Monday, March 4, 2013

பேரின்பம்





பேரின்பம்

இறைவனை ஒருமையில் நினைத்தால் நமக்குத் தோன்றும் அக மற்றும் புற அனுபவம் / பேரின்பம் எப்படி இருக்கும்? ஹீம்... அது யாருக்குத் தெரியும்? நமக்கேது அந்த பேரனுபவம்? இதோ, வள்ளலார் தாம் கண்ட அனுபவத்தை தமது திருஅருட்பாவில் மிக அழகாக படி படியாக எடுத்துரைக்கின்றார்.

நமக்கு அமுதம் எப்படி சுவைக்கும்? எனத் தெரியாது. அது தேன் போல் இருக்குமோ? கற்கண்டுபோல் சுவைக்குமோ? நாம் சுவையையும் அறியோம், சுவைத்தவனையும் அறியோம்! அறிந்துவிட்டால் சிற்றின்பத்திற்குத்தான் இங்கு இடமேது?

ஆறறிவு இருக்கும் நாம் அறியாமல் வேறு எவ்வுயிர் அறியமுடியும்? அறிவோம் வாரீர்!    

1.  தோல் - குழைந்திடும்
2.  நரம்புகள் - மேலெலாம் கட்டவை விட்டு விட்டு இயங்கிடும்
3.  எலும்புகள் - நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திடும்
4.  தசைகள் - மெய்புறத் தளர்ந்திடும்
5.  இரத்தம் - உள் இறுகிடும்
6.  சுக்கிலம் - உரத்திடை பந்தித்து ஒருதிரள் ஆயிடும்
7.  மூளை - மடல் எல்லாம் மலர்ந்திடும்
8.  உடல் - அமுதம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிடும்
9.  ஒண்ணுதல் - வியர்த்திடும்
10. முகம் - மலர்ந்திடும்
11. உயிர் - சாந்தம் ததும்பிடும்
12. உண்ணகை - தோற்றிடும்
13. உரோமம் - பொடித்திடும்
14. கண்கள் - நீர் பெருகி கால்வழிந்தோடிடும்
15. வாய் - துடித்து அலரிடும்
16. செவிகள் - கும்மெனக் கொட்டிடும்
17. மெய் - குளிர்ந்திடும்
18. மார்பு - பசைந்திடும்
19. கைகள் - குவிந்திடும்
20. கால்கள் - சுலவிடும்
21. மனம் - கனிந்து உருகிடும்
22. மதி - நிறைந்து ஒளிர்ந்திடும்
23. சித்தம் - இயைந்து களித்திடும்
24. அகங்காரம் - ஆங்காங்கு அதிகரிப் பமைந்திடும்
25. உள்ளம் - தழைத்து மலர்ந்திடும்
26. அறிவுறும் அனைத்தும் - ஆனந்தம் ஆயிடும்
27. பொறிகள் - ஆன்மதற் போதம் போயிடும்
28. தத்துவம் - தாம் ஒருங்கி ஒழிந்திடும்
29. சத்துவம் - தனித்து நின்று ஓங்கிடும்
30. உலகம் எல்லாம் - விடயம் உளவெலாம் மறைந்திடும்
31. அருள் - ஆசைமேல் பொங்கிடும்
32. உள்ளம் - எழுந்திடும்
33. உயிர் எல்லாம் -  மலர்ந்திடும்

இப்படிப்பட்ட அனுபவத்தைதான் நாம் உண்மையில் பெறவேண்டும். இதனை பெற நமது உடல் மட்டுமே உயிருடன் வேண்டும். அது தற்போது நம்மிடம் தற்காலிகமாக இருக்கிறது, மேற்கண்ட அனுபவம் நமக்கு கிட்டியப் பின்பு நமது உடலுடன் உயிர் நிரந்தரமாகும். அதன்பிறகென்ன, அனைத்தும் நாம் தான் என்னும் உண்மை புரியும். வள்ளலாரைப் போன்று நாமும் இந்த அண்ட கோடிகளையெல்லாம் அரை கனத்தில் பார்க்கலாம்! சித்துக்களெல்லாம் நமது ஏவல் செய்யும், அதிசயம் இயற்றலாம்! முத்தொழிலையும் (படைத்தல், காத்தல், அழித்தல்) நாம் செய்யலாம்!

மரணமிலா பெருவாழ்வில் வாழலாம் விரைந்தே! 

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே! உலகீர்... என் மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே!! 

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை நாடாதீர்!
ஜோதி தனையே நினையுங்கள் - சுகம் பெற விழைவீர்!

அருட்பெருஞ்ஜோதி       அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை       அருட்பெருஞ்ஜோதி

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.