Sunday, August 6, 2017

வள்ளலாரின் முதல் மாணாக்கர்

வள்ளலாரின் முதல் மாணாக்கர்



"சென்னையிலிருந்த வித்வான் தொழுவூர் வேலாயுத முதலியார் கடுந் தமிழாக நூறுபாட்டுச் சிலேடையாகப்பாடி, பழைய ஏட்டில் எழுதி யிருந்ததாகச் சங்கச்செய்யுளென்று வள்ளலாரிடம் காட்டவே, அதைக்கொண்டு பிள்ளைப் பெருமான் 'இது கற்றுக்குட்டிப் பாட்டு சங்கப்பாட்டல்ல; சங்கப்பாட்டாயிருந்தால் இவ்வளவு குற்றமிராதென்று கருணையினால் தொழுவூர்-முதலியார்க்குப் பக்குவம் வருவிக்கும் நிமித்தம் கட்டளையிடவே, இதுவரையும் நேரில் பழகாதிருந்த தொழுவூர் முதலியார் அன்று முதல் அடிமை பூண்டு இலக்கண இலக்கிய சித்தாந்த நுண்பொருளும் வடமொழி நூல்களும் கற்றுத்துறைபோய நாவலரேறாக விளங்கினர். மாணவர் திறத்தை நோக்கி வள்ளலார் உபயகலாநிதிப் பெரும் புலவர் எனும் பட்டம் அருளினதோடு முருகரை உபாசிக்க சடாசஷர மந்திரமும் உபதேசித்தருளினார்.” (பிரபந்தத்திரட்டு – பக்கம்-64)

        நமது வள்ளற்பெருமானின் பல்முக ஆற்றலில் ஒன்றாக “போதக ஆசிரியர்” (அறிவுரையாளர்) என்ற நிலையில் அவரது செயல்பாட்டினை மிகச்சுருக்கமாக இங்கே மேற்படி எடுத்துக்காட்டி இருக்கின்றார் அவரது அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள்.

          அக்காலங்களில் அருளாளர்கள் என்று போற்றக்கூடிய தமிழர்கள் எல்லோரும் மரபு வழிச் செய்யுளை இயற்றி தமிழையும் இறை கருத்துக்களையும் வளர்த்தார்கள். மரபு வழி செய்யுள் இயற்றியவர்கள் எல்லோரும் அருளாளர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் அருளாளர்கள் / ஞானிகள் என்று சமூகத்தில் பெயரெடுத்தவர்கள் அனைவரும் மரபு வழியான இலக்கணத்துடன் தமிழ்ச் செய்யுள் இயற்றும் ஆற்றலை பெற்றிருந்தனர். எடுத்துக்காட்டாக தமிழ் சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் இவர்கள் முதற்கொண்டு வள்ளற்பெருமான் வரை சொல்லலாம். வள்ளற்பெருமானுக்கு அடுத்து தமிழில் மரபு பாக்களை இயற்றியும் அருளாளராகவும் இருந்த ஒருவரை தமிழகம் இதுவரை பார்க்கவில்லை.

          அவ்வகையில் வள்ளற்பெருமான் என்கின்ற அருளாளர் தமிழ் பாக்களை மரபு வழி இலக்கணத்தோடு அருளி வந்த நேரத்தில், சென்னையில் வாழ்ந்த தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்கள் 1849-ஆம் ஆண்டு (வள்ளலாருக்கு வயது 26 – தொழுவூராருக்கு வயது 17) வள்ளற்பெருமானை முதன்முதல் பார்க்கச் செல்கின்றார். அடிப்படைக் கல்விகூட கற்காத ஒருவர் தமிழ் இலக்கணத்தோடு பாடல்களை இயற்றி, அப்பாடல்கள் எல்லாம் கோயில்களில் பாடும் அளவிற்கு பிரபலமாகிவிட்டதே! இது எப்படி முடியும்? அவர் உண்மையிலேயே புலவர்தானா? அருளாளர்தானா? என்று சோதிக்க தொழுவூரார் வள்ளலாரை நோக்கி பயணப்படுகின்றார். இருவரும் சென்னையில் இருப்பதால் சந்திப்பு விரைவில் நடந்தேறுகின்றது.

