Tuesday, April 30, 2013

கல்பட்டு ஐயா இராமலிங்கம்


அருட்பெருஞ்ஜோதி                         அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

                                 கல்பட்டு ஐயா இராமலிங்கம்                                        30-04-2013
                                            (முதல் பாகம்)

ஆன்மநேயமுள்ள ஆன்மாக்களே... வணக்கம்...

நாம் இப்போது நமது அருள்குருவான வள்ளலாரின் சீடர் 'கல்பட்டு ஐயா' வைப்பற்றி காண்போம்...

நம்பெருமான் திருவடிகளைப் போற்றி நின்றவர்கள் பலர், ஆட்பட்ட அடியவர்கள் பலர், மாணவர்கள் பலர்.

அவர்களுள் கல்பட்டு ஐயா, தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் இரத்தின சபாபதிப் பிள்ளை, காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப் பிள்ளை, கருங்குழி புருடோத்தமன் ரெட்டியார் போன்றவர்கள் முதன்மையானவர்கள் எனலாம்.

எப்படி 'அருட்பெருஞ்ஜோதி' இறைவன், நமது அருள்குருவான வள்ளலார் இருக்கும் குடிசைக்கே வந்து அவரை அடிமைக்கொண்டாரோ அதுபோல வள்ளலார், 'கல்பட்டு ஐயா'  இருக்கும் இடத்திற்கே சென்று அவரை அடிமைக்கொண்டார் என்பதுதான் வேறுயெந்த சீடர்களுக்கும் கிடைக்காத சிறப்பை அவர் பெற காரணமாக உள்ளது. மேலும் வள்ளலாரின் கட்டளைக்கிணங்க, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவளாகத் திருமாளிகையில் வள்ளலார் திருவரையினுள் சென்றவுடன் அந்த அறை திருக்கதவுகளை வெளியிலிருந்து தாளிட்டவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. எனவே இவரை வள்ளலாரின் 'முதன்மை சீடர்' என்பர்.

கல்பட்டு

விழுப்புரம் வட்டத்தில் உள்ள 'கல்பட்டு' என்னும் ஊரில் பிறந்தவர்தான் கல்பட்டு ஐயா. இவரின் இயற் பெயர் 'இராமலிங்கம்'. இவரின் பிறப்பு, வளர்ப்பு, பெற்றோர், கல்வி, உறவினர் பற்றிய எவ்விதச் செய்தியும் இதுவரையில் கிடைக்கவில்லை. ஆயினும் சிறுபொழுதிலேயே தெய்வ நெறியினை எய்திடும் நாட்டம் இவருக்கு இயல்பாகவே இருந்தது. அதற்குரிய சாதனமாக நல்யோக நெறியினைப் பின்பற்றினார். அம்முறையிலேயே சிறந்து மேம்படவும் முற்பட்டார்.

தமிழகச் சுற்றுப்பயணம்

அதன் காரணமாகத் தமிழகம் முழுதும் பயணம் செய்தார். தனது நிலையைச் சிறப்படையச் செய்யும் பெரியோரை நாடினார். எத்தனையோ பெருமக்களை, தவசியர்களை சந்தித்தார். யாரும் கல்பட்டு ஐயாவின் அனுபவத்தினும் தலை சிறந்துக நிற்கக் கண்டிலர். தனக்கு நெறியூட்டும் குருமார்களைக் கண்டிலர். இந்நிலையில் தம்மிடம் உள்ள அனுபவமே போதும் என்று மீண்டும் கல்பட்டிற்கே திரும்பினார்.

திருநறுங்குன்றம்

விழுப்புரம் - விருத்தாசலம் இருப்புப்பாதையில் உளுந்தூர்பேட்டை நிலையத்திலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில் திருநறுங்குன்றம் என்னும் ஊரில் ஒருகாலத்தில் சமணர்கள் நிறைந்திருந்தனர். அவ்வூரில் உள்ள அப்பாண்டநாதர் கோவில் பழமை வாய்ந்தது. சோழர் கால கல்வெட்டுக்கள் அங்குக் காணப்படுகின்றன. தற்போது அவ்வூர் திருநறுங்கொண்டை அல்லது திண்ரங்கோட்டை என வழங்கி வருகிறது. 

தனது தவநெறி வாழ்விற்குப் பொருத்தமான இடம் திருநறுங்குன்றம் என்று கல்பட்டு ஐயா அறிந்தார். ஆதலின் அவ்வூர் சென்றார். அங்குள்ள குன்றுகளுல் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அங்கே குடில் அமைத்துத் தவயோகநெறியினைத் தாம் பயின்ற அளவில் பழகி நின்றார். என்றேனும் ஒரு நாள் மேல்நிலைப் பெறுவோம் என்ற உணர்வில், குன்றாமல் அந்நிலையில் நின்றிட்டார். அத்தகு நிலையில் குன்றிலிருந்து ஊருக்குள் சென்று உச்சிப்போதில் மட்டுமே கையேற்று உண்டு நின்றிட்டார்.

யோகக் காட்சி

வழிகாட்டும் நல்லாசிரியர் தமக்கு வாய்க்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்து வந்தது. கல்பட்டு ஐயாவின் நல்லதோர் ஏக்கத்திற்கு விளக்கம் கிடைத்தது. அவரது யோகக் காட்சியில், குறிப்பிட்ட ஒருதிங்களில், குறிப்பிட்ட கிழமையில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நாழிகையில் ஓர் ஞானாசிரியர் வந்து, வலுவில் ஆட்கொள்வார் என்ற குறிப்புப் புலனாயிற்று. கிடைக்கப் பெற்ற அந்த திருவருட்குறிப்பினால் மாறாத நம்பிக்கைக் கோண்டார். அத்தெய்வத் திருநாளை அன்பர் பலர்க்கும் சொல்லி, ஆரவத்துடன் எதிர்பார்த்திருந்தார்.

