Saturday, December 23, 2017

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் – உரை தொடர் - 13

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (டிசம்பர் 2017) வெளிவந்தவை:

திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் – உரை

                                               தொடர் - 13

                                        --தி.ம.இராமலிங்கம்


வாடுத னீக்கிய மணிமன் றிடையே
ஆடுதல் வல்ல வருட்பெருஞ் ஜோதி-102

சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தை இயற்ற துவங்கும் முன்னர் திருவாரூர் மன்னர் மனுநீதி சோழனின் பெருமையினை எடுத்துரைத்துரைக்கின்றார். வள்ளற்பெருமானும் மனுநீதி சோழனின் பெருமையை மிக விரிவாக சிறுகதை வடிவில் எழுதியுள்ளார். அக்கதையில் மணி மன்றம் உருவகப்படுத்தப்படுவதை நாம் அறிவோம்.

தனது கன்றை இழந்த தாய்ப்பசுவானது மிகவும் வாடிநின்று என்ன செய்வதென்று திகைத்து தனது உயிரற்ற கன்றையே பார்த்து நிற்கின்றது. பின்னர், அந்நாட்டில் அரசாளும் மன்னர் நீதி வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த மணி மன்றத்தை நோக்கிச் சென்று அங்குள்ள மணியினை அடிக்கின்றது. மணி ஓசை கேட்ட மன்னர் ‘குடி மக்களுக்கு என்ன நேர்ந்ததோ?’ என்று அஞ்சி அம்மணி மணிமன்றத்துக்கு ஓடி வருகின்றான். அங்குள்ள பசுதான் அம்மணியை அடித்தது என அறிந்து அதன் துயரை உணர்ந்தறிகின்றான். அப்பசுவின் துயருக்கு காரணமான தனது ஒரே மகனை கொல்ல ஆணையிடுவதின் மூலம் அப்பசுவின் துயரை துடைக்க முற்படுவது அக்கதையின் சாரம் ஆகும்.

அக்காலத்தில் திருவாரூரில் அமைக்கப்பட்டிருந்த மணி மன்றம் என்பது உயிர்களின் துயர்களை போக்கவும், தவறு புரிந்தவர்களுக்கு தண்டனை அளிக்கும் இடமாகவும் இருந்தது. அதுபோன்றதொரு துயர் துடைக்கும் ஒரு மணி மன்றம் நமது உடம்பிலும் இறைவன் அமைத்துள்ளான் என்பதை இங்கே வள்ளற்பெருமான் குறிப்பிடுகின்றார். நாம் எதற்கெல்லாம் வாடுகின்றோம்? பிறர் மரணத்தைக் கண்டு வாடுகின்றோம். பிறர் பிறப்பைக் கண்டு வாடுகின்றோம். (பிறப்பு மகிழ்ச்சியானதல்ல) பிறர் வறுமையைக் கண்டு வாடுகின்றோம். பிறர் பசியை உணர்ந்து வாடுகின்றோம். இவையெல்லாம் நமக்கும் இருக்கின்றதே என்று நம்மை கண்டும் வாடுகின்றோம். வாடிய பயிரைக் கண்டு வாடுகின்றொம். பிற உயிர்கள் கொலைபடுவதைக் கண்டு வாடுகின்றோம். இப்படிப்பட்ட வாடுதலை நீக்கி சுகம் பெற வேண்டுமாகில் நாம் மணி மன்றம் சென்று முறையிட வேண்டும். நாம் என்பது நமது ஆன்மாவைக் குறிக்கும். நமது ஆன்மா இருக்குமிடம் ஆன்மாகாசம். ஆன்மாகாசத்தில் மணி மன்றம் என்கின்ற சிற்சபை அமைந்துள்ளது. அங்குதான் நமது மன்னரின் ராஜ்ஜியம் விளங்கிக்கொண்டிருக்கின்றது. அங்கு நமது துயரொலியை எழுப்பினால், அது கேட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அம்மணி மன்றிடையே எழுந்தருளி நமது துயரத்தை போக்குவான்.

நமது ஆன்ம உருக்கம் என்கின்ற ஆன்ம வாட்டமும் அது எழுப்பும் மணி ஓசையும் (இறைவனின் புகழைப் பாடுதலும் நமது குறைகளை எடுத்தியம்புவதும் “மணி ஓசை” எனப்படும்.) அறிந்தும் கேட்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உடனே நமது ஆன்மாவின் அருகில் எழுந்தருளி நமது வாட்டத்தை நீக்கியருள்வான். 

