Monday, July 31, 2017

இந்துமதம் எங்கே போகிறது? - 8

இந்துமதம் எங்கே போகிறது? - 8
(திரு.இராமானுஜ தாத்தாச்சாரியார்)
'ஏன்...?' கையில் பழங்களை வைத்திருந்த பெண்கள் திரும்பக் கேட்டனர்.

'ஏனென்றால் நீங்களெல்லாம் ஸ்திரீகள். நீங்களெல்லாம் வேண்டாம்... உங்களால் உண்டாகும் இன்பங்களெல்லாம் வேண்டாம். புத்ர சுகம்... முதலான லெளகீக வஸ்துகளெல்லாம் வேண்டாம் என்றுதானே சந்யாசம் பெற்றிருக்கிறார். பிறகு எப்படி உங்களை நோக்குவார். பிசஷாந்திக்காக வந்தால் அப்போது இப்பழங்களை இடுங்கள். இப்போது திரும்ப நடங்கள்...' என நீண்டதொரு விளக்கம் சொல்லி வைத்தார் மடத்துக்காரர்.

ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது என்பது சங்கரமடங்களில் ஆரம்ப காலங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாட்டு நெறிமுறை. அந்த இளம்பருவத்து ஸ்திரீகள் மடத்தை திரும்பித்திரும்பிப் பார்த்தபடியே நடந்து
போனார்கள்.

இதற்குப் பின்னர் அதே மடத்துக்கு இன்னும் சில பிராமணர்கள் கொத்தாக வந்தனர். அதே ரீதியில் அவர்களும் தடுக்கப்பட்டனர்.

'ஏனப்பா? நாங்கள் என்ன ஸ்திரீகளா? அத்வைதிகள்தான். அனுமதிக்க வேண்டியதுதானே...?

'இல்லை, உங்களுக்கு அனுமதி இல்லை?'

'அனுமதி இல்லையா? ஏன்?'

இக்கேள்விகளுக்கு அம் மடத்துக்காரர்கள் சொன்ன பதிலுக்குப்பின் ஒரு கதை.

மடங்களுக்கென்று ஓர் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில்தான் பக்தர்களும் மடாதிபதிகளும் செயல்படுகிறார்கள் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்த வகையில் சிருங்கேரி மடத்துக்குட்பட்ட எல்லையில் இன்றைய தமிழ்நாடும் அடங்கும்.

தமிழ் பிரதேசத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான பிராமண குடும்பங்கள் ஷிமோகா மாவட்டத்திலும் மற்ற இடங்களிலும் குடியேறியிருந்தனர். அவர்களில் வேத விற்பன்னர்கள், வித்வான்களுக்கெல்லாம் அரசர்கள் உள்ளிட்ட பல புரவலர்கள் கிராமங்கள், நிலங்கள் என பரிசுகளாகக் கொடுத்தனர்.

அவ்வாறு தேஜஸான வளத்தை அனுபவித்து வந்த தமிழ் பிராமணர்கள்தான் கொத்துக் கொத்தாக போனார்கள். இவர்களின் வளத்தைப் பார்த்தோ மொழியைப் பார்த்தோ சிருங்கேரி மடத்துக்காரர்களில் சிலருக்கு செரிமானம் ஆகவில்லை.

'நீங்கள் தமிழ்நாட்டு பூர்வீக பிராமணர்கள்தானே...'

'ஆமாம்... அதற்கென்ன?...'

'நீங்கள் ஸ்ரீமடத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர்கள். அதனால் உங்களுக்கு இங்கே ப்ராப்தம் இல்லை...' என்றனர் மடத்துக்காரர்கள்.

'தென் தேசம் முழுவதுமே சிருங்கேரி மடத்தின் எல்லைக்குட்பட்டதுதானே... நாங்களும் தென்தேசக்காரர்கள்தானே?...'

'பூகோள எல்லை கிடக்கட்டும்... உங்கள் கோத்ர அனுஷ்டானங்களின்படி பின்பற்றும் சாஸ்த்ர சம்பிரதாயங்களின்படி நீங்கள் இம்மடத்துக்கு தோஷக்காரர்கள். இம்மடத்தின் வைதீக எல்லைக்கு வெளியே இருக்கிறீர்கள். அதனால் உங்களுக்கு அனுமதி இல்லை...'

