Saturday, August 5, 2017

படைவீடு என்பது என்ன?


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஆகஸ்ட்-2017 மாதம் வெளியானது…


படைவீடு என்பது என்ன?

          படை வீடென்பது அடங்கி இருக்குமிடம். அடங்கியிருக்கும் ஸ்தானங்களே இயற்கை விளக்கம் தங்குமிடமாகும். இவற்றிற்கு ஊர் ஆறாவானேன்?


ஏரகமென்பது அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம்.

திருவாவினன்குடி யென்பது திரு.ஆ.இன்ன.குடி: திரு - இலக்குமியாகிய சந்தோஷமும், ஆ - பசுவாகிய விளக்க மென்னுஞ் சீவனும், இனன் – சூரியனாகிய புத்தியும் ஒன்றுகூடி  விளங்கும் ஆன்ம அறிவின் சுத்த காரிய இடம்.

பழமுதிர்சோலை யென்பது இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப் பழங்களாகிய பிரயோசன இன்பங்கள் நீங்கிக் குறைவற்ற அறிவாய் விளங்கும் இடம்.

திருச்சீரலைவாய், திருச்செந்தில், செயந்திபுரம் என்பன: சுத்த மனத்தின் முகத்தில் விஷயக் கடலின் அவாவாகிய அலையடித்துக் கொண்டிருக்கும் இடமாகிய கரை, செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம், அஞ்ஞான சூரனை நிவர்த்தித்துச் சந்தோஷகரத்தைப் பெற்ற பதிமனத்தின் விளக்கம்.

திருப்பரங்குன்ற மென்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தையுடைய விவேக உல்லாச இன்ப நிறைவு.

குன்று தோறாடல் என்பது மலைதோறாடல். மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற்காரணமாயுள்ள துரிய நன்னிலை. இத்துரியம் பரதுரியம், சுத்த துரியம், குருதுரியம், சிவதுரியம், சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவக் காட்சியில் அனந்தம் உண்டு.

மேற்குறித்த அனுபவ காட்சிகளுக்குத் தேகத்திலிடம் எவை? கோசத்தினடி, தொப்புளின் கீழ், தொப்புள், வயிற்றில் தொப்புளுக்கு மேல், மார்புக்கு கீழ், மார்புநெஞ்சு ஆக 6. 

                                          – திருவருட்பிரகாச வள்ளலார்.
  
⊳⊳ தமிழ்ப்புலவர் நக்கீரர் எழுதிய ‘திருமுருகாற்றுப்படை” என்ற நூலில், எந்த முருகனிடம் சென்று வழிபட்டால் விரைவில் திருவருள் கிடைக்கும் என்று வகைப்படுத்தும்போது, முருகப்பெருமான் குடிகொண்டுள்ள ஆறு இடங்களை குறிப்பிட்டுள்ளார். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு தலங்களில் சென்று முருகனை வழிபட்டால் விரைவில் அவனது அருளை பெறலாம் என்று நம்மை ஆற்றுபடுத்துகின்றார். ஆற்றுபடுத்துதல் என்றால் வழிகாட்டுதல் எனப்பொருள். இவ்வாறு நக்கீரரால் ஆற்றுபடுத்தப்பட்ட இந்த ஆறு தலங்கள் ஆறு படைவீடு என்று வழங்கலாயிற்று. ஆற்றுப் படை வீடு ஆறு படை வீடு என்றும் மருவியது.

படைவீடு என்றால் அடங்கி இருக்கும் இடம் என்று பொருளுரைக்கிறார் வள்ளலார். அதாவது அடங்கியிருக்கும் ஸ்தானங்களே இயற்கை விளக்கம் தங்குமிடமாகும். இயற்கை விளக்கம் என்பது “அருள்” என்பதை குறிக்கும். நமது மனித உடம்பில் இயற்கை விளக்கமான அருள் அடங்கி இருக்கின்றது. அந்த ஆறு ஸ்தானங்களே ஆறு படை வீடாக சொல்லப்பட்டுள்ளது. நமது உடம்பில் அடங்கியிருக்கும் ஆறு ஸ்தானங்களாவன; கோசத்தினடி, தொப்புளின் கீழ், தொப்புள், வயிற்றில் தொப்புளுக்கு மேல், மார்புக்கு கீழ், மார்புநெஞ்சு ஆக 6. 

