Showing posts with label கொடுத்தார்… கொடுத்தேன்…. Show all posts
Showing posts with label கொடுத்தார்… கொடுத்தேன்…. Show all posts

Tuesday, July 18, 2017

கொடுத்தார்… கொடுத்தேன்…

கொடுத்தார்… கொடுத்தேன்…
============+++++++++++

குரங்கெனும் வாலில்லை
எனினும் குதித்து நின்றேனை
குறித்து வந்து காதலுற்றார்…
மனம் அடங்கும் மந்திரமும்
தானுரைத்தார் மடிதுயிலும்
சுகம்யாவும் தான்கொடுத்தார்…

எனை நான் என்றிருந்த
வினையேனை தானே வந்து
அணைத்து ஆடலுற்றார்…
தனை யறியும் தந்திரமும்
தானுரைத்தார் குண்டலி
பாலுணவும் தான்கொடுத்தார்…

பணமே பொருளென
பிணமாய் சுற்றினேனை புறமும்
அகமும் தழுவி கூடலுற்றார்…
அந்தோ பேரின்பம் பெறுவதற்கே
பேரிகை முழங்குவித்து
சிவமே பொருளென தான்கொடுத்தார்…

பெண்ணினைக் கண்டு
பின்னோடும் நாயேனை அழைத்து
விண்வெளி கடந்து சென்றார்…
ஆண் சுகம் எதுவெனக் காட்டி
அண்டமெலாம் ஆளும்
அருளே போகமென தான்கொடுத்தார்…

எறும்பையும் கொல்லும்
இரக்கமில்லாத வனிடம் வந்து
ஆருயிர் கணவன் நானென்றார்…
அருட்பெருஞ் ஜோதியும் தந்து
துரியாதீத நிலைமேல் காட்டி
என்று மழியாச்சுகமும் தான்கொடுத்தார்…

வறுமையுடன் நோயும்
கொண்ட பிச்சைக்காரனிடம் வந்து
செல்வம் வேண்டுமா என்றார்…
செல்லப் பிள்ளை நீயெனபிறர்
செல்லா நிலை தூக்கி
நோயில்லா பொருளும் தான்கொடுத்தார்…

அருட்பெருஞ் ஜோதிதான்
கொடுத்த தெல்லாம் பெற்றேன்
தனிப்பெருங் கருணை யானேன்…
என்னுடல் பொருள் ஆவியும்
திருச்சபை முன்னே எல்லா

உலகும் வியக்கவே தான்கொடுத்தேன்…

--திருச்சபை.

--தி.ம.இராமலிங்கம்.