எல்லா
உயிர்களும் இன்புற்று வாழ்க…!!??
(முகநூல் விவாதத்தால்
எழுதப்பட்ட விளக்கம்)
”எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க” என்று நாம் வாழ்த்தும்போது, நாமே பல இன்னல்களுக்கு மத்தியில் இருக்கும்
போது பிற உயிர்களை வாழ்த்துவது என்பது போலித்தனமாகாதா? என்பது கேள்வி.
இதற்கு திரு. Kseija Ed Rian அவர்கள், “அட
முட்டாளே… முட்டாளே… எல்லா உயிரும் என்று சொன்னால் நீயும் சேர்ந்துதானே… என்றும், தனக்காக
மட்டும் பிரார்த்தனை பண்ணாமல் அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து பண்ணவேண்டும். அதில்
நீயும் அடக்கம் என்று வள்ளலார் உரைக்கவில்லையா?... என்றும் எம்மை கேட்கிறார்.
இதற்கான விளக்கத்தை பகுதி பகுதியாக அளிக்கின்றேன்.
விளக்கத்தில் தவறு கண்டால் திரு.Kseija Ed Rian அவர்களிடமிருந்து பதில் விளக்கத்தை
பெற விரும்புகின்றேன்.
பகுதி
1:
வள்ளற்பெருமான் “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்று ஒரு முறையேனும் வாழ்த்தியது
கிடையாது. செய்யுள் மற்றும் உரைநடைப் பகுதியை முழுதும் படித்தவர்களுக்கு இது தெரியும்.
பிறகு ஏன் சன்மார்க்க சங்களில் இவ்வாறு வாழ்த்துகின்றோம்?...
“எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க… வள்ளல்
மலரடி வாழ்க வாழ்க…” இந்த வாழ்த்துதலை சற்று கவனிக்கவும். திரு.Kseija Ed Rian சொல்வதுபோல
“எல்லா உயிர்களும்” என்றால் அதில் வள்ளலாரின் உயிரும் அடங்கிவிடுகின்றது. பிறகு ஏன்
தனியாக வள்ளல் மலரடியை மீண்டும் வாழ்க வாழ்க என்று வாழ்த்த வேண்டும்.
“இருளான மலம்அறுத் திகபரங் கண்டே
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழிதுறை
தெரியாமல் மண்மூடிப் போகத்
தெருளான சுத்தசன் மார்க்கம தொன்றே
சிறந்து
விளங்கஓர் சிற்சபை காட்டும்
அருளான வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ்
ஜோதிஎன் ஆண்டவர் நீரே. (4653)
மேற்காணும்
பாடலில் இரண்டாம் அடியிலிருந்துதான் நாம் தற்போது வாழ்த்துகின்ற “எல்லா உயிர்களும்
இன்புற்று வாழ்க” என்ற பதங்களை நாம் எடுத்து கையாள்கிறோம். ஆனால் இங்கே வள்ளலார் “வாழ்க”
என்று எல்லா உயிர்களையும் வாழ்த்தவில்லை என்பதை இலக்கணம் அறிந்தவர்கள் அறிவார்கள்.
“வாழ…” என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகின்றார். வாழ என்ற சொல் தொக்கி நிற்கின்றது.
அதற்கு பிறகு ஏதோ சொல்ல வருகின்றார். வாழ்க என்றால் அவ்வாக்கியம் அத்தோடு முடிவடைந்துவிடும்.
வாழ்க என்பது வியங்கோள் வினைமுற்று. வாழ என்பது நிகழ்கால வெனையெச்சம்.
எனவே வள்ளலார் ஒருபோதும் வாழ்க என்று வாழ்த்தவில்லை
என்பதை நினைவில் கொள்க. ஆணவம், கன்மம், மாயை என்கின்ற இருளான மலங்களை அறுத்து இம்மை
மற்றும் மறுமை இன்பங்களைக் கொடுத்து எல்லா உயிர்களும் இன்புற்று வாழும்படி….. என்னை
அருளான வீதியில் ஆடச்செய்தீரே! என்று இறைவனிடம் தனக்கிட்ட பணியினை நன்றியுடன் நினைவுகூர்கின்றார்
அவ்வளவுதான். அந்தப் பணியினை அவர் செய்தாரா? இல்லையா? எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கின்றதா?