அகத்தே உள்ள இந்த ஆறு ஸ்தானங்களுக்கும் புறத்தே உள்ள ஆறு ஊர்களில் கோயில் கட்டி முருகன் அருளை பெற முயன்றுள்ளனர். அவ்வகையில்,

அகத்திலே ஏரகமென்பது (சுவாமிமலை) அழகு பொருந்திய உள்ளமென்னும் இடமாகும். மாசற்ற உள்ளத்தையே சுவாமிமலை என்கிறோம். அந்த மாசற்ற உள்ளத்தில் இறைவனின் அருள் அடங்கியிருக்கின்றது. இத்தத்துவத்தை விளக்கவே புற உலகில்  கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள சுவாமிமலை என்ற ஊரில் சுவாமிநாத சுவாமி என்ற பெயரில் கோயில் உள்ளது.

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அவர்களும் இந்த ஏரகநாதனை பாடி வழிபட்டிருக்கின்றார். வள்ளற்பெருமான் யார் என்று தான் அறியும் முன்னரே அதாவது வள்ளலாரை சந்திக்கும் காலத்திற்கு முன்னரே ச.மு.க. அவர்களை ஏரகநாதர் ஆட்கொண்டார்.

“சின்ன வயதிற் சிறியேனை யாட்கொண்டு
 பின்னரென் பாலிற் பிரியமற்ற  - தென்னவகை
 யோயறியேன் குற்ற மொறுத்திரங்கி யேரகம்வாழ்
 தேவநினைப் பாடவருள் செய். – (பிரபந்தத்திரட்டு-3364)

தமது இருபதாவது வயதில் ச.மு.ந்தசாமி ஐயா அவர்கள் சாமிமலை முருகப்பெருமானின் அருளால் பதினாறு வெண்பாக்களைச் "சாமிமலை சாமிநாதக் கடவுள் தோத்திரம்" எனப் பாடல் செய்கின்றார். தனது மேனியில் ஒரு பெரிய கட்டி தோன்றித் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஆங்கில வைத்தியர்கள் அதனை அறுக்க வேண்டும் எனக் கூறியவுடன், அன்றிரவு முருகப்பெருமானைத் தியானித்து விண்ணப்பம் செய்கிறார். உடனே சாமிமலைக்கு வரும்படி உத்தரவு பிறக்கிறது. மறுநாள் விழித்துப் பார்க்கிறார், என்னே அதிசயம், அப்பெரியக் கட்டி மிகச்சிறிய உருவாகியிருந்தது.

          பிறகு ச.மு.க. அவர்கள் சாமிமலைக்குச் சென்று "சாமிமலை சாமிநாதக் கடவுள் தோத்திரம்" பாடுகிறார். இச்செய்தியினைச் ச.மு.க. அவர்களே இந்நூலில் (பிரபந்தத்திரட்டு–பக்கம்-676) அடிக்குறிப்பில் எழுதியிருக்கின்றார்.

இவ்வாறு மாசற்ற உள்ளத்தால் நாம் வணங்கினால் அருள் கிடைக்கும் என்பது உண்மை. எனவே சுவாமிமலை என்பது நமது உடம்பில் மார்பு பகுதியைக் குறிக்கும்.


தற்போது பழனி என்று குறிக்கப்பெறும் தலமாகிய திருவாவினன்குடி யென்பது திரு+ஆ+இன்ன+குடி என்று பிரயும். திரு - இலக்குமியாகிய சந்தோஷமும், ஆ - பசுவாகிய விளக்க மென்னுஞ் சீவனும், இனன் – சூரியனாகிய புத்தியும் ஒன்றுகூடி  விளங்கும் ஆன்ம அறிவின் சுத்த காரிய இடம்.

நமது அகத்திலே தொப்புளின் கீழே உள்ள இடத்தில் அடங்கி இருக்கக் கூடியது திருவாவினன்குடியாகும். இவ்விடத்தில்தான் ஆன்ம அறிவு காரியப்படும் இடமாக உள்ளது. சன்மார்க்கம் என்றாலே நமது உடலில் கண்டத்திற்கு மேலே உள்ள தலைப்பாகத்தில்தான் அருள் காரியங்கள் நடக்கின்றது என்று புகலுவார்கள். சுத்த சன்மார்க்கத்தின் வழியில் அது உண்மைதான். இருந்தாலும் ஆன்ம அறிவு செயல்படக்கூடிய இடமாக நமது உடம்பில் தொப்புளுக்கு கீழ் உள்ள பாகத்தையே வள்ளலார் இங்கு குறிப்பிடுவது ஆச்சரியமாகவும் உள்ளது.  மேலும் ஆன்ம அறிவு என்பது என்ன? என்றும் உரைக்கின்றார். அதாவது ஆனந்தம், புத்தி, ஜீவன் இவை மூன்றும் ஒன்று கூடி விளங்குவதே ஆன்ம அறிவாகும் என்ற விளக்கத்தையும் நாம் இங்கே காணமுடிகின்றது.

