காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க
விவேக விருத்தி” என்னும் இணைய இதழில் ‘ஜூலை-2017’ அன்று “சித்தர்கள் பார்வை” என்ற தலைப்பில் வெளியானது.
உதக நீர்
நீரானது மலையிடுக்குகளில்
சுரந்து, கசிந்து வழிந்து, காடுகளின் ஊடாக ஓடையாக செல்வதை பார்த்திருப்பீர்கள். இத்தகைய
பயணத்தில் இந்த நீர் மலை முகடுகளில் உள்ள பள்ளங்களில், குழிகளில் தேங்கியிருப்பதைக்
காண இயலும். மலை காடுகளில் ஊடான பயணத்தின் போது பல்வேறு பாஷாணங்கள், உப்புகளை கரைத்துக்
கொண்டு, காடுகளின் மூலிகை செடிகளுடன் ஊடான பயணத்தில் இந்த நீரின் பண்பும் தன்மையும்
செறிவாக மாறியிருக்கும். மலைகளின் மேல் கிணறு போல மிக ஆழமாகவும் குறுகலாகவும் உள்ள
குழிகளில் தேங்கிய இம்மாதிரியான நீர் காலப் போக்கில் வெயில் இடி மின்னல் போன்ற பருவ
மாற்றங்களினால் வேதி மாற்றம் அடைந்து அதி வீரியமான, சக்திவாய்ந்த ஆற்றல் மிக்க நீர்மை
பொருளான திரவமாக ஆகிவிடும். இந்த நீரினையே சித்தர்கள் உதக நீர் என்கின்றனர்.
இதன் மகத்துவத்திற்கு உதாரணம் கூறுவதானால்
இந்த நீரில் விழும் இலை கூட கல்லாய் மாறிவிடுமாம். இந்த மாதிரி திரவம் எல்லா இடங்களிலும்
கிடைத்து விடாது என்றும், இதை கண்டறிவது அத்தனை சுலபம் இல்லை என்றும் சித்தர்கள் கூறியிருக்கின்றார்கள்.
மேலும் எல்லா இடத்தில் இருக்கும் உதக நீரும் ஒரே மாதிரியான வேதியல் மற்றும் பெளதீக
தன்மை உடையனவாக இருப்பதில்லை.
இத்தகைய உதக நீரைப் பற்றி ‘போகர் மலைவாகடம்’,
‘கோரக்கர் மலைவாகடம்’, ‘அகத்தியர் வாகடம்’ போன்ற நூல்களில் விரிவாக கூறப்பட்டிருக்கின்றது.
இதன்படி பத்து வகையான உதக நீர் உள்ளதாகவும் அவற்றை அடையாளம் கண்டு சாபநிவர்த்தி செய்து
பயன் படுத்தும் முறைகளை பாடல்களில் காண முடிகின்றது. இந்த நீரை விசேடமான பாத்திரங்களில்
சேமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
சாணவேதி உதகம்: வெள்ளையாய் கரு நீர் போல
நுரைத்து பிசுபிசுப்பான இந்த நீரில், குச்சியினை போட்டு வைத்தால் மூன்றே முக்கால் நாழிகைக்குள்
நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கு உண்டான மந்திரத்தை சொல்லி
சாப நிவர்த்தி செய்த பின்னர், குதிரை வால் முடியில் முடிந்த பேய்ச்சுரைக் குடுகையில்
சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில் அரிதார தூளை சேர்க்க திரவம் சிறப்பு நிறமாக மாறுவதுடன்
அதிலிருந்து சவ்வாது மணம் வீசுமாம். இதுவே ‘சாணவேதி உதகம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு பூசணிக்காயில் சிறு துளை இட்டு அதில்
சுத்தி செய்த இரசத்தினை ஊற்றி அதை குதிரை வால் முடியில் கட்டி உதக நீரில் வைக்க மூன்றே
முக்கால் நாழிகைக்குள் பூசணிக்காய் கல்லாகும். இதை தூளாக்க இரசமானது இறுகி மணி போலாகி
இருக்கும். இந்த மணியை வாயிலிட கேவுனமுன்டாகும். மேலும் இந்த பூசணித்தூளை பண எடை அளவு
எடுத்து தேனில் கலந்து உண்டுவர ஆயுள் அதிகரிக்கும் என்றும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு நாள் வேதி உதகம்: புகையீரல் கழுவிய நீர்
போல் பிசுபிசுப்பான இந்த நீரை, இதற்கு உண்டான மந்திரத்தை கூறி சாபநிவர்த்தி செய்து
குதிரை வால் முடியில் முடிந்த பேய்ச்சுரைக் குடுகையையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு
நீரில் பெருங்காயத் தூளை போட்டு நுகர்ந்தால் பெருங்காயத்தின் மணம் அற்றுவிடும். இதுவே
‘ஒருநாள் வேதி உதகம்’ என்று குறிப்பிடுகின்றனர்.
