Saturday, January 24, 2015

முட்டை... சைவ முட்டை....

முட்டை... சைவ முட்டை....
(சிறுகதை)

கந்தசாமி... கந்தசாமி...

உரக்கக் கத்திக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் இராமசாமி.

அப்போழுதான் குளித்து தலைவாரி பூச்சூடி சாமிரூமில் உள்ள அகல் விளக்கிற்கு எண்ணெய் வார்த்து கொண்டிருந்தாள் தமிழினி. தமிழினிமேல் ஒருவித தனி ப்ரியம் உண்டு இராமசாமிக்கு.

வாங்க... என்ற தமிழினியின் குரல் இராமசாமியை வரவேற்றது.

"அவர் குளித்துக்கொண்டிருக்கிறார், கொஞ்சம் வெயிட் பன்னுங்க..."

தமிழினியும் ஓரப்பார்வையால் அவனைப்பார்த்துவிட்டு, உள்ளே சென்று பாத்ரூம் கதவருகே சென்று, அண்ணா உங்களைத் தேடி உங்க ஃப்ரண்ட் இராமசாமி வந்திருக்கிறார். சீக்கிரம் வாங்க..." என்று சொல்லிவிட்டு மீண்டும் சாமிரூம் சென்று தியானம் செய்ய அமர்ந்தாள்.

கந்தசாமியின் குடும்பம் சுத்த சன்மார்க்கக் குடும்பம். வள்ளலாரின் வழியை அப்படியே பின்பற்றுகிறோம் என்று சொல்லிக்கொள்வதில் ஒரு கர்வமும் அவர்களுக்கு உண்டு.  அகல் விளக்கு ஜோதியைத் தவிர அவர்கள் வணங்குவதற்கு அந்த சாமிரூமில் வேறுசாமிகள் ஏதுமில்லை. அவர்களுக்கு அருட்பெருஞ்ஜோதியைத் தவிர வேறு தெய்வம் இல்லை. குடும்பமும் சுத்த சைவமாக இருந்தது.

சற்று நேரத்தில் கந்தசாமி குளித்துவிட்டு வந்தான்.

டேய் என்னடா? காலையிலே வந்துட்டே!

கந்தசாமி... இன்னைக்கு புதன் கிழைமை இல்லையா, காராமணிக்குப்பத்தில்  நடக்கும் சந்தைக்குச் சென்று சில காய்கறிகளை வாங்கிவரவேண்டும். நீயும் வறீயாடா...

.. கிளம்பிட்டேன்.

இருவரும் ஆளுக்கொரு சைக்கிளில் சென்று சந்தையை அடைந்தார்கள். எங்கு நோக்கினும் ஒரே கூட்டம். சந்தையில் கிடைக்கும் காய்கறிகள் மிகவும் மலிவு விலையில் கிடைப்பதால் சுற்றுபுற கிராமங்களில் இருந்து பொதுமக்கள் இச்சந்தையை பயன்படுத்த தவறுவதில்லை.

இராமசாமி காய்கறிகளை வாங்கிக்கொண்டே பக்கத்தில் உள்ள முட்டை கடைக்குச் சென்று முட்டை வாங்க சென்றான். முட்டை வாங்குவது கந்தசாமிக்கு பிடிக்காது எனத்தெரிந்தும் அவனை வைத்துக்கொண்டே முட்டை கடைக்குச் சென்றான் இராமசாமி.

"டேய்... முட்டை சாப்பிடாதே... உயிரைக் கொல்லாதேடா..." என்று சன்மார்க்கக் கருத்துக்களை எடுத்துரைத்தான் கந்தசாமி...

"சரி... முட்டையை நான் வாங்கவில்லை" என சட்டென அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான் இராமசாமி. இருவரும் சைக்கிளை தள்ளிக்கொண்டே நடந்தே வீட்டிற்கு பயணித்தனர்.

சற்றுநேரம் யோசித்தப்பின்... "கந்தசாமி... முட்டையை சைவ உணவில் சேர்த்துவிட்டார்கள்... தெரியாதோ உமக்கு..."

"அது எப்படி சாத்தியம்?" என்றான் கந்தசாமி.

"மரம், செடிகளில் இருந்து வரக்கூடிய விதைகளை நாம் சாப்பிடலாமா? அது சைவமா? அசைவமா?" என்றான் இராமசாமி.

"விதைகளில் ஜீவன் இல்லை. அது சைவமே".

