Wednesday, September 8, 2021

கால சங்காரம்

 


கால சங்காரம்

மார்க்கண்டர்க்காக ருத்திரமூர்த்தி இடது காலால் எமனை உதைத்ததற்கு நியாயம்:- மார்க்கண்ட ரென்பது மயக்கமாகிய மறைப்பென்னும் மரணத்தைத் தவிர்த்தது. ருத்திர னென்பது தனித்த ஆன்ம அறிவு. எமனென்பது மயக்கத்தைத் தரத்தக்க வெகுளி சினம் முதலிய. இடது காலால் எமனை யுதைத்த தென்பது: இடது என்பது சந்திர கலை, காலென்பது பிராணவாயு. ஜனன மரணத்தை உண்டு பண்ணுவது சந்திரசூரியசக்தி. ஆதலால், அஞ்ஞான பாசத்தால் சினமாகிற கூற்றுவன் கட்ட, விவேகியென்னும் மார்க்கண்டன் ருத்திரனென்னும் ஆன்மஅறிவோடு கூடவே, மேற்படி ருத்திரன் பிண்டநஷ்டஞ் செய்கின்ற இடகலையை மேலேற்றி, குணங்களாகிய சூலத்தால் கூற்றையொழித்து, அருளாகிய சத்துவ மயமாய் நீடிக்கச் செய்வது - எமசம்மாரம். 

-- வள்ளலார்...

 

            ஆயுள் விருத்தியாகும் என்ற நப்பாசையால் சைவ சமயத்தினர் திருக்கடவூர் சென்று வழிபடுவர். ஏன் திருக்கடவூர் செல்ல வேண்டும்? அங்குதான் எமனிடமிருந்து மார்க்கண்டரை சிவன் காப்பாற்றினான் என்கிற புராணக் கதை நிலவுவதால், நம்மையும் அந்த சிவன் காப்பாற்றமாட்டானா? என்ற ஏக்கத்தில் செல்கின்றனர். காப்பாற்றினானா? என்றால், இல்லை. எனினும் எல்லோரும் செல்கிறார்கள். நாங்களும் சென்று வழிபடுகிறோம் என்ற மனப்போக்கில் மார்க்கண்டரைப்போல் 16 வயதில் செல்லாமல் 60 வயது 70, 80 வயதிற்கு மேற்பட்ட தாத்தா பாட்டிகளெல்லாம் அங்குச்சென்று ஒரு பூஜை செய்தால்தான் அவர்கள் நிம்மதியாக போய்ச்சேர்வார்கள் போலும். அங்கு வந்து பூஜை செய்வோர் யாவரும் எமனிடமிருந்து என்னை காப்பாற்றும் ஆண்டவரே, என்று அங்குள்ள லிங்கத்தைச் சென்று கட்டிப்படிக்க முடியுமா? அப்படியே கட்டிப்பிடித்து கதறினாலும் சிவன் வந்து காப்பாற்றிவிடுவாரா? இதெல்லாம்   நடக்காது  என்று   பூஜை  செய்வோருக்கே தெரியும்.

 எனினும் தமது ஆயுளில் சற்று கூடுதலாக போட்டுத் தந்தால் நல்லா இருக்கும் இறைவரே! என்ற ஒரு சிற்றாசையில் அங்கு கூடுகிறார்கள்.

            சிவனால் ஆயுளை கூட்டித்தர முடியுமா? யாராலும் முடியவே முடியாது. நாம் வாங்கும் மூச்சிக்காற்றில் ஒரு மூச்சு அளவுக்கூட யாராலும் இனாமாக நமக்குக் கொடுத்துவிட முடியாது. ஆனால் அவரவர்கள் முயன்றால் அவர்களாகவே தங்களது ஆயுளை நீடித்துக்கொள்ள முடியும். அதனைச் செய்ய முடியாத மந்தர்கள்தான் நாம்.

            மார்க்கண்ட புராணத்தின் தத்துவம் என்ன என்பதை நமது கெளரவ ஆசிரியர் வெளிப்படுத்தியிருப்பதை நாம் கண்டு உணர்ந்து அதன்வழி செல்ல முயலுவோம்.

