Thursday, February 18, 2016

அருள்மிகு செங்கழுநீர் அம்மன் துதி

அருள்மிகு செங்கழுநீர் அம்மன் துதி

தி.ம.இராமலிங்கம்

(எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

சுத்த சன்மார்க்கம் சுகம் பெறவே
    சத்தியன் என்னை சகத்தே வைத்து
சித்த னாக்கிய செங்கழுநீர் அம்மனே
    சுயஞ் ஜோதியாகி சுடர் ஓங்கி
எத்திக்கும் அருளை அளித்துக் காக்கும்
    எங்கள் குலதெய்வ ஒளியே திரு
முத்திரையர் பாளைய மணி ஒலியே
    மரண மில்லாநிலை மகிழ்ந் தருளே.        1

அருட்பெருஞ் ஜோதி அருள் பெறவே
    அன்னை எனவந்த மர்ந்த நல்மலரே
உருவ மில்லா உண்மைப் பொருளாய்
    உள்ள மினிக்கும் என்தனித் தாயே
திருமுத்திரையர் பாளையம் திக ழொளி
    தயவால் என்னை தூயனாக்கி அன்றே
கருவில் செங்கழுநீராய் கலந்த அம்மனே
    கண் நிறைந்த கருணை வடிவே.            2

சுவர்ண தேகியே செங்கழுநீர் அம்மையே
    சுக மளித்து சீர்செய்யும் சிற்ஜோதியே
புவன சுந்தரியாகி புகழோங்கு முத்திரையர்
    பாளையம் அமர்ந்த புண்ணியத் தாயே
தவம் உடையார்க்கு தருகின்ற வரத்தை
    தயவில்லாத எனக்கும் தந்த தருவே
கவர்ந் திழுக்கும் காந்தக் கனலேஎன்
    குலதெய்வக் குடிலே கருணைக் கடலே.    3

செங்கழுநீர்த் தாயேஎன் செங்கமலப் பூவே
    சிந்தாதத் தேனே சிந்தைசெய் தேனே
மங்காத ஒளியே மார்கழிக் குளிரே
    மலர்ந்த முகமே மங்கையர் மாண்பே
தங்கமே அங்கமாகித் தகிட தகிடவென
    தில்லையில் ஆடியத் திருத் தாள்களே
எங்கள் குலதெய்வ முத்திரையர் பாளைய
    இடம் வசிக்கும் இனிய உறவே.            4

எனக்குற்ற தந்தையாகி ஈன்றத் தாயாகி
    இன தெய்வமாகி கற்பிக்கும் குருவாகி
மனம் மகிழும் மனைவியாகி எனக்கேற்ற
    மணாளனாகி பெற்ற மக்களாகி ஈட்டும்
தனமாகி என்னைத் தாங்கும் நண்பனாகி
    தான் தோன்றிய முத்திரையர் பாளைய
சனமாகி உலகாளும் செங்கழுநீர் அம்மனே
    சுயம்பு தேவியே காத்தருள் நீயே.        5

அகண்ட வெளியாகி அணுவுள் அணுவாகி
    ஆனந்தக் காற்றாகி இன்றாகி நாளையாகி
பகலாகி இரவாகி பார்முழுதும் நீயாகி
    பிறக்கின்ற உயிராகி பார்க்கின்ற பொருளாகி
இகமாகி பரமாகி யார்க்கும் உறவாகி
    இங்கெனக் கமைந்த குலதெய்வ மாகி
சிகரமாகி ஓங்கும் செங்கழுநீர் அம்மனே
    சீர் பெற்ற முத்திரையர் பாளையமே.        6

கல்வியும் செல்வமும் கைநிறைய தந்திடும்
    காத்திடும் அரசியல் அதிகாரமும் வந்திடும்
பல்லோர் போற்றும் புகழும்வந் தெய்திடும்
    புண்ணிய செயலாம் தருமமும் செய்திடும்
நல்லதோர் வாய்ப்பும் நன்றாய் அமைந்திடும்
    நாடெல்லாம் சுற்றிடும் நாளும் நாடிடும்
எல்லோரும் முத்திரையர் பாளையம் வந்திடும்
    அந்நாளே செங்கழுநீர் அம்மன் தந்திடுமே.    7

சித்தம் ஒன்றாகி சிந்தித்து இருப்போர்முன்
    சத்த மின்றி சடுதியில் வருவாயே   
பித்தம் போக்கியே புண்ணியச் செயலால்
     பற்று நீக்கும் செங்கழுநீர் அம்மனே
முத்திரையர் பாளைய மாமணியே எந்தன்
    முக்திக்கு முந்தி முன்னிற் பவளே
முத்தேகம் எடுக்க மன்றாடும் என்னில்
    மலர்ந்து வாசம் வீசுகின்ற முப்பூவே.        8

தொட்டகுறை இதுவோ தாயே நானுமுன்
    தாள் வணங்கிப் பாடியது தீதுறுமோ
விட்டகுறை எதுவோ வள்ளற் பெருமானை
    விழைந்த நான்இனி விடுவேன் உனையே
துட்டனென நினையாது மகனை மன்னித்து
    துக்கமேதும் வாராது காப்பாய் எனையே
சிட்டம் நீக்கவே முத்திரையர் பாளையம்
    செங்கழுநீர் அம்மன் உன்னை பாடினேனே.    9

மக்களெல்லாம் நோயற்று மகிழ்ந்து வாழவே
    மங்கள தீபமாய் இருந்து காப்பாய்நீயே
எக்காலமும் உயிர்கள் இன்புற்று வாழவே
    எங்குமாய் விளங்கி துன்பம் துடைப்பாய்நீயே
சக்கரமாய் இருந்து உலகை முன்னேற்றி
    சுத்த சன்மார்க்கம் விரைந்து சார்வாய்நீயே
தக்கநேரம் இதுவே முத்திரையர் பாளையம்
    தாண்டி செங்கழுநீர் அம்மனே வருவாயே.    10

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.