இந்த ஒருநாள் வேதி உதக நீரை வில்வக் குடுகையில்
எடுத்து அதில் மூன்று கழஞ்சு சுத்தி செய்த ரசம் விட்டு ஒருநாள் முழுவதும் வைத்திட இரசம்
வெண்ணை போல ஆகும். இந்த இரசத்தை ரசமணியாகக் கட்ட அதுவே கேவுன ரசமணி ஆகும் என்றும் கூறி
உள்ளனர்.
இருநாள் வேதி உதகம்: இது சாணித் தண்ணீர்
போல பிசுபிசுப்பாக இருக்குமாம். இதற்கு உண்டான மந்திரத்தைச் சொல்லி சாபநிவர்த்தி செய்த
பின்னர், குதிரைவால் முடியினால் முடிந்த பழைய தேங்காய் குடுக்கையையில் சேகரிக்க வேண்டும்.
துளியளவு நீரில் மாம்பழச்சாறு விட்டுக் கலக்கி இரண்டு நாள் வைக்க, மாம்பழ வாடை இல்லாதிருப்பின்
அதுவே ‘இருநாள் வேதி உதகம்’ என்று குறிப்பிடுகின்றனர்.
வில்வக்குடுகையில் இந்த உதக நீரை எடுத்து
அதில் சிறிது வெள்ளித் தூளை போட்டு இரண்டு நாள் கழித்து எடுக்க மணல் போல ஆகும். இதை
கல்வத்திலிட்டு அரைத்து புடமிட்டு சுன்னமாக்கி நெய்யில் குழைத்து உண்ண காய சித்தி உண்டாகும்
என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
திரிநாள் வேதி உதகம்: கரிசல் காட்டு நீர்
போல குழ குழப்பாயிருக்கும் இந்த நீரில் ஒரு குச்சியினை மூன்று நாள் போட்டு வைக்க உதக
நீரில் நனைந்த பகுதி கல்லாகிவிடும். இதற்கு உண்டான மந்திரம் சொல்லி சாபநிவர்த்தி செய்து,
பின்னர் குதிரை வால் முடியில் முடிந்த செம்பினால் ஆன குடுகையையில் சேகரிக்க வேண்டுமாம்.
துளியளவு நீரில் சந்தனத் தூளை போட்டு நுகர்ந்து பார்த்தால் மணமற்றுவிடும். இதன் மூலம்
‘திரி நாள் வேதி’ உதக நீரினை அறியலாம். இந்த வகை உதக நீரின் உதவியுடன் பலவகை பட்பங்கள்
செந்தூரங்கள் செய்யலாமாம்.
பஞ்சவேதி உதகம்: இது மஞ்சள் கலக்கிய நீர்
போல இருக்கும். இதில் ஒரு குச்சியினை ஐந்து நாள் போட்டு வைத்திட உதக நீரில் நனைந்த
பகுதி கல்லாகிவிடும். இதற்கு உண்டான மந்திரம் சொல்லி சாபநிவர்த்தி செய்த பின்னர் குதிரை
வால் முடியில் முடிந்த இரும்புத் தகட்டுக் குடுகையையில் சேகரிக்க வேண்டுமாம். இதில்
சிறிதளவு நீரை எடுத்து ஈர வெங்காயத்தை அரைத்துக் கலக்கி நுகர வெங்காய மணம் இல்லாதிருக்குமாம்.
இதன் மூலம் ‘பஞ்ச வேதி’ உதகநீரினை அறியலாம். இதைக் கொண்டு பாஷாணங்களை பற்பமாக்க முடியுமாம்.