இச்செய்தியினை, "திருநறுங்குன்றத்தில் கல்பட்டு ஐயா என்னும் யோகியார். தமக்கு ஓர் ஞானாசிரியர், இன்ன மாதம், இன்ன தேதி, இன்ன கிழமை, இத்தனை மணிக்கு, வலிய வந்து ஆட்கொள்வார் என்று தாம் உணர்ந்தபடி, பலருக்கும் உரைத்து, பலரும் சூழ அவரால் குறிப்பிட்ட அதே நேரத்தில் நமது வள்ளற்பெருமான் வருகையை மாறாத் நம்பிக்கையுடனும் பேரன்புடனும் எதிர்பார்த்திருந்தார்" என்று 'இராமலிங்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம்' எழுதிய பிறையாறு உயர்தவ 'சிதம்பரம் சுவாமிகள்' அவர்களும் அச்சரிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஞான ஆசிரியர் ஆட்கொள்ளல்

இறைவன் அருளால் நம்பெருமானுக்குக் கல்பட்டு அடியவரின் வேட்கை புலனாயிற்று, அவரின் அருள் தவிப்பு விளங்கியது.

மாறாத அன்பும் மங்காத நம்பிக்கையும் பூண்டு நிற்கும் அடியவரின் திருவூர் நோக்கி, மாட்டு வண்டியில் புறப்பட்டுவிட்டார் நம்பெருமானார். வடற்பெரு வெளியின் வேந்தரைச் சுமந்துக் கொண்டு தன் நடையில் சென்றது அது. திருக்கோயிலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த வண்டியை அனுப்பிவிட்டு, வள்ளற்பெருமான் தாம் மட்டும் திருநறுங்குன்றத்திற்கு நடந்துச் சென்றார்கள்.

நம் பெருமானாரின் பொன் மலரடிகள் அவ்வூரிலும் பதிவாயின. கன்று இருந்த இடம் நாடிக் காராம் பசு செல்வது போல், மன்றிலே நடமிட்டுக் களிக்கும் திருவடிகள், நறுங்குன்றத்து மலைமேலும் நடைபயின்றன.

கருணாமூர்த்தியின் பேரருட் கண்மலர்கள், கல்பட்டாரின் குடிலில் மீது தோய்ந்திடலாயின. இரக்கத்தின் திருவுருவின் வரவினை எதிர்பார்த்து, எழுச்சியுடன் கூடியிருந்தனர் பலர். குறித்த காலத்தில், குடிலில் அடிவைத்துப் புகுந்திட்டார் அருட்பிரகாசர். கருங்கல் மனத்தினையும் கசிந்து உருக்கும் வடிவினையும், பேரின்ப நிலையினை வளர்க்கின்ற கண்களையும் ஒளி எனவும் வெளி எனவும் விளங்கும் திருவடி மலர்களையும் கண்டுவிட்டார் கல்பட்டு அடிகள்.

உள்ளம் துடிக்க, உயிர் துடிக்க, உணர்ச்சி வெள்ளம் உடல் முழுவதும் பரவி, மயிர்க்கால் சிலிர்க்க, உணர்ந்தபடி வந்து அருளிய திருவுருவங்கண்டு, அடியற்ற மரம்போல் வீழ்ந்தார், கண்ணீர் மலர்களால் திருவடிகளை அர்ச்சித்தார், மகிழ்ச்சிப் பெருக்கால் விம்மினார், அருட்சக்தியின் திருக்கரம் பற்றிய வள்ளலின் தெய்வத் திருக்கைகள் கல்பட்டு அடியவரைப் பற்றித் தூக்கிடலாயின.

மறையமுதம் பொழிகின்ற பெருமானின் மலர்வாய் இன்பத்தேன் துளிகளை வழங்கியருளியது. இரண்டு இராமலிங்கங்களும் களிப்புக்கு ஆளாகினர். கல்பட்டு அடியவரும் மற்றும் உள்ள அன்பர்களும், பெருமானின் திருவருளால் பெரும் பூரிப்பும், பேரெழுச்சியும், பேருணர்ச்சியும் உற்று நின்றிட்டார்கள்.

"பண்ணிய பூசை பலித்தது, பலித்தது, பரவினேன், பணிந்தேன், பதமலர் சூடினேன், எண்ணியபடியே என்னை ஆட்கொண்டு செல்லுங்கள் என் இன்னுயிர் நாயகரே, என விரும்பி வேண்டி வணங்கினார், கல்பட்டு அடிகள்.

சற்குருமணியின் சந்நிதானம் அடைவோம், உயர் தொண்டு செய்து துயர் துடைப்போம், கிடைத்தற்கரிய அறிவுச்சுடரைப் பெற்று விட்டோம் என்று பூரித்து மனக் களிப்புற்றார் அவர். நம்பெருமானோ, "உத்தரவு தருவோம், அப்போது வந்தடையலாம்" என்று மெய்மொழியினை அருளினார்கள்.

மெய்ஞான தேசிகனின் கட்டளைக்கு எதிர்ப்பும் உண்டோ? முடிதாழ்ந்து, அடிபணிந்து, அதனை முடிமீது கொண்டிட்டார் அவ்வடியவர். இச்செய்தியினை வள்ளற் பெருமானுக்குத் தொண்டு பூண்டு, அவர்களையே வழிபடு கடவுளாகக் கொண்டு, வாழ்நாளெல்லாம் திருவருட்பா இசையமுதில் தோய்ந்து, பிறரையும் தோய்வித்துச் சிறந்த சீடராக திகழ்ந்த, வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் 'காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப் பிள்ளை' என்பவர் தாம் எழுதிய 'பிரபந்தத் திரட்டு' என்னும் நூலில் கீழ்கண்டவாறு பாடியிருக்கிறார்...

அருயோகம் செய்கல்பட்டார் சங்கற் பம்போல்
திருநறுங்குன் றத்தவர்க்குத் தீக்கைசெய்த சற்குருவே

திடஞானம் பெற்றுய்யத் தீக்கைசெய்த பின்னர்
வடலூரில் வந்திருக்க வாய்மலர்ந்த சற்குருவே!
                     (சற்குரு புலம்பல் கண்ணி 52 & 53)

இராகம் - அட்டாணா                 தாளம் - சாப்பு
                 பல்லவி
கதிபெற்றுய்யக் கடைக்கண் பாரையாஸ்ரீராமலிங்கையா கதி
கருணை செய்ய எமக்கிங்கு ஆரையா?
               அநுபல்லவி
மதிதரு வடற்சபை ஸ்தாபக
மகிதலம் புகழ்பெறு வியாபக கதி
                 சரணம்
செல்வர்கள் சூழும் திண்ரங் கோட்டை மலையிற்
   சேர்ந்திருந்து  அஞ்ஞானம் ஏக
   சிறந்தகற்பட் டிராமலிங்கப் பிள்ளை
   சிவயோகம் பன்னா ளாகச்
செய்திருந்துந் தன்னைத் தலைவனை விளங்கும்
   செய்யகுரு வலிந்தே வந்து கிளக்கும்
   சிந்தைமேற் கொண்டிருக்கப் பலர் மதிக்கும்
   திறம் அறிந்தோமைத் தக்கவர் விதிக்கும்     கதி
                    (இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை 117)

காரணப்பட்டாரின் பாடல்களிலிருந்து நம்பெருமான் கல்பட்டாரை ஆட்கொண்டச் செய்தியினை அறிய முடிகிறது.

