வள்ளலாரின் முதல் மாணவர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களின் 127-ஆம் ஆண்டு நினைவுதினம்:
'நம் பிள்ளை நமக்குக் கிடைத்தாய்' என்று வள்ளற்பெருமானின் சொல்லில் ஆட்கொள்ளப்பட்டவரும், திருக்குறள் பாடத்தை வள்ளற்பெருமான் சொல்லிற்கிணங்க நடத்தியவரும், வள்ளற்பெருமானின் பாடல்களை திருவருட்பா எனவும் அதனை ஆறு திருமுறைகள் என வகுத்தவரும், தம் குருநாதருக்கு திருவருட்பிரகாச வள்ளலார் என்று பெயர் வைத்தவரும், வள்ளற்பெருமானால் உபயகலாநிதி பெரும் புலவர் என்ற பட்டத்தை பெற்றவரும், வள்ளற்பெருமானின் முதல் மாணாக்கருமான "தொழுவூர் வேலாயுத முதலியார்" அவர்கள் 21-02-1889-ஆம் ஆண்டு வள்ளல் மலரடியில் மலர்ந்தார். பெருமகனாரின் 127-ஆம் ஆண்டு நினைவுதினம் நாளைய தினம் மலர இருக்கின்றது. சன்மார்க்க அன்பர்கள் அன்றைய தினம் அருட்பெருஞ்ஜோதி அகவல் படித்து குருவருள் பெற முயலவும். உலகில் உள்ள அனைத்து சன்மார்க்க சங்களிலும் அங்குள்ள அனையா தீபத்திற்கு அருகில் பெருமகனாரின் நினைவாக அன்றைய தினம் ஒரு ஜோதி ஏற்றிவைத்து வழிபட வேண்டும். அங்குள்ள அறிவிப்புப் பலகையில் பெருமகனாரின் நினைவு தினத்தை குறித்து வைக்க வேண்டும். சிறப்பு அன்னதானம் வழங்குதலும் நல்லது. இப்படி எவ்வகையிலாவது அன்றைய தினம் பெருமகனாருக்கு நாம் நமது நன்றியினை தெரியப்படுத்த வேண்டும். இவரது ஜீவசமாதி சென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ளது. அந்த சமாதி நிலையம் ஒரு பள்ளிக்கூடத்தில் யாரும் கவனிக்காத நிலையில் விளங்கி வருகிறது. அதனை வடலூர் தலைமை நிலையம் ஏற்று அதனை பொதுமக்கள் வழிபாட்டிற்கு கொண்டுவர வேண்டும். வள்ளற்பெருமானும் இதற்கு தக்க முயற்சி எடுப்பார் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமும் நமது விண்ணப்பத்தை வைப்போம்.
தொழுவூரார் மனைவிக்கு வள்ளற்பெருமான் செய்த சோதனை:-
வடலூரில் தொழுவூரார் மனைவி சீரங்கம்மாள் நகை இல்லையே என்று வருந்தியது உணர்ந்து நம்பெருமான் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தார். சில நாளில் அந்த நகை களவு போய்விட்டது. அது கேட்டு வருந்திய வள்ளல் 'நகை களவு போனபோது என்ன சொல்லி அழுதார் என்று கேட்டார்." என் நகை, போனதே என்று அழுதார் என்றனர். "சாமி நகை போனதே என்று சொல்லி இருந்தால் சாமி காத்திருப்பார்." என்று பூடகமாகச் சொல்லி வள்ளல் சிரித்தார்.
தொழுவூரார் மகனுக்கு வள்ளற்பெருமான் கொடுத்த ஆற்றல்:-
புதுச்சேரி தந்தி அபீஸ் மானேஜர் பிநாகபாணி முதலியார் (ஏழெட்டு பாஷையில் வல்லவர்) "வெறுங்கும்பல் சேர்ந்து சும்மா சாப்பிட்டு விட்டுப் பொழுது போக்குகின்றார்கள்" என்று சாலையிலுள்ள கூட்டத்தாரைச் சிறிது இகழ்ந்தனர் என்ப. அவர் வள்ளலாரிடம் வருவதற்கு முன்னரே வள்ளலார் 'ஒருவர் புத்திசொல்ல வருகிறார்' என்றனர். முதலியார் வந்து அரைமணிநேரம் அவ்விஷயமாகவே பேசியபின் வள்ளலார், தொழுவூர் முதலியாருடைய மகனாகிய திருநாகேச்சரம் என்னும் நான்கு வயதுள்ள சிறுவனைத் தன்கையாற் பிடித்துப் பிநாகபாணி முதலியாரெதிரே நிறுத்தி 'உமக்கு எத்தனை பாஷைகள் தெரியும்' என்ன, ஐந்தாறுபாஷை தெரியும் என்றனர். வள்ளலார் 'எந்தப் பாஷையில் எந்த விஷயம் வேண்டுமானாலும் இந்தப்பிள்ளையைக் கேளுங்கள்' என்றனர். முதலியார் மூர்ச்சையாகி ஊமையாயினர். வள்ளலார் சிறிது நேரம் பொறுத்துப் பொறுத்து ஏழுதரம் "கேளும், கேளும்" என்றனர். அரை மணி நேரம் கழித்து மன்னிக்க வேண்டுமென்று முதலியார் நினைக்கவே வள்ளலார் 'பிச்', என்ற வுடனே வாய்திறந்து பேசி வணங்கிச் சென்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.