சப்த வேதி உதகம்: வெளிர் சிவப்பான இந்த நீரில்
குச்சியினை போட்டு ஒரு வாரம் வைத்திருக்க நீரில் நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம்.
இதற்கான மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர் குதிரை வால் முடியில் முடிந்த
பேய்ச்சுரைக் குடுகையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு திரவத்தில் வேப்பெண்ணையை கலந்து
நுகர்ந்தால் வேப்பெண்ணையின் மணம் அற்றுவிடும். இதுவே ‘சப்த வேதி உதகம்’ என்று குறிப்பிடுகின்றனர்.
இதைக் கொண்டு பாஷாணங்களை பற்பமாக்குவதுடன் காயகற்ப மருந்துகளும் தயாரிக்க முடியுமாம்.
தசவேதி உதகம்: இது அழுகிக் கிடக்கும் சகதித்
தண்ணீர் போல இருக்கும். இந்த நீரில் குச்சியினை போட்டு பத்து நாள் வைத்திருக்க நீரில்
நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த
பின்னர் குதிரை வால் முடியில் முடிந்த விளாங் குடுகையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு
நீரில் எலுமிச்சம் பழச்சாறு விட்டுக் கலக்கி பத்து நாள் வைக்க, எலுமிச்சம்பழ வாடை இல்லாதிருப்பின்
அதுவே ‘தச வேதி உதகம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதைக் கொண்டு இரசவாதம் செய்யலாமாம்.
மாத வேதி உதகம்: சிறிது மஞ்சள் நிறமுடன்
குழ குழப்பான இந்த நீரில் குச்சியினை போட்டு முப்பது நாள் வைத்திருக்க நீரில் நனைந்த
குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான மந்திரத்தை கூறி சாபநிவர்த்தி செய்த பின்னர்
குதிரை வால் முடியில் முடிந்த இரும்புக் குடுகையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு
நீரில் வசம்புத் தூளைப் போட்டுக் கலக்கி நுகர வசம்பு வாடை இல்லாதிருப்பின் அதுவே ‘மாத
வேதி உதகம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதைக் கொண்டு பாஷாணங்களை உலோகம் போல உறுதியான
திண்மமாக்கலாமாம்.
மண்டல வேதி உதகம்: சிறிது பச்சை நிறமுடன்
பிசுபிசுப்பான இந்த நீரில் குச்சியினை போட்டு நாற்பத்தியெட்டு நாள் வைத்திருக்க நீரில்
நனைந்த குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த
பின்னர் செப்புக் கம்பியினால் பேரண்டத்தைக் கட்டி சேகரிக்க வேண்டுமாம். துளியளவு நீரில்
வெற்றிலைச் சாற்றை விட்டுப் பார்க்க அது முறியாதிருப்பின் அதுவே ‘மண்டல வேதி உதகம்’
என்று குறிப்பிட்டுள்ளனர். இதைக் கொண்டு பாஷாணங்களை உலோகம் போல உறுதியான திண்மமாக்கலாமாம்.
இதைக் கொண்டு பாஷாணங்களை பற்பமாக்க முடியுமாம்.
அறுபதுநாள் வேதி உதகம்: சிறிது கருப்பு நிறமுடன்
வழுவழுப்பான இந்த நீரில் குச்சியினை போட்டு அறுபது நாள் வைத்திருக்க நீரில் நனைந்த
குச்சியின் பகுதி கல்லாகிவிடுமாம். இதற்கான மந்திரத்தை கூறி சாப நிவர்த்தி செய்த பின்னர்
செப்புக் கம்பியினால் முடிந்த இரும்புக் குடுகையையில் சேகரிக்க வேண்டுமாம். துளியளவு
நீரில் கற்பூர வள்ளி இலைச் சாற்றை விட்டு நுகர மணம் இல்லாதிருக்குமானால் அதுவே ‘அறுபது
நாள் வேதி உதகம்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இதைக் கொண்டு பாஷாணங்களை உலோகம் போல உறுதியான
திண்மமாக்கலாமாம். இதைக் கொண்டு காயகற்ப மருந்துகளும் தாது புஷ்டி மருந்துகளும் தயாரிக்க
முடியுமாம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.