இதே செய்தியினை உரிமைப்போராட்டத்தில் ஈடுபட்ட 'பண்டிதை அசலாம்பிகை அம்மையாரும்' கீழ்கண்டவாறு தெரிவிக்கின்றார்...

இலகும் கல்பட்டு ஐயா என்று
   இசைக்கும் யோகி குருபரனார்
வலிய அணைந்து ஆட்கொண்டு அருள
   வருதல் வேண்டும் எனும்விருப்பம்
நிலவி நறுங்குன்றப் பதியில் இருந்தார்!
   நிமலன் அதனை அறிந்தே
அலகில் அருளால் அடைந்து அவர்க்கும்
   தீட்சை அளித்து
         (இராமலிங்க சுவாமிகளின் சரிதம்)

மேலும் நம்பெருமானார் 02-08-1866 ஆம் ஆண்டு கடலூர் அப்பாசாமி செட்டியார் வீட்டில் இருக்கையில், ஒரு கடிதத்தை 'திருநறுங்குன்றம் மகாராஜராஜஸ்ரீ நயினார் இராமசாமி நயினார்' அவர்களுக்கு எழுதுகையில், இராமலிங்க மூர்த்திகளையும் (கல்பட்டு அடிகள்) சண்முகப் பிள்ளை அவர்களையும் உடனே இவ்விடம் அனுப்பி வைக்க வேண்டுமாய் எழுதியிருக்கிறார்.

(வடலூரிலிருந்து இவ்விருவரும் 25 நாட்களுக்கு முன்னர் மேற்குறித்த இராமசாமி நாயினாரை காண சென்றும் இன்னும் திரும்பாததைக் கண்டு வள்ளலார் எழுதிய கடிதம் இது) 

இக்கடிதத்திலிருந்து நமக்குத் தெரிய்வருவது, 1866 ம் ஆண்டுக்கு முன்னரே நம்பெருமானார் கல்பட்டு ஐயாவை ஆட்கொண்டுவிட்டார்கள் என்பதே ஆகும். கல்பட்டு ஐயாவை ஆட்கொண்ட ஆண்டு எது என்பது இதுவரை சரியாகத் தெரியவில்லை.

உத்தரவு வந்தது

நம்பெருமானார் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தொடங்கிய பொழுது (தருமச்சாலை தோற்றுவிக்கும் முன்பு) கல்பட்டு அடிகளுக்கு வள்ளற்பெருமானின் உத்தரவு வந்தது !

காலம் கனிவதற்கு காத்துக் கிடந்த அன்பர்க்கு உவகை ஏற்பட்டது. ஞானப் பயிர் வளர்க்கும் நோக்கத்தோடு ஞானச் சேவடிக்கு ஈனமின்றி பணிசெய்திடும் திடத்தோடு புறப்பட்டார் கல்பட்டார்.

ஞானாசிரியரைக் காணல்

கருங்குழியினை வந்தடைந்தார். பெருங்கருணை மலரடிகளைத் தொழுதிட்டார், அழுதார், மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளத்தைக் குளிப்பாட்டினார், கண்ணீர் வெள்ளமோ உடலைக் குளிப்பாட்டியது. அவரின் உணர்ச்சி பெருக்கினைக் உணர்ந்த நம்பெருமான்
அரவணைத்து ஆட்படுத்த வேண்டும்தானே? ஆனால் கல்பட்டாருக்கு பின்னும் ஓர் உத்தரவு பிறந்தது!

"ஆறு மாத காலம் பூர்வ ஞான சிதம்பரமாகிய தில்லையம்பதியிலிருந்து, பின் நம்மை வந்தடையுங்காணும்" என்று கட்டளை இட்டார்கள் பெருமான். திருக்குறிப்பின் நோக்கம் திருத்தொண்டர்க்குப் புலனாயிற்று. மாமறைகளும் சூடரும் பாதமுடிகளைச் சூடிக்கொண்டு பயணமானார் கல்பட்டார்.

தில்லை வாழ்க்கை

சிதம்பரம் - திருமூலர் சிவயோகத்தில் திளைக்கின்ற இடம், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆனந்த நடங்கண்டது, நந்தனார் ஒளிப்பிழம்பில் ஒன்றியது, மாணிக்கவாசகர் சுத்த வெளியில் கலந்தது, சீர்காழி முத்துத்தாண்டவர் ஆடுகின்ற சேவடியை அடைந்தது.

எனவே ஒப்பற்ற தில்லைச் சிற்றம்பலத்தில் பூர்வ ஞான சிதம்பரத்தின் பெற்றிகள் விளங்குவதினால், அங்கிருந்து பயின்று மேம்பட வேண்டும் என்றே வள்ளற்பெருமான் தம் அடியவரை அனுப்பி வைத்தார்கள். பெருமான் அருளிய வண்ணம் ஆறுமாதங்கள் தில்லைக் கூத்தனுக்கு அடிமை பூண்டார் கல்பட்டார். அதன் பின்னர் மீண்டிட்டார் வடல் வெளிக்கு! 

1867 ஆம் ஆண்டு, கோடைக்காலம், கடும் வெப்பம் உயிர்குலத்தைக் கலக்கி நின்றது. நீர் எங்கே என்று தேடி நிலை குலைய வைத்தது. நிழல் எங்கே என்று ஓட வைத்தது. சூரியனின் கதிர்கள் சூடேறி நிற்கும் மண்ணில் கால் வைத்து நடப்பதற்கே மக்கள் அஞ்சும் உச்சி வேளையில் ஓர் தவ வடிவம் நடந்துக்கொண்டிருந்தது.