எனது அகத்தும் புறத்தும் ஆடுகின்ற ஆடல் வல்லானே! என்று நான் உன்னை புகழ்ந்து பாடியும், எனது குறையினை உன்னிடம் எடுத்தியம்பியும் மணி ஓசையாய் முழங்கினேன். அது கேட்டு எம்மணி மன்றிடையே எனக்கருகே எழுந்தருளி எனது மரணம் என்கின்ற பெரும் வாட்டத்தை போக்கியருளிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே. 

நாடகத் திருச்செய னவிற்றிடு மொருபே
ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ் ஜோதி-104

தமது குடிமக்கள் எதனை செய்ய வேண்டும், எதனை செய்யக்கூடாது என அந்நாட்டு மன்னன் அம்மக்களை நாடி வந்து சொல்லி அவர்களை வழிபடுத்துவான். மழை நீர் நிரம்பி வெள்ளம் வரப்போகின்றது…. கரையோர மக்கள் எல்லாம் அவ்விடத்தை விட்டகன்று செல்லும்படி மன்னர் கேட்டுக்கொள்கின்றார் என அம்மக்களை நாடிவந்து உரைப்பது போன்று வள்ளற்பெருமானை நாடிவந்து அவரது அகத்திலே, (நாடு+அகம்=நாடகம்) இறைவனான எனது திருச்செயலை நீ உரைக்க வேண்டுமென அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகின்றார். “நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன்தன் வார்த்தை” (திருவருட்பா-5594) என்று வள்ளலார் இதனை ஞானசரியையில் பாடுவார். இறைவனுடைய திருச்செயல் என்ன?... வேறென்ன…? மனித உடலுக்கு மரணமில்லா பெருவாழ்வை அளிப்பதுதான் இறைவனுடைய மேன்மையான திருச்செயலாகும். அந்த திருச்செயலை நான் எவ்வாறு… யாருக்கு செய்வேன்? என்று நீ இந்த உலகியல் மக்களுக்கு உரைக்க வேண்டும் என்று பெருத்த சிவந்த பொன்னொளியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவன் வள்ளலார் அகத்தை நாடி வந்து உரைக்கின்றார்.

ஆடகம் என்றால் தங்கம். தங்கத்தில் நான்கு வகைகள் உண்டு.

1. சாதரூபம் – இயற்கையாக இருக்கும் தங்கம்.
1.   கிளிச்சிறை – கிளையை போல சற்றே பச்சை நிறங்கொண்ட தங்கம்.
2.   ஆடகம் – காய்ச்சிய சற்று குங்கும நிறம் கொண்ட தங்கம்.
3.   சாம்பூநதம் – ஒளி மங்கிய தங்கம்.

நாம் விரும்புகின்ற குழந்தைகளை பொன்னே… மணியே… கண்ணே… என கொஞ்சுவது போல, இறைவனை வள்ளற்பெருமான் பொன்னே… என தங்கத்துக்கு நிகராக இயம்புகின்றார். அதுவும் அத்தங்கம் குங்கும நிறம் கொண்ட ஆடகத் தங்கமாக சற்று சிவந்த நிறத்தில் ஒளிர்வதாக கூறுகின்றார். இறைவனின் ஒளி எப்படிப்பட்டது என்றால்?... சற்று சிவந்த பொன்னொளியாக இருக்கின்றது என்று இதன் மூலம் நாம் அறிய முடிகின்றது. 

          எமது அகத்தை நாடி வந்து, நினது திருச்செயல் என்னவென்று சொல்லிய சிவந்த பொன்னொளியாம் பொதுவொளி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.
          கற்பனை முழுவதுங் கடந்தொளி தருமோர்
அற்புதச் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி-106

இறைவனை கற்பனையால் வடித்தெடுக்கின்றன மதங்கள். சிவந்த பொன்னொளியாக இறைவன் இருப்பதாகக் கண்டோம். இதனை ‘பொன்னார் மேனியன்’ என்றும் சிவந்த ஒளியை ‘சிவன்’ என்றும் சைவம் கற்பனை செய்துக்கொண்டது. மதங்களும் சமயங்களும் பொய் என்று சொல்லும் சுத்த சன்மார்க்கமும் இறைவனை ‘அருட்பெருஞ்ஜோதி’ என்று சொல்கின்றது. இதுவும் கற்பனையே. இறைவனின் இயல்பை மனதால், சொற்களால், எழுத்தால் யாராலும் நிறுவிட முடியாது. எனினும் அவ்விறைவன் ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற சொல்லை தமது நிலையாக, வெளிப்படையாக தமக்கு அறிவித்ததாக வள்ளற்பெருமான் நமக்கு உரைக்கின்றார். அவ்வகையில் ‘அருட்பெருஞ்ஜோதி’ என்ற நிலையினை நாம் இறைவனாக தொழுகின்றோம்.

