Monday, August 14, 2017

சுதந்திரம்

சுதந்திரம்:




பசுமைகள் என்றும்
ஊழல், அதிகாரத்துடன்
மேலிருக்க…
சருகுகளே
சொந்தங்களாய்
உதிர்ந்த இலைகள்

சுதந்திரம் கொண்டாடுகின்றன…

T.M.R.

Sunday, August 13, 2017

“வந்தே மாதரம்” – இந்தியர்களின் ஒற்றுமையை சிதைக்கின்றதா?



“வந்தே மாதரம்” – இந்தியர்களின் ஒற்றுமையை சிதைக்கின்றதா?

பங்கிம் சந்திர சட்டர்ஜி (1838-1897) என்னும் பார்ப்பனரால் வங்கமொழியில் எழுதப்பட்ட ‘ஆனந்தமடம்’ எனும் நாவலில் இடம் பெற்ற பாடலே இந்த “வந்தே மாதரம்”
இசுலாமியர்களுக்கு இந்தப் பாடலின் மீது என்ன வெறுப்பு?

ஆனந்த மடம் நாவலில் காணப்படும் கதையம்சமும், உரையாடலும் இசுலாமியர்களுக்கு விரோதமானவை என்கிற அளவில் மட்டுமல்ல; அவர்களை நாட்டை விட்டே துரத்தியடிக்க வேண்டும் என்கிற உணர்வுதான் இந்த நாவலின் அடி நாதமாகும்.
நாவலின் கதை நாயகன் பவாநந்தன் வங்காள முசுலிம் அரசனின் ஆட்சியைக் கவிழ்க்கப் படை திரட்டுகிறான்.
மகேந்திரன் என்ற ஒருவனைச் சந்தித்து தமது படையில் சேருமாறு அழைக்கின்றான். தாய்நாட்டை முசுலிம்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறுகிறான். ஏன் முசுலிம் மன்னனின் ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும்? மகேந்திரனின் கேள்வி இது.
நமது மதம் போச்சு, நமது வருணாசிரம தருமம் போச்சு. ஏன், இப்பொழுது நமது உயிரக்குக்கூட ஆபத்து வந்துவிட்டது. இந்த முசுலிம்களை விரட்டாவிட்டால் நமது இந்து மதத்தைக் காப்பாற்றவே முடியாது! என்றெல்லாம் வீராவேசம் பேசுகிறான்.
உன் ஒருவனால் இதனை சாதிக்க முடியுமா? மீண்டும் மகேந்திரனின் வினா இது. பவாநந்தன் பேசுகிறான். “வந்தே மாதரம்” பாடலிலிருந்து சில வரிகளை மட்டும் கம்பீரமாகப் பாடுகிறான். அதற்கு விளக்கமும் கூறுகிறான். “ஏழு கோடி தொண்டைகள் முழங்கும்போது, 14 கோடி கைகள் கூரிய வாளேந்தி நிற்கும்போது, பாரத மாதா பலவீனமானவள் என்று நீ நினைக்கிறாயா?” என்பதுதான் அந்தப் பாடல் வரிகளின் பொருள்.
மகேந்திரன் மசியவில்லை. முசுலிம்களின் வீரத்தையும், படைபலத்தையும் எடுத்துக் கூறுகிறான். விடவில்லை பவாநந்தன்.
“முசுலிம்களா? அவர்கள் பயங்காளிகள், கடைந்தெடுத்த கோழைகள். உயிருக்கு ஆபத்து நேரும்போது, ஆங்கிலேயர்கள் போர்க்களத்திலிருந்து ஓடிவிட மாட்டார்கள். வியர்வை வடியத் தொடங்கும்போது முசுலிம்கள் பயந்து ஓடி விடுவார்கள். எங்காவது ஒரு மூலையில் வெடிகுண்டு விழுந்தால் போதும், முசுலிம்கள் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்! என்கிறான் கதை நாயகன் பவாநந்தன். ஆனாலும் மகேந்திரன் அவன் விரித்த வலையில் வீழ்ந்தான் இல்லை.
முயற்சியைக் கைவிடவில்லை - அந்த முசுலிம் எதிரி. மறுநாள் என்ன செய்கி றான்? ஆனந்த மட ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுகிறான். ஒரு விஷ்ணுவின் விக்கிரகம், அந்த விக்கிரகத்தின் மடியில் ஒரு தேவியின் உருவம்!
“யார் அந்தத் தேவி” கேட்கிறான் மகேந்திரன். “ஆ! அவள்தான் நம் பாரத மாதா. நாமெல்லோரும் அந்த பாரத மாதாவின் புத்திரர்கள்” என்கிறான் கோயில் பூசாரி.
அடுத்து ஒரு காட்சி “ஜெகத்தாத்ரி” ஒளிமயமாகக் காட்சி அளிக்கும் ஒரு சிலை காட்டப்படுகிறது.
ஆதியிலே நமது பாரத மாதா இப்படித் தான் ‘ஜெகஜோதி’யாகக் காணப்பட்டாள். இப்பொழுது எப்படியிருக்கிறாள் தெரியுமா? இதோ ஒரு காட்சி! நிர்வாணமாகக் காட்சியளிக்கும் ஒரு கருங்காளி. யார் இவள்? கேட்கிறான் மகேந்திரன்.
“அன்று ஜெகஜோதியாகக் காட்சியளித்த நமது பாரத மாதா இப்போழுது இந்த அலங்கோலத்திற்கு ஆளானாள்” என்று கூறுகிறான்.
மூன்றாவது ஒரு காட்சி: பத்து கரங் களுடைய துர்க்காதேவி! “நமது எதிரிகள் முசுலிம்கள் முற்றாக ஒழிக்கப்பட்டால் நமது அன்னை பாரததேவி இந்தக் கண் கொள்ளாக் காட்சியைத் தருவாள்” என்றான் ஆனந்தமட பூசாரி.
அதோடு விடவில்லை. மூளையில் காவி சாயத்தை ஏற்ற வேண்டுமே! லட்சுமி, சரஸ்வதி விக்கிரகங்களையும் மகேந்திரனுக்குக்காட்டி, “பத்துக் கரங்களையுடைய துர்க்காவே” தாமரைமலர்மேல் வீற்றிருக் கும் லட்சுமிதேவியே! கல்வித் தாயான சரஸ்வதியே! போற்றி! போற்றி!!” என்கிற பூசாரி புளகாங்கிதமாகப் பாடி ஆனந்த தாண்டவமே ஆடுகிறான்.
இவ்வளவு வரைதான் தாக்குப்பிடிக்க முடிந்தது மகேந்திரனால். ஆம்! தடுமாறி விடுகிறான் பவாநந்தன் விரித்த வலையிலே முற்றிலுமாக சரணாகதி அடைந்து விடுகிறான்.
படைக்கு ஆட்கள் திரட்டப்படுகிறார்கள். திரட்டப்படுபவர்கள் ஒவ்வொருவரும் சனாதன தருமத்தைக் காப்பாற்றுவதற்காக உற்றார் உறவினரை மறந்து, உயிர்த்தியாகம் செய்யக்கூடத்தயார் என்று சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் அவர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அந்தப் ‘புரட்சிக்காரர்கள்’ அனுப்பப்பட்ட கிராமப் பகுதிகளில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்களாம்?
பங்கிம் சந்திர சட்டர்ஜி, ஆனந்தமடம் நாவலில் இப்படி வருணிக்கிறார்:
“சகோதரரே! விஷ்ணுவை வணங்க வருகிறாயா? என இளைஞர்களைத் திரட் டிச் சென்று முசுலிம் கிராமங்களுக்குச் சென்று தீயிடுவார்கள். முசுலிம்கள் நாலா திசைகளிலும் ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். முசுலிம்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. கொள்ளை யடிக்கப்படும் பொருள்கள் விஷ்ணு பக்தர்களுக்குக் காணிக்கையாக்கப்படுகின்றன. பொருள்கள் கிடைக்கக் கிடைக்க இந்தப் படையில் தாங்களும் சேர்ந்து கொள்வதாக பலரும் முன் வருகிறார்கள்.
ஆனந்த மடம் நாவல், எட்டாம் அத்தியாயத்தில் ஒரு கிராமக் கொள்ளையைப் பற்றி சொல்கிறது.
“திடீரென ஒரு முழக்கம். முஸ்லிம்களைக் கொல்லு! கொல்லு! என ஒரே ஆர்ப்பரிப்பு! வந்தே மாதரம்” என்ற பாடல் பீறிட்டுக் கிளம்புகிறது.
அடுத்து ஒரு குரல் “சகோதரர்களே! மசூதிகளையெல்லாம் தரை மட்டமாக்கி, அந்த இடத்திலே ராதா மாதவர் ஆலயத்தைக் கட்டும் நாள் விரைவில் வரும்!” என்று பிரசங்கம்.
“வந்தே மாதரம்” பாடலின் தாத்பரியமும் பின்புலமும் இதுதான்.
ஆனந்த மடம் நாவலின் நடுநாயகமான வந்தே மாதரம் பாடலினை முசுலிம்கள் கடுமையாக எதிர்ப்பதன் நியாயம் இப் போழுது புரிந்திருக்க வேண்டுமே!
இதனை காலங்கடந்து புரிந்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் வந்தே மாதரம் பாடத்தேவையில்லை. அவர்கள் “ஸாரே ஜஹான்சே அச்சா, ஹிந்துஸ்தான் ஹமாரா ஹமாரா” என்ற கவிஞர் இக்பாலின் பாடலைப் பாடிக் கொள்ளலாம் என்று இரட்டை தேசிய பாடலைக் கொண்டுவந்தது. இக்பாலின் பாடலின் பொருள், “அகில உலகிலும் சிறந்த நாடு எங்கள் இந்தியா” என்பதாகும்.