அண்டம் எல்லாம் தலைவணங்கும் வடலூரைக்காண அடங்காத ஆவல்! வான்நாடர் கூடி நின்று வாழ்த்தும் வடல்வெளியைக் காண தணியாத ஆர்வம்! உண்மையைத் தெரிந்துக்கொள்ளச் சித்தர்கள் திரண்டு நிற்கும் உத்தரஞான சிதம்பரமாம் வடலூரை வணங்கும் குறையாத ஊக்கம்! மக்கள்குலம் பசி அடங்கவும், வள்ளலின் வாயுரை கேட்கவும் வந்துவந்து போகும் வடலூரைக் கண்டிட வேண்டும் என்னும் உயரிய நோக்கம்! கருத்தினில் களிப்பு பொங்க, வயிற்றினுள் பெரும்பசி பொங்க, வள்ளற் பெருமான் மலரடிகளை வணங்கும் வேட்கை கொண்டு, வடல்வெளி நோக்கி வந்துகொண்டிருந்தது அத்தவ வடிவம்.

கல்பட்டு அடியார் விரைந்து சென்று பெருமானின் திருமுன்பு விழுந்த தடித்த தடியது போல் விழுந்திட்டார்!

கண்டுவிட்ட மகிழ்ச்சி கண்ணீர், உணர்ச்சிப் பெருக்கில் உடல் புல்லரிப்பு, தாய்முகம் கண்டு தேம்பும் இளங்குழந்தையின் ஏக்கம், கடைத்தேறும் காலம் வருமா? என்ற வினாவுக்கு விடை கண்ட மனநிறைவு, இத்தனையும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டிருக்கும் நிலையில் அருட்சூரியனின் திருவடிகளைப் பிடித்துக் கொண்டு அவ்வடியவர் கிடந்தார்.

வெளியில் ஆட்சி செய்யும் வெங்கதிரின் கொடுமைகளை எல்லாம் அந்த ஒளிக் கதிரவன் மாற்றிவிட்ட அருமை கண்டு ஆற்றாமை கொண்டு வீழ்ந்து கிடக்கும் அடியவரை அரவணைத்து ஆறுதல்மொழி வழங்கினார் நம்பெருமானார்.

போதாதாங்காணும்?

வந்தடைந்த கல்பட்டு அடியவரின் உள்ளத்துப் பசியையும் வாட்டும் வயிற்றுப் பசியையும் ஒருங்கே உணர்ந்திட்டார்கள் பெருமான். கூழைக் கரைத்து வைத்திருக்கும்படி முன்னரே திருவாய் மலர்ந்திருந்தார்கள். குறிப்புணர்ந்த அன்பர்கள் கூழினை கொண்டு வந்தனர்.

நம்பெருமானின் திருக்கைகள் கூழினை ஏந்தி வார்க்கத் தொடங்கின. இருகை ஏந்திக் குடிக்கத் தொடங்கினார் கல்பட்டு அடிகள். நமக்கு கூழ்தானா உணவு என்று அவர் எண்ணவில்லை. பெருமான் வழங்குவது பேரமுதமாகுமன்றோ? ஊற்ற ஊற்றக் குடித்துக்கொண்டே இருந்தார். வயிறு நிறைந்து விட்டது. இளைபறக் கிடைத்தக் கூழ் போதும்., போதும் என்று சொல்லத் துணிவு எழவில்லை. சற்குருநாதரிடம் சாதாரண அடியவன் எப்படி போதும் என்று சொல்லவது என நினைத்தார். அதனால் மேலும் குடித்துக் கொண்டிருந்தார். அதனை உணரலானார் நம்பெருமானார்.

"போதாதாங்காணும்?" என வினவி கூழ் ஊற்றுவதை நிறுத்திக்கொண்டார்கள். இசைவு கிடைத்த பின்பே கல்பட்டாரும் குடிப்பதை நிறுத்தினார். பசி ஓடியது! தத்துவங்கள் தழைத்தன! அகத்திலும் முகத்திலும் மலர்ச்சி ஏற்பட்டது. ஆன்ம விளக்கமும், கடவுள் விளக்கமும் அதிகரித்தன. ஏழையர் பசி போக்கும் அவ்வுண்மை வழிபாட்டிற்கு ஆட்பட்டார் கல்பட்டார். 

சிலுகிழைக்காதீர்கள்!

அப்போது பெருமானின் ஆணைப்படிச் சாலையின் கிழக்குப் பக்கத்தில் கிணற்றிற்கருகில் இருந்த குடிலில் புகுந்திட்டார் கல்பட்டார். ஒருமையுடன் வள்ளலின் திருவடி மலர்களைத் தியானித்து, யோகத்தில் அமர்ந்திட்டார். "எண்ணிய வண்ணம் இரு" என்ற இடத்தில் இருந்தது மனம். அவ்வாறு இருந்தது ஒருசில மணிகளும் அல்ல, ஒரு வாரகாலத்திற்கு அப்படி ஒருமுகப்பட்டு ஒன்றி நின்றார். அவரது நிலை பலருக்கும் வியப்பளித்தது, அவ்விடத்தில் சூழ்ந்து நிற்கத் தொடங்கினார்கள். கல்பட்டாரின் ஒருமைக்கு ஏதேனும் இடையூறு நேரலாம் என்று உணர்ந்த நம்பெருமானார், "சிலுகிழைக்காதீங்காணும், எழுந்து வருவார் பொறுத்திருங்கள்" என்று தொல்லை கொடுக்காதிருக்கும்படிக் கட்டளையிட்டார்கள். எம்பெருமானாரால் ஆட்கொள்ளப்பெற்ற கல்பட்டார் தன்னை மறந்து பரவச நிலை எய்தினார்.

ஓலைக்குடில் யோகம்

அதற்குப் பின்னர் பரவசநிலை மாறிப் பன்முறை பணிந்து நம்பெருமானைப் போற்றி நின்றார். யோகநிலை மாறாது விளங்கத் தனியிடம் தந்தருளினார்கள் வள்ளல். அங்கே ஒளிவளர் உணர்வில் யோகநிலை நித்திரை செய்தது அவ்வோகக் குழந்தை. அக்குடில் இப்போதும் சாலைக் கிணற்றின் தென்புறம் திகழ்கின்றது.

