Saturday, August 5, 2017

தரிசனம்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஆகஸ்ட்-2017 மாதம் வெளியானது…



தரிசனம்

நாம் தினமும் கண்ணால் காணும் காட்சிகள் எல்லாமே தரிசனம்தான். அப்படி பார்க்கிற காட்சிகள் நமக்குள் உண்டாக்குகிற எதிர்வினைகளையே உணர்வுகள் என்று சொல்கிறோம். நமக்குள் உண்டாகிற அந்த உணர்வுகளை பார்க்க முடியாது, ஆனால் உணர்கிறோம். அப்படி உணர்வதும் கூட ஒரு வகை தரிசனம்தான். பார்க்க முடிகிறவைகளை புற தரிசனம் என்றும், உணர முடிகிறவைகளை அக தரிசனம் என்றும் இரண்டு நிலையாக கூறலாம்.

          ஒரு வகையில் பார்த்தால் நாம் பிறக்கின்ற கணம் தொடங்கி இறுதி மூச்சுவரையில் இந்த வாழ்க்கை பயணமே ஒரு தரிசனம்தான். தரிசனங்களின் ஊடான இந்த வாழ்க்கையில் நாம் இதுவரை அறியாமல் இருக்கின்ற அற்புதமான சில அக தரிசனங்களைப் பற்றி சித்தர்கள் கூறுவதை பார்ப்போம்.

          சித்தரியலில் குருவினை கண்டறிவதே முதலாவது தரிசனம் ஆகும். இப்படி துவங்கும் தரிசனமானது ஜீவசமாதி என்கிற பிறவா பேரின்ப முத்தி நிலை வரையில் பல்வேறு தரிசனங்களின் ஊடாக பயணிக்கின்றது. நாம் முன்னர் சொன்ன அக தரிசனமே சித்தரியலில் தரிசனமாக குறிப்பிடப்படுகின்றது. இவற்றை உள்ளொளியாக மட்டுமே தரிசிக்க முடியும்.

இந்த தரிசனங்கள் யாருக்கு வாய்க்கும்? ஆர்வமும், முனைப்பும், உழைப்பும் உள்ள எவருக்கும் வாய்க்கக் கூடியவை இந்த தரிசனங்கள். அவரவர்களின் முயற்சிக்கேற்ப இந்த தரிசனங்கள்         அமையும். ஒவ்வொரு தரிசனமும் இப்படித்தான் அமையும் என்று வரையறுத்து சொல்ல முடியாது என்றும் அவை அனுபவித்தே உணர வேண்டியவை என சித்தர் பாடல்களில் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

இந்த தரிசனங்களைப் பற்றி அகத்தியர், போகர், திருமூலர் போன்ற வெகு சிலரே குறிப்பிட்டிருக்கின்றனர். இதில் இருந்தே இவற்றின் மகத்துவத்தை நாம் உணர்ந்திட முடியும். இந்த மூவரில் அகத்தியரே இவற்றை விரிவாக விளக்கி இருக்கின்றார். அகத்தியர் 12000 என்ற நூலில் தரிசனங்களின் படி நிலைகள் பற்றிய குறிப்புகள் விரிவாகவே கூறப்பட்டிருக்கின்றது.

கடவுள் தரிசனம் எப்படி இருக்கும்? கடவுளின் உருவம் இப்படியானதுதான் என யாராவது உறுதியாக சொல்லியிருக்கின்றார்களா? சிற்பிகளின் கற்பனை மற்றும் ஓவியர்களின் ரசனை வழியேதான் நாம் கடவுளை கண்டிருக்கின்றோம். அதைத்தான் கடவுள் என நம்மில் பலர் நம்பிக்கொண்டிருக்கின்றோம். உண்மையில் கடவுள் தரிசனம் எப்படியிருக்கும்? அவரின் அங்க லட்சணம் என்ன? இந்த கேள்விகளுக்கு அநேக பதில்களை நம் முன்னோர்கள் விட்டுச்சென்றுள்ளனர். ஆனால் அவை எல்லாம் வெகுசன வெளியில் விரிவாக சொல்லப்படவில்லை. நாமும் நம்மை ஒத்த உருவத்தில் கடவுளை ஏற்றுக்கொண்டு விட்டோம்.

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லாது அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே.

என்று நம்மாழ்வார் பாடுவார். ஆணுமில்லை, பெண்ணுமில்லை, அலியுமில்லை, பார்க்கவும் முடியாது, இருக்கிறதுமில்லை, இல்லாததுவுமில்லை, விரும்பியவர் விரும்பிய வடிவத்தை உடையவன் அல்லது அப்படி இல்லாமலிருப்பவன் என்று நம்மாழ்வார் கடவுளின் தரிசனத்தை பற்றி கூறுகின்றார். கொஞ்சம் குழப்பமாய் உள்ளதல்லவா. ஆனால் இதுதான் சத்தியமான வார்த்தை. இதோ அகத்தியர் கூறுகின்ற தரிசனங்கள் நமக்கு எப்போது கிட்டும்?

“மாண்டு சடம் போகாமல் தெளிவதெப்போ
மகத்தாலான அறிவதிலே வாழ்வதெப்போ
பூண்டுகொண்ட ஆசையது ஒழிவதெப்போ
பொல்லாத மாய்கைவிட்டு நிற்பவதெப்போ
ஆண்டுகொண்ட காமவலை அறுப்பதெப்போ
அலைச்சலற்று நிற்பதெப்போ அய்யா அய்யா
தாண்டியந்த நிலையதிலே மனதைநாட்டி
சதான்நத போதமாக தெரிசனம்பாரே”

இறந்து போய் சடலமாகாமல் நாம் தெளிவது எப்போது? மகத்துவமான அறிவு நிலை பெற்று நாம் வாழ்வது எப்போது? ஆசைகளை அழிப்பது எப்போது? கொடியதான மாயை நிலையை விட்டு விலகி நிற்பது எப்போது? எம்மை ஆட்சி செய்யும் காமவலையை அறுப்பது எப்போது? மனமானது சஞ்சலம் இல்லாது அமைதியாய் இருப்பது எப்போது? இவற்றிலிருந்தெல்லாம் விடுபட்டு உயரிய பேரானந்த நிலையினை அடைய வேண்டுமெனில் குறிப்பிட்ட சில நிலைகளில் மனதை ஊன்றி நிலை நிறுத்தினால் சில தரிசனங்கள் கிடைக்கும். அவற்றை தரிசித்தால் எப்போது ஆனந்த நிலையில் இருக்க முடியும் என்கிறார்.


பதினாறு தரிசனங்கள் உள்ளதாக அகத்தியர் உரைக்கின்றார். ஆதார தரிசனம், ஆத்துமாவின் தரிசனம், உள்ளமென்ற தரிசனம், பூரண தரிசனம், நாசிநுனி தரிசனம், புருவமய்ய தரிசனம், பிரமவெளி தரிசனம், ஒளி தரிசனம், விந்து தரிசனம், நாத தரிசனம், உருவ தரிசனம், அரூப தரிசனம், சாயுச்சிய தரிசனம் என பதினாறு வகையான தரிசனங்களை படிநிலைப்படி இங்கே அருளியுள்ளார் அகத்திய பெருமான். அக தரிசனங்களை காண்பதுதானே சன்மார்க்கம். சன்மார்க்க தரிசனங்களை காண முயலுங்கள். நன்றி:”தோழி”

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.