எனினும், சுதந்திரம் அடைவதற்கு முந்தைய 19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வங்க நாவலில் முஸ்லிம்களை நாட்டைவிட்டு விரட்டுவதற்காக பாடப்பட்ட அந்த “வந்தே மாதரம்” பாடல், நாடு சுதந்தரிம் அடைந்த பிறகும் இன்றைய இந்தியர்களின் ஒரு பிரிவினரை காயப்படுத்துவதாக உள்ளதால், இப்பாடல் எந்த அளவிற்கு நம் நாட்டின் ஒற்றுமையை காக்கும் என்பது கேள்விகுறியே. 

Saturday, August 12, 2017

சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்.

சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்







1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்.

இயற்கை உண்மையரென்றும், இயற்கை அறிவினரென்றும், இயற்கை இன்பினரென்றும், நிர்க்குணரென்றும், சிற்குணரென்றும், நித்தியெரென்றும், சத்தியரென்றும், ஏகரென்றும், அநேகரென்றும், ஆதியரென்றும்,
அமலரென்றும், அருட்பெருஞ்ஜோதியரென்றும், அற்புதரென்றும், நிரதிசயரென்றும், எல்லாமான வரென்றும், எல்லாமுடைய வரென்றும், எல்லாம் வல்லவரென்றும், குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த
"திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்"
துதித்தும், நினைத்தும், உணர்ந்தும், புணர்ந்தும், அனுபவிக்க விளங்குகின்ற "தனித்தலைமை பெரும் பதியாகிய பெருங்கருணை கடவுளே!"

தேவரீரது திருவருட் சமூகத்தில் துரும்பினும் சிறியோமாகிய யாங்கள் சிற்றறிவாற் செய்து கொள்ளும் சிறு விண்ணப்பங்களைத் திருச்செவிக்கேற் பித்தருளி யெங்களை இரஷித்தருளல் வேண்டும்.

எல்லாச் சத்திகளும், எல்லாச் சத்தர்களும், எல்லாத் தலைவர்களும் அறிந்து கொள்வதற்கு மிகவு மரியதாய், எல்லாத் தத்துவங்களுக்கும், எல்லாத் தத்துவிகளுக்கும் அப்பால் அப்பாலாய் விளங்கும் ஓர் சுத்த ஞான வெளியில் தமக்கு ஒரு விதத்தாலும் ஒப்புயர்வு சிறிதுங் குறிக்கப்படாத தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதியராகி விளங்குகின்ற தேவரீரது தனிப்பெருந் தன்மைக்கு மெய்யறிவுடையோரால் விதிக்கப்பட்ட வேதாகமங்களும் பெருந்தகை வாசகத்தைப் பெறாது சிறுதகை வாசகங்களைப் பெற்றுத் திகைப்படைகின்றன என்றால், மலத்திற் புழுத்த புழுவினுஞ் சிறியேமாகிய யாங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பித்தற் குரிய பெருந்தகை வாசகத்தை எவ்வாறறிவோம்! எங்ஙனஞ் செய்வோம்! ஆகலில், கருணாநிதியாகிய கடவுளே! யாங்கள் விண்ணப்பிக்கின்ற அற்ப வாசகத்தில் உரிமை நோக்காது அங்கீகரித்தருளி யெங்களைக் காத்தருளல் வேண்டும்.