சாலை, பிணி தீர்க்கும் மருந்தகம், பசிப்பிணி ஒரு புறம், அறியாமைப் பிணி மற்றொருபுறம், வருவார் வகையறிந்து மருந்தளித்தார்கள் வள்ளற்பெருமான். பசிப்பிணிக்கு ஆவண செய்த பின் அறிவுப் பசியையும் கவனித்தார்கள். அன்பர்கள் தரம் அறிந்து சொற்பொழிவு செய்தார்கள். கல்பட்டாருக்கு வேண்டிய பகுதிகள் வருங்கால் வள்ளலே அவ்வடியவரை திருச்சமூகத்திற்கு அழைப்பித்தருளுவார்கள், உரைப்பன உரைத்தருளுவார்கள், மெய்யமுதம் ஊட்டுவார்கள், மேன்மைக்கு வழிகாட்டுவார்கள். பெருமான் கழலினை நினைந்து ஒளிவளர் ஞான தீபத்தினின்று உருவாகும் உணர்வினைப் பருகிபருகிப் பரவசம் அடைந்திட்டார்!

உம்மைச் சொல்லவில்லைங்காணும்!

ஒரு சமயம் சாலையில் வள்ளல் கருத்து மாமழை பொழிந்துக்கொண்டிருந்தார்கள். மழைபெய்தாலும் உழுது வைக்காத நிலத்தில் ஈரங்காக்காது. அதைப்போல பக்குவம் அற்றவர்களுக்குச் சொல்வதெல்லாம் வீண் என்று கருதினார் போலும்! சொற்பொழிவிற்கு இடையில், "இதுகாறும் அறிவுறுத்தியும் நூற்றில் ஒருவரெனும், ஆயிரத்தில் ஒருவரேனும் தேறவில்லையே!" என்று வருந்தி உரைத்திட்டார்கள்.

அதிகேட்டுக் கூட்டத்தார் அனைவரும் இடித்த புளி போலும் எழுச்சி இன்றி இருந்திட்டார்கள். ஐயாவின் உரை ஒளி பக்குவப் பட்டுள்ள கல்பட்டாரின் நெஞ்சக் கண்ணைத் தாக்கியது, கூசி நடுங்கினார், உடல் படபடத்தது, சோபம் மீதூற சோர்ந்து வீழ்ந்திட்டார், ஆற்றொணாத் துயர்க் கடலில் அழுந்திட்டார்!

அது கண்டேனும் யாரும் தம்மை அலட்டிக்கொள்ளவில்லை. ஏன் வீழ்ந்தார் என்று எண்ணவே அவர்களால் முடியவில்லை. எவ்வுணர்வும் அற்றவர்களாகவே இருந்தார்கள்!

அடியவரின் மனநிலை அறிந்தவர்கள் நம்பெருமான். எனவே அயர்ந்து விழுந்தவரை விரைவாக எடுத்து ஆசுவாசப் படுதினார்கள். அயர்வினை நீக்கினார்கள். உணர்ச்சியும் விழிப்பும் பெறச்செய்தார்கள்! தன் நிலைக்கு வந்ததும், "உம்மைச் சொல்லவில்லைங்காணும்" என்று ஆறுதல் மொழி பகர்ந்தருளினார்கள்.

தலைமை சார்ந்த சாதகன் ஒருவன் தான் தேறவில்லை என்று உணர்ந்தால் அப்படித்தான் அவனுக்குச் சோபம் உண்டாகும். அத்தோடு ஆருயிரினை விட்டு விடக்கூடத் தயங்கமாட்டான். அத்தகைய தீவிரதரம் உத்தமப் பக்குவம் வாய்க்கப் பெற்றவராகக் கல்பட்டு அடியவர் மேம்பட்டு விளங்கினார்!

தொண்டு செய்வது உண்டுங்காணும்!

மாறாமல் ஒளிரும் யோகத்தில் அயராது திளைத்திட்டார் கல்பட்டார். அதன் காரணமாகத் தாளாத வெப்பத்திற்கு ஒருமுறை அடியவர் ஆளாயினார். உடல் முழுதும் சிரங்கு கண்டதாகவும், நீர் பெருகி அது ஆற நீண்ட நாட்கள் ஆயிற்று எனவும் கேள்வி.

அத்தகு நேரத்தில் நாளும் உணவு எடுத்துச் சென்று கல்பட்டு ஐயாவிற்குத் தர கட்டளையிட்டார்கள் பெருமான். இடையில் ஒருமுறை வள்ளல் வெளியூருக்கு எழுந்தருளினார்கள். சாலை அன்பரை அழைத்து மறதியின்றிக் கல்பட்டுக்கு உணவு வழங்கும்படித் திருவாய் மலர்ந்திருந்தார்கள்.

சாலை அன்பர்கள் மேலை அன்பர்கள் ஆகிவிட்டனர் போலும், அவரை மறந்து விட்டனர். எனவே கல்பட்டு ஐயாவிற்கு உணவும் செல்லவில்லை, உண்கிறீர்களா? என்று கேட்கவும் இல்லை. இப்படியே சில நாட்கள் இருண்டுஉருண்டன.

வெளியூரிலிருந்து நம்பெருமானார் வடல்வெளிக்குத் திரும்பினர். வந்தவுடன் 'கல்பட்டுக்கு உணவு போயிற்றா?' என்று வினவினார்கள். எல்லோரும் கல்லாய்ச் சமைந்துவிட்டனர், என்னவென்று சொல்வர், வாய்திறந்து ஒருவார்த்தையும் சொல்லாமல் நின்றனர். "பிச்! (பைத்தியம்) உணவு கொண்டு வாருங்காணும்!" என்று ஏவலிட்டருளி தாமே உணவுக் கிண்ணத்துடன் கல்பட்டாரிடம் புறப்பட்டருளினார்கள்.

வள்ளற்பெருமான் எழுந்தருள்வதைக் கண்டுவிட்ட கல்பட்டார், பதைபதைத்தார்! உணர்ச்சி மயமானார்! 'அடியேனை அழைத்திட்டால் ஆங்கு வரமாட்டேனா? எதற்காக இவ்வண்ணம் எழுந்தருளியதோ? மன்றில் ஒளிரும் சேவடிகள் அன்றுவந்து மலையேறி ஆண்டதுதான் போதாதோ? இன்றும் இப்படியும் மண்ணுறுத்த எழுந்தருள எண்ணியதோ? என்ன செய்வேன்? என்ன செய்வேன்? என்வினை இப்படியும் ஆயிற்றோ?' என்று ஆற்றாமை கொண்டு அவதிப்பட்டார்!