இல்லையா? என்பதற்கெல்லாம் இப்பாடலில் விளக்கம் இல்லை.
ஒரு முதலாளி தமது நிறுவனத்தில் ஒரு கணக்காளரை
வேலைக்கு அமர்த்துகின்றார். அந்த கணக்காளர் தமது முதலாளியை புகழ்ந்து ஒரு பாடல் எழுதுகின்றார்…
“வறுமை யொழிந்து மனைமக்கள் பெற்று
எல்லா ஊழியரும் சம்பளம் பெற…
…. என்னை வேலைக்கு அமர்த்திய முதலாளியே.
என்று பாடுகின்றார்.
எல்லா ஊழியர்களுக்கும் சம்பளம் பட்டுவாடா செய்வதற்காக என்னை வேலைக்கு அமர்த்திய முதலாளியே…
என்றுதான் இதற்கு பொருள். அவன் எல்லோருக்கும் சம்பளம் வழங்கினானா? வறுமை ஒழிந்ததா?
மனை மக்கள் பெற்றார்களா? என்ற செய்தியெல்லாம் இதில் கிடையாது. ஆனால்… நாம் என்ன செய்துவிட்டோம்.
அந்த கணக்காளர் “எல்லா ஊழியர்களும் சம்பளம் பெறுக” என்று வாழ்த்தியதாக எடுத்துக்கொண்டோம்.
யார் சம்பளத்தை யார் கொடுத்து வாழ்த்துவது!? முதலாளி சண்டைக்கு வந்துவிட மாட்டானா?
இது தவறல்லவா? வள்ளற்பெருமான் இதுதெரிந்துதான் அப்படி ஒரு வாழ்த்தை பதிவு செய்யவில்லை
என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
எனினும் அந்த கணக்காளர் திடீரென அவரது முதலாளிக்கு
நெருங்கிய சொந்தமாகிவிடுகின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்நிலையில் தமது முதலாளிக்கு
பதிலாக தாமே மற்ற ஊழியர்களை எல்லாம் வாழ்த்தலாம் அல்லவா? அவ்வாறுதான் வள்ளற்பெருமான்
தனது மும்மலங்களையும் போக்கி, இம்மை மறுமை
இன்பமும் பெற்று இறைவனுடன் தானும் ஒன்றாகியதால் அவர் வேண்டுமாகில் அவ்வாறு வாழ்த்தலாம்.
சன்மார்க்க சங்கங்களில் இவ்வாழ்த்தினை சொல்லும்போது, வள்ளற்பெருமான் வாழ்த்துவதாகவே
நினைத்துதான் நாம் சொல்லவேண்டும். நாம் வாழ்த்துவதாக எண்ணுதல் கூடாது. அவ்வாறு வாழ்த்தினால்
அது போலியான வாழ்த்தாகவே அமையும்.
ஏனெனில் வாழ்த்து என்பது ஒருவர் தனித்திருந்து
மற்றவரையோ மற்றவர்களையோ வாழ்த்துவதாகும். தம்மைத்தாமே அக்கூட்டத்தில் நின்றுகொண்டு
கோவிந்தா போடுவதுபோல வாழ்த்திக்கொள்ளக்கூடாது. வாழ்த்திவிட்டு நான் உங்கள் எல்லோரையும்
வாழ்த்திவிட்டேன், நானும் இக்கூட்டத்தில் இருப்பதால் எனக்கு நானே வாழ்த்தினையும் பெற்றுக்கொண்டேன்
என்று சொல்லலாகுமா? வாழ்த்து என்பது ஒருவர் வாழ்த்த ஒருவரோ அல்லது பலரோ பெறுவதாகும்.
மேலும் வாழ்த்து வழங்குபவர் வாழ்த்தினை பெறுபவரைவிட ஏதேனும் ஒன்றிலாவது மேலானவராக இருத்தல்
வேண்டும். வயதிலோ, அறிவிலோ, பொருளிலோ, அதிகாரத்திலோ மேம்பட்டவராக இருக்க வேண்டும்.
அல்லது ஒத்தோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது வாழ்த்து என கொள்ளப்படும்.
