காரணப்பட்டு
ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஆகஸ்ட்-2017
மாதம் வெளியானது…
திராவிடர்களின் மூட நம்பிக்கைகள்
உலகில் மூட நம்பிக்கைகள் இல்லாத சமுதாயமே கிடையாது. இன்றும் கூட மில்லியன்
கணக்கில் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள், டெலிவிஷன் கலைஞர்கள், திரைப்பட நடிகர்
நடிகையர், அரசியல்வாதிகள்— சட்டையின் நிறம், புறப்படும் நேரம், நாள் பற்றி பலவிதமான
நம்பிக்கைகள்– வைத்திருப்பதைப் பத்திரிக்கை பேட்டிகளில் படிக்கலாம். ஆனால் கருணாநிதியாரின்
‘மஞ்சள் துண்டு’ போல இதற்குப் பல விளக்கங்கள் கொடுத்து மழுப்புவர்.
இதோ திராவிடர்களின் பெயரில், வெளிநாட்டினர், பட்டியலிட்ட மூட நம்பிக்கைகள்:–
பழங்குடி மக்களின் ‘புலித்தேவன்’
பழங்குடி இனத்தவர் தாங்கள் புலிகளாகவோ பாம்புகளாகவோ மாறமுடியும் என்று
நம்புகின்றனர். ஆன்மாவில் பாதி மட்டும் வெளியே சென்று மிருக உரு எடுத்து, எதிரியைக்
கொல்ல முடியும் அல்லது ஆடு, மாடுகளைச் சாப்பிட்டு பசியாற்றிக்கொள்ள முடியும் என்று
அவர்கள் நம்புகின்றனர். இப்படி பாதி உயிர் வெளியே போகையில் சோம்பேறியாய் விடுவர் அல்லது
வேலையே செய்யாமல் சோர்ந்துவிடுவர் என்பது அவர்கள் நம்பிக்கை. (இப்படிப் பல புலித் தேவன்
முத்திரைகள் சிந்து வெளியில் கிடைக்கின்றன).
பெண் வந்தால் அபசகுனம்
கோண்ட் இனத்தினர் வேட்டைக்குப் புறப்படும்போது எதிரில் பெண்கள் வந்தால்
அபசகுனம். உடனே வீட்டிற்குப் போய்விட்டு, எல்லாப் பெண்களையும் ம றைந்திருக்கும்படி
சத்தம் கொடுத்துவிட்டு வெளியே வருவர்.
கோண்டு இனப் பெண்
மாதவிலக்கு காலத்தில் அந்த வீட்டிலுள்ள யாரும் வேட்டைக்குப் போக மாட்டார்கள்.
அப்படிப்போனால் ஒரு மிருகமும் சிக்காது என்பது அவர்களுடைய (மூட) நம்பிக்கை!
காகம் நண்பன்!
கோண்ட் இன மக்கள் காகத்தைக் கொல்ல மாட்டார்கள். காகத்தைக் கொன்றால்
ஒரு நண்பனைக் கொன்றதற்குச் சமம்! இதற்கு ஒரு கதை சொல்லுவார்கள். கடவுள் உலகத்தைப் படைத்த
காலத்தில் ஒர் வயதான ஆணும் பெண்ணும் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளுடன் வசித்துவந்தனர்.
கொள்ளை நோய் வந்து ஒருவர் ஒருவர் பின் ஒருவராக ஐந்து பிள்ளைகளும் இறந்தார்கள். பெற்றோர்களோ
மிகவும் வயதானவர்கள்; வறியவர்களும் கூட. ஆகையால் சடலங்களை எடுத்துச் சென்று தகனம் செய்ய
இயலவில்லை. சடலங்களை வீட்டிற்கு அருகிலேயே தூக்கி எறிந்துவிட்டனர்.
ஒரு நாள் இரவில் அவர்களுடைய கனவில் விஷ்ணு தோன்றினார். ஒரு காகத்தைப்
படைப்பதாகவும், அது இறந்தவர்களின் சடலத்தைத் தின்றுவிடும் என்றும் கனவில் சொன்னார்.
ஆகையால் காகங்கள் நண்பர்கள்.
குறவர்கள் திருடப் போவதற்கு முன்னால் சகுனம் பார்ப்பார்கள். ஏழு என்ற
எண் அவர்களுக்குத் துரதிருஷ்டமானது. ஆகையால் ஏழு பேராகச் செல்லமாட்டார்கள். அப்படி
ஏழு பேராகச் செல்ல நேர்ந்தால், கன்னம் வைக்கப் பயன்படும் கருவியை ஒரு ஆளாகக் கருதி
எட்டு பேர் என்று சொல்லிக் கொள்வார்கள். போகும் வழியில் விதவை, பால் பானை, மாடு கத்துதல்
ஆகியாவற்றை அப சகுனமாக கருதுவர். திருமணமாகி வந்தவன், சிறையிலிருந்து வந்தவன் ஆகியோர்
திருட்டுக் கும்பலில் இருக்கக்கூடாதாம்.
குறவர் இனப் பெண்கள் நீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் வித்தை
முதலியன தெரிந்தவர்கள். கணவன்மார்கள் நீண்ட நாட்களுக்குத் திரும்பிவராவிடில்
கெட்ட சகுனம் ஆம். உடனே ஒரு விளக்குமாற்றுக் குச்சியை எடுத்து , அதில் மேலும்
பல குச்சிகளைக் கட்டி எண்ணையில் தோய்த்து தண்ணீரில் மிதக்க விடுவர். அது தண்ணீரில்
மிதந்தால் கவலைப்படத் தேவை இல்லை. மூழ்கிவிட்டால் கணவனைத் தேடி மனைவி புறப்பட்டுவிடுவாள்.
திராவிட மக்களின் அன்றைய மூட வழக்கங்கள் இன்னும் பல உள்ளன. இன்றைய திராவிட
மக்களான நாம் கடைபிடிக்கும் மூட வழக்கங்களும் இப்படிப்பட்டதுதான். சன்மார்க்கத்தை உரைத்ததும்
திராவிடன்தான். சன்மார்க்கத்திற்கு இந்த மூட வழக்கங்கள் தடைகளாக உள்ளன. கண்மூடி வழக்கமெலாம்
மண்மூடிப் போக வேண்டுமென்பது வள்ளலாரின் வாக்கு. அதன்படி அறிவு பூர்வ வழியில் நாம்
நமது வாழ்க்கையினை நடத்துவோம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.