அஃதுணர்ந்த நம்பெருமான், "அடியார்களுக்குச் சிவஞானிகள் தொண்டு செய்வது உண்டுங்காணும்" என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். கல்பட்டு அடிகளின் கையில் தாமரை இலையை வைத்தருளினார்கள். சோற்றினை உருட்டி உருட்டி வைத்தருளினார்கள். அச்சமும் நாணமும் அயர்ச்சியும் சோர்வும் அப்படியே கெளவ்விக் கொள்ள, வாங்கி வாங்கி உண்டு புடைத்து நின்றார் கல்பட்டார்.

வள்ளற்பெருமானிடம் கொண்ட தொடர்பு யாரோ சிலருக்குத் தான் கிட்டப் பெற்றிருக்கின்றது. அவர்கள் அத்துணை பேரும் கொடுத்துவைத்தவர்கள். அதிலும் பெருமானின் திருக்கரங்களால் அமுதுண்ட பெருமை கல்பட்டார் ஒருவருக்கே வாய்க்கப் பெற்றது. எனினும் கல்பட்டாரின் சரிதம் படிக்கும் நாமும் ஏதோ ஒருவகையில் சென்ற பிறப்பில் வள்ளலாரிடம் தொடர்பில் இருந்திருப்போம் என்பதனை உணரவேண்டும்.

ஏழைகளுக்கு இரங்குங்காணும்?

சாலைக்கு வருவோர் பலராவர். அவர்களுள் வசதி வாய்ந்தவரும் உண்டு, வசதி அற்றவரும் உண்டு. அவர்களுக்கு எப்படி உதவுவது? அதுபற்றி தெரிவிக்க, ஒருநாள் கல்பட்டு ஐயாவையும் தலை மாணாக்கரையும் வள்ளல் அழைப்பித்தருளினார்கள்.

"ஒன்று உரைப்பேன். ஊன்றிச் செய்யுங்காணும்" என்று உரைத்திட முற்பட்டார்கள். "எவ்வகை ஆதரவும் இல்லாத ஏழையர் முகத்தை இங்குள்ளவர் பலரும் எண்ணிப்பார்ப்பதில்லை. வெள்ளை வேட்டிக் காரர்களுக்கு வேண்டியது கிடைத்துவிடும். ஆதலின் அக்கறை வைத்து ஆதரவற்றவர்கள் பசிநீக்க, கூழினைக் கண்ணும் கருத்துமாக வார்த்து வாருங்கள்" என்று அறிவுறுத்தினார்கள். அதுமுதற்கொண்டு தலை மாணவரும் கல்பட்டு ஐயாவும் போட்டிப் போட்டுக்கொண்டு நான் நீ எனக் கூழை வார்த்து ஏழையர் வயிற்றுள் பற்றியெரியும் நெருப்பைத் தணித்து வந்தார்கள்.

அத்தகைய உத்தமப் பணியைச் செய்ய நம்பெருமான் யாருக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்? உண்மை அன்பு உண்மை இரக்கம், உண்மை நம்பிக்கையுடைய உண்மைத் தொண்டர்கட்கு அன்றோ!

மகத்துகள்

பெருமானை அண்டி அருள்நெறி பழகும் அன்பர்கள் பலருள் தலை நின்றவர் கல்பட்டு ஐயா, உண்மைச் சாதனத்தில் தோய்ந்து உண்மை அடியவராய் விளங்கியவர் கல்பட்டு ஐயா. சுத்த சன்மார்க்கச் சங்கத்துச் சாதுக்களின் வரிசையில் முன்நின்றவர் கல்பட்டு ஐயா. அவரைச் சுத்த சன்மார்க்கச் சங்கத்து மகத்து அதாவது மகாத்மா என்று அக்காலத்திலேயே அழைத்தனர்.

ஒருகால் நம்பெருமான் தொழுவூர் வேலாயுதனார் பாடல்களை ஆய்ந்து 'உபயகலாநிதிப் பெருபுலவர்' என்னும் உயரிய பட்டத்தினை வழங்கி மகிழ்வித்தார்கள். அப்படித் தலைமாணாக்கரின் பாடல்களைப் பார்வையிட்ட போது, அது சுத்த சன்மார்க்கச் சங்கத்து சாதுக்கள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது அப்பட்டமளிப்பு விழாவிற்குக் கல்பட்டாரும் நம் பெருமானாரால் அழைக்கப்பட்டார். இச்செய்தியினை, தொழுவூராரின் திருமகனார் திருநாகேசுவரர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்...

"ஒரு காலத்தில் இந்நூலாசிரியர் (தொழுவூரார்) பக்தியினால், பொறித்து வைத்திருக்கும் பாக்களை தர்மலிங்க பிள்ளை, வெங்கடேச ஐயர், அடூர் குருக்கள் என்னும் சபாபதி சிவாச்சாரியார் முதலியோர் மூலமாகக் கேள்வியுற்று சுவாமிகள் அவைகளை வரவழைத்து அவ்விடம் கூடியிருந்த சுத்த சன்மார்க்க சங்கத்தினராகிய ஆனந்தநாத சண்முக சரணாலய சுவாமிகள், கல்பட்டு இராமலிங்க சுவாமிகள் முதலிய மகத்துகள் முன்னிலையில் தானும் உடனிருந்து அவைகளின் சொற்சுவை, பொருட்சுவை, முதலியவைகளைஆராய்ந்து வியந்து, "நமது முதலியாரப்பா மதுர வாக்கிது, வித்துவான் பாட்டிது," என்று இடையிடையே அருமை பாராட்டி, "மலர்வாய் மலர்ந்த மணிவார்த்தையிது" என்று தமது திருக்கரம் கொண்டே வரைந்தும் "உபயகலாநிதிப் பெரும்புலவர்" என்னும் பட்டமளித்துப் பொறித்து வைத்துங் களித்தார்."
                   (மார்க்கண்டேய புராணம், தொழுவூர் வேலாயுதனார் வரலாறு)
மேற்குறித்த வரலாற்றுச் செய்தியின் மூலம் கல்பட்டு ஐயா சுத்த சன்மார்க்க சங்கத்தினரால் பெரிதும் மதிக்கப்பட்ட மகத்துகளுள் ஒருவர் என்பது தெரிகின்றது.

கிடக்க விரும்புதுங்காணும்!