நாம் என்ன பிற உயிர்களைவிட மேலானவர்களா?
பிற உயிர்கள் எல்லாம் எவ்வாறு இன்ப துன்பங்கள் அடைகின்றனவோ அவ்வாறே நாமும் அடைகின்றோம்.
அந்நிலையில் நாம் எப்படி எல்லா உயிர்களையும் வாழ்த்த முடியும். வாழ்த்துவதற்கு நமக்கு
என்ன தகுதி இருக்கின்றது? மும்மலங்களை அறுத்துவிட்டோமா?, இம்மை, மறுமை இன்பங்களை பெற்றுவிட்டோமா?,
சன்மார்க்க சித்திகளை பெற்றுவிட்டோமா? எல்லா உயிர்களும் என்னுயிர் ஆயின என்ற நிலையினை
பெற்றுவிட்டோமா? (எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணுதல் வேறு… தம்முயிராய் ஆதல் வேறு…)
இல்லையே… எனவே நாம் வாழ்த்துகின்றோம் என்று நினைத்து வாழ்த்தினால் அது போலியே. இந்த
இன்பங்களை எல்லாம் பெற்ற வள்ளலார் அவ்வாறு வாழ்த்துகின்றார் என்று நினைத்து அவ்வாழ்த்தினை
சொல்வதே சரியான ஒன்றாகும்.
திருவருட்பாவில் வள்ளலார் இறைவனை வாழ்த்துகின்றார்
(இருவரும் ஒத்த நிலையில் இருப்பதால்). இறைவன் வள்ளலாரை வாழ்த்துகின்றார் (அது இயல்பு).
ஓரிடத்தில் மட்டும் “எல்லா உலகமும் வாழ்க” (3560) என்று வாழ்த்துகின்றார் (எல்லா உலகமும்
என்வசமாயின… என்பதால்).
எனவே ஒருவர் வாழ்த்தும்போது, வாழ்த்து பெறுபவர்களில்
தானும் ஒன்றாதல் நடைபெறாத ஒன்று. வாழ்த்து பெறுபவர்களும், வாழ்த்துபவர்களும் வேறுபட்டே
நிற்க முடியும். இதற்கான மறுப்புரை இருந்தால் திரு.Kseija Ed Rian அவர்கள் கூறலாம்.
பகுதி 2: பிரார்த்தனையும்
வாழ்த்துதலும் வெவ்வேறானவை. நாம் மேலே கண்டதுபோல வாழ்த்து என்பது ஒருவர் கொடுக்க ஒருவர்
பெறுவது. பிரார்த்தனை என்பது ஒருவர் ஏதேனும் ஒன்றினை பிறிதோர் நபரிடமிருந்து பெறுவதற்காக
அவரிடம் வேண்டுவது.
ஒருவர் மேலதிகாரியிடம், “எங்கள் கிராமத்துக்கு
தண்ணீர் வசதி செய்து தருமாறு அன்புடன் தங்களை வேண்டுகின்றோம்” என்று மனு அளிப்பார்.
இது வேண்டுதல். வாழ்த்துதல் அல்ல. “எங்கள் கிராமத்துக்கு தண்ணீர் வசதி செய்துதருமாறு
தங்களை வாழ்த்துகிறோம்” என்று எழுத முடியுமா? எங்கள் கிராமத்துக்கு என்று சொல்லிவிட்டதால்
அதில் மனுதாரரும் அவ்வூர்காரர்கள் அனைவரும் அடங்கிவிட்டனர். எனவே அந்த மனுதாரர், “எனது
கிராமத்தில் எனக்கு தண்ணீர் வசதி செய்துதருமாறு வேண்டுகின்றேன்” என்று தனக்கு மட்டுமே
வேண்டி மனு எழுதுதல் முட்டாள்தனமாக இருக்கும்.
இப்படிப்பட்ட முட்டாள் தனத்தைத்தான் வள்ளலார்
செய்யக்கூடாது என்றார். “ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல.
இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில்
ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான்
செய்ய வேண்டும்.” இதுதான் சுத்த சன்மார்க்க வேண்டுதலாக வள்ளலார் குறிப்பிடுகின்றார்.