கற்பனை என்பது இங்கு இருள் என்ற பொருளை தருகின்றது. ஒளி எங்கே தேவைப்படுகின்றது? இருளான இடத்திற்குத்தான் ஒளி தேவைப்படும். ஆனால் இங்கே கற்பனை என்கின்ற இருளில் ஒளி பாய்ந்து அக்கற்பனையை இன்னும் மெருகூட்டும் வேலையினை இவ்வொளி செய்ய வில்லை. அந்த கற்பனை என்கின்ற இருட்டை கடந்துவிடுகின்றது இந்த ஒளி. கற்பனை என்கின்ற சமயங்கள் மதங்கள் என்கின்ற இருட்டுக்குள் இறைவனுடைய ஒளி செல்லவே இல்லை. அவைகள் இன்னும் இருட்டாகவே இருக்கின்றன. அப்படிப்பட்ட கற்பனை இருளைக் கடந்து ஒளி மட்டுமே இருக்கக்கூடிய அற்புதமான இடத்தில் (சுத்த சன்மார்க்கத்தில்) மேலும் ஒளியினை தந்துக்கொண்டே இருக்கின்ற அற்புதச் செயலை நமது சிற்சபை செய்துக்கொண்டிருக்கின்றது. சிற்சபை என்பது இருள் இல்லா இடம். எப்போதும் ஒளிர்ந்துக்கொண்டிருக்கக் கூடிய அற்புத இடம். அவ்விடத்தில் ஒளியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கின்றார்.

இருளான கற்பனைகளை கடந்து இருளில்லா இடத்தில் ஒளியை தருகின்ற அல்லது ஒளியாக இருக்கின்ற அற்புத சிற்சபையில் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே. 

ஈன்றநற் றாயினு மினிய பெருந்தய
வான்றசிற் சபையி லருட்பெருஞ் ஜோதி-108

பெற்றெடுத்து வளர்த்த தாய் தன் மகனை கண்மூடித்தனமாக அடித்துக்கொண்டிருந்தாள். பையன் கதறி அழுதும் அவனை விடவில்லை. அவளது கணவன் தடுத்தபோது அவள் அடிப்பதை நிறுத்தவில்லை. பையன் அலறும் சப்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் ஓடி வந்தனர். அந்த தாயின் கையைப் பிடித்துத் தடுத்தபடி, ‘எதுக்கம்மா இந்த பச்சைப்பிள்ளையை போட்டு இந்த அடி அடிக்கிறீர்கள்?’ என்று கேட்டனர்.

அதற்கு அவள் கோபமாக, ‘கிளாஸ்ல, பக்கத்தில உட்கார்ந்து இருந்த பையனிடம் இருந்து பென்சிலையும், ரப்பரையும் திருடி விட்டு வந்து விட்டான். எங்கே இருந்து வந்தது இந்த திருட்டு புத்து? என்றாள். ‘சரி விடுங்கள், சின்ன பையன்தான், தெரியாமல் தப்பு பண்ணிட்டான்’ என்று சமாதானப்படுத்தினர்.

இப்போது முன்பைவிட கொஞ்சம் சமாதானமானார் அந்த தாய். ‘பென்சிலையும் ரப்பரையும் திருடி விட்டு வந்து இப்படி மானத்தை வாங்குகின்றானே…! எங்கிட்ட கேட்டிருந்தால்… நான் வேலை பார்க்கும் ஸ்கூலில் இருந்து எடுத்து வந்து கொடுத்திருக்க மாட்டேனா…? என்றாள் அந்த தாய். இதைக்கேட்ட அங்கிருந்தோர் தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

இவ்வளவு கோபமாக இருந்த அந்தத் தாயிடமிருந்தே அந்த திருட்டு குணம் அவள் பிள்ளைக்கு சென்றிருக்கின்றது என்பது தெளிவாகின்றது. இப்படிப்பட்ட தாய் நற்றாயா…? இப்படித்தான் தாயுள்ளத்துடன் இறைவன், அவன் பிள்ளைகளான நமக்கும் அருள்வானா…? தன்னை வணங்காதவர்களின் பொருளை திருடி தன்னை வணங்கும் மனிதர்களுக்கு கொடுப்பானா?