"விதைகளில் ஜீவன் இல்லை என்றால், அது எவ்வாறு முளைக்கிறது?"

"நீ கூறுவது போல் விதைகளில் ஜீவன் இருந்தால், அது நீர், நிலத்தில் சம்பந்தப்படும் முன்னே முளை கண்டிருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு இல்லையே! ஒரு   விதையில் நீரோ அல்லது நிலமோ அல்லது இவை இரண்டும் சேர்ந்தோ விதையினை தாக்கினால்தான் அதில் ஜீவன் புகுந்து முளைவிடுகின்றது. அதுவும் எல்லா   விதைகளும் முளைத்துவிடாது. எனவே அந்த சடமான விதைகளில் நீரின் மூலமோ, நிலத்தில் மூலமோ ஆன்மாவானது கூடியபிறகே அது உயிர் பெறுகின்றது. எனவே நீரும்,  நிலமும் சம்பந்தப்படாதவரை அதில் உயிர் இல்லை. ஆகையால் வித்து, காய், கனி போன்றவைகளை நாம் சைவமாகவே கொள்ள வேண்டும்."

இராமசாமி சற்றே யோசித்த பிறகு.... "விதைகளில் ஏற்கனவே உயிர் இருந்தப்படியால்தான் அதில் நீர் ஊற்றியபிறகு அது முளைக்கிறது. தீயில் வறுத்த விதைகளில் உயிரானது செத்துவிட்ட படியால் அதில் நீர் ஊற்றினாலும் அது முளைகாணாது. மேலும் ஆயிரம் ஆண்டுகள் கழிந்த நிலையில் இருக்கும்   விதைகள் தண்ணீர் ஊற்றினாலும் முளைப்பதில்லை, ஏனெனில் அதில் உள்ள உயிர் இறந்துவிட்டபடியால் அதில் தண்ணீர் ஊற்றினாலும் முளைப்பதில்லை. எனவே விதைகளில் ஜீவன் இருக்கின்றது. அது அசைவமே."

கந்தசாமிக்கு சற்றே தலை சுற்றியது. வள்ளலார் கூறிய ஜீவகாருண்ய ஒழுக்கம் தவறாகிவிடுமோ? என்ற அச்சம்வேறு அவனை கவ்வியது. இப்படியே  பேசிக்கொண்டே வீட்டிற்கு பாதிதூரம் நடந்து வந்துவிட்டார்கள்.

கந்தசாமி மெளனம் கலைந்து, "உயிர் இருக்கும் விதையானது நீர் ஆதாரம் கிடைக்கும்வரை அதுஏன் விதைகளாகவே இருக்க வேண்டும்? முளைகண்டு தாவர தேகம் எடுக்க வேண்டுமல்லவா? வளர்ச்சிதானே உயிருள்ள பொருளுக்கு இலக்கணம். எனவே தண்ணீர் மற்றும் நிலத்தினால்தான் விதைகளுக்கு உயிர் வருகின்றது என்பதை புரிந்துகொள். அடுத்ததாக, தீயில் வறுத்த விதை உண்பதற்குதான் உதவும்,  ஏனெனில் அது சமைக்கப்பட்டாகி விட்டது. சமைக்கப்பட்ட விதையில் நீர் ஊற்றினாலும்  அதில் ஆன்மா ஏறுவதற்கான பக்குவ நிலையை / இயற்கை தன்மையினை அது இழந்துவிடுகின்றது. அடுத்ததாக, ஆயிரம் ஆண்டுகால பழமை வாய்ந்த விதை இப்பூமியில் இருக்க வாய்ப்பில்லை. அப்படியே இருந்தாலும் அவ்விதையும்  காலத்தால் இறுகிவிட்டிருக்கும், ஒருவித கடினத்தன்மையினை கொண்டிருக்கும்.  எனவே அவ்விதைகளில் நீர்விட்டாலும் அதில் ஆன்மா ஏறாது. எனினும் ஆயிரம் ஆண்டுகால பழமையான விதைகளில் நீர் விடின் அது முளைப்பதற்கும் சாத்தியகூறு உண்டு.  ஆகவே விதைகளில் உயிர் இல்லை."

"கந்தசாமி... வள்ளலார் சொல்லிவிட்டார் என்பதற்காக, நீ கண்ணை மூடிக்கொண்டு அதனை மெய்ப்பிக்கப்பார்க்கின்றாய்."