 

                        மார்க்கண்டர் - விவேகம் / புத்தி

                        ருத்திரன் - ஆன்ம அறிவு

                        எமன் - வெகுளி, சினம்

                        இடது கால் - இடது நாசியில் ஓடும் பிராணவாயு

 ஆசை என்னும் பந்த பாசத்தால் சினம் வரவே, உடனே புத்தியானது ஆன்ம அறிவோடு கூடி பிண்டம் நஷ்டம் செய்கின்ற சந்திர கலையில் ஓடும் பிராணவாயுவை மேலேற்றியதால் நற்குணம் தோன்றி சினத்தை அழித்தது.

            சினத்தை ஒழித்து நற்குணமான சாத்விக குணத்தில் நாம் என்றும் இருப்பதுவே எமசம்மாரம் ஆகும்.

 # சத்போதம் - உண்மையான அறிவு / ஞானம் / போதனை - விளக்கம்

# சத்கர்மம் - உண்மையான ஒழுங்கு / சீர் / முறைமை

# சத்சங்கம் - உண்மையான கூட்டம் / கழகம்

# சத்காலம் - உண்மையான நேரம் / பொழுது

# சத்விசாரம் - உண்மையான ஆராய்ச்சி / சிந்தனை / எண்ணம் / யோசனை

# சத்பாத்திரம் - உண்மையான உறுப்பினர் / ஒருமையுள் ஒன்றிவிடும் நபர்

# சத்ஜனம் - உண்மையான மக்கள் / பிறப்புகள்

# சத்செய்கை - உண்மையான வெளிப்பாடு

 மேற்கண்ட எட்டு வகைகளும் சத்துவ குணத்தை சார்ந்தது,

 # கொல்லாமை

# பொறுமை

# சாந்தம்

# அடக்கம்

# இந்திரிய நிக்கிரகம் - (ஐம் பொறிகளையும் அடக்கி ஆளுதல்)

# ஜீவகாருண்யம்

 

மேற்கண்ட ஆறு வகைகளும் சத்துவ குணத்தின் இயல்பாகும் / குணமாகும். இவ்வகை உண்மையைக் கொண்டு சத்துவகுணத்தின் இயல்புகளை லட்சியம் செய்வதே சமய சன்மார்க்கம் ஆகும்.

 சமய சன்மார்க்கத்தின் / சத்துவ குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-

 1. தன்னடிமையாகப் பலரையும் பாவித்தல்

2. புத்திரனாகப் பாவித்தல்

3. சிநேகிதனைப் போலப் பாவித்தல்

4. தன்னைப்போலப் பாவித்தல்

 இது ஜீவ நியாயமாகும்.

 மத சன்மார்க்கம் என்பது,  நிர்க்குண லட்சியம் செய்வதாகும்.

 நிர்குணம் என்பது யாதெனில், மேற்படி சமய சன்மார்க்கத்தின் எண் குணமாகிய சத்துவத்தின் வாச்சியானுபவம் பெற்று அதிலிருந்து மேலேறி லட்சியானுபவம் பெறுதல் ஆகும்.

 லட்சியம் / லட்சியானுபவம் யாதெனில்,

 # சோகம்

# சிவோகம்

# தத்வமசி

# சிவத்துவமசி

 என்னும் மேற்படியான வாக்கியத்தில் அமைந்த முக்கிய அனுபவமாகும்.

            முக்கிய அனுபவம் என்பது,  மத சன்மார்க்கத்தின் / நிர்குணத்தின் அனுபவம் நான்கு வகையாகும், அவை:-

 1. தான் கடவுளுக்கு அடிமையாதல்

2. தான் கடவுளுக்கு புத்திரனாதல்

3. தான் கடவுளுக்கு சிநேகனாதல்

4. தான் கடவுளுக்கு நிகராதல் (கடவுளேதானாதல்)

            இது சத்துவ மற்றும் நிர்குணத்தின் / சமய மற்றும் மத சன்மார்க்கத்தின் முடிவு ஆகும்.