கர்நாடக மண்ணில் 'தமிழர்கள்' முதன்முதலாக அனுமதி மறுக்கப்பட்டது இந்த சமயத்தில்தானோ என நினைக்கிறேன்...

சிருங்கேரி மடத்துக்குள் தமிழ் குடியேற்றங்களை உள்ளே விடாததற்கும்... காஞ்சியா கும்பகோணமா என்பதற்கும் என்ன சம்பந்தம் என்றுதானே கேட்கிறீர்கள்.

மறுபடியும் மடத்தின் வாசல், 'நீங்கள் எந்த கோத்ரமாக இருந்தாலும்... எந்த வேதக்காரராக இருந்தாலும் (பிராமணர்களில் வேதக்காரர்கள் ரிக், யஜூர், சாம, அதர்வண வேதக்காரர்கள் என ஒவ்வொரு வேதத்தின் வழிவந்தவர்களாக பிரிக்கப்பட்டிருக்கிறார்கள்) இங்கே உங்களுக்கு 'ஆசிபெறவோ, தீட்சை பெறவோ, தரிசனம் பண்ணவோ பாக்யம் கிடையாது. அதனால் நீங்கள் இம்மடத்துக்கு வரவேண்டாம். உங்களால் மடத்துக்கு தோஷமும் உங்களுக்கு பாவமும் நேரவேண்டாம்.'

'நாங்களும் இந்த மடத்துக்கு பாத்யப்பட்டவர்கள் தானே... நாங்கள் உள்ளேவர சாத்தியப்படாதா?' என்றெல்லாம் தமிழ்நாட்டிலிருந்து குடியேறியவர்கள் கேள்வி எழுப்பி செய்த பக்தி போராட்டம், வெற்றியைத் தரவில்லை.

இங்கே இன்னும் ஒரு முக்கியமான விஷயம் சோழ மண்டலத்திலிருந்தும்... திருநெல்வேலி போன்ற தமிழகத்தின் தென் மண்டலத்திலிருந்தும் சிருங்கேரி சுற்றுவட்டாரங்களில் சில தலைமுறைகளுக்கு முன்னரே குடியேறியவர்களில் சிலர்... முறையாக தீட்சை பெற்று... சந்யாசம் பெற்று பிரம்மச்சர்யத்தை பிடிப்போடு கவனித்து வந்தார்கள்.

அவர்களுக்கும் அனுமதி மறுப்பு கண்டு கொதித்துப்போன தமிழ்வழி குடியேற்றத்தினர், என்ன செய்யலாம் என்று விவாதிக்கக் கூடினார்கள்.

'நம்மை அனுமதிக்காத மடத்தை நாம் விடக்கூடாது. எப்படியாவது உள்ளே செல்ல வேண்டும். மட காரியங்களில் நாம் பங்குபெற வேண்டும்' குடுமியை முடிந்து கொண்டே கோபத்தை அவிழ்த்துவிட்டார் ஓர் இளைஞர்.

'பக்தியில் பிளவு செய்யப் பார்க்கிறார்கள். இதை சாத்வீகமாய் எதிர்கொண்டு மடத்துக்குள் சஞ்சரிப்போம்' என்றார் இன்னொருத்தர்.

இப்படி பல கருத்துக்கள் எதிரொலித்துக் கொண்டிருந்த போதுதான்... ஒரேஒரு குரல் வித்தியாசமாய் வெளிப்பட்டது.

          'நாம் சாதாரணப்பட்டவர்கள் அல்ல... வேதஞானம் விருத்தியானவர்கள் நம்முடைய வித்வான்களுக்காக ராஜாக்களும், நிலக்கிழார்களும் பல கிராமங்களை நமக்கு பாத்யப்படுத்தியிருக்கிறார்கள். இப்படியிருக்க நாமே தனியாக ஒரு மடத்தை ஸ்தாபித்து இறைத்தொண்டும் ஏழைகளுக்கு தொண்டும் செய்யலாமே.'

          இந்த யோசனை எல்லார்க்கும் பிடிக்க... அன்று முதல் சிருங்கேரி மடத்தை பகிஷ்கரித்து அதன் தகுதியோடு சங்கமேஸ்வரம் என்னும் இடத்தில் புதிய மடத்தை ஸ்தாபித்தனர்.

