Sunday, September 17, 2017

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை – தொடர்



 காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வழங்கும், வள்ளற்பெருமானின் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் செப்டம்பர் – 2017 ஆம் மாதம் வெளியானவை;


 
திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை – தொடர்
--தி.ம.இராமலிங்கம்--

சாக்கிரா தீதத் தனிவெளி யாய்நிறை
வாக்கிய சிற்சபை யருட்பெருஞ் ஜோதி – 72

ஆன்மாவிற்கு ஐந்து நிலைகள் / அவத்தைகள் உள்ளன. விழிப்பு அல்லது நனவு நிலையை சாக்கிரம் என்பர். சொப்பன நிலையை கனவு  என்பர். சுழுத்தி நிலையை நித்திரை என்பர். துரிய நிலையை பேருறக்கம் என்பர். துரியாதீத நிலையை உயிர்ப்படக்கம் என்பர்.

கரணமும் உணர்வும் இல்லாத நிலையே சாக்கிராதீதம் ஆகும். ஆன்மா இறைவனுடன் ஒன்றிவிட்ட நிலை சாக்கிராதீதம் ஆகும். ஆன்ம மலங்கள் அகன்றுவிடும். நாதத்தைக் கடந்த நாதாந்தநிலை அனுபவம் கிட்டும். அசைவற்ற நீர்ப் பரப்பைப்போன்று ஒரு நிறைவான மன அமைதி உண்டாகும். ஆணவம் அறுந்துவிடும் நிலையே சாக்கிராதீதம் எனப்படும்.

அப்படிப்பட்ட சாக்கிர நிலைக்கும் அதீதமாக விளங்கிக்கொண்டு தனி வெளியாக எம் ஆன்மாவை பூரண நிறைவாக்கிய சிற்சபையில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி – 74

அட்டம் என்பதற்கு பக்கம், குறுக்கு, எட்டு, அருகிடம், அண்மை, மேல்வீடு, நேர், சாதிக்காய், பகை என்றெல்லாம் பொருள் உண்டு. நமது உடம்பிற்கு அட்டகம் என்று பெயர். அதாவது எட்டு சாண் உடைய உடம்பிற்கு அட்டகம் என்று பெயர். நமது உடம்பில் கீழிருந்து மேல் நோக்கியபோது இறுதியில் உள்ள எட்டாவது சாண் என்பதே தலை பாகமாகும். இப்படி மேலே உள்ள இடத்தை குறிக்க “அட்ட மேல்” என்று குறிக்கின்றார். மேல் வீடாம் தலையிலே அமைந்துள்ளது சிற்சபை ஆகும்.

அட்டத்திற்கு மேலே அமைந்துள்ள அந்த சிற்சபையானது, நாம் இதுவரை கண்டுணராத சுகமாக உள்ளது. சுகத்திற்கு எல்லாம் மேலானதாக உள்ளது. அச்சுகத்தை சொல்லால், எழுத்தால், பொருளால், இடத்தால், காலத்தால், உணர்வால், மனதால் சுட்டிக் காட்டமுடியாததாக உள்ளது. அச்சுகம் சுகாதீத வெளியாக உள்ளது. சிற்சபை அனுபவம் என்பது சமரச சன்மார்க்க அனுபவம் ஆகும்.

இவ்வாறு எமது மேல்வீட்டில் சுட்டுதற்கு அரிதாகி சுகாதீத வெளியாகி சிற்சபை அனுபவத்தை கொடுக்கின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி – 76

நவம் என்றால் ஒன்பது. நமது உடம்பில் உள்ள ஒன்பது ஓட்டைகளை குறிப்பது. காது, நாசி, கண், மல, ஜல வாயில்கள் சேர்ந்த ஒன்பது துவாரங்களை உடையது நமது உடம்பு. இந்த ஒன்பது வாயில்களிலும் நாம் தவிர்க்கக்கூடிய நிலைகள் உள்ளன. அவைகளை வள்ளற்பெருமான் தமது இந்திரிய ஒழுக்கத்தில் விரிவாக கூறுகின்றார். அதாவது கொடிய சொல் செவி புகுவதை தவிர், குரூமமாய் பார்ப்பதை தவிர், உருசி தவிர், சுகந்தம் தவிர், பொய் தவிர், மல ஜல உபாதிகளை அக்கிரம ஆதிக்கிரமம் தவிர், சுக்கில அக்கிரம் தவிர் போன்ற ஒன்பது துவாரங்களின் அக்கிரம நிலையினை தவிர்த்து அவைகளை கிரமத்தில் நிறுத்தி, மேல் செல்லும் வீதியான ஓர் நிலைக்கு பொருந்தக்கூடிய வகையில் அந்த ஒன்பது ஓட்டைகளையும் ஓர் நிலைக்கு கொண்டு வந்தால் மரணம் என்கின்ற அவநிலையை தவிர்க்கலாம்.

