Sunday, January 19, 2014

சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் - 2

சிவவாக்கியமும் அருள்வாக்கியமும் - 2                

அன்பர்களுக்கு வணக்கம்!

நாம் தற்போது 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான "சிவவாக்கியார்" அருளிய "சிவவாக்கியம்" என்னும் நூலில் உள்ள தத்துவக் கருத்துகளையும், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாழையடி வாழையென வந்துதித்த திருக்கூட்ட மரபில் ஒருவரான "வள்ளலார்" அருளிய "திருஅருட்பா" என்னும் அருள்வாக்கியத்தில் உள்ள தத்துவக் கருத்துகளையும் ஒருங்கிணைத்து சற்றே உரசிப்பார்ப்போம்.

கறந்த பால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே. (சிவவாக்கியம்)

சிவவாக்கியருக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை எனத்தோன்றுகிறது. உயிர்களுக்கு மறுபிறவி இல்லை என்பதை மிகவும் வலிய சொல்லிவிட்டார். மாட்டின் முலையிலிருந்து கறக்கப்பட்ட பாலானது மீண்டும் தான் வந்த முலைவழியே செல்லமுடியாது, மோரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையினை மீண்டும் அதனைக் கடைந்து மோராக்க முடியாது, சங்கிலிருந்து எழும்பும் ஓசையானது அச்சங்கு உடைந்துவிட்டால் அதிலிருந்து மீண்டும் ஓசையினை எழுப்பமுடியாது, இறந்துபோன உடலில் உள்ள உயிரும் மீண்டும் அந்த உடலில் புகமுடியாது, மலர்ந்த மலரும், உதிர்ந்தக் காயும் மீண்டும் சென்று செடியிலோ மரத்திலோ ஒட்டாது, அது போன்று ஒருவர் இறந்துவிட்டால் அவர் மீண்டும் பிறக்கமுடியாது என்று மிகவும் உறுதிப்பட சொல்கிறார் சிவவாக்கியார். இதன்மூலம் மறைமுகமாக முற்பிறவியும் இல்லை என்ற கோட்பாட்டுக்கும் வந்துவிடுகிறார் சிவவாக்கியார். இக்கூற்று சைவ சித்தாந்தத்திற்கு எதிராக உள்ளது. 

இறந்தவர் பிறப்பதில்லை என்பதனை நாம் ஏற்றுக்கொண்டாலும், உயிர் என்ற ஒரு இயங்கு சக்தி உண்டு என்று ஒப்புக்கொள்ளும் சிவவாக்கியார், அந்த இயங்கு சக்தியான உயிரானது மறுபிறப்பு எடுப்பதில்லை என்பதனை விளக்க இவர் எடுத்துவைக்கும் எடுத்துக்காட்டுகள் சரியானதாக இல்லை என்பதே எமது நோக்கு. ஒருவகையில் அவர் எடுத்துவைத்த எடுத்துக்காட்டே அவரது தத்துவத்திற்கு எதிராக உள்ளதை நாம் பார்க்கவேண்டும்.

பால், வெண்ணை, மோர், பூ, காய் இவைகளெல்லாம் இப்புவியிலுள்ள உயிரனங்கள் உண்ணக்கூடிய பொருள்களாகும். இவைகளில் எந்தவிதமான இயங்கு சக்திகளும் கிடையாது. எனவே அவை மீண்டும் தாம் வந்த இடத்திற்கு செல்லும் அளவிற்கு சக்தியினை பெற்றிருக்கவில்லை, அதற்கான எவ்வித அவசியமும் அதற்கு இல்லை, அதனால் இந்த எடுத்துக்காட்டுகள் மறுபிறவி இல்லை என்பதற்கான சாட்சியாக இருக்கமுடியாது.