நம்பெருமானும், கல்பட்டாரும் ஒருகால் மாட்டு வண்டியில் பயணம் செய்தார்கள், இடையில் பெருமான் கல்பட்டாரை நோக்கி, "கிடக்க விரும்புதுங்காணும்" என்று படுத்திட விரும்பினார்கள்! உடனே கல்பட்டு ஐயா நம்பெருமானின் திருமுடியினைத் தம் தொடைமீது வைத்துத் தாங்கிக்கொண்டார். அவ்வாறு கல்பட்டாரின் தொடையில் நம்பெருமானார் விரும்பியே படுத்திட்டார்கள்!

கல்பட்டாரின் தொடையில் வள்ளல் தம் திருமுடியினை வைத்துப் படுத்திடும் புண்ணியம் எந்த அடியவர்க்கு இதுவரை கிட்டியது? நம்பெருமான் சாதாரணமானவர்கள் அல்லவே! எல்லாம் வல்ல இறைவனின் அடியினை தம் சிரசில் தாங்கியவர்கள், இறையடியை அறிந்தவர்கள், இறைநடுவை அறிந்தவர்கள், இறைமுடியை அறிந்தவர்கள் அன்றோ!
அம்மட்டோ? எல்லாம் வல்ல இறைவனின் அடிநடுமுடி கடந்து, அப்பாலும் அப்பாலும் கண்டிட்டவர்கள்! அத்துடன் அது அதுவாக நிறைந்து ஆண்டவனாக விளங்கி நிற்பவர்கள். அப்பெருமானின் அற்புதத் திருமுடியைத் தாங்கும் பெரும்பேற்றினைக் கல்பட்டார் தொடைகள் பெற்றன. ஒப்பற்ற அப்பேற்றினை பெறுதற்கு எத்தனை கோடி தவந்தான் கல்பட்டாரின் தொடைகள் செய்தனவோ? யாரே பெறுவார் அப்பேறு?

உலகமெலாம் இப்படி இருக்கிறதேங்காணும்!

அருட்பிரகாச ஆண்டவரையும், பெரும்பேறு பெற்ற அடியவரையும் தாங்கிக் கொண்டு, வண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. அப்போழுது வியப்புக்குரிய நிகழ்ச்சி ஒன்று நிகழ்ந்தது!

நமது பெருமானின் திருமலர்க் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்ஙனம் பெருகிய கண்ணீர் கல்பட்டாரின் தொடையை நனைத்தது பின்னும் கண்ணீர் வழிந்து வண்டிப் பலகையையும் ஈரப்படுத்தியது. மேலும், வண்டிப் பாரையுங் கடந்து கீழே வழிந்துக் கொண்டிருந்தது. அப்படிச் சிறிது நேரம் மட்டும் நிகழவில்லை, சிலமணி நேரம் தொடர்ந்து நிகழ்ந்திட்டது!

அதனைக் கண்டார் கல்பட்டார், எதுவும் எண்ணவில்லை. மனம் அடங்கிய நிலையுற்று ஒருமையில் நிறைந்தார். அப்படி பெருமான் விழி, நீர் வடிப்பதும், கல்பட்டார் மனம் அடங்கி ஒருமையில் இருப்பதும், தொடர்ந்துக் கொண்டிருந்தது. நெடுநேரம் கடந்தும், பெருமான் கண்ணீர் பெருக்குவது நின்றபாடில்லை. மனம் விரிந்து, கண்ணீர் பற்றி சிந்திக்குமானால், பெருமான் கண்ணீர் பெருகும் நிலை கலையுமே என்று கருதியவராய் கல்பட்டு ஐயா, மேலும் ஒருமுகப்பட்டு உள்முகத்தில் நின்றார். பெருமானின் நிலையோ மாறிடவில்லை. தொடர்ந்திருந்தது பார்த்து அயர்ந்த அடியவரின் ஒருமை கலைந்தது. நெஞ்சம் நினைக்கத் தொடங்கி விட்டது.

மூவாசையையும் வென்றவர்கள் நம்பெருமான், இறைஞானப் பெருஞ் செல்வத்தை நிகரற்றுப் பெற்றவர்கள் அவர்கள். அத்தகைய பெருமானுக்கு உற்றகுறை என்னையோ? என்னையோ? எதனால் இப்படி அழுது கொண்டிருக்கிறார்கள்? என்று நினைத்தார் கல்பட்டார்!

அவர் நினைவைப் பெருமான் உணர்ந்திட்டார்கள். உடனே எழுந்து கண்ணீரைத் துடைத்தவாறு, "பிச்! அதற்கு இல்லைங்காணும். இந்த உலகமெலாம் இப்படி இருக்கிறதே என்கிறதுக்குத் தாங்காணும்!" என்று உரைத்தருளினார்கள்.

கல்பட்டாரின் விரிந்த நினைவு பெருமானாரின் நிலையை மாற்றிவிட்டது. அருள்நெறியைக் காதலித்து, உலகமெலாம் துன்பம் அற்று ஒன்றாதல் என்று வருமோ? என்பதனால் அல்லவா இப்படி அழுது அழுது ஆராமை அடைந்தார்கள்! உலகமெலாம் பேரின்ப நிலையிற் கலந்து அன்பால் ஒன்றுவது என்றோ? இந்தக் கவலை எத்தனை எத்தனை பேருக்கு இருக்கும்? என்று எண்ணி எண்ணித் துயரில் அழுந்தினார் கல்பட்டு ஐயா, அந்தோ! உயிர்களின் துன்பமெலாம் ஓடி இன்பமெலாம் பாடியாடும் நாள் எந்நாளோ? என அயர்ந்திட்டார் கல்பட்டார்.

நெருப்புப் போட்டுக் கொளுத்துங்காணும்!

வேதாந்த சித்தாந்த சமரசம் புகட்டும் நூல் ஒழிவிலொடுக்கம். அதனை இயற்றியவர் சீர்காழிக் கண்ணுடைய வள்ளலார். அந்நூலுக்கு விளக்கம் எழுதிப் பதிப்பித்தவர்கள் நம்பெருமானார் ஆவர். ஒருநாள் ஆடூர் சபாபதியார் அந்நூலை ஓதிக் கொண்டிருந்தார். அப்பக்கமாக வள்ளற்பெருமான் சென்று கொண்டிருந்தார்கள். படிப்பதைக் கண்டு நின்றார்கள்...
           
