Saturday, August 5, 2017

சுதந்தர தினம்

காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஆகஸ்ட்-2017 மாதம் வெளியானது…


சுதந்தர தினம்

சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கும் வள்ளற்பெருமானுக்கும் எமது 71-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரதின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.



இந்திய சுதந்திர போராட்டம் பலரது தியாகங்களை தன்னுள் கொண்டுள்ளது என்பதனை நாம் அனைவரும் அறிவோம். கிழக்கிந்திய கம்பெனி என்கிற ஒரு சாதாரண கம்பெனி (Company) நமது பெரு நிலப்பரப்பை பிடித்து ஆட்சி செய்தது என்றால், நாம் அன்றைய நிலையில் எவ்வாறு பிரிந்துக்கிடந்தோம் என்று எண்ணிப்பார்த்து வெட்கமடைகின்றோம். எனினும் நமக்குள் இருந்த பிரிவினைகளை எல்லாம் நீக்கி நம்மை எல்லாம் இந்தியர்கள் என்ற கட்டமைப்புக்குள் கொண்டுவர அன்றைய நமது முன்னோர்கள் கடுமையாக பாடுபட்டனர். அப்படி பாடுபட்டவர்களில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது. அப்பெண்களின் பெயர்களை இன்றைய ஆகஸ்ட்-15-சுதந்திர நாளில் நினைவு கூர்வது நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும்.

1.           சிவகங்கை இராணி வேலு நாச்சியார் ஆட்சிகாலம் கி.பி.1780-83 சிவகங்கை தலைநகரான காளையார் கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகை இட்ட போது சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத் தேவரின் மனைவியான வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்தார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடிய முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையும் வேலுநாச்சியாருக்கே உரித்தாகும்.

2.           1806-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி அதிகாலையில் வேலூர் படை வீரர்கள் புரட்சி செய்தனர். அதில் பல பெண்களும் பங்கு கொண்டனர்.

3.           இராணி சென்னம்மா 1824-1829 இவர்களின் தலைமையில் இந்திய சுதந்திரப் போராட்டம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றது.

4.           இராணி லட்சுமிபாய் வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857-ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியர்களின் ஆட்சிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடி. பிரித்தானியர்களுக்கு எதிராகப் படைகளை திரட்டினார். 1857-ஆம் ஆண்டு முதல் விடுதலைப் போரில் தீவிரமாக குதித்தார்.

5.           ஜல்காரி பாய் 1857-58 ஆங்கிலேய அரசை ஏமாற்றும் நோக்கத்தில், ஜல்காரி பாய், இராணி லட்சுமிபாயை போல உடை அணிந்துக்கொண்டு படைக்கு தலைமை தாங்கினார்.

6.           இராணி அவந்திபாய் நாட்டை ஆங்கிலேயர்களிடமிருந்து மீட்க உறுதி பூண்டு நான்காயிரம் வீரர்களைத் திரட்டி கொண்டு 1857 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் படையெடுத்துப் புறப்பட்டார்.

7.           ஜானகி ஆதி நாகப்பன் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து, ஜான்சி இராணி படையில் துணைத் தளபதியாகப் பதவி உயர்ந்தவர். பர்மா இந்திய எல்லையில் துப்பாக்கி ஏந்தி ஒரு போர் வீராங்கனையாகக் களம் கண்டவர்.

8.           அன்னி பெசண்ட் அம்மையார் ஆங்கில அரசின் அடக்குமுறைகள் அவரை வெகுவாகப் பாதித்தன. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல் என்ற வாரப் பத்திரிக்கையை 1913 ஆம் ஆண்டில் ஆரம்பித்தார். 1914 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து நியூ இந்தியா என்ற பெயரில் நாளேடு ஒன்றை ஆரம்பித்து நடத்தினார்.

9.           சரோஜினி நாயுடு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார்.

10.       ருக்மிணி லட்சுமிபதி 1930-ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காக ஓராண்டு சிறையில்  அடைக்கப்பட்டார்.

11.       கஸ்தூரிபாய் காந்தி மகாத்மாவின் துணைவியார். காந்திஜி செயல்பட எல்லா வகையிலூம் உறுதுணையாக இருந்தவர்.