ஆனால் ஓசையும், உயிரும் இயங்கு சக்திகள். சங்கினுள் காற்றாகிய ஓசை எழுகிறது, இங்கு சங்கு உயிரற்ற பொருள், ஓசை உயிருள்ள இயங்கு சக்தி. அதுபோல உடலில் காற்றாகிய உயிர் இயங்குகிறது, இங்கு உடல் உயிரற்ற பொருள், காற்று உயிருள்ள இயங்கு சக்தி. சங்கு உடைந்துபோனாலும் ஓசைக்கு எந்த பழுதும் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதே ஓசையினை வேறொரு புதிய சங்கின்மூலம் இயற்கையாகவே எழவைக்க முடியும். அதுபோல உடல் இறந்தாலும் உயிருக்கு எந்த பழுதும் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதே உயிரினை வேறொரு புதிய உடலின்மூலம் இயற்கையாகவே கொண்டுவர முடியும். இயற்கை என்பது இறைவன் என எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஓசையும், உயிரும் இயங்கு சக்தியாக, அழியா சக்தியாக, நித்தியமானதாக இருப்பினும் இவைகளால் தனித்து இயங்க முடியாது. இவைகள் இயங்க சங்கும், உடலும் வேண்டும். ஆகவே உடைந்த சங்கில் இருந்த காற்றும், இறந்த உடலில் உள்ள உயிரும் தாம் தொடர்ந்து இயங்குவதற்கு வேறொரு சங்கினையும், உடலையும் தேடிக்கொண்டே பொருந்திக்கொண்டே இருக்கும்.

ஆகவே, 'உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகும்' என்பதே சரியான எடுத்துக்காட்டாக இருக்கமுடியும்.

இனி அருள்வாக்கியமான திருஅருட்பா மறுபிறப்பு பற்றி என்ன கூறுகிறது என்பதனை பார்ப்போம்.

'இனிப்பிறவா நெறி எனக்களித்து அருளிய தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே' (அகவல்). "இனிப்பிறவா" என்று கூறுவதன் மூலம் வள்ளலார் அவர்கள், இப்பிறவிக்கு முன்பு பல பிறவிகளை கடந்து வந்துள்ளார் என்பதனை விளக்குகிறது. 'இனிப்பிறவா நெறி' என்பது என்ன? அது மரணமிலா பெருவாழ்வு நெறி. யார் ஒருவர் இறந்தாலும் அவருக்கு நிச்சயம் மறு பிறவி உண்டு என்கிறார் வள்ளலார். யாருக்கு மறுபிறவி கிடையாது எனில், யார் ஒருவர் இப்பிறவியில் சாகாமல் இருக்கிறாறோ அவருக்கே இனிப்பிறவா நெறி கிட்டும் என்பது வள்ளலின் தத்துவமாக இருக்கின்றது.

'சாதல் பிறத்தல் எனும் கடலில் தாழ்ந்து கரைகாணாது அழுந்தி' (919) இவ்வரியில் சாதலும் பிறத்தலும் சுழற்சியாக வருவதை விளக்குகிறார்.

'எனை எப்பிறப்பும் விட்டகலா என்னெஞ்சே' (1965) என்பதின் மூலம் முற்பிறவி முதல் இப்பிறவி வரை அவரது உள்ளம் அவரைவிட்டு நீங்கவில்லை என்று பாடுகிறார் வள்ளலார்.

'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்ற குறளை வள்ளலார் தமது திருஅருட்பாவில் மறுபிறவி உண்டு என்பதற்கு எடுத்தாண்டிருக்கிறார். (1965-465)

'முதல் சிருஷ்டித் தொடங்கி இது வரையில் அழிந்த தேகங்களுக்கு அளவில்லை. அப்படியே ஆன்மாக்களுக்கும் அளவில்லை. ஆகவே இனி ஆன்மாக்கள் தேகங்களை எடுக்காமல் இருக்க வேண்டும். அப்படியில்லையே தேகங்களை எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.' (திருஅருட்பா உரைநடை பகுதி பக்கம் 147)

சிவவாக்கியார் கூறுவதைப்போல மறுபிறப்பு இல்லை என்றால், இவ்வுலகில் எவ்வித உயிரனமும் தமது உடலினை சுமந்து திரிந்துக்கொண்டிராது என்பதே வள்ளலின் வாதம். அதாவது இறைவன் முதல் சிருஷ்டியில் 1000 ஆன்மாக்களுக்கு உடலினை கொடுத்து இவ்வுலகில் உலாவவிடுகிறான். அந்த 1000 உடல்களும் குறிப்பிட்ட காலத்தில் இறந்துவிட்டன, அவ்வாறே அந்த 1000 உயிர்களும் இறந்துவிட்டன அல்லது மறுபிறவி எடுக்கவில்லை என்றால், இப்பூமியில் ஏது உயிரினம்? ஆகையால் அந்த 1000 உடல்கள் இறந்தப்பின்னும் அவ்வுடலில் இருந்த 1000 உயிர்களும் மறுபடியும் உடலை எடுக்கின்றன. அந்த 1000-ல் நாமும் ஒருவராக சாதல்-பிறத்தல் என்னும் சுழற்சியில் இருக்கின்றோம் என்பதே வள்ளலாரின் வாதமாக உள்ளது.