          தங்களுக்குள்ளேயே ஒரு மடாதிபதியை நியமித்துக் கொண்டு சங்கரமடங்களிலிருந்து பெற்ற சாரங்களை அடிப்படையாக வைத்து இம்மடத்தை பரிபாலித்தனர்.

          இம்மடத்துக்கு சோழமண்டல, தொண்டை மண்டல... என தமிழகத்தின் பல பக்தர்களும் வந்து போக ஆரம்பிக்க... காலதேவன் பயணத்தில் காஞ்சியில் ஓர் முக்கிய சம்பவம் நடந்தது.

          கோயில்கள் நகரம், சிற்பக்கலைகளின் சீமாட்டி நகரம் என்றெல்லாம் புகழ்பெற்ற காஞ்சீபுரம் சப்த முத்தி ஸ்தலங்களிலும் ஒன்றாக கருதப்பட்டது.

          அதாவது... அயோத்யா, மதுரா, மாயாபுரி, காசி, காஞ்சி, பூரி, துவாரகை எனப்படும் சப்த (ஏழு) முத்தி ஸ்தலங்களில் தென்பகுதியில் இருக்கும் ஒரேநகரம் காஞ்சிதான்.

          அந்த அளவுக்கு இங்கே பக்தி வெள்ளம் அணைகள் இல்லாமல் ஆன்மீகப் பாசனம் செய்து கொண்டிருந்தது. எங்கெங்கு பார்த்தாலும் இறை முழக்கங்கள். சிற்ப சாஸ்திரங்கள் நிறைந்த காஞ்சீபுரத்தில் சங்கமேஸ்வர மடத்தின் ஒரு கிளையை அங்கிருந்து திரும்பி வந்தவர்கள் நிர்மாணித்தனர்.

          கட்டிடம் கிடையாது, பெரிய இடம் கிடையாது. சிறியதொரு குடில், மிக எளிமையான தோற்றம் கொண்டது காஞ்சிமடம். சங்கரரின் உபதேசங்களின்படி அத்வைதத்தை பரப்பவும், அறம் செய்யவும் அமைக்கப்பட்ட இம்மடம் இருக்குமிடம் தெரியாத அளவுக்கு எளிமையாக இருந்தது.

          மடத்திலிருந்த சந்யாசிகள் பிக்ஷாந்திக்காகவும்... உபந்யாசங்களுக்காகவும்... கோயில்கள் ஆற்றங்கரைகள் என மக்கள் கூடும் இடங்களுக்கு சென்றுவர... காஞ்சியின் மணம் மெல்ல மெல்ல வீச்த தொடங்கியது.

          அப்போது தஞ்சாவூரில் நாயக்கர் ஆட்சித் தொடங்கியிருந்தது. சந்நியாசிகளின் உபதேசங்கள், அவர்களுடைய ஆசீர்வாதம் ஆகியவற்றில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டனர் நாயக்க மன்னர்கள். சொல்லப்போனால் நாயக்கர்களின் ராஜ நாயக்கர்களாக விளங்கியவர்கள் சந்நியாசிகளும், துறவிகளும்தான்.

          அறமும், பக்தி நெறியும் ஆன்மீக கட்டுப்பாடுகளும் ஒருங்கிணைந்து தங்களை வழிநடத்த வேண்டும் என விரும்பிய நாயக்க மன்னர்களின் காதுகள்வரை வந்து நிறைந்தது காஞ்சி மடத்தின் புகழ்.

          அப்படிப்பட்ட ஒரு மடம்... ஏன் அதேமடத்தை நம் ராஜ்யத்தில் அமையுங்கள். எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன். அறமும், பக்தியும் தழைக்க வேண்டும் என நாயக்கமன்னன் ஆசைப்பட... ஆணையிடப்பட்டது.

          உதயமானது கும்பகோண மடம். இன்றையிலிருந்து சுமார் நானூறு... ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் காமகோடி மடம் என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது காஞ்சியிலிருந்த அம்மடம்.

          காஞ்சியில் இருந்ததைவிட கும்பகோணத்துக்கு வந்தபின் நாயக்கர்களின் ஆதரவால் பீடுநடை போட்டது புதிய மடம். சொத்துகளை நிறைய தானமாக கொடுத்தனர் மன்னர்கள். அன்றிலிருந்து கடந்த நூற்றாண்டின் முற்பகுதி, சுமார் 60, 70 ஆண்டுகள் முன்புவரை கும்பகோண காமகோடி மடம்தான் அது.