"என்ன புத்தகம்?" என்று வினவினார்கள்.

சட்டென்று எழுந்து பணிந்து நின்று, "ஒழிவிலொடுக்கம் சுவாமி!" என்றார் சபாபதியார்.
"இப்புத்தகத்தை நெருப்புப் போட்டுக் கொளுத்துங்காணும்" என்று சொல்லிக்கொண்டே சென்றார்கள் வள்ளல்.

சபாபதியார் நெஞ்சம் ஆட்டங் கண்டது. இதைப் பதிப்பித்தவர்களே இப்படிச் சொல்லுகிறார்களே! காரணம் எதுவாக இருக்கும்? என்று தலையைப் பிய்த்துக்கொண்டார். எண்ணிஎண்ணிப் பார்த்தார், ஏதும் புரியவில்லை.

பெருமானின் உள்ளக்கிடக்கையை விளக்கவல்லாரைப் பற்றி நினைத்ததும், கல்பட்டு ஐயா நினைவு வந்தது. உடனே ஓடினார். கல்பட்டின் முன் நின்றார். அவரிடம் வள்ளல் கருத்தினைச் சொன்னார்.

அவர் "நீர் அப்புத்தகத்தை தொடவே அருகரல்லர்!" என்று உண்மையை விளக்கினார். இது பற்றி இசைவாணர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப் பிள்ளை பாடிய பாட்டு ஒன்று பின்வருமாறு உணர்த்துகிறது...

தாமச் சிடுவித்த நூலை ஆடூர்சிவா
  சாரியார் அன்பொடு படிக்கத்
தரியாது எதிர்வந்து அங்கியிற் சுடுமென்று
  சாற்றிய தால்மனம் துடிக்கத்
தக்கணங் கல்பட்டுச் சிவயோ கியரைச்
  சார்ந்து புகலஅம் மொழிக்கு மெய்யுரை
தக்கவர் நீரலர் என்று புகன்றிடும்
  தன்மை யறிந்த எம்போதம் அகன்றிடும்.
         (இராமலிங்க சுவாமிகள் சரித்திரக் கீர்த்தனை - சரணம் 183)

உரையமுதம் உண்ணும் கல்பட்டார்

வள்ளல் கேட்பவர் மனங்கொள்ளும்படிப் பல உரை விரிப்பவர்கள். ஒருகால் வடகலை வைணவர்க்காக வேதாந்த தேசிகரின் 'மூன்றில் ஒரு மூன்று' என்னும் குறளுக்கு நான்கு உரைகள் உரைத்தருளினார்கள். மற்றொருகால் திரிசிரபுரம் மகாவித்வான் பெருமான் திருமுன்பு பணிந்து இங்கித மாலை பாட்டொன்றுக்கு உரையருள வேண்டினார். வள்ளல் முதல் பாட்டுக்கே உலகியல் தொடர்புள்ள பல உரைகளை நான்கு மணிநேரம் விளக்கினார்கள், அது அவருக்கு புரிந்தது. மேலும் அனுபவ உரையாகிய பேரின்ப உரையினை சொல்லத் தொடங்கினார்கள். அது புரியாமல் மீனாட்சி சுந்தரனார் திகைத்தார், தொழுவூராரும் கைவிட்டார் என திருவாய் மலர்ந்து பெருமான் விரிவுரையை நிறுத்திக் கொண்டார்கள்.

கேட்பவர் பக்குவம் அறிந்து சொல்லும் பாங்கு வியப்புக்குரியது. சமயத்தில் பற்றுள்ளவர்களுக்குச் சைவம், வைணவம் முதலிய சமய சார்பான விளக்கம், மதத்தில் பற்றுள்ளவர்களுக்கு வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதச் சார்பான விளக்கங்களையும், அல்லாதவர்களுக்கு உலகியல் சார்பான விளக்கம், கற்ற புலவர்களுக்கு இலக்கண இலக்கிய பற்றிய விளக்கம், தொழுவூராருக்கு உயர்வுடைய விளக்கம், கல்பட்டாருக்கு அனுபவ விளக்கம் என்று இப்படி தனது கருத்துமணிகளை நம்பெருமான் தந்தருள்வார்கள்.

குருவித் தலையில் பனங்காய் வைக்க அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அவ்வாறு முடிந்த முடிவான தெள்ளமுத கருத்துகளை அருந்தி அருந்தி எத்தனை தடவைதான் இன்புற்றனரோ கல்பட்டு அடிகள்!

கல்பட்டு ஐயாவின் ஆர்வம்!

சன்மார்க்க சங்கத்தினர் நன்னெறிகளை உலகினர்க்கு உணர்த்திட விழைந்தனர். அறம்பொருள் இன்பம் வீடு என்னும் நால்வகைப் பொருள்களையும் உலக மக்கள் காலமுள்ள போதே அறிந்து அனுபவித்திட உதவ முனைந்தனர். அங்ஙனம் அறிவதற்கும் அனுபவித்தற்கும் விவேகம் விருத்தியாதல் வேண்டும்.

அதனை அடைவதற்குத் தக்க நன்முயற்சியைத் தரக்கூடிய பத்திரிகை ஒன்றை 1867 க்குப் பின் வழங்குவிக்க இச்சை கொண்டனர், அதற்குச் "சன்மார்க்க விவேக விருத்தி" எனப் பெயரிட்டனர். அது சிறப்புற நடையிட அன்பர்கள் பலர் நன்கொடைகள் அளிக்க விரும்பினர். ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு உதவிட முன்வந்தனர்.

மாதந்தோறும் தாங்கள் தருவதை ஏடு ஒன்றினில் குறித்துக் கையொப்பம் இட்டனர். கல்பட்டு அடிகளும் அவ்வேட்டில் கையெழுத்திட்டு 2 அணா பொருள் உதவி செய்ய ஒப்புதல் அளித்தனர். நம்பெருமானார் 1 ரூபாய் அளித்தார், மற்றுமுள்ளவர்களும் அளித்துள்ளனர்.

ஆதலின் உலகமெலாம் சன்மார்க்கம் தழைத்து ஓங்குவதில் கல்பட்டு ஐயாவிற்கு இருந்த ஆர்வத்தினை அறிந்திடலாம். அதில் அவருக்கு இருந்த ஈடுபாடு பெரிது.

                         (இரண்டாம் பாகம் தொடரும்) 

                             


   

 No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.