அஞ்ஞானத்திற் பயின்று:

தாயினுஞ் சிறந்த தயவுடைக் கடவுளே! இயற்கையே அஞ்ஞான விருளில் அஞ்ஞான வுருவில் அஞ்ஞானிகளாய் அஞ்ஞானத்திற் பயின்று ஏதுந் தெரியாது கிடந்த எங்களைத் தேவரீர் பெருங்கருணையாற் பவுதீக உடம்பிற் சிறிதளவு தோற்றி விடுத்த அஞ்ஞான்று தொட்டு இஞ்ஞான்று வரையும், அது கொண்டு அறிவே வடிவாய், அறிவே யுருவாய், அறிவே பொறியாய், அறிவே மனமாய், அறிவே யறிவாய், அறிவே யனுபவமாய் அனுபவிக்க தெரிந்து கொள்ளாது, குற்றமே வடிவாய்க், குற்றமே யுருவாய்க், குற்றமே பொறியாய்க், குற்றமே மனமாய்க், குற்றமே அறிவாய், குற்றமே அனுபவமாய் அனுபவிக்கின்ற சிறியேங்கள் திருச்சமூகத்தில் விண்ணப்பிக்கின்ற விண்ணப்பமும் குற்றமே வடிவாய் குற்றமே குறிக்குமென் றறிந்தோமாயினும், குற்றங்குறியாத வகை விண்ணப்பஞ் செய்வதற்கு ஒருவாற்றானு முணர்ச்சி யில்லோ மாதலிற் றுணிவு கொண்டு விண்ணப்பிக்கிறோம். குற்றங்களையே குணங்களாகக் கொள்ளுதல் தேவரீர் திருவருட் பெருமைக்கியற்கையாதலின் இவ்விண்ணப்பங்களிற் குற்றங்குறியாது கடைக்கணித்தருளிக் கருணை செய்தல் வேண்டும்.

அஞ்ஞான விருளில் ஒன்றுந் தெரியா துணர்ச்சி யின்றிக்கிடந்த காலம் போக, அவ்விருளை விட்டு நீங்கிய காலத்தே,

தாவரயோனி வர்க்கம்:

இவ்வுளகினடத்தே புல், நெல், மரம், செடி, பூடு முதலியவாகவும் கல், மலை, குன்று முதலியவாகவும் பிறந்து பிறந்து, களையுண்டல், வெட்டுண்டல், அறுப்புண்டல், கிள்ளுண்டல், உலர்ப்புண்டல், உடைப்புண்டல், வெடிப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தாவரயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,

ஊர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கம்:

பின்னர் எறும்பு, செல், புழு, பாம்பு, உடும்பு, பல்லி முதலியவாகவும் தவளை, சிறுமீன், முதலை, சுறா, திமிங்கிலம் முதலியவாகவும் பிறந்து பிறந்து, தேய்ப்புண்டல், நசுக்குண்டல், அடியுண்டல், பிடியுண்டல் முதலிய பல வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அவ்வூர்வன நீர் வாழ்வன யோனிவர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன்று உழன்று அலுப்படைந்தேம்,

பறவையோனி வர்க்கம்:

பின்னர் ஈ, வண்டு, தும்பி, குருவி, காக்கை, பருந்து, கழுகு முதலியவாகப் பிறந்து பிறந்து, அடியுண்டல், பிடியுண்டல், அலைப்புண்டல், உலைப்புண்டல் முதலிய பலவேறு அவத்தைகளால் இறந்திறந்து அப்பறவையோனி வர்க்கங் களெல்லாஞ் சென்று சென்று உழன் றுழன்று அலுப்படைந்தேம்;

விலங்குயோனி வர்க்கம்:

பின்னர் அணில், குரங்கு, நாய், பன்றி, பூனை, ஆடு, மாடு, யானை, குதிரை, புலி, கரடி முதலியவாகப் பிறந்து பிறந்து பிடியுண்டல், அடியுண்டல், குத்துண்டல், வெட்டுண்டல், தாக்குண்டல், கட்டுண்டல், தட்டுண்டல், முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்திறந்து அவ்விலங்குயோனி வர்க்கங்க ளெல்லாம் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படைந்ததேம்;

தேவயோனி வர்க்கம்:

பின்னர் பைசாசர், பூதர், இராக்கதர், அசுரர், சுரர் முதலியராகப் பிறந்து பிறந்து, அலைப்படுதல், அகப்படுதல், அகங்கரித்தல், அதிகரித்தல், மறந்து நிற்றல், நினைந்து நிற்றல், மயக்குறுதல், திகைப்புறுதல், போரிடுதல், கொலைபடுதல் முதலிய பல்வேறு அவத்தைகளால் இறந்து இறந்து அத்தேவயோனி வர்க்கங்க ளெல்லாஞ் சென்று சென்று, உழன் றுழன்று அலுப்படைந்தோம்;

நரகயோனி வர்க்கம்:

பின்னர் காட்ட கத்தார், கரவு செய்வார், கொலை செய்வார் முதலியராக பிறந்து பிறந்து பயப்படல், சிறைப்படல், சிதைபடல் முதலிய அவத்தைகளால் இறந்திறந்து அந்நரகயோனி வர்க்கங்களெல்லாஞ் சென்று சென்று, உழன்றுழன்று அலுப்படந்ததேம்.(1)

கைமாறு:

அங்ஙனம் யாங்கள் அப்பிறவிகள் தோறும் அடைந்த அலுப்பும் அச்சமும் களைப்பும் துன்பமும், திருவுளத் தடைத்து இரங்கியருளி அழியாப் பெருவாழ்வைப் பெருதற்குரிய உயரறிவுடைய இம்மனித தேகத்தில் செலுத்தியருளிய தேவரீரது பெருங்கருணைக்கு யாங்கள் செய்யுங் கைமாறு ஒன்றுந் தெரிந்தோமில்லை.

உயிர்களின் அகத்தும் புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் நீக்கமின்றி நிறைந்து விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே!

வீண்போது:

இம்மனித தேகத்திற் செலுத்திய காலத்திலும் தாய் வயிற்றிலும் சிசுப் பருவத்திலும் குமாரப் பருவத்திலும் பல வேறு அவத்தைகளால் அறிவின்றி யிருந்தோமாகலில், தேவரீர் பெருங்கருணை திறத்தை அறிந்து கொள்ளாமல் வீண்போது கழித்தோம்.