'இந்தத் தேகத்திற்கு பிறப்பு ஏழு உண்டு. அதுபோல ஏழு வகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கு எவ்வேழு பிறப்புண்டு. அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனி பேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறுபிறவி உண்டாம். ஒவ்வொரு பிறவியிலும் எந்தக் கற்பத்தில் நஷ்டமடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்ற மில்லாமல் மண்ணில் மறைந்திருந்து, மறுகற்பத்தில் தோன்றி, இவ்விதமாகவே மற்றயோனிகளிடத்திலும் பிறந்து, முடிவில் இந்ததேகம் கிடைத்தது.' (திருஅருட்பா உரைநடை பகுதி பக்கம்358)

நாம் அடைந்திருக்கின்ற இந்த அற்புதமான மனிதப் பிறவி எப்படி கிடைத்திருக்கின்றது என்பதனை மேலே உள்ளவாறு வள்ளலார் தமது உரைநடைப்பகுதியில் விளக்கியுள்ளார். மேலும் மறுபிறவி உண்டு என்பதற்கு பல ஆதாரங்களை அவரது உரைநடைப் பகுதியில் காணமுடிகின்றது.

மறுபிறப்பினைப்பற்றிய தத்துவங்களில் சிவவாக்கியமும், அருள்வாக்கியமும் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டிருக்கின்றன. இதில் எந்த தத்துவம் உண்மையானது என்பதை நம்மால் நமது சொந்த அனுபவத்தால் கூறிவிடமுடியாமல் இருக்கிறோம். எனக்கு சிவவாக்கியரை பிடித்திருந்தால் அவர் சொன்னதே சரி, வள்ளலாரை பிடித்திருந்தால் இவர் சொன்னதே சரி என்ற நிலமையில்தான் நாம் இருக்கிறோம். எனினும் நம் சிற்றரிவை கொண்டு இரண்டையும் ஆராய்ந்தால் மிகத்தெளிவான ஒருமுடிவுக்கு நம்மால் வரமுடியும். அந்த முடிவு நமது அறிவை பொருத்ததாக அமையும்.



இனி சிவவாக்கியாரின் அடுத்த ஒரு பாடலுக்குச் செல்வோம்... தொடரும்....

5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இவர் கருத்து அவர் கருத்து என்று எடுத்து ஆய்ந்து வரும் ஒருவரால் மெய்க் கருத்தைச் சொல்லி விட முடியாது,உணர்ந்து உரைப்பதே ஞானம். ஒவ்வொரு உயிரும் நான்கு நிலைகளில் ஒன்றில் நிற்கும், அளவுக்கு அதிகமான ஆற்றல் கொண்டவர்கள் ஞானிகள், அளவோடு கொண்டவர்கள் சாமானிய உயிர்கள், ஆற்றல் அளவில் குறைந்தோர் மற்றும் எதிர்மறை ஆற்றல் உடையோர் உடல் மன நோய்களால் பீடிக்கப்பட்டோர், மொத்தமாக ஆற்றலைத் தொலைத்தோர் உயிரற்றுப் போய்விடுவர். இப்படி ஒரேடியாகவோ, கொஞ்சம் கொஞ்சமாகவோ வெளியேறும் ஆற்றலானது வெவ்வேறு ஆற்றல்களோடோ, தனித்தோ, வேறு உயிராகவோ, உயிர்களாகவோ,இயங்கு சக்தியாகவோ உருமாற்றம் பெற்றுப் போய்க் கொண்டே இருக்கும். இதிலே மறுபிறவி ஏது!? அப்படி மொத்தமாக நான் கொண்டிருக்கும் ஆற்றலைக் கடத்த என்னால் இயலும் எனில், நான் ஞானி, எனக்கு இறப்பே இல்லை, பிறகு எனக்கு எதற்காக மற்றொரு பிறப்பு!? ஆற்றலே அனைத்துமாய் இருந்து இயக்கி இயங்குகின்றது. ஆற்றலுக்கு அழிவில்லை, வெவ்வேறு உருவாக உருமாறும், எனினும் மொத்தமாக வேறு உருவுக்குள் புகுவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா...

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.