சில சித்து வேலைகளை செய்து கொண்டு இந்த சாய்பாபா கோவிலை தமது இல்லத்தில்
நிர்வகித்து வருகின்றார். இங்கு சென்றால் ஒரு பெரிய தொலைக்காட்சி திரையில் மாதாஜீ அவர்களிடம்
பேட்டி எடுத்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளி பரப்பட்டு வருவதைக் காணலாம். அது
தான் அவர்களுக்கு மிகப்பெரிய விளம்பரம்.
மாதாஜீயின் சித்து விளையாட்டிற்கும் சீரடி
சிலை வெளிவந்ததற்கும் என்ன சம்பந்தம்? சீரடி பாபா சிலை வெளிவந்த பிறகு இவருக்கு சித்து
செய்யும் வல்லமை கூடிற்றா? அல்லது இவரது சித்து வேலையால் சீரடி பாபா வெளிவந்தாரா? தெரியவில்லை.
தொலைக்காட்சி ஒளிபரப்பை பார்த்து நானும் அங்கே சென்றிருந்தேன். அங்கிருந்து நாங்கள்
கிளம்பும் தருவாயில் இருந்தபோது, அம்மாதாஜீ அவர்கள் எங்கோ வெளியில் கிளம்பிச்செல்ல
வீட்டைவிட்டு வெளியில் வந்தார்கள். அப்போது எல்லோருக்கும் நெற்றியில் குங்குமம் இட்டு
ஆசி வழங்கினார்கள். எனது நெற்றியில் குங்குமம் இட்ட மறுநொடி என்னை விட்டு வீதியை நோக்கி
ஓடினார்கள். என்ன என்று பார்த்தால்… அவரது குழந்தை அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
அவரது கார் கதவில் தமது விரலை நசுக்கிக்கொண்டது. மாதாஜீ அவரது குழந்தையை சமாதானப்படுத்திவிட்டு
காரைக் கிளப்பிக்கொண்டு குழந்தையுடன் சென்றுவிட்டார்கள்.
தம் குழந்தைக்கு நேரும் சிறு விபத்தையே முன்கூட்டி
அறிய முடியாத மாதாஜீயிடம் அறிவில் சிறந்த நம் தமிழ் மக்கள் ஏமாந்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்று சிறிய அளவில் உள்ள அவ்விடம் இன்னும் இரண்டே ஆண்டில் மேல்மருவத்தூர் போல வரும்
என்பதில் ஐயமில்லை. அரசு மக்களுக்கு கொடுக்கும் துயரங்கள், மக்களே மக்களுக்கு கொடுத்துக்கொள்ளும்
துயரங்கள் இவைகளைக் காட்டிலும் கடவுள் மக்களுக்கு கொடுக்கும் துயரங்கள் அதிமாகிவிட்டன.
கண்மூடி வழக்கங்கள் எல்லாம் மண்மூடிப் போக
வேண்டும் என்பது வள்ளலார் வாக்கு. அது விரைவில் நிறைவேற வேண்டுமாகில் சன்மார்க்க தொலைக்காட்சி
உருவாக்கப்பட வேண்டும். அத்தொலைக்காட்சிக் குழுவினர் இப்படிப்பட்ட இடத்திற்கெல்லாம்
சென்று அதன் உண்மையினை மக்களுக்கு எடுத்துக்காண்பிக்க வேண்டும். கடவுள் பெயரால் தருமங்கள்
நடத்த வேண்டுமே தவிர அதர்மங்கள் நடப்பதை ஒரு போதும் மக்கள் வரவேற்கக்கூடாது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.