          எனவேதான் கும்பகோண மடம் என்றே பலராலும் அழைக்கப்பட்டது. இவ்வளவு பிற்காலத்தில் தோன்றிய இம்மடத்தையும் ஆதிசங்கரர்தான் நிர்மாணித்தார் என சிலர் சொல்லிவருவதை ஒதுக்கிவிட்டு... கும்பகோண மடம் காஞ்சிக்கு மீண்டும் வந்த கதையைப் பார்ப்போமா...?

          கும்பகோண மடம் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது எப்படி என்பதைப் பார்ப்பதற்கு முன்பு கும்பகோணத்தில் மடத்தின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை பொதுவாக பார்த்துவிடலாம்.

          பெண்களை உள்ளே அனுமதிக்காத 'எல்லைகளை' கடுமையாக அனுஷ்டித்த சிருங்கேரி மடம் போலவேதான் கும்பகோண மடமும்... மடம் அமைந்திருக்கும் தஞ்சாவூர் ஜில்லா தாண்டி திருச்சிராப்பள்ளி ஜில்லாவின் ஒருபகுதி... ராமநாதபுர சமுத்திரக்கரைப்பகுதி தொண்டை மண்டல பிரதேசம் தவிர எங்கும் மடாதிபதி போகமாட்டார்.

          ஆனால்... இம்மடத்துக்கே உரிய விசேஷமான விஷயம், பக்தர்கள் எங்கிருந்தும் இம்மடத்துக்கு வரலாம். அதாவது, 'எல்லை தாண்டிய பக்தி'யோடு இங்கே வரலாம்.

          இந்த இடத்தில் பக்தர்கள் என்றால் யார் என்பதற்கு இலக்கணமாக ஒரு ஸ்லோகம் பார்க்கலாமா?...
         
          'பரமாத்மனே யேர் ரக்தஹ
           விரக்தோ அபரமாத்மநீ...'

என்று போகும் வரிகள், பக்தர்கள் என்றால் யார் என்பதைச் சொல்கின்றன. அதாவது... கடவுளைத் தவிர வேறு யார் மீதோ, எந்த பொருள் மீதோ ஆசை வைப்பவன் பக்தன் கிடையாது. இன்னும் விளக்கமாக சொல்லவேண்டும் என்றால்... பெண்ணோடு தேக சம்பந்தம் கொள்ளாது, புத்ர இஷ்டம் இல்லாத... லெளகீகத்தில் நாட்டம் வைக்காத மனது கொண்டவன்தான் பக்தன் என்கிறது இலக்கணம்.

          இப்போதெல்லாம் சின்னச்சின்ன தெருமுனைக் கோயிலில் இருந்து... பெரியபெரிய கோயில்கள் வரை உற்சவங்களுக்கு வெளியிடப்படும் அழைப்பிதழ்களில் எல்லாம் 'பக்த கோடிகளே' என அழைக்கிறார்கள். சிந்தித்துப் பாருங்கள்! நம்மில் 'பக்தர்கள்' எத்தனை பேர் இருப்போம் என்றும் எண்ணிப் பாருங்கள்!

          சரி விஷயத்துக்கு வருவோம். இப்படிப்பட்ட இலக்கணங்கள் பெற்றோ, பெறாமலோ பல பக்தர்கள்(!)கும்பகோண மடத்துக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் இவர்களில் ஒருவர்கூட... சூத்ரர் கிடையாது. காரணம்?

          'அப்பிராமணர்கள் (பிராமணர் அல்லாதவர்கள்) சந்யாசிகளாக கூடாது...' என்றது ஸ்மிருதி வகுத்த விதி. அப்படியென்றால் சந்யாசம் பெற்றவர்களை தரிசிக்கவும் கூடாது என்றது தொடர்விதி.

          இப்படிப்பட்ட சீதோஷ்ண நிலையில்... மன்னர்களின் ஆதரவோடு 'சிறப்பாக' நடந்து கொண்டிருந்தது கும்பகோண மடம். பல மடாதிபதிகளுக்குப் பிறகு கும்பகோண மடாதிபதியானார் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அவருடன் நான் பல விஷயங்களில் நட்பு பாராட்டி ஆத்ம தோழனாக இருந்தேன்.