மீண்டும் ஒரு கதை… ஒரு ஊரில் ஒரு தாய் இருந்தாள். அவளுக்கு ஒரு மகன். அம்மகனோ ஒரு தாசியிடம் மனதைப் பறிகொடுத்தான். ‘மனம் போனபடியே பொருள் போகும்’ என்றபடி பொருளையும் பறிகொடுத்தான். அவனிடம் பொருளில்லை என்பதை அறிந்த அந்த தாசி அவனைத் துரத்தியடித்தாள்.

அவனோ மோக மயக்கம் முற்றி… ‘உனக்கு என்ன வேண்டும் சொல்… கொண்டு வருகின்றேன் என்று அவள் காலில் வீழ்ந்தான். அவள் கேலியாகச் சிரித்துக்கொண்டே, ‘உன் தாயின் இருதயம் எனக்கு வேண்டும்’ என்றாள்.

காம மயக்கத்தில் சிக்கிய அவன், தன் தாயிடம் ஓடினான். அம்மா! அவளுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் ஏதுமில்லை. உன் இருதயம் வேண்டும் என்கிறாள். அவளை என்னால் மறக்க முடியாதம்மா’ என்றழுதான்.

தாய் கேட்டாள்… ‘அதன் மூலம் அவள் திருப்தியடைந்து உன்னுடனேயே இருப்பாளா மகனே?’

இருப்பாள்!... என்றான் மகன். தன்னைக் கொன்று இருதயம் வெட்டி எடுத்துக்கொள்ளும்படி தாய் கூறினாள். அவன் தாயைக் கொன்றான். இருதயத்தை எடுத்தான். தனது வலது கையில் ஏந்தியவாறு தாசி வீடு நோக்கி ஓடினான். வழியில் கல் தடுக்கிக் கீழே வீழ்ந்தான். கையிலிருந்த தாயின் இருதயம் நான்கு அடி தள்ளி விழுந்தது.

அடிபட்டு விழுந்த தனது மகனைப் பார்த்து அந்த தாய் இருதயம் சொன்னது…

‘ஐயோ!... வலிக்கின்றதா மகனே!... நான் உயிரோடில்லையே… உனக்கு மருத்துவம் செய்ய…!

மகன்… ‘அம்மா!!! என்று அலறினான். அவன் ஆவியும் அங்கே பிரிந்தது.

இப்படிப்பட்ட குணம் உடையவள் தாய். நற்றாய். தன் மகன் தீயதை விரும்பினாலும் அவ்விருப்பத்தை தன்னை அழிப்பதின் மூலம் நிறைவேற்றுவாள். பக்கத்து வீட்டாளின் இருதயத்தை எடுத்துச்செல்ல துணை போகமாட்டாள்.

இறைவனும் இவ்வாறே… தமது பக்தர்களுக்கு அவர்கள் தீயதை விரும்பினாலும், நல்லதை விரும்பினாலும் அதனைக் கொடுத்து வேடிக்கை பார்க்கின்றான்.

ஆன்ம அறிவுடையோரை தடுத்தாட்கொண்டு தாம் விரும்பியதை அவர்களுக்கு அளிக்கின்றான். தாயின் கருணை உள்ளமானது தமது மகனுக்காக தம் உயிரை மாய்க்கின்றது. ஆனால் அந்த தாயின் கருணையை விட இறைவனின் பெருந்தயவானது தம் பிள்ளைகளை தம்முடனே கலக்கவைத்துவிடுகின்றது. தன் பிள்ளைக்கு தாய் கொடுக்கமுடியாத இன்பத்தை, இறைவனின் பெருந்தயவானது பேரின்பமாக கொடுத்துவிடுகின்றது. இதனையே ‘தாயினும் இனிய பெருந்தயவு’ என்கின்றார் வள்ளலார்.

பெற்ற தாயைக் காட்டிலும் இனிய பெருந்தயவான பேரின்பத்தை  சிற்சபை எங்கும் நிறைத்து வைத்திருக்கின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே. 

இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
கன்புறத் தருசபை யருட்பெருஞ் ஜோதி-110

          பக்தன் ஒருவன், இறைவனிடம் தனக்கு காட்சியளிக்க வேண்டுமென வெகு காலமாக வேண்டிக்கொண்டு வந்தான். இறைவனும் ஒரு நாள் திடீரென அந்த பக்தனுக்கு காட்சியளித்து ‘வேண்டுவன கேள்’ என்றார்.

          பக்தனுக்கு ஆச்சரியம்… அதிர்ச்சி… எதிரே நிற்பவன் இறைவன். நான் அவனிடம் எதைக் கேட்பது…? ஏதாவது முக்கியமானது விடுபட்டுவிட்டால் என்ன செய்வது…? என்ற குழப்பத்தில் அமைதியாக இருந்தான்.

          அவன் குழப்பத்தை புரிந்துக்கொண்ட இறைவன்... ‘மகனே, நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம். அதை நான் அப்படியே தந்துவிடுவேன். அதே நேரம் உன் எதிர் வீட்டில் உள்ள ஏகாம்பரத்துக்கு நீ கேட்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக கொடுத்து விடுவேன்… என்றான் இறைவன்.

          இப்போது பக்தனுக்கு மேலும் குழப்பமாயிற்று. எனது ஒரே எதிரியான எதிர்வீட்டு ஏகாம்பரம் என்னால் இரு மடங்கு பணக்காரனாகிவிட்டால்… அதை என்னால் பொறுக்க முடியாது என்று யோசித்தான்.

          ‘இறைவா… என்னை எல்லா விதத்திலும் டென்ஷனாக்குவதே அந்த எதிர் வீட்டு ஏகாம்பரம்தான். அப்படி இருக்க அவன் உங்கள் வரத்தால் என்னை விட பெரியவனாக எப்படி விடுவேன்…? அதனால் எனக்கு ஒரு கண்ணை குருடாக்கிவிடும்’ என்றான்.

          தாம் பெற்றிருக்கின்ற பொருள் மற்றவர்களுக்கு உபயோகமானதாக இருக்க வேண்டும் என்றில்லாது… மற்றவர்கள் பொறாமை படும்படி இருக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைய மாந்தர்களுக்கு உள்ளதை மேற்காணும் பக்தனின் வேண்டுதலால் அறிகின்றோம்.

          இதே கேள்வியினை, ‘நீ வேண்டுவன கேள்’ என்று காரைக்கால் அம்மையாரிடம் சிவபெருமான் கேட்கின்றார். அதற்கு அந்த அம்மையார், ‘பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க’ என்றார்.

          இங்கேயும் கேட்கின்ற வரத்தில் சந்தேகம் தலைகாட்டுகின்றது. பிறவாமை வேண்டும் என்றால் முடிந்துவிட்டது. அதனை கொடுக்கும் சக்தி சிவனிடம் இல்லாதிருந்தால் என்ன செய்வது…? அதனால், ‘மீண்டும் பிறந்தால்…’ என்று நம்பிக்கையில்லாத பக்தியை நாம் இங்கே காண்கின்றோம்.

          இதே கேள்வியினை, ‘நீ வேண்டுவன கேள்’ என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரிடம் கேட்கின்றார்… அவ்வளவுதான்… கடகடவென கேட்பதை பாருங்கள்…