          சந்திக்க செல்பவரும் தமிழ் இலக்கணங்களை முறையாகக் கற்றவர். மரபுக்கவி இயற்றும் ஆற்றலுடையவர். எனவே வள்ளலாரை சோதிக்க தாமே நூறு பாடல்களை சிலேடையாக இயற்றி அதனை பழைய நோட்டு புத்தகத்தில் எழுதிச் சென்று அதனை வள்ளற்பெருமானிடம் காண்பித்து, இது சங்கப்பாடல் என்றும் இதனை படித்து பொருள் கூறவும் என்று விண்ணப்பிக்கின்றார்.

          சிலேடை பாடல்களை அவ்வளவு எளிதாக இயற்றிவிட முடியாது. ஒரு சொல் அல்லது சொற்றொடர் பல பொருள்படும்படியாகக் கொண்டு பாடுவது சிலேடையாகும். தொழுவூர் வேலாயுதம் முதலியார் வள்ளலாரிடம் காண்பித்த அந்த நூறு சிலேடை பாடல்களும் இன்று நமக்கு கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அஃது அருமையாக இருந்திருக்கும். எனினும் சிலேடை பாடல் என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வருவது கவி காளமேகம் புலவரைத்தான்.

          “கட்டித் தழுவுவதால் கால்சேர ஏறுவதால்
           எட்டிப் பன்னாடை இழுத்தலால் – முட்டப்போய்
           ஆசைவாய்க் கள்ளை அருந்துதலால் அப்பனையும்
           வேசையென லாமே விரைந்து.”

என்ற பாடலில் சிலேடை சொல்லாட்சியைக்கொண்டு காளமேகம் கவி இயற்றியுள்ளார். இப்பாடலை விளக்கினால் பாலியல் நூல் படிப்பது போன்று ஆகிவிடும். எனவே சுருக்கமாக சொன்னால், பனை மரமும் வேசிப்பெண்ணும் ஒன்று என்பதை சிலேடையாகப் பாடியுள்ளார். காலிரண்டு சேர்த்துக்கொண்டு கட்டித்தழுவி பனை மரத்தில் ஏறி உச்சியில் பன்னாடையை இழுத்து அங்குள்ள கள்ளை முட்டிக்கொண்டு அருந்துவது எப்படி உள்ளதோ அதே போல வேசிப் பெண்ணிடமும் ஒருவன் மது அருந்துவான் என விரைந்து சொல்லலாம். இதுபோல 24 சிலேடை பாடல்களை காளமேகப் புலவர் பாடியிருக்கின்றார்.  

          இவ்வாறான சிலேடை பாடல்கள் நூறினையும் வள்ளற்பெருமான் அப்படியே புரட்டிப்பார்க்கின்றார். அச்சமயம் அவருக்கும் கவி காளமேகத்தின் ஞாபகம் நிச்சயம் வந்திருக்கும்.  காளமேக புலவர் வசை பாடுவதில் வல்லவர் என்பதையும் வள்ளலார் அறிந்திருப்பார். நீங்கள் அறிய வேண்டாமா…?

          ஒரு முறை குடந்தை என்னும் நகரத்தில் உள்ள சத்திரத்தில் காளமேகம் உணவருந்திக் கொண்டிருந்தார். அவருக்கு அருகில் ஒரு பிராமணனும் உணவருந்திக்கொண்டிருந்தார். அப்போது பிராமணின் குடுமி அவிழ்ந்து அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்த இலையில் விழுதுவிட்டது. உடனே பிராமணன் குடுமியை எடுத்து உதற, அருகில் உணவருந்திக் கொண்டிருந்த காளமேகத்தின் இலையில் அந்தக் குடுமியில் இருந்த சோற்றுப் பருக்கைகள் விழ, காளமேகத்திற்கு கோபம் தலைக்கேறி அந்த பிராமணனை வசை பாடினார்.

          “சுருக்குஅவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்
           பொருக்கு உலர்ந்த வாயா! புலையா! – திருக்குடந்தைக்
           கோட்டானே! நாயே! குரங்கே!  உனைஒருத்தி
           போட்டாளே வேலையற்றுப் போய்!”

