காரணப்பட்டு
ச.மு.க. அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் ஆகஸ்ட்-2017
மாதம் வெளியானது…
இந்திய குடியரசுத் தலைவர்
இந்திய அரசின் தலைவர், மத்திய நிர்வாகக் குழுவின்
தலைவர், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவர், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத்
தளபதி மற்றும் இந்தியாவின் முதல் குடிமகன் என்கிற பலதரப்பட்ட முகங்கள் இந்திய குடியரசுத்
தலைவருக்கு உண்டு. அவ்வகையில் தற்போது பிரணப் முக்கர்ஜி அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்த
நிலையில் நம் நாட்டின் 14-ஆவது குடியரசுத் தலைவராக திரு.ராம் நாத் கோவிந்த் (71) அவர்கள்
25-07-2017 அன்று பதவி ஏற்றுக்கொண்டார்கள்.
நாட்டு மக்களிடையே பிரபலமாக இல்லாத இவரை,
தலித் இனத்தின் தலைவர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர் என்கிற நோக்கில்
திரு.ராம் நாத் கோவிந்த் அவர்களை பா.ஜ.க. குடியரசுத் தலைவர் பதவிக்கு நிறுத்தியது.
இதனால் இவர் வகித்துவந்த பீகார் மாநில ஆளுநர் பதவியை இழந்தார். இவரை எதிர்த்து காங்கிரஸ்
கட்சியின் சார்பாக மக்களவை முன்னாள் தலைவர் தலித் இனத்தைச் சார்ந்த மீரா குமார் அம்மையார்
களம் இறங்கினார். தேர்தலில் 65.65 சதவிகித வாக்குகள் பெற்று திரு.ராம் நாத் கோவிந்த்
வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து நின்ற திருமதி.மீரா குமார் அவர்கள் 34.35 சதவிகித
வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.
பா.ஜ.க.-வைச் சார்ந்த ஒருவர் குடியரசுத்
தலைவராக வருவது இதுவே முதல் முறையாகும். தலித் இனத்தை சார்ந்த குடியரசுத் தலைவர் என்கிற
வகையில் இவர் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருக்கிறார். திரு.கே.ஆர்.நாராயணன் முதல்
தலித் குடியரசுத் தலைவராவார். ஜாதியை முதற்கொண்டுதான் அரசியல் இயங்குவதால் இங்கே நாமும்
ஜாதியை முன்னிலை படுத்த வேண்டியுள்ளது. சன்மார்க்கிகள் மன்னிக்கவும்.
இந்தியா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு
மற்றும் குடியரசு நாடாகவும் உள்ளது. ஜனநாயகத்திற்கும் குடியரசுக்கும் என்ன வேறுபாடு?
ஜனநாயகம் என்பது அடிப்படையில் பெரும்பான்மையின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்துவிடுகின்றது.
‘தலைக்கு ஒரு ஓட்டு’ என்பது ஒரு உயரிய நியாயமாக மேலோட்டத்தில் இருந்தாலும், சிறுத்தைகள்
ஓநாய்களுக்கும் ஒரு ஓட்டு, ஆடுகள் மாடுகளுக்கும் ஒரு ஓட்டு என்பது அடிப்படையிலேயே வலியவர்கள்
கை ஓங்கும் அபாயத்தையும் இயல்பாகவே கொண்டிருக்கின்றது. புலிகள் ஒன்று சேர்ந்து அவற்றின்
பெரும்பான்மையின் ஒரு ஆட்சி அமையும்போது, மான்களின் கதி என்னவாகும்? இந்த இடம்தான்
ஜனநாயககத்தின் மிகவும் சிக்கலான, பலவீனமான பகுதி. எவ்வளவு அராஜகங்களை, ஊழல்களைச் செய்திருந்தாலும்
பெரும்பான்மை மக்களால் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார் என்றால், அதை விமர்சிக்காமல்
பெரும்பான்மையை நியாயப்படுத்துவதைத்தானே மரபாகக் கொண்டிருக்கிறோம்.
ஒரு விஷயமானது தவறு என்றும் தெரிந்தும் அதனை
ஆதரிப்பவர்கள் கூறும் காரணமானது, ‘நான் பெரும்பான்மை முடிவை ஆதரிக்கிறேன் / நான் ஜனநாயக
முடிவை ஆதரிக்கிறேன்’ என்பதாகும். இதனால் தவறானவர்கள், தவறான முடிவுகள் ஜனநாயகம் என்ற
போர்வையில் மக்களை ஆட்சி செய்து துயரத்தில் ஆழ்த்துகின்றார்கள்.
இந்தப் பிரச்சனையை கையாளும் தீர்வாகவே குடியரசு
உருவாகின்றது. அது புலியோ ஓநாயோ எந்தத் தரப்பு ஆட்சியில் வந்தாலும் மான்கள், மாடுகளின்
சுதந்திரமும் உரிமைகளும் பாதிக்கப்படாமல் இருப்பதை சட்டபூர்வமாக உறுதிசெய்யும் குடிமக்களின்
தனிநபர் சுதந்திரத்தில் நிலைகொண்டிருப்பது குடியரசு ஆகும் என்று ‘சமஸ்’ அவர்கள் விளக்கம்
அளிக்கின்றார். எனினும் குடியரசின் சட்டத்தை கையாளும் திறம் குடியரசுத் தலைவரைப் பொறுத்தே அமையும். ஜனநாயகத்துக்கு உள்ள சட்ட சுதந்தரம்
குடியரசுக்கு இல்லை என்பது ஏன்? என்று இந்திய குடிகளாகிய நாம் சிந்திக்க வேண்டும்.
புதியதாக ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள குடியரசுத் தலைவரைப் பற்றி அறிந்துக்கொள்வோம்…
திரு.ராம் நாத் கோவிந்த் அவர்கள்
01-10-1945 ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் தீராப்பூர் பகுதியில் பிறந்தார்.
தந்தையார் மைகு லால் தாயார் கலாவதி. 1974-ஆம் ஆண்டு சவிதா என்பவரை மணந்தார். இவர்களுக்கு
ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர் கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி பயின்றார். தொழில் முறையாக
வழக்கறிஞர் பணியை மேற்கொண்டவர். இவர் அரசியல்வாதியாகவும் செயல்பட்டவர். இவர் குடியரசுத்
தலைவராக பதவி ஏற்ற நிலையில் இவரை போர் அபாயம் சூழ்ந்துக்கொண்டுள்ளது. எந்நேரமும் இந்தியாவும்
சீனாவும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை தற்போது நிலவி வருவதால், முப்படைகளின் தளபதி என்கிற
நிலையிலிருந்து இவர் எடுக்க இருக்கும் முடிவுகள் வருங்கால இந்தியாவிலும் சீனாவிலும்…
ஏன்… உலக நாடுகளிடையேகூட பல மாற்றங்கள் நிகழலாம். இரு நாடுகளுக்கிடையே யுத்தம் நிகழாமல்
இருக்க தேவையான முயற்சியினை இந்திய பிரதமருடன் கலந்தாலோசித்து ஒரு சுமூகமான முடிவினை
எடுக்க வேண்டும். தான் ஒரு அரசியல்வாதி என்கிற தகுதியும் அனுபவமும் நிறைந்தவராக இருப்பதால்
யுத்தம் தவிர்க்கப்படும் என்று நம்புவோம்.
புதிய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றிருக்கும்
மேதகு.ராம் நாத் கோவிந்த் அவர்கள் கருணையுடன் தமது அரசாட்சியை நடத்திச் செல்ல “சன்மார்க்க
விவேக விருத்தி” வாழ்த்துகின்றது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.