இவ்வாறு இருவரும் பேசிக்கொண்டே கந்தசாமியின் வீட்டை அடைந்தனர். சைக்கிளை நிறுத்திவிட்டு வீட்டினுள் சென்று அமர்ந்தனர். எனினும் அத்துடன் அப்பேச்சை நிறுத்தாது இராமசாமி மீண்டும் கேள்வி கேட்கலானான்.

"நீ கூறுவதுபோல் நீர் விட்டபிறகே விதைக்கு உயிர் வருகின்றது என்றால், இதே தத்துவத்தை முட்டைக்கும் பொருத்தி பார்க்கலாமே!!. முட்டைக்கும் வெப்பம் கிடைத்தபிறகே உயிர் வருகின்றது. எனவே வெப்பம் கிடைக்கும் முன் முட்டைக்கு உயிர் இல்லைதானே!"

இப்பேச்சை வீட்டில் இருந்த தமிழினியும் கேட்கலானாள். ஏதோ ஒரு விவாதம் இருவருக்கும் இடையில் நடந்துக்கொண்டிருக்கின்றது என்பதனை ஊகித்தாள். அதுவும் சைவமா, அசைவமா என்ற விவாதம் தமிழினிக்கும் ஈர்ப்பை உண்டாக்கவே   அவளும் அவர்களுக்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.

"என்ன... என்ன விவாதம் என்பதனை நானும் தெரிந்துக்கொள்ளலாமா?" என்றாள்  தமிழினி.

"ஒன்றுமில்லை... விதையினை போன்றே முட்டையும் சைவம்தான் என்று நான் சொல்கின்றேன். அதற்கு உன் அண்ணன் விதை மட்டும் சைவம் முட்டை சைவம் இல்லை என வாதாடுகின்றான்." என்று இராமசாமி மிக சுருக்கமாக தமிழினிக்கு எடுத்துரைத்தான்.

உடனே தமிழினி, "முட்டை அசைவம்தான்... இதில் என்ன சந்தேகம்?" என்றாள்.

"அப்படியானால், அம்முட்டையை வெப்ப படுத்தினால் மட்டுமே உயிர் வருவது ஏன்?" என்றான் இராமசாமி.

தமிழினி உடனே, "கோழியானது சேவலுடன் இணைந்தபிறகே முட்டையிடும். இம்முட்டையை 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 21 நாட்கள் வைத்தால் அவை குஞ்சு பொறிக்கும். இதனால் இது உயிருள்ள முட்டைதான். அசைவம் தான். சேவலின் ஆண் உயிரணுவால்தான் கோழியானது கருவுற்று முட்டையை இடுகின்றன. ஆகவே அந்தமுட்டை என்பது உயிருள்ள கருவாகும். அந்த கரு வளர்ச்சியடைந்து கோழிகுஞ்சாக உருமாறத்தான் அதற்கு வெப்பம் தேவைப்படுகின்றதே அன்றி உயிர் வருவதற்காக அந்த வெப்பம் பயன்படுவதில்லை. வெப்பப்படுத்தாத கோழிமுட்டையை சில நாட்களுக்குப்பிறகு உடைத்து பார்த்தால் அதில் கருவளர்ச்சியடைந்து அது சிறிய பிண்டமாக இருப்பதை பார்க்கலாம். அந்நிலையில் அது அழுகிவிடும். இதனை கரு கலைப்பு எனச் சொல்லவேண்டும்."

தமிழினியின் இந்த பதிலை இருவரும் எதிர்பார்க்கவில்லை. இராமசாமி சங்கடப்பட்டாலும், கந்தசாமிக்கு தமிழினியின் பதில் ஒரு ஊக்கத்தைக் கொடுத்தது. இருந்தாலும் இராமசாமி விடுவதாக இல்லை.

"இதே தத்துவத்தைத்தான் நான் வித்திற்கும் பொருத்திப்பார்க்கச் சொல்கின்றேன். ஆண் மகரந்தச்சேர்க்கை மூலம்தான் பூவில் சூல் உறுபெற்று அது காய், கனியாகின்றது. அந்த காய் கனியிலிருந்து வருவதுதான் விதை. அப்போது அவ்விதை மட்டும் எப்படி ஜீவனில்லாமல் இருக்கும்? அதுவும் அம்மரத்தின் அல்லது செடியின் கருதானே! அந்தக் கரு வளரத்தான் நீரும் நிலமும் தேவைப்படுகின்றதேயன்றி உயிர் வருவதற்காக இல்லை என்கின்றேன் நான்"

இது என்னடா வம்பாப்போச்சு.... என்று தமிழினியும், கந்தசாமியும் முழிக்கலாயினர். இதற்கு எப்படி பதில் சொல்வது என்று இருவருமே தத்தளித்தனர். சற்று நேரம் கழித்து கந்தசாமியே வாய் மலர்ந்தான்.