            இதே தத்துவத்தில் நாம் மரணத்தை வெல்லமுடியாது ஆனாலும் ஆயுளை விருத்தி செய்ய முடியும். மத சன்மார்க்கத்தின் முடிபாக "கடவுளே தானாதல்" என்ற நிலையிலும் மரணம் உண்டு. எவ்வாறெனில், இவர்கள் மூர்த்திகளையே கடவுளாக எண்ணி வணங்குவதால், தான் வணங்கும் மூர்த்திகளின் ஆயுள்வரை மட்டுமே அந்நிலை பெற்றவர்களால் ஆயுளை விருத்தி செய்து இருக்கமுடியும். அதற்கு மேற்பட்டு மரணம் வாய்க்கும்.

            சுத்த சன்மார்க்கத்தில் மட்டுமே முத்தேக சித்தி உண்டு. இங்கு "கடவுள் நிலையறிந்து அம்மயமாதல்" என்ற, உண்மைக் கடவுள் யார் என்று அறியப்பட்டு அதன் பிறகே அவரது மயமாதல் நடைபெறுகிறது. எனவே இங்குதான் உண்மையில் மரணம் என்பதே இல்லை.

            இடது காலை தூக்குவது என்பது இடப்பக்க சுவாசக்காற்றை சுழுமுனையில் நிற்க செய்தல் ஆகும். ஞானிகள் எல்லாம் சுழுமுனை சுவாசம் உடையவர்களாவர். சுழுமுனை என்பது இருபக்கமும் ஒருங்கே சுவாசத்தை ஓட விடுவது. இது எல்லோருக்கும் அமையாது. எனினும் நாம் இடப்பக்க சுவாசத்தை தவிர்த்து எந்நேரமும் வலபக்க சுவாசத்தை ஓடும்படி செய்தால் ஆயுளை நீட்டிக்கலாம். இதெல்லாம் சித்தர் மார்க்கம். இதனால் நமக்கு பெருவாழ்வு கிடைக்காது.

 சிவவாக்கியர் எனும் சித்தர், கிராமத்து உதாரணம் ஒன்றின் மூலம் நம்மை ஒரு பிடி பிடிக்கிறார்: ‘அடேய்… நீ காதலித்துக் கல்யாணம் செய்த உன் மனைவியை, ஒரு ரவுடி கண் வைத்து, அவளை என்னிடம் அனுப்பு என்றால், நீயே கொண்டு போய் அவனிடம் சேர்ப்பாயா? ‘வெட்டிவிடுவேன்’ என்று புறப்படுவாய் அல்லவா! அதேபோல், நாம் ஆசை ஆசையாக வளர்த்த இந்த உடம்பை அந்த எமன் கண்வைத்து ஓலைவிட்டதும் மயானம்வரை கொண்டு போய்ப் போடலாமா? முட்டாள்… காலனைக் கபளீகரம் பண்ணவேண்டாமா?’ என்கிறார்.

     ‘வடிவு கண்டு கொண்ட பெண்ணை

    வேறொருவன் நத்தினால் விடுவனோ

    அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே

    நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்

    சுடலைமட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!’

 

என்ன அழகான உவமை?! ‘காற்றைப் பிடித்தால் கூற்றை (எமனை) உதைக்கலாம்!’ என்கிறார் திருமூலர்.

            "சமாதி செய்தும், சுவாசத்தை அடக்கியும், விரதமிருந்தும், இவை போன்ற வேறு வகைத் தொழிற்பட்டும் பிரயாசை யெடுப்பது வியர்த்தம். சுத்த சன்மார்க்கமே சிறந்தது." (திருவருட்பா-உரைநடைப் பகுதி - பக்கம்-408) என்கிற வள்ளற்பெருமானின் வார்த்தைக்கு இணங்குவோம். மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வோம்.

(2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் - “சன்மார்க்க விவேக விருத்தி” மின்னிதழில் வெளிவந்தது)


--தி.ம.இராமலிங்கம்...

 

 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.