ஓர் உண்மைக் கடவுள்:

அப்பருவங்கள் கழிய இப்பருவத்தினிடத்தே, எல்லா அண்டங்களையும், எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும், எல்லா பொருட்களையும், மற்றை யெல்லாவற்றையும் தோற்றுவித்தும், விளக்கஞ் செய்வித்தும், துரிசு நீக்குவித்தும், பக்குவம் வருவித்தும், பலன் தருவித்தும்(2), எங்கும் பூரணராகி விளங்குகின்ற ஓர் உண்மைக் கடவுள் உண்டென்றும், அக்கடவுளை உண்மையன்பாற் கருத்திற் கருதி வழிபாடு செய்யின் அக்கடவுள் திருவருள் நமது கருத்தின்கண் வெளிப்பட்டு விளங்குமென்றும், அத்திருவருள் விளக்கத்தால் மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகளெல்லாவற்றையும் தவிர்த்து எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவுந் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வை யடைதல் கூடுமென்றும், எங்கள் அறிவில் தேவரீர் திருவருளால் உண்மைப்பட வுணர்த்தியருளப் பெற்றோம்,

எஞ்ஞான்று செய்வோம்:

அவ்வுணர்ச்சியைப் பெற்றது தொடங்கிக் கடவுள் வழிபாடு எஞ்ஞான்று செய்வோம்? கடவுள் திருவருள் விளக்கம் எந்நாளடைவோம்? மரணம், பிணி, மூப்பு, முதலிய அவத்தைகள் எப்போது நீங்கும்? என்று மழியாத பேரின்ப சித்தி எக்காலங் கிடைக்கும்? என்று எண்ணி யெண்ணி வழிதுறை தெரியாமல் வருந்தி நின்ற தருணத்தே.

ஓர் ஞான சபைக் காணுதல்:

களைப்பறிந்துதவுங் கருணைக் கடலாகிய கடவுளே! தேவரீர் நெடுங்காலம் மரண முதலாகிய அவத்தைகளால் துன்பமுற்றுக் களைப்படைந்த உங்களை அவ்வவத்தைகளினின்றும் நீக்கிக் களைப்புங் கலக்கமுந் தவித்து அழியாத பேரின்ப சித்தியை அடைவித்தற் பொருட்டாகவே பூர்வஞான சிதம்பரத்தின் வடபால் பார்வதிபுரமென்று குறிக்கப்படுகின்ற உத்திரஞான சித்திபுரத்தில் யாம் அளவுகடந்த நெடுங்காலம் சித்தியெல்லாம் விளங்கத் திருவருள் நடனம் செய்வோ மென்றும் அது தருணம் மிகவும் அடுத்த சமீபித்த தருண மென்றும், "அப்பதியினிடத்தே யாம் அருள் நடனம் புரிதற்கு அடையளாமாக ஓர் ஞான சபைக் காணுதல் வேண்டு" மென்றும் திருவருட்குறிப்பால் அறிவித்தது மன்றி, அருளுருவாகி எங்களகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாதோர் தடைகளுமின்றி அத்திருஞான சபையையுந் தோன்றி விளங்கச் செய்வித்தருளிய தேவரீர் பெருங்கருணையை கருதுந்தோறும் பெருங்களிப்படைகின்றோம்.

இனி அத்திருஞான சபையை அலங்கரித்தல் வேண்டுமெனக் குறிப்பித்த வண்ணம் அலங்கரிக்க தொடங்குகின்றோம்.

அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!

தேவரீர் அருளுருவாகி எங்கள் அகத்தும் புறத்தும் அமர்ந்தருளி யாங்கள் செய்யும் இவ்வலங்காரத்திருப்பணியில் எவ்விதத்தாலும் யாதொரு தடையும் வாராத வண்ணஞ் செய்வித்து அவ்வலங்காரத் திருப்பணியை முற்றுவித்தருளல் வேண்டும்,

சர்வ வல்லபராகிய தனித்தலைமை கடவுளே!

அத்திருவலங்காரத் திருப்பணி முற்றிய தருணத்தே தேவரீர் அமர்ந்தருளி எங்களையும் இவ்வுலகின் இத்தேகத்தை பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியர்களாக்கி உண்மையறிவை விளக்கி, உண்மையின்பத்தை அளித்து சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை யடைவித்து நித்தியர்களாகி வாழ்வித்தல் வேண்டும்.

எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!

தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!





கருங்குழி

கருங்குழி

விண்வெளியில் தோன்றும் கருங்குழி என்பது பிரம்மாண்டமானது. இப்படத்தில் உள்ள கருங்குழியின் அளவானது 66 கோடி மடங்கு சூரியனைவிட பெரியதாம். கருங்குழியில் நுழைந்தால் அவ்வளவுதான். வெளியே வரமுடியாது. அது ஒரு வழிப்பாதை. மின்காந்த அலைகள் கூட தப்பமுடியாது. அதனுள் என்ன நடக்கின்றது என்பதை அறிந்துக்கொள்ளவே முடியாது. அதன் வழியே செல்லும் எதனையும் உடனே தம்முள் ஈர்த்துக்கொள்ளும் சக்தி உடையதாக உள்ளது. இது விண்வெளியில் இறைவன் நிகழ்த்தும் மகத்துவம்.


          வள்ளற்பெருமானோ மிகச்சாதாரணமாக கருங்குழியில் தங்கி தண்ணீரில் விளக்கேற்றிவிட்டு, அங்குள்ள விநாயகப்பெருமானை பாடிவிட்டு அந்த ஈர்ப்புவிசையை உடைத்துக்கொண்டு வடலூர் வெளிக்கு வந்துவிட்டார். இவ்வுலகில் இன்னுமொரு கருங்குழி இருக்கின்றது. இதனைப் பற்றி வள்ளற்பெருமான் பல இடங்களில் பாடியிருப்பார். விண்வெளியில் உள்ள கருங்குழிப் போன்று ஈர்ப்பு சக்தி இதற்கும் மிகுதியாக உண்டு. எல்லா உயிர்களும் கண்னை மூடிக்கொண்டு விழுகின்ற பாவக்குழி. இதுவும் ஒருவழிப் பாதைதான். உள்ளே சென்றுவிட்டால் மீளுவது முடியாது. இது பூமியில் இறைவன் நிகழ்த்தும் மகத்துவம்.  

“படியின் மாக்களை வீழ்த்தும் படுகுழி
          பாவம் யாவும் பழகுறும் பாழ்ங்குழி
 குடிகொள் நாற்றக் குழிசிறு நீர்தரும்
          கொடிய ஊற்றுக் குழிபுழுக் கொள்குழி
 கடிமலக் குழி ஆகும் கருக்குழிக்

          கள்ள மாதரைக் கண்டு மயங்கினேன்…”

Friday, August 11, 2017

கர்ம வினைகள் இங்கேயும் உண்டோ…?

கர்ம வினைகள் இங்கேயும் உண்டோ…?


நீ நல்லது செய்தால் உனக்கு நல்லது நடக்கும். நீ கெட்டது செய்தால் உனக்கு கெட்டது நடக்கும். கர்மங்களின் பயனை துய்க்கவே உலகம் படைக்கப் பட்டிருக்கின்றது. நல்லது செய்தால் உங்களுக்கு வர்ம் நல்லதைக் கடவுள் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. நீங்கள் கெட்டது செய்தால் உங்களுக்கு அதன் பயனாக உண்டாகும் தீமையைக் கடவுள் தடுத்துவிடப் போவதும் இல்லை. அதனால் கடவுளைப் பற்றி ஏன் அதிகம் கவலைப்பட வேண்டும்?