எனவே, பழனி என்கின்ற தலமானது ஆன்ம அறிவு காரியப்படக் கூடிய இடமாகும். இது (பழனி) நமது உடம்பில் தொப்புளின் கீழே உள்ளது என அறியவும்.
தமிழகத்தில் தற்காலத்தில் “பழமுதிர்சோலை” என்கின்ற பெயரில் நிறைய இடத்தில் அங்காடிகள் உள்ளன. இங்குச் சென்றால் குளிரூட்டப்பட்ட வளாகத்தில், உலகில் உள்ள பழவகைகள் எல்லாம் விற்பணைக்கு வைத்திருப்பார்கள். நமக்கு வேண்டிய பழங்களை வாங்கி உண்டு மகிழலாம். அனைத்து வகையான பழங்களும் கிடைக்கும் இடம் பழமுதிர்சோலை என்றாகிவிட்டது.

சோலைமலை என்று அழைக்கக்கூடிய பழமுதிர்சோலை மதுரையிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலை உச்சியில் அமைந்துள்ளது. பழங்கள் உதிர்க்கப்பெற்ற சோலை என்று சொல்லி இதற்கான ஒரு கதையும் சொல்கிறார்கள். சுட்டப் பழம் வேண்டுமா? சுடாதப் பழம் வேண்டுமா? என்று முருகன் ஒளவையாரை சோதித்து அவரின் அகங்காரத்தை போக்கிய இடமாக இது கருதப்படுகின்றது.  

பழமுதிர்சோலை முருகக்கடவுளுக்கு உயிர்பலி கொடுத்து வணங்கப்படுவதை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் பாடியுள்ளார். “சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து…(218)” என்று பாடுகின்றார். முருகனுக்கு படையல் செய்யும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்று இப்பாடலில் பட்டியலிடுகின்றார். சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பல பாத்திரங்களில் பரப்பி ‘பிரப்பு அரிசி’யாய் வைத்து, ஆட்டுக் கிடாயை அறுத்து… என்று செல்கின்றது அப்பட்டியல்.

“மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி…”(232) என்றும் ஒரு இடத்தில் முருக வழிபாட்டு நிலையை பாடுகின்றார். வலிமை வாய்ந்த ஆட்டு கிடாயின் இரத்தம் கலந்த தூய வெண்மையான பிரப்பு அரிசியை பலி அமுதாக காண்பவர்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் பல இடங்களில் வைத்து… இவ்வாறு உயிர்பலி இட்டு வணங்கக் கூடிய தலமாகவும் பழமுதிர்சோலை விளங்குகின்றது என்று அறிகையில் முருகன் என்னும் அழகு கெடக்கூடியதாகும் உள்ளது. “அருணகிரியார், குமரகுருபர், நக்கீரர் முதலிய மகான்கள் தொண்டு செய்து, உத்தம ஞானிகளாய் நித்திய முத்தர்களாய் விளங்குகின்றார்கள்.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-452) என்று நக்கீரரை புகழ்கின்றார் வள்ளலார். ஆனால் நக்கீரர் எவ்வாறு முருகனுக்கு பலி கொடுத்தலை எதிர்க்காமல் அதனை தமது பாட்டில் பாடினார் என்று எண்ணும்போது நக்கீரர் உத்தம ஞானிதானா? என்று வள்ளற்பெருமான் கருத்திலும் முரண் தோன்றுகின்றது.

பழமுதிர்சோலை என்பது என்ன? என்று வள்ளலார் வழியில் நோக்கும் பொழுது, “இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப் பழங்களாகிய பிரயோசன இன்பங்கள் நீங்கிக் குறைவற்ற அறிவாய் விளங்கும் இடம்” என்று அறிகின்றோம். நமது உடம்பில் உள்ள தொப்புள் பகுதியினை பழமுதிர்சோலை என்கின்றோம்.

கண், காது, மூக்கு, வாய், உடம்பு என்கின்ற இந்திரியங்களாளும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆச்சர்யம் என்கின்ற கரணங்களாகும், ஆன்மாவின் அகப்புறமான ஜீவன் நமது உடம்பில் ஐந்து இடங்களில் இருக்கும். மனம், புத்தி என்று சொல்லப்பட்ட அந்தகரணங்களுக்கு மத்தியில் நான்கு ஜீவன்கள் இருக்கும். ஒரு ஜீவன் மட்டும் தலைப்பாகத்தில் இருக்கும். இது பரமாத்மா என்று வழங்கப்படும். இந்த ஒரு ஜீவன் தவிர மற்ற நான்கும் இறந்துவிடும். அப்படிப்பட்ட ஜீவன்களாலும் நமக்குக் கிடைக்கக்கூடிய பிரயோசன / ஆதாயமான இன்பங்கள் நீங்கி குறைவற்ற அறிவாய் விளங்கும் இடமே பழமுதிர்சோலையாகும்.