"இராமசாமி.... நாங்கள் ஏற்கனவே கூறியதில் இதற்குண்டான பதில் இருக்கின்றது. அதாவது உயிர் இருந்தால் அது வளர்ச்சிபெற வேண்டும். நீரும் நிலமும் இல்லாமல் வித்திற்கு வளர்ச்சி என்பது இல்லை. ஆனால் முட்டையினை வெப்பப்படுத்தாமல் விட்டாலும் அக்கருவானது ஓரளவிற்கு வளர்ச்சியடைந்து பிண்டமாக உருவெடுக்கும் என்பதை புரிந்துக்கொள்."



உடனே தழினியும், "விதைகளை நாம் உண்ண ஏதுவாக இறைவன் இனிப்புச்சுவையுடன் படைத்திருப்பதை கவனித்தாலே அவ்விதையில் உயிர் இல்லை என்பதனை உணரலாம். மேலும் அவ்விதைகளில் துர்நாற்றம் ஏதும் வீசாது. உதாரணத்திற்கு மாதுளம் விதைகள், பாதாம் விதைகள், பிஸ்தா விதைகள், முந்திரி விதைகள் போன்ற விதைகளை நாம் நேரடியாக சமைக்காமல் உண்ணமுடியும். மா, பலா, ஆப்பிள், கொய்யா போன்ற பழங்களையும் நாம் உண்ணுவதற்கு ஏற்றாற்போல் சுவை மிகுந்தவைகளாக படைத்திருப்பதினால் அதில் உயிர் இல்லை. ஆனால் கோழி முட்டை, வாத்து முட்டை போன்ற எந்த பறவை இன முட்டையும் மனிதன் சுவைத்து சாப்பிட தகுதியற்றவை. கண்ணை மூடிக்கொண்டுதான் சாப்பிடவேண்டும், இல்லையேல் வாந்தி வந்துவிடும். மேலும் அவைகள் துர்நாற்றம் வீசக்கூடியதாக இருக்கும். இதிலிருந்து நாம் முட்டை அசைவம் என்பதனை உணரலாமல்லவா!?

தமிழினியின் இந்த விளக்கம் இராமசாமிக்கு போதுமானதாகவே இருந்தது. இருப்பினும் மேலும் அவன் தொடர்ந்தான்.

"இப்போதெல்லாம் சேவல் சேராத, உயிர்கரு இல்லாத, அடை வைத்தாலும் குஞ்சு பொரிக்காத முட்டைகள்தான் பண்ணையிலிருந்து வருகின்றது. எனவே இவ்வகை கோழி முட்டையானது சைவம்தானே."

"என்னது சைவ முட்டையா?... அதை எப்படி தெரிந்துக்கொள்வது

"ஒரு முட்டையை மின்சார பல்பின் அருகில் வைத்துப்பார்த்தால் முட்டையின் உள்ளே வெள்ளைக் கோடுகள் படலமாகத் தெரிந்தால் அது அசைவம். தெரியாவிட்டால் அது சைவம். மேலும் தற்போது அமெரிக்காவில் தாவரங்களில் இருந்து சைவ முட்டைகளை உணவு விஞ்ஞானிகள் உற்பத்தி செய்துள்ளார்கள். சிறப்பு வாய்ந்த ஒருவகை பட்டானியின் 11 வகை தாவரங்களில் இருந்து இந்த முட்டையினை உருவாக்கியுள்ளார்கள்" என்றான் இராமசாமி.

"கோழிக்கு சரியான பருவம் வந்ததும் முட்டைகள் உருவாகின்றன. அது கருவுறுவதற்குத்தான் ஆண் உயியணு தேவைப்படுகின்றது. இல்லையேல் அந்த  முட்டை சைவம் என நீங்கள் கூறுகின்றீர்கள்... சரிதானே!" என்றாள் தமிழினி.

"ம்..ம்.. சரியாக புரிந்துக்கொண்டீர்கள்"

"நீங்கள் கூறியபடி அம்முட்டையில் ஆண் உயிரணு சேராமல் கருவுறாமல் இருப்பினும், அம்முட்டையில் திரவமாக இருப்பது என்ன? அது பெண் உயிரணு அல்லவா?"