          இவ்வாறு உபதேசிப்பது பூர்வ வேதமான பூர்வமீமாம்சை ஆகும். இதனை கர்ம வாதிகள் மதம் என்பர். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கணியன் பூங்குன்றனார் வேறு சொல்லிவிட்டு போய்விட்டார். வாழும் மக்காளான நமக்கு ஏகப்பட்ட குழப்பம்.

“நான் இவ்வுலகில் பிறந்ததிலிருந்து யாருக்கும் கெடுதல் செய்ததில்லையே. அப்படியிருக்க எனக்கு ஏன் பிறரால் கெடுதல் ஏற்பட்டது? நான் ஏன் துன்பம் அனுபவிக்க வேண்டும்? கர்ம வினை தத்துவத்தின் படியே இது தவறாக இருக்கின்றதே!” என்று ஒருவன் ஒரு ஞானியிடம் கேட்டால்… அதற்கு அந்த ஞானி, “அப்பா… இப்போது நீ அடையும் துன்பம் சென்ற பிறவியில் நீ பிறருக்குச் செய்த துன்பத்தின் பலனாக அனுபவிப்பது” என்று சொல்லி தப்பித்துக்கொள்கின்றார்.  

அட கர்மமே… சென்ற பிறவியில் நான் யார் என்று எனக்குத் தெரியாது. சென்ற பிறவியில் நான் என்ன செய்தேன் என்றும் எனக்குத்தெரியாது. சென்ற பிறவியில் நான் X – ஆக இருந்திருக்கலாம். இந்தப்பிறவியில் நான் Y – ஆக இருக்கின்றேன். அதனால் X – செய்த வினையினை Y – அனுபவிப்பது எப்படி சரியாகும்… என கர்ம தத்துவத்தை நிந்திக்கின்றான்.

அவன் மீண்டும் அதே ஞானியிடம் சென்றான். “என் பக்கத்து வீட்டுக்காரன் பிறருக்கும் பிற உயிர்களும் கெடுதலே செய்கிறான். ஆனால் அவன் என்னை விட எல்லாவற்றிலும் சுகமாய் வாழ்கின்றானே… அது எப்படி? என்கின்றான். அதற்கும் அந்த ஞானி, “அவன் சென்ற பிறவியில் செய்த புண்ணியம் இப்பிறவியில் அவனுக்கு சுகத்தைக் கொடுக்கின்றது” என்றார்.
         
அவன் சென்ற பிறவியில் Y – ஆக இருந்திருக்கலாம். இந்தப்பிறவியில் X – ஆக இருக்கிறான். சென்ற பிறவியில் Y – செய்த புண்ணியம் இந்தப் பிறவியில் X – க்கு கிடைப்பது எப்படி சரியாகும்… என கர்ம தத்துவத்தை மீண்டும் நிந்திக்கின்றான். (X என்பதும் Y என்பதும் ஒரே ஆன்மாதான். பிறவிதோறும் குணத்தால் வேறுபடுவதை X, Y என்கின்றேன்.)

அவன் கர்ம வினைகளை எதிர்ப்பதற்கு காரணம் இருக்கின்றது. என்ன காரணம்?... சென்ற பிறவியில் X – ஆக இருந்து தீய வினைகளையே அதிகம் செய்தவனான நான், இந்தப் பிறவியிலும் எனது கர்ம வினை காரணமாக X –ஆகத்தானே (தீய குணமுள்ளவனாக) பிறந்திருக்க வேண்டும். ஆனால், நான் எப்படி Y – யாகப் பிறந்து தீயதை நீக்கி நல்லதையே செய்கின்றேன்.

என் பக்கத்து வீட்டுக்காரன் சென்ற பிறவியில் Y – ஆக இருந்து நல்லதையே அதிகம் செய்தவன், கர்ம வினை தத்துவப்படி இந்தப்பிறவியிலும் அவன் Y – ஆகத்தானே பிறந்திருக்க வேண்டும்? மாறாக அவன் இப்பிறவியில் X  - என்னும் தீயவனாக ஏன் மாறவேண்டும்?

இங்கே, அந்த ஞானி சொன்னதற்கு மாறாக கர்மவினைத் தத்துவம் சற்றே தடுமாறுகின்றது என்றறியலாம்.

வள்ளற்பெருமான் இதுபற்றி என்ன கூறுகின்றார்…

“சீவகாருண்ய ஒழுக்கம் மிகவும் வழங்காமையால் துஷ்டப் பிறவிகளே பெருகித் தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன. முன் தேகத்தில் சீவகாருண்யம் இல்லாத பாவ சீவர்கள் எல்லாம் அவரவர் பாவச் செய்கைக்குத் தக்கபடி, சிலர் நரகவாசிகளாகவும், சிலர் சமுத்திரவாசிகளாகவும், சிலர் ஆரண்யவாசிகளாகும், சிலர் காட்டு மிருகங்களாகவும், பட்சிகளாகவும், செந்துக்களாகவும், தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள். ஆதலால் தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன என்று அறியவேண்டும்.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-153) என்று  வள்ளலாரும் கர்ம வினைக்கு ஆதரவாகவே உரைக்கின்றார். ஆனால் சென்ற பிறவியில் X – ஆக இருந்த தீய ஆன்மா அடுத்த பிறவியிலும் X – ஆகத்தான் பிறவி எடுக்கும் என்பதை தெளிவாகக் கூறுகின்றார்.

சென்ற பிறவியில் X –ஆக இருந்து தீய ஒழுக்கங்களை மிகுதியாகச் செய்தவர்கள் இந்தப்பிறவியில் மனிதர்களாகவும் பிறந்திருக்கின்றார்கள். அம்மனிதர்கள் யார் யார்? என்றால், நரகவாசிகள், சமுத்திரவாசிகள், ஆரண்யவாசிகள் என்ற மூன்று பிரிவாகப் பிரிக்கின்றார்.

பிறருக்கு எண்ணம், சொல், செயல்களால் தீங்கு செய்பவர்கள், பிற உயிர்களை கொலை செய்பவர்கள், பிறர் கொலை செய்ய தாம் மறைமுகமாகவோ நேரடியாகவோ காரணமாக இருப்பவர்கள், புலால் உண்பவர்கள் இவர்களெல்லாம் மனித தேகத்தில் உள்ள நரகவாசிகள்.

கடலில் உள்ள உயிரினங்களை வலையிட்டு கொலை செய்து அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தும் மனித தேகத்தவர்கள் சமுத்திரவாசிகள் ஆவர்.