          அப்போது மகாபெரியவர் அத்வைத பிரச்சாரம் பண்ணுவதற்காக பல வெளிஸ்தலங்களுக்கும் போக ஆரம்பித்தார். (எல்லைக் கட்டுப்பாடுகள் தளர ஆரம்பித்துவிட்டன) இதன் விளைவாக பல முக்கியஸ்தர்கள் மகாபெரியவரின் பக்தர்கள் ஆனார்கள்.

          சுதந்திர போராட்ட காலத்தில்... என் ஞாபகப்படி மகாத்மா காந்தியடிகளே கும்பகோணத்துக்கு வந்து மகாபெரியவரை மூன்று முறை சந்தித்திருக்கிறார். இன்னும்... பல தேசத் தலைவர்களும் மகாபெரியவரை தரிசித்து ஆசிபெற்று அருள்பிரசாதம் பெற்றுச் சென்றிருக்கிறார்கள். இந்த சமயங்களில்கூட சிருங்கேரி மடத்துக்கும் - கும்பகோண மடத்துக்கும் இடையே கருத்து ரீதியான பல மோதல்கள் நடந்து கொண்டிருந்தன. 'நாங்கள்தான் ஆதி சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட மடக்காரர்கள்' என அவர்களும்... இல்லை, நாங்கள்தான் ஆதிசங்கரரால் நிர்மாணிக்கப்பட்டவர்கள்' என்றும் பல வாதங்கள்... பிரதிவாதங்கள் ஒரு பக்கம் நடக்க... இன்னொரு பக்கம் அத்வைத ப்ராபகண்டாவை லட்சியமாகக் கொண்ட காரியங்களும் நடந்து கொண்டிருந்தன.

          மடங்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வர்ணாஸ்ரம தர்மத்தை வளர்த்துக் காப்பதில் சங்கரரின் சர்வ மடங்களும் சம்மதமாகத்தான் செயல்பட்டு வந்தன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதி... பல அரசியல் தலைவர்களும் தரிசித்துச் சென்றாலும், வெளியூர்களுக்குச் சென்று வந்தாலும் மகா பெரியவரின் ப்ராபகண்டா பெருகியது.

          அந்த நேரத்தில் கிழக்குப் பகுதி மடமான பூரி சங்கராச்சாரியார் மதராஸ் ராஜதானிக்கு வந்து பல சமய சம்பிரதாய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு... தன் எல்லையை விஸ்தரிக்க ஆரம்பித்தார். இச்செய்தியை மகாபெரியவரின் கவனத்துக்கு சிஷ்ய கோடிகள் கொண்டு சென்றார்கள்.

          கிழக்கேயிருந்து இங்கே வந்து ப்ராபகண்டா செய்கிறார் பூரி சங்கராச்சாரியார். நாம் அங்கே செல்லும்போது நமக்கு பல எதிர்ப்புகளை அவர்கள் காட்டியிருக்கிறார்கள். நமது மடத்தை அவர்கள் ஒரு மடமாகவே பார்க்காமல் ஜடமாக பார்த்து வந்தார்கள். அவர்கள் இங்கே வருவதா? என சித்தம் நொந்து கேட்டிருக்கிறார்கள். அவர்களை சாந்தப்படுத்தினார் மகா பெரியவர்.

          இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் முற்பாதிப் பகுதியில் நடந்தவை. அப்போது மகாபெரியவர் 'தேசாந்திரம்' எனப்படும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும்போது... 'கும்பகோணம் மடாதிபதி வருகை...' என்றே அன்றைய செய்தித்தாள்கள் பிரசுரம் செய்தன.

          இதற்கெல்லாம் பிறகுதான்... 'நாம் கும்பகோணத்தில் இருப்பதால் பலரும் நம்மை ஒதுக்கப் பார்க்கிறார்கள். நாம் பிரதான ராஜதானியான மதராசுக்கு அருகில்... பல வருடங்கள் முன்பு தாய்மடம் இருந்த காஞ்சிக்கே செல்லலாம்' என முடிவெடுக்கப் பட்டது. கும்பகோணமடம் மறுபடியும்... காஞ்சிக்கு வந்த கதை இப்போது புரிந்துவிட்டதா?...