ஆதாயமான இன்பம் என்பது என்ன?  உனக்காக நான் இவ்வளவு செய்துள்ளேன்… ஆனால், உன்னால் எனக்கு என்ன பிரயோசனம்? என்று கேட்கிறோம். ஒரு இன்பத்தை எதிர்பார்த்து ஒரு செயலை செய்வதே பிரயோசன இன்பமாகும். பலன் கருதி கடமை செய்தல் என்பது பிரயோச இன்பமாகும். பலன் கிடைத்தால் மகிழ்கிறோம். இல்லையெனில் என்ன பிரய்யோசனம்? என்று வெம்புகின்றோம்.

“பொன்னால் பிரயோசனம்
 பொன் படைத்தார்க்குண்டு;
 பொன்படைத்தோன் தன்னாற்
 பிரயோசனம் பொன்னுக்கு அங்கு ஏது உண்டு?
           அத்தன்மையைப்போல்
           உன்னாற் பிரயோசனம் வேணதெல்லா முண்டு
 உனைப்பணியும் என்னாற் பிரயோசனம்
  மேதுண்டு? காளத்தி ஈசுரனே.”

என்று பட்டினத்தார் பாடுகின்றார். பொன்னும் செல்வமும் படைத்தவர்களுக்கு அந்த பொன்னால் பயன் உண்டு. ஆனால், பொன் படைத்தவனால் அந்தப் பொன்னுக்கு ஏதும் பயன் உண்டோ?  அதைப்போலத்தான் உன்னால் எமக்குப் பயன் வேண்டிய மட்டும் உண்டு, ஆனால், உன் திருவடிகளே கதி என்று பணிந்து தினந்தினம் போற்றுகின்ற எம்மால் உமக்கு ஏது பிரயோசனம்… சொல்… ஈசனே…

          இக்கருத்தையே வள்ளலாரும், “என்னால் ஆவது ஒன்றும் உனக்கில்லை எனினும் எந்தாய் உன்னால் வாழுகின்றேன் எனக்கு உண்மை உரைத்தருளே!” என்று பாடுகின்றார். இங்கு இறைவன் என்பவனை பொன் என்ற தங்கத்திற்கு ஒப்பிடுகின்றோம். அந்த தங்கத்தால் நாம் பிரயோனம் / பயன் அடைகிறோம். ஆனால் நம்மால் அந்தத் தங்கத்துக்கு / இறைவனுக்கு ஏதேனும் பயன்தான் உண்டோ?

          இவ்வாறு இந்திரியங்கள், கரணங்கள், ஜீவன்களைக் கொண்டு நாம் பிரயோசனம் / பயன் / இன்பம் அடைகிறோம். அந்த இன்பங்களை அனுபவப் பழங்கள் என்று உருவகப்படுத்துகின்றார் வள்ளலார். அந்த பிரயோசனப் பழங்கள் உதிர்ந்து அங்கே குறைவற்ற அறிவுப் பழமாய் விளங்கும் / ஆன்ம அறிவு விளங்கும் இடமாக இருப்பதே பழமுதிர்சோலை ஆகும். நாம் இதற்கு முன்னர் “பழனி” என்பது ஆன்ம அறிவு காரியப்படக்கூடிய   இடம் எனக்கண்டோம். இங்கே “பழமுதிர்சோலை” என்பது ஆன்ம அறிவு விளங்கக் கூடிய இடமாக (தொப்புள்) உள்ளது.


⊳  திருச்சீரலைவாய், திருச்செந்தில், செயந்திபுரம் என்று அழைக்கப்படும் திருச்செந்தூர் என்ற தலமானது கடற்கரையோரம் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோயிலின் தத்துவம் அஞ்ஞானம் என்னும் சூரனை தமது மனத்திலிருந்து விலக்கிவைத்து சுத்த மனதான பதி மனத்தை பெற்றதற்கான அடையாளமாகும். மனித ஜீவ செந்துக்களான மனம், தனது மனதில் உள்ள அசுத்த அலைகளை நீக்கி சுத்த மனதாக்கி, அசுத்த அலைகள் நீங்கியவுடன் ஞானக் கடலின் பற்றுதலாகிய ஞான அலைகள் அடித்துக்கொண்டிருக்கின்ற இடமாகிய சுத்த மனமே திருச்செந்தூர். நமது உடலிலே இந்த ஞான அலைகள் அடிக்கும் கரை / இடமாக மார்புக்கு கீழ் பகுதி உள்ளது.