என்ற காளமேகத்தின் வசை பாடல் வள்ளலாருக்கும் ஞாபகம் வந்திருக்க வேண்டும். காளமேகத்தைப்போல வள்ளலாரும் தொழுவூராரை அதே சிலேடையாக ஒரு வசை பாடியிருக்கலாம். ஏனெனில் தொழுவூராரால் எழுதிக் கொண்டுவரப்பட்ட சிலேடை பாடலை படித்தவுடனே அது சங்கப்பாடல்கள் அல்ல என்பதை கண்டுபிடித்துவிட்டார். இவன் நம்மை சோதிக்கவே இப்படியொரு நாடகம் ஆடுகின்றான் என்பதை கண்டுகொண்டார்.

“வேலாயுதத்தால் பாடும் என்னிடம் குரங்கு
 வாலாக நீட்டியது சங்கநூலோ – காலாஉனை
 மிதித்திடுவேன் வேலாயுதம் என்றே உனை
 மதித்திட்டேன் மண்டு மண்டு.”

முருகப்பெருமானால் பாடும் திறம் பெற்ற என்னிடமே வந்து குரங்கு வால் நீட்டியது போல இந்த நூலைக் கொடுத்து சங்க நூல் என்பதோ? எமனே உன்னை மிதித்திடுவேன். வேலாயுதம் என்கின்ற எமது இறைவன் பெயரைக் கொண்டதால் உன்னை மதித்து விடுகின்றேன்… என்று தனக்கே உரிய குணத்தால் சினத்தை பொறுத்துக்கொண்டு… மண்டு … மண்டு… (மூடனே… மூடனே…) எனச் செல்லமாக, “வேலாயுதம் என்கின்ற பாலகனே… இந்தப் பாடல்கள் சங்கப்பாடல்கள் அல்ல. சங்கப்பாடல்கள் எனில் இவ்வளவு குற்றங்கள் இருக்காது. இது கற்றுக்குட்டி பாட்டு…” என்று உணர்ந்து சொன்னார்.

          கல்வி அறிவு இல்லாத வள்ளற்பெருமான் எப்படியும் நான் எழுதிய இந்த பாடல்களைக் கண்டு, இது சங்கப்பாடல்தான் என்று ஒப்புக்கொண்டு விடுவார். நாம் அவரை வசமாக நமது வலையில் வீழ்த்தி, உலகிற்கு இவர் ஒரு மகான் அல்ல என்பதை அறிவித்து விடுவோம். இவரின் முகமூடியை கிழித்து எறிந்துவிடுவோம்… என்றெல்லாம் நினைத்து வந்த தொழுவூராருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. உண்மையில் இவர் ஒரு மகான்தான் என்பதை உணர்ந்தார். வள்ளற்பெருமானின் கருணை தொழுவூராரை அவர்பால் கவர்ந்தது. இதுவரை அவரை நேரில் பார்த்தறியாத தொழுவூரார் அன்று முதல் வள்ளற்பெருமானுக்கு அடிமையானார். அவருக்கு முருகப்பெருமானை வணங்க ஆறெழுத்து மந்திரத்தை உபதேசித்து அருளினார்.   

          வள்ளற்பெருமானின் பாடல்களால் பொறாமை பட்டு அவரிடம் நேரடியாக மோதியவர்கள் இருவர். ஒருவர் அவரின் அடிமையானார். இன்னொருவர் அவரை வழக்காடு மன்றத்திற்கு இழுத்தார். அடிமையானவர் தொழுவூரார். வழக்கு போட்டவர் நாவலர்.

          அதன் பிறகு தொழுவூர் வேலாயுத முதலியார் வள்ளலாரின் முதல் மாணாக்கர் ஆனார். கவி பாடுவதில் தேர்ந்தார். வடமொழி நூல்களிலும் புலமை கொண்டார். நாவலரேறு என்று பிறரால் புகழக்கூடியவராய் விளங்கினார். தமது முதல் மாணவனின் திறத்தை வியந்து “உபயகலாநிதிப் பெரும் புலவர்” என்னும் பட்டத்தை வள்ளற்பெருமான் அவருக்கு சூட்டினார்.


          --- தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.