Tuesday, September 7, 2021

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் 183-ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று:

 

வள்ளல்பெருமானின் அணுக்கத்தொண்டர் - சமரச பஜனை  - காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் 183-ஆம் ஆண்டு பிறந்த நாள் இன்று:

                            =============++++++++++========

19-ஆன் நூற்றாண்டில் 07-09-1838 ஆம் ஆண்டில் கடலூர் மாவட்டம், காரணப்பட்டு என்னும் கிராமத்தில் ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்கள் வள்ளல்பெருமானுக்கு தொண்டு செய்யும் பொருட்டு பிறப்பெய்தினார்கள். அவருடைய பிறந்தாநாளான இந்த இனிய நாளில், அவர் இயற்றிய “காரணப்பட்டு ஸ்ரீ சுந்தர விநாயகர்” பதிகங்களில் அமைந்துள்ள சில முக்கிய குறிப்புகளை நாம் தெரிந்துக்கொள்வோம்.

திருஅருட்பிராகச வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களும் தமது கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீசுந்தரவிநாயகரைப் போற்றி 33 பதிகங்கள் இயற்றி மகிழ்ந்துள்ளார். அதில் காப்பு செய்யுளிலும் வாழி செய்யுள்களிலும் "சுந்தரவிநாயகர்" என்ற பெயர் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்கள். மற்ற செய்யுள்களில் அச்சுந்தர விநாயகரை "அருட்ஜோதிக்கடவுள்" என்றே புகழ்ந்துரைக்கின்றதை நோக்கும்போது அவரது சமரச தழுவலைத் தெள்ளத்தெளிவாக உணரமுடிகிறது.

மேலும், தாம் இயற்றிய 31 செய்யுள்களிலும் தாம்வாழும் ஊரின் பெயரான 'காரணப்பட்டு' என்னும் தான்வருவிக்க உற்றஊரை ஒருவித பற்றுதலுடன் புகழ்ந்துரைக்கிறார்.

மேலும், அவ்வூரின் சிறப்புகளை எடுத்தியம்புகையில் முதலில் அவ்வூர்வாழ் மங்கையரைப் புகழ்ந்திருப்பது சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அதன்பிறகே அவ்வூர்வாழ் ஆடவரைப் புகழ்ந்திருக்கிறார். இறுதியில் அமைந்த வாழி செய்யுளில் "வாழி காரணப்பட்டி லமர்ந்துளோர்" என்று தமதூரில் வாழும் மக்களை வாழ்தும் வாழ்த்தானது என்றைக்கும் உயிர்த்தன்மையுடன் விளங்கும்.


# சீரோங்கும் செல்வத் திருஞானச் செல்வியர்வாழ் பாரோங்கும் காரணப்பட்டு,

# அருட்பெரும்புருஷார்த் தமைந்திடும் அன்பர்சூழ் திருக்காரணப்பட்டு,

# மகமெலா முறையாச் செயுமாந்தர்கள் மல்குங் காரணப்பட்டு,

# கவிசொலுங் கற்றவர்சூழுங் காரணப்பட்டு,

# எழிற் காரணப்பட்டு,

# கல்வி கேள்வியைப் பெற்றுக் கதிபெறக் கருதுவோர் வாழுங் காரணப்பட்டு,

# பேதமுஞ்சென்ற பேறுவிரும்பிடும் பெரியர் வாழ்ந்திடுங் காரணப்பட்டு,

# நல்லோர் பரவுங் காரணப்பட்டு,

# மெய்வாழ்வு என்றும் திகழுங் காரணப்பட்டு,

# சீரெலாம் வாய்ந்திடுந் திருக்காரணப்பட்டு,

# தொண்டுசெய்யும் அன்புளோர் ஆர்ந்த காரணப்பட்டு,

# தப்பில்லாத செல்வம் பெறுந்தக்கவர் சாருங் காரணப்பட்டு,

# என்பெலாங் கரைந்தேத்திடும் பத்தர்கள் என்றும் வாழ்ந்திடும் காரணப்பட்டு,

# நற்கல்வியைப் போதிக்கும் சன்மார்க்கத்தவர்கள் எந்நாளும் தழைத்தோங்கும் தலமெனத் தகுங் காரணப்பட்டு

# கருவுள் சேராக்கதியைக் கருதுவோர் களித்து வாழ்ந்திடும் காரணப்பட்டு

தாம் இயற்றிய சுந்தரவிநாயகர் பாமாலையில் மேற்கண்டவாறு தாம் பிறந்து வளர்ந்து பேறு அடைந்த தமது கிராமத்தில் வாழும் மக்களின் நற்பண்புகளை எடுத்துரைக்கிறார். அவர் அருள்செய்து 100 வருடங்கள் கடந்தும் இன்றும் என்றும் காரணப்பட்டு வாழ் மக்களின் நற்குணங்கள் போற்றுதலுக்குத் தக்கவாறே திருவருளால் அமையப்பெறுவது அவ்வூரின் சிறப்பு.

பன்மார்க்கப் பொதுவென்னப் பலன் தரும்

பரமனன் பிற்பரிந்திடுந் தெய்வமே

புன்மார்க்கத்தவம் போக்கி மெய்ப்போதமார்

பொருணிறைந்த நற்கல்வியைப் போதிக்குஞ்

சன்மார்க்கத்தவர் எந்நாளும் தழைத்தோங்கும்

தலமெனத் தகும் காரணப்பட்டினில்

துன்மார்க்கச் சிறியேனுக்கு அருள் தூயனே

தோன்றலே அருட் ஜோதிக் கடவுளே. 

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் 183-ஆவது பிறந்தநாள் அன்று இறையருளால் ஒரு வேண்டுகோள், விரைவில் அவ்வூர் மக்கள் புலால் மறுப்பாளர்களாக தாவர உணவாளர்களாக மாற்றம் அடையவேண்டும் என்பது ச.மு.க.அருள் நிலையத்தின் வேண்டுதலாக உள்ளது. நன்றி.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி

தனிப்பெருங்கருணை

அருட்பெருஞ்ஜோதி.


--தி.ம.இராமலிங்கம்.




No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.