⊳  மதுரை அருகே உள்ள திருப்பரங்குன்றம் என்ற தலத்தில், முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்துக்கொண்டு மணக்கோலத்தில் காட்சி தருகின்றார். தெய்வானையுடன் உல்லாச இன்பம் அடையும் இடமாக இது கருதப்படுகின்றது.

ஆடாதீர்… சற்றும் அசையாதீர்… வேறொன்றை நாடாதீர்… என்பார் வள்ளலார். ஆடுகின்றதும், அசைகின்றதும், வேறொன்றை நாடுகின்றதும் எது என்றால்? அது நமது மனம் தான். அசைவில்லாத ஒன்று எது என்றால்? அது நமது ஆன்மா. ஆன்மாவிற்கு புற அசைவு உண்டு, அக அசைவு கிடையாது.  அசைவில்லாத ஒன்றாக இருக்கக் கூடிய ஆன்மாவின் விளக்கமாக உள்ள இன்ப நிறைவே திருப்பரங்குன்றம் ஆகும்.

ஆன்ம இன்பம் எப்படி  உள்ளதென்றால் விவேக உல்லாச இன்பமாக உள்ளது. மேலான அறிவினையுடைய உள்ளக் களிப்புடன் கூடிய இன்பமாக உள்ளது. இப்படிப் பட்ட இன்பத்தைக் கொடுப்பது திருப்பரங்குன்றமாகும். இத்தலம் நமது உடம்பில் கோசத்தனடியில் அடங்கி உள்ளது. 

⊳  ஆறு படை வீடுகளில் வள்ளலாரால் பாடல் பெற்ற தலம் திருத்தணிகை என்றழைக்கப்படும் குன்றுதோறாடல் மட்டுமே. முகம் பார்க்கும் கண்ணாடியில் திருத்தணிகை முருகன் காட்சியையும் வள்ளலார் கண்டார்.

“சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
 தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களுமோர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியுமருட்
 கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே – 42

என்று பாடி மகிழ்கின்றார். முருகப்பெருமான் தேவர்களின் துயர் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு போரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றது. வள்ளற்பெருமான் தாம் பாடிய பாடல்களில் தணிகாசலம் என்ற பெயரினை  பாடிவிட்டு அதற்கு விளக்கம் அளிக்கும் இடத்தில் குன்றுதோறாடல் என்ற பெயருக்கு மட்டும் விளக்கம் அளித்திருக்கின்றார்.

          குன்று என்பதற்கு சிறு மலை எனப்பொருள். எனவே மலை தோறும் ஆடுகின்றவன் எனப்பொருள். மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற்காரணமாயுள்ள துரிய நன்னிலையைக் குறிக்கும். துரிய நிலைகளெல்லாம் இன்பம் கொடுத்தாடுகின்றவர். பரதுரியம், சுத்த துரியம், குருதுரியம், சிவதுரியம், சத்திதுரியம் முதலிய துரிய மலைகள் உண்டு. அனுபவத்தில் இதுபோன்று பலவகை துரியங்கள் உண்டு. இவ்வாறு துரியம் என்கின்ற அளவில்லாத இன்பத்தை கொடுக்குமிடம் தணிகைமலையாகும். இது நமது உடம்பில் தொப்புளுக்கு மேல் பகுதியில் அமைந்துள்ளது.


          நாம் இதுவரை ஆறுபடை வீடு என்பதில் உண்மை பொருளை வள்ளலார் வழியில் கண்டோம். புறத்தில் உள்ளன எல்லாம் போலிகள் என்று அறிய வேண்டும். நமது உடம்பில் அகத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ள ஸ்தலங்களே உண்மை அனுபவமாக விளங்குகின்றது. நம்முள்ளே அடங்கிக்கிடக்கும் இந்த ஆறு படை வீடுகளையும் தட்டி எழுப்பி பேரின்பம் காணுவோம்.    

1.   ஏரகம் – சுவாமிமலை – மார்பு
2.   திருவாவினன்குடி – பழனி – தொப்புளின் கீழ்
3.   பழமுதிர்சோலை – தொப்புள்
4.   திருச்சீரலைவாய் – திருச்செந்தூர் – மார்புக்கு கீழ்
5.   திருப்பரங்குன்றம் – கோசத்தினடி

6.   குன்றுதோறாடல் – திருத்தணி – தொப்புளுக்கு மேல்
         
                                             --- தி.ம.இராமலிங்கம்.




No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.