Tuesday, July 23, 2013

வள்ளலாரும் வாரியாரும்





வள்ளலாரும் வாரியாரும்

அன்பர்களே! திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள், தாம் எழுதிய 'செல்வம் சேர்ந்தது எப்படி' என்ற நூலிலிருந்து இரண்டு நிகழ்ச்சியினை மட்டும் இங்கே நமக்காக பதிவு செய்துள்ளேன், படித்து பாருங்கள் அருமையாக இருக்கும்...

வள்ளலார் வான் கருணை:

இறையருளால் 1941 முதல் 1950 வரை வடலூர் சத்திய ஞான சபைத் திருப்பணி செய்து கொண்டிருந்தேன்.

ஒரு மாதம் வேளையாட்களுக்கு சம்பளம் தரப் பணம் இன்றி நகைகளை அடகு வைத்து 3500 ரூபாய் கடன் வாங்கிச் சம்பளம் தந்தேன். 'வள்ளல் பெருமானே! அணிகலன்களை அடகு வைக்கும் நிலை வந்ததே', என்று எண்ணி உள்ளத்தில் ஆழ்ந்த வருத்தம் ஏற்பட்டது.

ஒரு நாள் வடலூரில் என் அன்பார்ந்த மூர்த்தியாகிய வடலூர் முருகனை வேண்டிக்கொண்டிருந்தேன். ஒரு கணவனும் மனைவியும் வந்து வணங்கினார்கள்.

அருகில் இருந்த ஒருவர், 'இவர் தனமும், மனமும் படைத்தவர்', என்று என் செவியில் கூறினார்.

நான் அந்த தம்பதிகளைப் பார்த்து, 'எந்த ஊர்?' என்று வினவினேன்.

'தெம்மூர், இராஜமாணிக்கம் பிள்ளை', என்று அவர் கூறினார்.

'உங்கள் ஊரில் ஒரு விரிவுரை புரிவேன். சத்திய ஞான சபைத் திருப்பணிக்கு பொருளுதவி புரியுங்கள்' என்றேன்.

அவர் அகமும், முகமும் மலர்ந்து, 'சரி என்றார்'. ஒரு நாள் குறிப்பிட்டு, சிதம்பரத்திற்கு அருகில் உள்ள தெம்மூருக்குச் சென்றேன். அன்று ஒரே மழை கொட்டியது. வீதியெல்லாம் வெள்ளம். எனக்கு வருந்தியது உள்ளம். 'மழையினால் மக்கள் கூடி விரிவுரையைக் கேட்டு மகிழமுடியாது. மக்கள் திரண்டு நிகழ்ச்சி நன்கு நடைபெற்றால்தானே, உடையவர் உள்ளம் உவந்து, திருப்பணிக்குக் கனிசமாகப் பொருள் தருவார். இப்படியாயிற்றே!' என்று வருந்தினேன்.

மழை நின்றது, வீதியெல்லாம் சேறு. தென்னை ஓலைக் கீற்றுகளையும், வைக்கோலையும் பரப்பினார்கள். மிக்க ஆர்வம் உள்ள அன்பர்கள் ஈரத்தை பொருட்படுத்தாது அமர்ந்தார்கள்.

வள்ளலார் வரலாற்றைக் கூறினேன். நிகழ்ச்சி ஒருவாறு நிரைவேறியது. இராஜமாணிக்கம் பிள்ளை 500 தருவார், நாம் 1000 கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

பிள்ளையவர்கள் மனைவியாருடன் வந்து வணங்கினார், ஒரு பெரிய தட்டு நிரைய ஆறு ஏழு பேயன் பழச்சீப்புகள், ஒரு கட்டு வெற்றிலை நிறையப் பாக்கு இவைகளை கொணர்ந்தார்.

அதைப்பார்த்தவுடன் என் மனம் திகைத்தது. சில நவராத்திரி விழா, ஆண்டு விழாக்களில் விரிவுரை செய்தால் பழங்கள் நிரைய இருக்கும். பழத்திற்கு அடியில் 25 ரூபாய் நோட்டு மட்டும் இருக்கும். இது எனது அனுபவம்.

இப்போது இங்கே நிரைய பழம் இருக்கின்றதே, திருப்பணிக்கு நோட்டு குறையுமே என்று எண்ணினேன்.

இதற்கு நேர்மாறாக, பழத்தட்டுக்கு மேல் 100 ரூபாய் நோட்டுகள் 35 இருந்தன. நான் நகைகளை அடகு வைத்து 3500 ரூபாய் கடன் பட்டிருப்பது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. என்ன கடன் பட்டுள்ளதோ அந்த அளவில் பணம் இருந்தது. 3000 தந்திருக்கலாம், அல்லது 2500 தந்திருக்கலாம். இந்த அற்புத நிகழ்ச்சி என் மனத்தை உருக்கியது. ரசீது தந்துவிட்டு அவரிடம் விடை பெற்று புறப்பட்டேன். அன்றிரவு எனக்கு உறக்கம் வரவில்லை. வள்ளலாரின் வான் அருளை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்தது.