          எமது உடலில் உள்ள ஒன்பது ஓட்டைகளாலும் தவிர்க்கக்கூடியதை தவிர்தும், அதே ஒன்பது ஓட்டைகளாலும் ஒருமை நிலையான பெருவாழ்விற்கு பொருந்தக்கூடியதை செய்வித்தும், எமது அவநிலையான மரணத்தை தவிர்த்த சிற்சபையில் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
அபயசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி – 78

          உபயம் என்றால் இரண்டு. உபய பக்கங்கள் என்றால் இரண்டு பக்கங்கள், இரண்டு நிலைகள் எனலாம். சற்று ஆழ்ந்து நோக்கின் எந்த ஒரு பொருளும் முப்பரிமாணம் உடையதாகவே இருக்கும். வலது இடது நடு, மேல் கீழ் நடு, நீளம் அகலம் உயரம், உருவம் அருவம் அருஉருவம், காரணம் காரியம் காரணகாரியம், நல்லது கெட்டது இரண்டுமுடையது இவ்வாறு மூன்று பக்கங்களை உடையதாகவே நாம் காண்கிறோம்.

          மேற்படி மூன்று நிலைகளில் ஏதேனும் ஒரு நிலையானது  மற்ற இரண்டு நிலைகளையும் ஒன்று படுத்தக்கூடியதாக இருக்கும். அதாவது வலது இடது நடு என்ற மூன்று நிலைகளில் நடு என்ற நிலையாது மற்ற இரண்டு நிலைகளையும் ஒன்று படுத்தக்கூடியதாக விளங்குவதை பார்க்கின்றோம். அதுபோல் மற்றதையும் காண்க.

          இந்தத் தன்மையினையே வள்ளற்பெருமான் இங்கு எடுத்தியம்புகின்றார். “ஒன்று” மற்றும் “இரண்டு” என்கின்ற உபய பக்கங்களை எல்லாம்  ஒன்றெனக் காட்டுகின்ற “ஒன்றிரண்டுதான்” உண்மை என பாடுகின்றார். ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்கள் உண்டு. அந்த இரண்டு பக்கங்களையும் இணைக்கக்கூடிய நடு விளிம்பு என்னும் பக்கம் அங்கே மறைந்துள்ளது. அதுதான் இரண்டு பக்கங்களையும் ஒன்றென காட்டுகின்றது. அத்ந வளைவான நடு விளிம்புப் பகுதி இல்லையெனில் நாணயத்தின் உபய பக்கங்களும் இல்லை என்றாகிவிடும்.

          “ஒன்றாய் ஒன்றில் உபயமாகி ஒளிரும் தாளனே” என்று இறைவனையும் போற்றுகின்றார். வலது மற்றும் இடது கண்கள் நமக்கு உபய கண்கள் ஆகும். இவை இரண்டையும் ஒன்றென இணைக்கக்கூடியது நடுக்கண் என்கின்ற சிற்சபை ஆகும்.

          பக்கத்திற்கு ஒன்றென உபய பக்கங்களில் இருக்கின்ற இரண்டு கண்களையும், அபயக் கண்ணான நடுக்கண்ணால் ஒன்றெனக் காட்டிய சிற்சபை வாழ் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
 
சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
ஆகர மாஞ்சபை யருட்பெருஞ் ஜோதி – 80

          சேகரம் என்றால் ஒவ்வொன்றாக சேர்த்த மொத்தத் தொகை எனப் பொருள். பல வருடங்களாக சிறு சிறு தொகையினை சேமித்து வந்ததால் எனக்கு இந்த சேகரத் தொகை கிடைத்துள்ளது என்று சொல்கிறோம். அவ்வாறே சித்து என்ற சொல்லக்கூடிய இறை ஆற்றலும் ஒவ்வொன்றாய், ஒவ்வொரு தத்துவத்தை நாம் கடக்கும் போதும் சிறிது சிறிதாக நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். இவ்வாறு சேகரித்து வைத்துக்கொள்ளும் பல சித்தி நிலைக்கு எல்லாம் ஆகரம் என்கின்ற சுரங்கமாய் இருப்பது நமது சிற்சபையே ஆகும். சிற்சபை என்னும் சுரங்கத்தினுள்தான் நாம் பல சித்தி நிலைகளை எல்லாம் தோண்டி தோண்டி சேகரிக்க வேண்டும்.

          நான் ஆழ்ந்ததினால் சேகரமான பல சித்தி நிலைக்கெல்லாம் சுரங்கம் போன்று இருந்து என்னை சித்தனாக்கிய சிற்சபையே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.