12.        விஜயலக்குமி பண்டிட் இவர் ஜவகர்லால் நேருவின் சகோதரி. நேருஜியுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

13.        மீராபென் 1892-1982 ஆங்கிலேய பெண்மணி இந்தியாவில் தங்கி இருந்தபோது மகாத்மா காந்தியின் உதவியாளராக பணிபுரிந்தார். கிருஷ்ண பக்தையான இவருக்கு மகாத்மா காந்தி வழங்கிய பட்டம் மீராபாய்.

இவ்வாறு இன்னும் எண்ணற்ற பல பெண்மணிகள் நமக்கு சுதந்திர காற்றினை வீசிக்கொண்டே இருக்கின்றனர். அவர்களையெல்லாம் இன்றைய சுதந்திர நாளில் நாமெல்லாம் உள்ளபடியே வணங்கி வாழ்த்துவோம். சுதந்திரத்தை ஒற்றுமையோடு காப்போம். நமது தேசிய கீதத்துடன் நமது தேசியப் பாடலையும் நாம் ஒவ்வொருவரும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் மற்றும் பொது விழாக்களிலும் பாடுவோம்.

“வந்தே மாதரம்” என்று முழங்குவோம். இந்தியாவின் தேசியப் பாடலானது தேசிய கீதத்தை விட பழமையானது. 1882-ஆம் ஆண்டு பங்கிம் சந்திரனின் “ஆனந்த மத்” என்னும் நூலில் இது வெளியானது. 1896-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் இது முதன் முதலாகப் பாடப்பட்டது. இதற்கு இசையமைத்தவர் தேசிய கீதத்தைப் பாடிய இரவீந்திர நாத் தாகூர் ஆவார்.

இன்றைய இந்தியாவிற்கு நம்மை சுற்றி உள்ள நாடுகளால் அச்சுறுத்தல் இருந்துக்கொண்டே உள்ளது. தமிழகத்தின் அருகில் உள்ள இலங்கையின் தென்பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு வர்த்தக ரீதியான நடவடிக்கைகளுக்காக சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது. இதனால் நமக்கு என்றும் நட்பு நாடாக இருக்கும் இலங்கையால் நமக்கு எந்நேரமும் ஆபத்து காத்துக்கொண்டுள்ளது. நமது வடகிழக்கு மாநிலமான சிக்கிம் மாநிலத்தில் பூடான், திபெத் ஆகிய பகுதிகள் சந்திக்கும் எல்லைப்பகுதியான டோகா லா-வில் சீனாவின் ஆக்ரமிப்பு இருந்துக்கொண்டே இருக்கின்றது. நமது வடமேற்கு பகுதியில் பாகிஸ்தான் அச்சுறுத்தலும் இருந்துக்கொண்டே உள்ளது. போர் மேகங்கள் என்று தமது அணு மழையை பொழியுமோ என்று பயம் சூழ்ந்த சூழ்நிலையில் இந்தியா உள்ளது. இந்தியாவால் இதே ஆபத்து மற்ற நாடுகளுக்கும் உண்டு என்பதையும் மறக்கலாகாது. எனினும் அழியப்போவதென்னவோ அருமையான உயிர்கள்தான். இந்நிலையில் நமது ஒற்றுமை மிக முக்கியமாகும். மாநிலங்கள் தனி நாடு கேட்பதும், மாநிலத்திற்கு என்று ஒரு தனி கொடி அமைப்பதும், ஒரு மாநிலத்தின் மொழியை மற்ற மாநிலங்களில் தினிப்பதும் நம்மிடையே வேற்றுமைக்கு வழிவகுக்கும் காரணிகளாகும். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் தனி உரிமை சட்டத்தைக்கூட ரத்து செய்வது நலம் பயக்கும். அம்மாநிலத்திற்காக மற்ற மாநிலத்தவர்கள் எண்ணற்றவர்கள் தமது இன்னுயிரை ஈந்துள்ளார்கள். எனவே அம்மாநிலமும் இந்திய மாநிலங்களின் சராசரி உரிமையை மட்டுமே பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் நமது அவா. அதற்கு ஜம்மூ காஷ்மீர் மக்கள் வழிவிட்டு இந்திய நீரோட்டத்தில் தங்களை முழுமையாக மூழ்கடித்துக்கொள்ள வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க நாம் இந்த இந்திய சுதந்திர நாளில் பிராத்தனை செய்வோம். நாமும் நம்மை சுற்றியுள்ள நாடுகளும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துவோம். இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைவருக்கும் சன்மார்க்க விவேக விருத்தியின் வணக்கங்கள் சென்றடையட்டும். வந்தே மாதரம்.    

                             n  தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.