Monday, December 29, 2014

அனாதி - சன்மார்க்கக் கதை

ன்மார்க்கக் கதை

னாதி

மழை லேசாக பெய்துக்கொண்டே இருந்தது. இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை அறிக்கைவேறு கந்தசாமிக்கு கவலையை அளித்தது. ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. ஜனவரி முதல் தேதி அன்று வருடாவருடம் கந்தசாமி தனது நண்பன் சிவாவுடன் வடலூரிலிருந்து மேட்டுக்குப்பம் நடைபயணம் சென்று வள்ளலாருக்கு வாழ்த்துச் சொல்வது வழக்கமாகும்.

ஆனால் இந்த 2015 ஆம் ஆண்டு பயணத்தை மழை வந்து கெடுத்து விடுமோ என அச்சம் மேலிட்டது. நல்ல வேளை அப்படியேது இன்றி அன்றைய தினம் மழை பெய்யவில்லை. வழக்கம் போல் இருவரும் நடைபயணம் மேற்கொண்டனர்.

"டேய், கந்தசாமி, அங்குப் பார்த்தாயா! ஒரு குழந்தை அழுக்காடையில் பிறரிடம் பிச்சைக்கேட்டு கையேந்துவதை பார்க்கும்போது, நாம் மட்டும் சுகமாக வாழ்வது சன்மார்க்கத்துக்கு உகந்ததா?"

"சிவா... அக்குழந்தை ஒரு அனாதையாக இருக்க வேண்டும். அதனால்தான் அக்குழந்தை இப்படி நடந்துக்கொள்கின்றது என நினைக்கின்றேன்."

"அனாதை என்றால் என்னவென்று சொல்ல முடியுமா?"

"தனக்கென்று பெற்றோர்களோ, சொந்தங்களோ, தெரிந்தவர்களோ இப்படி எந்த உறவும் இன்றி தனித்து விடப்பட்டவர்களை அனாதை என்று கூறுகின்றோம். இது நீ அறியாததா?"

"அப்படியென்றால் கடவுள்கூட அனாதை என்கிறார் வள்ளலார். எனவே அவரும் இப்படித்தான் கையேந்திக்கொண்டிருப்பாரோ?"

"சிவா... கடவுளுக்கு கை கால்கள் எதுவும் இல்லை, அதனால் அவர் கையேந்தமாட்டார். ஆனாலும் அவர் அனாதைதான்."

"பெற்றோரால் கைவிடப்பட்ட அனாதையா... கடவுள்!?"

"இல்லை, இல்லை... தனக்கென்று பெற்றோரே இல்லாத அனாதையே கடவுள்!"



"அவர் பெற்றோரே இல்லாத அனாதை என்று உனக்கெப்படி தெரியும்?"

"கடவுள் மட்டுமல்ல.... நாம் இருக்கின்ற இந்த ஆகாசம், நாம் சுவாசிக்கின்ற இந்தக் காற்று, கடவுளிடம் இருக்கின்ற அருட்சத்தியென்ற இயற்கை ஆற்றல் போன்றவையும் அனாதைகளே என்று வள்ளலார் கூறுவார்"

"கந்தசாமி.... நானும் வள்ளலாரின் இந்தக் கருத்தினை படித்திருக்கின்றேன். அதில், "ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி." என்று உரைநடை நூலில் பக்கம் 353 - ல் எழுதியிருப்பார் வள்ளலார். சரியா?"

"சரிதான்..."

"என்ன சரி?.... ஆகாசம் அனாதி என்று எழுதிவிட்டு அதற்குக் காரணம் கடவுள் என்றல்லவா எழுதியிருக்கின்றார். ஆகாசத்திற்கு காரணம் கடவுள் என்றால், ஆகாசத்தை உருவாக்கியது கடவுள் என்றல்லவா பொருள் உண்டாகின்றது. பின்னர் எப்படி ஆகாசம் அனாதையாக இருக்க முடியும்? எனவே ஆகாசத்தில் உள்ள காற்றும் அனாதி இல்லை, கடவுளிடத்தில் உள்ள அருட்சத்தியும் அனாதி இல்லை என்றே தோன்றுகின்றது."

சிவாவின் இந்த உரையாடலால், கந்தசாமி குழம்பியே போனான். எது ஒன்றிக்கு காரணம் உள்ளதோ அது காரியப்பொருளாகிவிடுகின்றது. காரியப்பொருள் எதுவும் அனாதை அல்ல. ஏனெனில் அதற்கு காரணப்பொருள் வேறொன்று இருக்கின்றது. காரணம் இல்லையேல் காரியம் இல்லை. இவைப்போன்ற சிந்தனைகள் கந்தசாமியை மலைக்க வைத்தன. எனினும் வள்ளலார் கூறியதலில் தவறிருக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையும் அவனிடம் இருந்தது.

"சிவா... நீ கூறுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதன் உண்மைப் பொருளை ஒரு ஞானியால்தான் விளங்கிக்கொள்ள முடியும் போல் தெரிகின்றது. எனவே இதன் பொருள் வெளிப்படும்வரை நாம் பொறுத்திருப்போம்."

"கந்தசாமி... இதுவொன்றும் ஞானிகளுக்காக எழுதியது அல்ல. நம்மைப்போன்றவர்கள் தெரிந்துக்கொள்ளத்தான் வள்ளலார் எழுதியிருக்கின்றார். அப்படியிருக்க இதில் ஏன் இப்படி ஒரு குழப்பம்! ஒருவேளை அச்சேற்றத்தில் தவறு நடந்திருக்குமோ? தெரியவில்லை. வள்ளலாரின் கையெழுத்துப் பிரதியை சரிபார்த்தால் உண்மை தெரிந்துவிடும். அதற்கு வாய்ப்பிருக்கின்றதா எனத் தெரியவில்லை."

இப்படியே பேசிக்கொண்டு இருவரும் கூட்டத்தோடு மேட்டுக்குப்பம் வந்தடைந்தார்கள். அங்கு சென்னையைச் சேர்ந்த திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்களுடன் சித்திவாளாக திருக்கதவு அருகில் தீபாராதனை நடத்தினார். அதனை கண்டுகளித்து இருவரும் வீடு திரும்பினர்.

##############


(என்ன அன்பர்களே, இந்த "அனாதி" கேள்விற்கு உங்களிடம் பதில் இருக்கின்றதா? இருந்தால் இங்கு தெரிவிக்கலாமே.) 

4 comments:

  1. பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்
    பதியினைப் போற்பசு பாசம் அனாதி
    பதியினைச் சென்றணு காப்பசு பாசம்
    பதியணு கிற்பசு பாசம் நிலாவே.

    ReplyDelete
    Replies
    1. சுந்தர் ஐயா, இப்பாடலை எழுதியவர் திருமூலர் என நினைக்கின்றேன். இவரின் கூற்றுபடி பதி, பசு, பாசம் இவை மூன்றுமே அனாதி என குறிப்பிடுகின்றார். தங்கள் தகவலுக்கு நன்றி ஐயா.

      Delete
  2. திருமூலரின் பொருட்பிழையை மிகசரியாக
    சொல்லியுள்ளார் வள்ளலார்.
    பதி பசு பாசம் அனாதி என்பது திருமூலர்

    அனாதி இல்லை அணுக்களில் ஆனது இது
    வள்ளலார்

    இது விஞ்ஞானம் ஏற்கும் உண்மை



    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.