          சரி... மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுடன் தோழமை கொண்டிருந்தேன் என குறிப்பிட்டேன் அல்லவா? அந்தத் தூய்மையான தோழமையில் எனக்கு வாய்க்கப்பெற்ற அனுபவத்தை உங்களோடு சேர்ந்து மறுபடியும் அனுபவித்துப் பார்க்கட்டுமா?

மகாபெரியவர் சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளுடன் நான் பெற்றிருந்த பாக்யத்துக்குரிய தோழமை அனுபவங்களை நினைத்துப் பார்க்கும் முன்… அவரோடு எனக்கு நெருக்கத்தை ஏற்படுத்திய என் வாழ்க்கை நிலைமையும் ஞாபகத்தில் வந்து கூத்தாடுகிறது.

          இதைச் சொல்லிவிட்டுப் பிறகு மகாபெரியவரின் தோழமைக்குள் நுழைந்ததை தொட்டுத் தொடருகின்றேன்.

          என் குழந்தைப் பருவத்திலே நான் தொட்டு விளையாடிய பொருள்களிலே வேதப்புத்தகங்களும் அடங்கும்.

          எனது தகப்பனார்… தாததேசிக தாத்தாச்சாரியாரும், பெரிய தகப்பனார் பட்டு ஸ்வாமியும் வேதங்களைக் கரைத்துத் தாளித்துத் தளிகை செய்து உண்டவர் என்றுகூட சொல்லலாம். நான் சின்னக் குழந்தையாக இருக்கும்போதே என் சின்னச் சின்ன செவிமடல்களில் அவரது வேதக்குரல் மோதிக்கிளம்பும். அப்போது எனக்கு வேதமும் தெரியாது வெங்காயமும் தெரியாது.

          நான் வளர்ந்த நாட்களில்… சேட்டைகள் செய்து கொண்டிருக்கும்போது சொந்தக்காரர்கள் பலர் ‘அது சொல்லு… இது சோல்லு…’ என பேச வைத்துக்கொண்டிருக்க… என் தந்தையார் என்னைக் கொஞ்சும்போதும் வேத மந்திரங்களைத்தான் சொல்லுவாராம். நான் ரொம்ப அடம்பண்ணினால் கோபிக்கும்போதும் வேத மந்திரங்களிலிருந்து சில கடும் புத்தி சொல்லும் ஸ்லோகங்களைச் சொல்லித்தான் கோபிப்பாராம்.

          இப்படியாக எனக்குத் தெரியாமலேயே… வேதங்கள் என்னோடு விளையாடிக்கொண்டிருந்தன.

          கற்கும் வயது வந்ததும் எனது தகப்பனாரும், பெரிய தகப்பனாரும் எனக்கு வேதங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். அவரிடம் வேத அத்யயனம் செய்த நான்… அவரது மகனாக மட்டுமன்றி மாணவனாகவும் மலர்ந்தேன். வேதத்தின் ஓசைகளை காதால் கேட்டு அதை நாக்கால் புரட்டிப் போடுவதுதான் வேத அத்யயனம் என்ற நிலை இருந்த அந்தக் காலத்தில்… எனக்கு சின்னஞ்சிறு வயதிலேயே வேதத்தின் பொருள் பகுத்து விளக்கிவந்தார் தகப்பனார்.

          பதினைந்து வயது முதலான நாட்களில் வேதங்களைப் பற்றி நானே சிந்திக்க ஆரம்பித்தபோதுதான்… நாட்டில் ‘ஆரிய சமாஜம் என்ற அமைப்பு பிராமணர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.

          அதென்ன ஆரிய சமாஜம்?

          தயானந்த சரஸ்வதி என்பவரால் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்ட அந்த அமைப்பு பிராமணர்களிடையே ஒரு பீதியை ஏற்படுத்தியதை அன்று இளைஞனான என்னால் உணர முடிந்தது. அந்த அளவுக்கு தயானந்த சரஸ்வதி என்ன சொன்னார் தெரியுமா?

          “வேதத்தை பிராமணர்கள் தங்களது தொழிற்கருவியாக பயன்படுத்திவிட்டனர். இதனால் வேதம் பிராமணர்களின் வீட்டு புத்தகங்களுக்குள் புதைந்து கிடக்கிறது.