காட்டில் உள்ள விலங்கினங்களை கொன்று அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தும் மனித தேகத்தவர்கள் ஆரண்யவாசிகள் ஆவர். மனித தேகத்தில் இருக்கும் இந்த மூன்று வகையினரையும் “புற இனத்தார்கள்” என்ற ஒரே வட்டத்துக்குள் அடைக்கின்றார் வள்ளலார்.

X – என்னும் தீய ஆன்மாக்கள் இம்மூன்று மனித தேகத்திற்கு அடுத்தபடியாக அஃறினை பிறப்புகளையும் எடுக்கின்றன.  

X -  என்னும் தீய ஆத்மாக்கள் Y – என்னும் நல்ல ஆத்மாவாக பிறக்க முடியாதா? என்றால் முடியவே முடியாது. கர்மவினை தத்துவமானது நல்லவர்களாக பிறக்க விடாது. பிறகெப்படி அவர்கள் மேலேறுவது?

ஆதியில் எல்லா ஆன்மாவும் Y – என்ற நல்ல ஆன்மாவாகத்தான் இருந்தது. நற்செயல்களே செய்தன. ஆனால் அவை எப்படி ஏதோ ஒரு மறுபிறவியில் X – என்னும் தீய பிறவியாக பிறப்பெடுத்தன? கர்மவிதிப்படி முடியாதல்லவா? இதற்கான விடை கண்டுவிட்டால், அந்த விடைக்காண காரணத்தைக் கொண்டுதான், தாம் வந்த வழியே பின்னோக்கி பயணப்பட்டு X – என்னும் தீய ஆன்மாக்கள் தமது ஆதிப் பிறவியான Y – என்னும் நல்ல ஆன்மாவாக மாறமுடியும்.

அது என்ன விடை என பார்ப்போம்…
“கடவுள் அருளால் சிருஷ்டித்த முதல் சிருஷ்டியில் தமது இயற்கை இன்பத்தை அடையும்படி விதித்த விதிகளைப் பழமையாகிய மல வாசனையால் முயற்சி தவறினபடியால்…” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-146) என்ற இந்த வள்ளலாரின் போதனையில்தான் எல்லா ரகசியமும் அடங்கியுள்ளன. இயற்கை இன்பம் என்பது, “எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய மரணமில்லா பெருவாழ்வு” ஆகும். இது இறைவன் காணுகின்ற இன்பமாகும். அந்த இன்பத்தை ஆன்மாக்களாகிய நாமும் பெற வேண்டுமென்ற இறைவனின் கருணையால், இயற்கை என்னும் பிரபஞ்சத்தில் உலகங்களை படைத்து, அவ்வுலகில் எங்கோ மலத்தில் ஊறிக்கொண்டிருந்த ஆன்மாவாகிய நம்மை எல்லாம் ஜீவனாக பிறப்பெடுக்க வைத்தான்.

   மரணமிலா பெருவாழ்வு என்ற பூரண இன்பத்தை பெறுவதற்காக இறைவன் ஒரு விதியையும் விதித்தான். அதுதான் ஜீவகாருண்யம் என்கின்ற விதி. அவ்விதியை அன்றைக்கே நாம் கடைபிடித்திருந்தால், நான் இதனை எழுதத்தேவை இருந்திருக்காது. நீங்களும் இதனை படித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள். நாமெல்லாம் பூரண கடவுள் இன்பத்தில் மிதந்துக்கொண்டிருப்போம். ஆனால், ஏன் இவ்விதியை கடைபிடிக்க வில்லை? என்றால், ஆன்மாக்களாகிய நாமெல்லாம் நமது முதல் பிறப்பிற்கு முன்பு ஆணவம் என்கின்ற மலத்தில் மூழ்கியிருந்தோம். அந்த ஆணவமான மலம் நம்மை முதற்பிறவியிலேயே ஜீவகாருண்ய விதியை கடைபிடிக்கவிடாமல் தடுத்துவிட்டது. நாமும் முயற்சி செய்யாமல் அவ்விதியை அலட்சியப்படுத்தி நமக்குக் கிடைத்த தேகத்தை மரணமடைய வைத்துவிட்டோம். அந்த முதல் மரணம் நமக்கு இதுவரை தொடர்ந்து வந்துக்கொண்டே உள்ளது.

ஆமாம், ஜீவகாருண்ய விதிகளை கடந்த 19-ஆம் நூற்றாண்டில்தானே வள்ளலார் மூலாம் இவ்வுலக உயிர்களுக்கு தெரிய வந்தது…. என்று நீங்கள் கேட்கலாம். நமது முதல் பிறவியிலேயே ஜீவகாருண்ய ஒழுக்க விதியை இறைவன் நமக்கு உணர்த்திவிட்டான். அதனை கடைபிடிக்காமல் நாம் இன்று அலட்சியப்படுத்துவது போல அன்றைக்கும் அலட்சியப்படுத்தி விட்டோம். அதனால் சில பல பிறவிகளிலே… இறைவனின் இன்பமாகிய இயற்கை இன்பத்தை நம்மிடமிருந்து ஆதியிலேயே மறைத்துவிட்டான் ஒரு வல்லவன். அதனால் அவ்விதி தொடர்ந்து பிறவிதோறும் வராமல் தடைபட்டது. அந்த வல்லவன் மறைத்த அந்த விதியை வள்ளலார் வரும்வரை யாரும் அறியவில்ல்லை. அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. அப்பூட்டை உடைக்கவும் ஒருவரும் வரவில்லை. வள்ளலார் வந்தார், அப்பூட்டைத் திறந்தார். கடை விரித்தார்… ஆனால் கடை விரித்ததை கொள்வார் உளரோ? என்றால்… அவருக்கு பிறகும், நாமும் ஆதியின் மல வாசனையை விடாமல் மாண்டுதான் போகின்றோம் என்பதுதான் வருத்தமாக உள்ளது. வம்மின் உலகியலீர்… என்று அவர் இன்றும் அழைத்துக்கொண்டே இருக்கின்றார். சரி காரியத்துக்கு வருவோம்…