பக்தியை கெடுக்கலாமா?

1937-ல் புரசைவாக்கம் டாணாத் தெருவில் சிறு தேவதைக்கு பலியிட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கு நான் சென்று, 'கடவுள் பெயரால் - கருணையே வடிவான கடவுள் திருமுன் உயிர்பலியிடுவது பாவம். வேறு எந்த மதத்தினரும் திருக்கோயிலில் உயிர்பலியிடுவதில்லை. இந்துக்களாகிய நாம் இவ்வாறு செய்வது மன்னிக்க முடியாத குற்றம். இவ்வாறு செய்வது பாவச் செயல், என்று உருக்கமாக விரிவுரை செய்தேன். அங்கிருந்த மக்கள் என் சொற்களைக்கேட்டுப் பலியை நிறுத்திவிட்டார்கள்.

அடுத்த வாரம் பலரும் பாராட்டுகின்ற ஒரு பிரபல சன்யாசி அங்கு சென்றார். பலியை நிறுத்திய செய்தியை அவர் கேட்டார். உடனே அவர் பின் வருமாறு கூறினாராம்.

'வாரியார் இப்படிச் செய்தது சரியாகாது. ஆண்டுக்கு ஒரு முறைதானே பக்தர்கள் தெய்வபக்தியுடன் பலியிடுகிறார்கள். அவர்களைப் பலியிடக்கூடாது என்று தடுத்து நிறுத்தியது நியாயமாகாது. பக்தியை கெடுக்கலாமா? உண்மையிலேயே வாரியாருக்கு ஜீவகாருண்யம் இருக்குமானால் தினம் ஆயிரம் ஆயிரம் ஆடுகளை வெட்டுகின்ற கசாப்பு கடையில் சென்று மறியல் செய்யலாமே? அப்படிச் செய்யாமல் எப்போதோ ஒருமுறை பக்தியுடன் பலியிடுவதை நிறுத்தி அவர்களின் பக்தியைப் பாழாக்கலாமா?'

இந்த வசனத்தை கேட்டு அந்த ஜனங்களுக்குச் குழப்பம் ஏற்பட்டது. 'இவர் கூறுவதிலும் நியாயம் இருக்கின்றது. வாரியார் கூறுவது நியாயமா? இவர் கூறுவது நியாயமா?' என்று மதி கலங்கி நின்றார்கள்.

அடுத்தவாரம் அதே இடத்துக்கு நான் விரிவுரை செய்ய போனேன். அங்குள்ள முக்கியஸ்தர்கள், அந்த துறவியார் கூறியதை என்பால் கூறினார்கள்.

அப்போது அடியேன் கூறினேன்!, 'அன்பர்களே! பெருந்துறவியாகிய அவர் ஆண்டுகொருமுறை பலியிடுவதை நிறுத்துவது பக்தியை கெடுப்பதாகும், தினம் பலப்பல உயிர்களைக் கொல்லும் கசாப்புக் கடையில் சென்று உயிர்க் கொலையை நிறுத்த கூடாதா? என்று கூறினார்கள்.

கோயிலில் வழிபட வந்த ஒருவன் கொடி மரத்தின் அருகில் மலங்கழித்து விட்டான். அங்கே நான், அய்யோ! கோயிலில் மலங்கழிக்கலாமா? என்றேன். அங்கிருந்த ஒரு பெரியவர் என்னைப் பார்த்து 'ஐயா! அவர் ஏதோ வயிற்றுவலி காரணமாக மலங்கழித்துவிட்டார். இதை நீர் தடுக்கலாமா? ஆயிரம் ஆயிரம் பேர் மலங்கழிக்கின்ற கக்கூஸில் சென்று தடுப்பது தானே முறை! என்றார்.

கோயில் வணங்கும் இடம். கக்கூஸ் மலங்கழிக்குமிடம். மலங்கழிக்க வேண்டிய இடத்தில் அந்த வேலையை செய்ய வேண்டும். இறைவனை வணங்கும் இடத்தில் அசுத்தம் செய்யக் கூடாது, என்றேன்.

ஆகவே அன்பு வெள்ளம் ஓடும் திருக்கோயிலில் உதிர வெள்ளம் ஓடக்கூடாது என்றேன். மக்கள் என் விளக்க உரையை கேட்டு திருப்த்தியுற்றனர்.










No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.