கந்தசாமியும் தனது தங்கையின் வாதத்திற்கு வலுசேர்க்க சில சம்பவங்களை கூற முற்பட்டான்.

"சில நாட்களுக்கு முன் சத்துணவில் கொடுக்கப்பட்ட வேகவைக்கப்பட்ட முட்டையில் கோழிகுஞ்சு இருந்ததாகவும், சில முட்டைகளில் கோழிகுஞ்சு பொரிப்பதற்கான அறிகுறிகள் தெரிந்ததாகவும் அறியப்பட்டு அம்முட்டைகளை வழங்க உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்களால் தடைசெய்யப்பட்டது. என்ற செய்தியினை  செய்தித்தாளில் படித்தேன். நீ கூறியது போல் இம்முட்டைகள் சேவல் சேரது பொறிக்கப்பட்ட முட்டைகள்தான். ஆனால் அதிலிருந்து எப்படி பிண்டம் வளர்ச்சியடைய நேரிட்டது? எனவே முட்டை என்றாலே அது கருதான் என்பதை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்." என்றான் கந்தசாமி.

தமிழினியும் தொடர்ந்தாள்....

"நமது தமிழக அரசு இதனை எவ்வாறு பார்க்கின்றது என்றால், கலைஞர் ஆட்சியில் பள்ளியில் வழங்கப்படும் முட்டைக்கு பதிலாக சைவ மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்க உத்தரவிட்டார். இதிலிருந்து முட்டை அசைவமே என தமிழக அரசும் கருதுகின்றது. மேலும் கோழி முட்டை அசைவம்.' எனவே, அவற்றை பொது இடங்களில் பகிரங்கமாக விற்கக் கூடாது. கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி விற்பதை போல் முட்டை விற்பனைக்கும் தனியாக சட்ட விதிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் உருவாக்க வேண்டும்' என்றும் சட்டீஸ்கார் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சட்டீஸ்கார் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்தவர் மனோகர் ஜெத்தானி. இவர் சட்டீஸ்கார் ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:

ராய்ப்பூர் நகரில் பல இடங்களிலும் சாலையோரங்களில் இறைச்சி கடைகளில் கோழி முட்டைகள் பகிரங்கமாக விற்கப்படுகின்றன. முட்டை சைவம் என்று சொல்வதற்கு சட்ட ரீதியாக எந்த முகாந்திரமும் இல்லை. உயிருள்ள கோழி முட்டை இடுகிறது. மண்ணில் விதை விதைத்து முட்டை உண்டாவதில்லை.

நகரில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். பகிரங்கமாக முட்டை  மற்றும் மாமிசம் விற்பனை செய்வது இதை சாப்பிடாத இதர சமூகத்தினரை பாதிக்கிறது. இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, “முட்டை அசைவ உணவு. அவற்றை தெருக்களில் விற்கக் கூடாது. கோழிக்கறி, ஆட்டுக்கறி விற்பது போன்று   முட்டைகள் விற்பதற்கும் தனியாக "லைசென்ஸ்' இரண்டு மாதத்திற்குள் வழங்க வேண்டும். 1956ம் ஆண்டு நகராட்சி சட்டத்தின்படி முட்டை விற்பனை செய்வதற்கான இடங்களை மாநகராட்சியும், அரசும் அறிவிக்க வேண்டும். இதை மீறுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். என்று தமிழினி தமது இறுதி வாதத்தை நறுக்காக எடுத்துவைத்தாள்.

இவ்வாறு ஒருவழியாக இவ்விவாதம் முற்றுப்பெற்றது. அவர்களுக்கு பசியும் எடுக்க தொடங்கியதால் இராமசாமி அவ்விடத்தை விட்டு விலக எத்தனித்தான்.

"தமிழினி... உனது வாதம் உண்மையில் சத்தாக இருந்தது. நீ சொல்லியதையும், கந்தசாமியின் விவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முயற்சி செய்கின்றேன். அடுத்த முறை உங்கள் வீட்டிற்கு வரும்போது இந்த இராமசாமி முட்டையை மூட்டை கட்டி தூர வீசிவிட்டுதான் வருவேன் என நினைக்கின்றேன்." என்றான் இராமசாமி.


இதனைக்கேட்ட தமிழினிக்கு லேசான வெட்கத்துடன் தலையசைத்தாள். கந்தசாமியும் இராமசாமிக்கு கைகுலுக்கி விடையளித்தான்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.