இப்போது நமக்கு விடை கிடைத்துவிட்டது. Y – என்னும் நல்ல ஆன்மாக்கள் தாம் பெற்ற ஏதோ ஒரு பிறவியில், நல்ல கர்மங்கள் செய்வதை விடுத்து தீய கர்மங்களை செய்யத் தொடங்கியதன் விளைவாக, Y- ஆகப் பிறந்து X-ஆக பரிமாணம் அடைந்துவிடுகின்றார்கள். தமது அடுத்தப் பிறவியில் X – என்னும் தீய ஆன்மாக்களாக பிறந்துவிடுகின்றார்கள். அவைகளில் மனித தேகத்தை எடுத்த புற இனத்தார்கள் எல்லாம் என்றைக்கு தாம் செய்யும் தீய செயல்களை விடுத்து ஜீவகாருண்ய கர்மங்களை செய்ய முற்படுகிறார்களோ, அன்றே அவ்வான்மாக்கள் X – நிலையிலிருந்து Y – நிலையினை அடைந்துவிடுகின்றார்கள். அவர்களுக்கு அடுத்த பிறவியில் நிச்சயம் Y – என்னும் நல்ல ஆன்ம தேகங்கள் கிடைக்கும். ஜீவகாருண்யம் ஒன்றே புண்ணியம். ஜீவகாருண்யம் இல்லாது செய்யப்படும் அனைத்து செயல்களும் பாவங்களே, என்று அறியும் அறிவை என்று X – ஆன்மாக்கள் அறிந்து செயல்படுகிறார்களோ அன்றோடு அவர்கள் கீழ் நிலையை விட்டுவிட்டு, மேலேறும் வீதியில் வந்துவிட்டார்கள். அவர்கள், தாம் முன்பிருந்த ஆதி நிலையாகிய Y-  ஆன்மாவாக நிகழும் பிறவியிலேயே பரிமாணமடைந்து விடுகிறார்கள்.

X – ஆன்மாக்கள் எவ்வாறு Y – ஆன்மாக்களாக மாறுகின்றன என்பதைக் கண்டோம். அடுத்ததாக, இப்பிறப்பில் Y – ஆன்மாக்களான, நல்லதே செய்யும் ஜீவன்களுக்கு ஏன் பிறரால் துன்பம் வந்து நேரிடுகின்றது? கர்மவினைப்படி நல்லது செய்பவனுக்கு நல்லதுதானே வந்து சேரவேண்டும்!  இக்கருத்தினை சற்று பார்ப்போம்.

 சென்ற பிறவியில் ஏதோ கொஞ்சம் தீய நடத்தையில் ஈடுபட்டிருந்த Y – ஆன்மாக்களுக்கு அதற்கான தீய பலன் இப்பிறவியில் வந்து சேரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் பெரும்பாலும் அந்த அடிப்படையில் துன்பம் வருவதில்லை.

“நான் மிகவும் கஷ்டப்படுகின்றேன், எனக்கு அவசரமாக ஆயிரம் ரூபாய் தேவைப்படுகின்றது. வட்டிக்கு கொடுங்கள் என்று ஒருவர் என்னிடம் கேட்டதால், Y – ஆன்மாவான நானும் இரக்கப்பட்டு, வட்டி எதுவும் வேண்டாம் கைமாற்றாக கொடுக்கின்றேன். இரண்டு மாதம் முடிந்தவுடன் என்னிடம் கொடுத்துவிடு என்று சொல்லி அவனிடம் கொடுத்தேன். அவனும் மகிழ்ச்சியுடன் நன்றி சொல்லி வாங்கிச் சென்றான். இரண்டு மாதம் கழிந்தது, அவனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. எனவே நானே அவன் இல்லம் சென்று எனது ஆயிரம் ரூபாயை எப்போது தருவாய்… என கேட்டதற்கு, பணமா கேட்கிறாய் என என்னை அடித்து அனுப்பிவிட்டான்.

இவ்வாறான நிகழ்ச்சிகள் நடந்தேறிக்கொண்டுதான் உள்ளன. இந்நிகழ்ச்சியில் Y-ஆன்மா நல்லது செய்யபோய், அது அவருக்கே கெட்டதாக முடிந்துவிட்டதே ஏன்? கர்மவினை தத்துவம் பிழையாக உள்ளதே! என்பதுதான் இன்றைக்கு நாம் எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி.

          நல்ல ஆன்மாக்களான நீங்கள் யாருக்கு நல்லது செய்தீர்கள்? என்பதை எண்ணிப் பார்த்தோமோனால்… X- என்னும் தீய ஜீவன்களுக்கு நல்லது செய்திருக்கிறீர்கள் என்பது தெரியவரும். நீங்கள் தீயவர்களுக்கு நல்லதே செய்தாலும், அத்தீயவர்மூலம் உங்களுக்கு எப்படி நல்லது திரும்பக் கிடைக்கும்.

          X – ஆன்மாக்களுக்கு நல்லது செய்யக்கூடாதா? என்றால்… கூடாது என்றே வள்ளலார் போதிக்கின்றார். X – ஆன்மாக்களுக்கு பசி தவிர்த்தல் என்கின்ற உதவியை மட்டுமே செய்ய வேண்டும். மற்றபடி உலகியல் உதவிகள், உறவுகள் என எதுவும் செய்யக்கூடாது என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உரைக்கின்றார்.  

“உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்
          உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்
 பயிர்ப்புறும்ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக
          பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே
 நயப்புறுசன் மார்க்கமவர் அடையளவும் இதுதான்
          நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே…(4160)

புற இனத்தாரெல்லாம் அக இனத்தாராகி சன்மார்க்க வழியில் வரும்வரையில் அவர்களுக்கெல்லாம் பசி தவிர்த்தல் மாத்திரந்தான் செய்ய வேண்டும். மற்ற அறிவுரைகளையோ, நண்பர் என்று அவர்களுக்கு உதவுவதோ எவ்வகையிலும் கூடாது என அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளற்பெருமானுக்கு உரைக்கின்றார்.

          எனவே நாம் புற இனத்தார்களுக்கு உதவிகள் செய்யக்கூடாது. அக இனத்தார்கள் என்றாலும் அவர்கள் சன்மார்க்கிகளா என்று அறிந்து செய்ய வேண்டும். சன்மார்க்கிகள் அல்லாத அக இனத்தாருக்கும் உதவிகள் செய்யதல் கூடாது. அப்படி செய்தால் அவை தீய விளைவுகளையே நமக்கு கொண்டுவந்து கொடுக்கும். இவ்வுலகியல் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்க முடியுமா? என்றால்… வரும் வினைகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கடவுளை குறை சொல்லக்கூடாது.

          அடுத்ததாக X – ஆன்மாவான எனது பக்கத்துவிட்டுக் காரர் அனைவருக்கும் கெடுதலே செய்கின்றார். உயிர்க்கொலையும் செய்கின்றார். புலாலும் உண்கின்றார். ஆனால் அவர் என்னைவிட சுகபோகத்தில் சந்தோஷமாக வாழ்கின்றாரே… அது எப்படி?

          சுக போகங்கள், பணம், பொன், சொத்துக்கள் இவையெல்லாம் தீய வழியில் செல்பவர்களுக்கு மிகச்சீக்கிரம் கிடைத்துவிடும். நல்ல வழியில் செல்பவர்களுக்கு அவ்வளவு எளிதில் இவைகள் கிடைத்துவிடாது. வீதி ஓரங்களில் ஆடு வெட்டும் கசாப்பு கடைக்காரன் ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் நிகர இலாபம் பெற்றுவிடுவான். இது தீய வழியில் வருகின்ற வருமானம். நல்ல வழியில் செல்பவர்கள் ஒரு நாளைக்கு ஐநூறு ரூபாய் வருமானம் ஈட்டுவதே கடினம்.