          தாங்களும் வேதத்தைக் கற்காமல் அடுத்தவர்களும் கற்காமல் வேதத்தை அவர்கள் சிறைப்பிடித்து வைத்துள்ளனர். எனவே வேதத்தை பிராமணர்கள் மட்டுமல்ல எல்லாரும் படிக்கவேண்டும். வேதப்பொருள்களை அனைவரும் உணரவேண்டும். அனைவரும் என்றால் பிராமணர் அல்லாதவர்களும்.”

          என்ற ரீதியில் தயானந்த சரஸ்வதி பரப்பிய கருத்தை அவரது ஆரிய சமாஜத்தினர் இந்தியா முழுவதும் பரப்பி வந்தனர். இங்கே தமிழ்நாட்டுக்கும் வந்து சேர்ந்தது அந்த கருத்துரு.

          பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்யப்பட்டது. சென்னை செளகார்பேட்டையில் வந்து சமாஜத்தினர் கூட்டங்களும் போட்டனர்.

          இந்த நிலையில்தான் கும்பகோணத்தில் வேதம் படித்துணர்ந்த நானும் என் சனாதன சகாக்களும் பிராமணீயத்தைக் காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்தோம்.

          பிராமண சபை, என ஒரு சபையை அமைத்தோம். அந்த நேரத்தில் ஈரோடு ஈ.வெ. இராமசாமி நாயக்கரும் பிராமணர்களை… பிராமணீயத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். எனவே நாங்கள் ‘பிராமண சபையை’ ஆரம்பித்து சனாதன தர்மத்தை பாதுகாக்கும் பிரச்சாரங்களில் ஈடுபட்டோம்.

          ஊர் ஊராக, கிராமம் கிராமமாக ஜில்லா முழுதும் செல்வோம். ஒரு நாள் உபந்யாசம் செய்தால் சபையிலிருந்து 10 ரூபாய் சம்பளமாக கொடுப்பார்கள். ஊரெல்லாம் சுற்றி நாங்கள் இராமசாமி நாயக்கருக்கு பதிலடி கொடுத்துவந்த வேளையிலே ஒரு சுவாரஸ்யம்.

          பரவஸ்து ராஜகோபாலாச்சாரி அய்யங்கார் எனும் ஒரு நண்பர்… வேதங்கள் மற்றும் சமஸ்கிருத ஸ்லோகங்களில் சூத்திரர்களைத் தாக்கி, அவமானப்படுத்தும் விதமாக உள்ள ஸ்லோகங்களையெல்லாம் எடுத்து எழுதி இராம்சாமி நாயக்கரின் இயக்கக்காரர்களிடம் கொடுத்துவிடுவார். அவர்களுக்கு எங்களை வசவுபாட இது மேலும் வசதியாக இருக்கும்.

          இப்படிப்பட்ட நிலையிலும் சனாதன தர்மசபை என மேலும் ஒரு சபை நிறுவப்பட்டது. அந்தக் காலத்தில் காங்கிரசில் தீவிரமாக இருந்த ஜி.வெங்கட்ராமய்யர், எம்.கே.வைத்தியநாத அய்யர் போன்றவர்கள் எல்லாம் எங்கள் சபைக்கு வரத்தொடங்கினர்.

          அப்போது கும்பகோணத்தில் கம்பீரமாக இருந்த சங்கரமடத்தின் சார்பில் ‘ஆரிய தர்மம்’ என்றும் ஒரு பத்திரிக்கைகூட வெளிவந்தது. அதிலே எனது சித்தப்பா அக்னிஹோத்ரம் கோபாலதேசிகாச்சாரியார் ‘எடிட்டர்’ஆகவும் இருந்திருக்கின்றார். அதோடு ‘ஜாதி தத்வ நிரூபணம்’ எனும் ஒரு புத்தகத்தையும் அவர் எழுதினார்.


          இப்படியாக நான் சபைகளின் மூலம் வேத தர்மத்தைக் காக்க பிரச்சாரத்திலும், சில பத்திரிக்கைகளில் எழுதிக்கொண்டும் இருந்தபோது… அடிக்கடி சென்னை சென்றும் வருவேன்.

                                         to be continue... 

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.