அருட்பெருஞ்ஜோதி காண வாருங்கள்
====================================
நாள்: 24-01-2016
தம்முடைய லட்சிய கனவான மரணமிலா பெருவாழ்வாழ்கிய பூரணத்துவத்தை நமது வள்ளற்பெருமானுக்கு கொடுத்த புண்ணிய நாள் எதுவென்றால், அது இந்த தைப்பூச நாளே. இதற்காக நமது வள்ளற்பெருமான் தமது பன்னிரண்டு வயதிலிருந்து பிரயாசை எடுத்துக்கொண்டு, அதனை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளால் 1874-ஆம் ஆண்டு தைப்பூச நன்னாள் இரவு பன்னிரண்டு மணிக்கு பூரணத்துவம் அடைந்து வெற்றி பெற்றார்.
பூச நட்சத்திரம் என்பது 27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவதாக அமைந்த நட்சத்திர மண்டலமாகும். வள்ளற்பெருமானை இந்த நட்சத்திரமே, இப்பூவுலகில் யாரும் இதுவரை எட்டாத இலக்கினை எட்டவைத்தது. மனிதர்களுக்கு பெருவாழ்வினை அளிக்கக் கூடியது இந்த தைப்பூசம் என்பதை உலகிற்கு முதன் முதலில் எடுத்துக்காட்டினார் வள்ளற்பெருமான்.
பூச நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் தை மாதமாகும். பூச நட்சத்திரம் வடமொழியில் பூஷ்யம் என்றும் திஷ்யம் என்றும் வழங்கப்படும். திஷ்ய நட்சத்திரத்தில் முழுநிலவு அமைகிற மாதம் என்பதால் தைஷ்யம் என இம்மாதம் வழங்கத் தொடங்கி தைசம், தைய்யியம், தை எனத் திரிந்துள்ளது. தை என்பது பூச நட்சத்திரத்தின் பெயர் என்று பழமையான தமிழ் நிகண்டு நூலாகிய நிகண்டு குறிப்பிடுகின்றது.
தை மாதம் முதல் நாளிலிருந்து வான்வெளியில் சூரியன் தனது பயணத்தை வடகிழக்காக மாற்றிக்கொண்டு மிகப் பிரகாசமாக ஒளிரும். எனவே தைமாதத்தில் வருகின்ற பூச நட்சத்திரத்தில் அதிகாலையில் கிழக்கில் சூரியனும், மேற்கில் முழு நிலவும் ஒன்றுக்கொன்று நேராக சந்திக்கும். அன்றைய தினத்தில் "காஸ்மிக் எனர்ஜி" எனப்படும் மெய்காந்த அலைகளின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இத்தருணத்தில் சூரிய சந்திரருக்கு இடையில் இப்புவியில்
நாம், சத்திய ஞான சபையில் திரைகள் அனைத்தும் நீங்கப்பெற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மிகவும் பிரகாசமாக கண்டுகளிக்கும் வகையில் அறிவியல் பூர்வமாக உருவாக்கி வைத்துள்ளார் நமது வள்ளற்பெருமான்.
தை மாதத்தில் சூரியன் மகர வீட்டிலும், தைப்பூச நாளில் அவருக்குரிய சொந்த வீடான கடகராசியிலும் சஞ்சரிக்கிறார். அப்போது சூரியனின் ஏழாம் பார்வை சந்திரன் (கடகம்) வீட்டிலும், சந்திரனின் ஏழாம் பார்வை மகர வீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலை. அப்போது சூரியனால் ஆத்ம பலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. இதனை ஜோதிடக் கலையின் மூலம் அறிந்த நமது சைவ சமயப் பெரியோர்கள், இந்த தைப்பூச நன்னாளை கொண்டாடும் விதமாக பல்வேறுபட்ட கதைகளை உருவாக்கி அதனை புராணங்கள் எனச் சொல்லி அப்புராண நிகழ்ச்சிகளை சைவ சமயக் கோவில்கள் ஆயிரங்கணக்காண ஆண்டுகளுக்கு முன்னிருந்தே கொண்டாடி வருகின்றனர். இதன் முழு உண்மையும் வள்ளற்பெருமான் அவர்களால்தான் இவ்வுலகிற்கு அனுபவ பூர்வமாக உள்ளங்கை நெல்லிக்கணி போல தெரியவந்தது.
இப்படிப்பட்ட தைப்பூசம் அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு சித்திவளாகம் சென்று திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் படித்துவிட்டு, காலை தைப்பூச ஜோதி தரிசனத்தை வடலூர் சத்திய ஞானசபையில் கண்டு களித்தால் நமது ஆதி வினைகள் எல்லாம் தீரும். நாளடைவில் புறத்தில் கண்ட தரிசனமானது நமது அகத்திலும் தெரியவரும். நமக்கு ஜோதி தரிசனம் என்றைக்கு அகத்தில் தெரியவருகிறதோ அன்றுதான் நமக்கு உண்மையான தைப்பூச நாள்.
நாம் ஒவ்வொருவரும் இந்த பிறவியிலேயே நமது அகத்தில் தைப்பூச தரிசனம் கண்டு களிக்க காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அருள் நிலையம் வாழ்த்துகிறது.
---- காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் ----
Verry Good Super ayyaa Thank U"
ReplyDelete