          தீய வழியில் செல்பவன் கந்துவட்டி, நாள் வட்டி, மாத வட்டி என்று பணத்தைக்கொண்டே மக்களிடம் பணத்தை ஈட்டுவான். நல் வழியில் இருப்பவர்கள் இவ்வாறு செய்ய முடியுமா? இன்றைய அரசியல் வாதிகளின் செயல்களை நல்லவர்கள் யாரேனும் செய்ய முடியுமா? நல்லவர்கள் யாரேனும் அரசியலுக்கு வரத்தான் முடியுமா? மக்கள் தீயவர்களையே அரசியலில் ஆதரிப்பார்கள். ஏனெனில் பெரும்பாண்மையான மக்கள் தீயவர்களாக இருப்பதால். பல அரசு ஊழியர்கள் இலஞ்சம் பெற்று தீய வழியில் சுகபோகங்களை அனுபவிப்பர். ஒரு நல்ல அரசு ஊழியன் அவ்வாறு செய்ய முடியுமா?

          தீயவன் பத்து வீடு வைத்திருக்கின்றான் என்றால், நல்லவனுக்கு ஒரு வீடு போதும். அவன் பத்து கார் வைத்திருக்கின்றான் என்றால், உனக்கு ஒரு கார் போதும், அவன் பத்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கின்றான் என்றால், உனக்கு ஒரு வங்கியில் கணக்கிருந்தால் போதும். அவன் பத்து பொன்டாட்டி வைத்திருக்கின்றான் என்றால், உனக்கு ஒரு பொன்டாட்டி போதும். அவன் பத்து கடவுள்களை வணங்குகின்றான் என்றால், உனக்கு ஒரு கடவுள் போதும். இவ்வாறு நல்ல வழியில் வருகின்ற வருமானமே Y -  என்கின்ற நல்ல ஆன்மாக்களுக்கு போதுமானதாக இருக்கும்.

          தீய காரியங்களால் ஈட்டப்பட்ட செல்வத்தை நல்ல காரியங்களுக்கு செலவிட்டால், அத்தீயவனுக்கு இறையருள் கிட்டாது. உலகியலில் புகழ் வேண்டுமானால் தாராளமாகக் கிடைக்கும். அவையெல்லாம் நீர்க்குமிழி போன்றது, போலியானது.

          இதனைக் கண்டு நல்ல ஆன்மாக்கள் ஏமாந்துவிட வேண்டாம். பொறாமை பட வேண்டாம். தீய வழியில் சென்றுவிட வேண்டாம். தீய வழியில் வருகின்ற சுகபோகங்கள் அவர்களுக்கு நல்லதுபோன்று தெரிந்தாலும், உண்மையில் அது நாகப்பாம்பைப் போன்றது. அழகாக இருக்கின்றதே என்று அதனுடன் விளையாடுவது போன்றது. ஒரு நாள் அதன் விஷத்தை கக்காமல் அவனை விடாது. எனவே தீயவர்கள் அடையும் சுகபோகங்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. எனவே போதும் என்ற மனத்துடன் இருப்பதை வைத்து நமது ஆன்ம மலங்களை போக்க முயலுங்கள். அதற்காகத்தானே நமக்கு பிறவி கொடுக்கப்பட்டுள்ளது. நமது இலக்கு பூரண இன்பமே ஆகும். அதை நாடி செல்லும்போது உலகியல் இன்பங்களை பொருட்படுத்தக்கூடாது. உலகியர்களின் வாழ்க்கையினை ஒப்பிடுவதை விடுத்து, மற்ற அருளாளர்களின் வாழ்க்கையினை ஒப்பிட்டு அவர்கள் சென்ற பாதையில் நல்ல ஆன்மாக்கள் செல்ல வேண்டும்.

          “அருட்சுக மொன்றே அரும்பெறற் பெருஞ்சுகம்
           மருட்சுகம் பிறவென வகுத்த மெய்ச்சுகமே.”

          “அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை
           பொருள்நிலை காணெனப் புகன்ற மெய்ச்சிவமே”

என்று அனைத்துக்கும் பெரிய நிலை என்பது அருள் நிலைதான். பொருள் நிலைகளை எல்லாம் காணக்கூடாது என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் Y – ஆன்மாக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். எனவே பக்கத்து வீட்டுக்காரரை பற்றியெல்லாம் நினைக்காமல் உன் சொந்த வீடு நிலைக்க என்ன வழியோ அதனை மட்டுமே செய்தல் வேண்டும்.
         
          ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடிக்கும் Y – ஆன்மாக்கள் எல்லாம் மரணமில்லா வாழ்வினை, பூரண இன்பத்தைப் பெற்ற Z- ஆன்மாக பரிமாணம் அடைதல் வேண்டும் என்பதே இறைவன் ஆதியில் விதித்த விதியாகும். கர்ம வினைகளை நினைத்து மனம் குழம்ப அவசியம் ஏதிமில்லை. X – மற்றும் Y – ஆன்மாக்கள் வரையில் கர்ம வினைகள் செயல்படும். கடவுள் செயல்பட மாட்டார். Y – ஆன்மாக்கள் என்று ஜீவகாருண்ய விதியை கடைபிடித்து Z – ஆன்மாவாக மாறுகின்றார்களோ அன்றிலிருந்து கர்ம வினைகள் தமது செயல்பாட்டினை நிறுத்திவிடும். கடவுள் செயல்படும் நிலை வரும்.

          “எண்ணிய நான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம்” என்று நாம் எண்ணியதை கொடுக்கக்கூடிய தெய்வமாக, கடவுள் செயல்படும் நிலையில் நமது வாழ்வு வந்துவிடும். எனவே கர்ம வினைகள் சன்மார்க்கிகளை தாக்காது. கடவுள் செயல் மட்டுமே உண்டாம். எல்லாம் அவன் செயல் என்ற எண்ணம் Z – ஆன்மாக்களுக்கே பொருந்தும்.

          சன்மார்க்க அன்பர்களுக்கு நன்றி. ஏதேனும் மனம் புன்படும்படி எழுதியிருப்பின் மன்னிக்கவும். தங்களது கருத்துக்கள் ஏதேனும் இருப்பினும் தெரியப்படுத்தவும். தவறுகள் இருப்பின் திருத்தம் மேற்கொள்ளப்படும். நன்றி. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ இறைவனை வேண்டுகின்றேன்.  

                                            தி.ம.இராமலிங்கம்.