இந்த வேண்டுதலில் நான் தவறேதும் கூறவில்லை. திரு.Kseija Ed Rian அவர்கள் வேண்டுதலையும்
வாழ்த்துதலையும் ஒன்றென நினைத்து விட்டார்.
“எல்லா
உயிர்களும் இன்புற்று வாழ நான் இறைவனிடம் வேண்டுகிறேன்” என்பதுதான் சுத்த சன்மார்க்க
வேண்டுதல். ஏனெனில் எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை அதனை
வழிநடத்தும் இறைவன்தான் தீர்மானிக்க வேண்டும். நாம் அவனிடம் வேண்டுதலை மட்டுமே வைக்கமுடியும்.
நாமே “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்று வாழ்த்திவிட்டு அந்த வாழ்த்தில் நானும்
இருக்கின்றேன் என்பதுதான் முட்டாள்தனம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எதுவும் இல்லாமல் இருக்கும் பிச்சைகாரன்
நாம் தானம் செய்யும்போது நம்மை வாழ்த்தவில்லையா? இப்படி ஒரு கேள்வி. பிச்சைகாரர் நம்மை
விட வயதில் மூத்தவராக இருந்து வாழ்த்தினால் நல்லது. அதுவே தானம் கொடுத்தால் தான் வாழ்த்துவார்கள்.
இல்லை எனில் நாம் சென்றவுடன் பின்புறம் வசைபாடுபவர்களும் இருக்கின்றார்கள். பொதுவாக
பிச்சைகாரர்கள் மற்றவர்களிடம் பொருள் வேண்டி, அது கிடைத்தால் மட்டுமே வாழ்த்துவார்கள்.
இது ஒருவகையில் வேண்டுதல் என்ற பதத்தினையே குறிக்கும். பிச்சைகாரர்கள் நம்மை வாழ்த்த
வேண்டும் என்பதல்ல. அவர்கள் நாம் இடுகின்ற தானத்தைக் கொண்டு மனதுக்குள் திருப்தி அடைந்தாலே…
அது ஜீவகாருண்ய பலனை நமக்குக் கொடுக்கும்.
சன்மார்க்கர் திரு.V.Kumaresh அவர்கள் மட்டுமே
மிகச்சரியான பதிலை அளித்துள்ளார்கள். அவ்வன்பர்க்கு இறையருள் மேலும் மேலும் கிட்ட வேண்டுகின்றேன்.
திரு.Kseija Ed Rian அவர்கள் மேற்காணும் இரண்டு
பகுதிகளின் மறுப்புறையை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். மற்ற எனதருமை சன்மார்க்க
அன்பர்களும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகின்றேன். யார் மனத்தையாவது புன்படி எழுதியிருப்பின்
மன்னிக்கவும். நன்றி.
--- தி.ம.இராமலிங்கம்
This comment has been removed by the author.
ReplyDeleteமிகவும் அருமை.
ReplyDeletehttps://valavan-teentonic.blogspot.com
மிகவும் நன்றி திரு.T.Thirumavalavan ஐயா அவர்களே.
ReplyDeleteஇந்த நோக்கு சிறப்பானதாக இருக்கிறது.
ReplyDeleteஆனால் திருவாசகத்தில் மணிவாசகர் தன் முதல் வரியில் ' நமச்சிவாய வாழ்க' என்று இறைவனின் திருவைந்தெழுத்தை வாழ்த்துகிறாரே.
இந்த வார்த்தையை மேற்சொன்ன கருத்தோடு ஒன்றி பார்த்தால் கருத்து வேறுபாடு உள்ளது போல் உணர்கிறது. தெளிவு செய்யவேண்டுகிறேன்.
நன்றி ஐயா... தங்களது கருத்தை உள்நோக்கி விரைவில் பதிகின்றேன்.
Deleteவந்தனம் ஐயா, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க இதில் பொருள் இருக்கின்றதா இல்லையா என்பதை தூர வைத்துவிட்டு,, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று நாம் உச்சரிக்கும் பொழுது அந்த வார்த்தைகளின் அதிர்வலைகள் நமக்கு நன்மை தரும் என்பதை ஏன் நாம் ஏற்றுக்கொள்ள கூடாது,, உச்சரிக்க கூடாது !?
ReplyDelete