          “அப்பாநான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும், ஆருயிர்களுக்கு எல்லாம் நான் அன்பு செய்தல் வேண்டும், எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினது அருட்புகழை இயம்பிடல் வேண்டும், செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும், தப்பேது நான் செய்யினும் நீ பொறுத்தல் வேண்டும், தலைவா நினை பிரியாத நிலைமையும் வேண்டும், அடிமுடி கண்டு எந்நாளும் அனுபவித்தல் வேண்டும், பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும், புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும், எய்யாத அருட்ஜோதி என்கையுறல் வேண்டும், இறந்த உயிர்தமை மீட்டும் எழுப்பியிடல் வேண்டும், நையாத வண்ணம் உயிர் காத்திடல் வேண்டும், நாயக நின்தனைப் பிரியாதுறுதலும் வேண்டும், அழிய்யாத தனிவடிவம் நான் அடைதல் வேண்டும், கண்ணார உனை எங்கும் கண்டிட வேண்டும், காணாத காட்சி எல்லாம் கண்டுகொளல் வேண்டும், பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும், பரமானந்தப் பெருங் கூத்து ஆடிடல் வேண்டும், உண்ணாடி உயிர்கள் உறும் துயர் தவிர்த்தல் வேண்டும், உனைப்பிரியா துறுகின்ற உறவது வேண்டும், அருட்பெருஞ் ஜோதியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும், செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும், திருச்சபைக்கே அடிமைகளாகச் செய்வித்தல் வேண்டும், ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்தல் வேண்டும், எத்தாலும் அழியாத வடிவதிலே நானும் எந்தாயும் ஒன்றாக இனிதுறல் வேண்டும், அருட்பெருஞ் ஜோதியைப் பெற்றே அகமகிழ்தல் வேண்டும், வரைசேர் எவ்வுலகமும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும், மடிந்தாரை மீளவும் நான் வருவித்தல் வேண்டும், புரைசேரும் கொலை நெறியும் சிறிதும் பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும், உரைசேர் மெய்த்திருவடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஒங்குதல் வேண்டும், அண்டமெலாம் பிணடமெலாம் கண்டுகொளல் வேண்டும், துடிசேர் எவ்வுலகமும் எத்தேவரும் எவ்வுயிரும் சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும், படிவானும் படைத்தல் முதல் ஐந்தொழில் ஞானம் படைத்தல் முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும், ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும் ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல் வேண்டும், ஆணவம் ஆதிய முழுதும் அறுத்து நிற்றல் வேண்டும், இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம் என் வசத்தே இயங்கி ஒரு தீமையும் இல்லாதிருத்தல் வேண்டும், எம்மான் நான் வேண்டுதல் வேண்டாமையறல் வேண்டும், ஏகசிவ போக அனுபோகம் உறல் வேண்டும், தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும் சார்ந்து கலந்தோங்குகின்ற தன்மையும் வேண்டும், ஆறந்த நிலைகள் எல்லாம் அறிந்து அடைதல் வேண்டும், எச்சார்புமாகி உயிர்க்கு இதம் புரிதல் வேண்டும், எனை அடுத்தார் தமக்கெல்லாம் இன்பம் தரல் வேண்டும், இச்சாதி சமய விகற்பங்கள் எல்லாம் தவிர்தே எவ்வுலகும் சன்மார்க்கப் பொது அடைதல் வேண்டும், உச்சாதி அந்தமில்லாத் திருவடிவில் யானும் உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும் வேண்டும், ஐந்தொழில் நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும், செறியாத கரணமெல்லாம் செறித்தடக்கல் வேண்டும், சித்தாந்த வேதாந்தப் பொதுநிற்றல் வேண்டும், எறியாது என் எண்ணமெல்லாம் இனிதருளல் வேண்டும், பிறியாது என்னோடு கலந்து நீ இருத்தல் வேண்டும், பெருமான் நின்தனைப் பாடி ஆடுதல் வேண்டும், அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும், மருளாய உலகமெலாம் மருள் நீங்கி ஞான மன்றிடத்தே வள்ளல் உனை வாழ்த்திட வேண்டும், இருளாமை உறல் வேண்டும், எனை அடுத்தார் சுகம்வாய்ந்திடல் வேண்டும், எவ்வுயிரும் இன்பமடைதல் வேண்டும், பொருளாம் ஓர் திருவடிவில் உடையாயும் நானும் புணர்ந்து கலந்து ஒன்றாகிப் பொருந்துதல் வேண்டும், ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடி நிற்க வேண்டும், எமனாதித் தடை என்றும் எய்தாமை வேண்டும், எல்லாம் செய்வல்ல திறன் எனக்களித்தல் வேண்டும், கமையாதி அடைந்துயிர்கள் எல்லாம் சன்மார்க்கம் காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும், விமலாதி உடையஒரு திருவடிவில் யானும் விமலா நீயும் கலந்தே விளங்குதல் வேண்டும், ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும், உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும், பெருமை பெறும் நினது புகழ் பேசவேண்டும், பொய்மை பேசாதிருக்க வேண்டும், பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும், மதமான பேய் பிடியாதிருத்தல் வேண்டும், மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும், உனை மறவாமல் இருக்க வேண்டும், மதி வேண்டும், நின் கருணை நிதி வேண்டும், நோயற்ற வாழ்வில் நான் வாழ்தல் வேண்டும்…” 

          அப்பப்பா…. வள்லலாரின் அப்பா மயங்கிவிட்டார். வள்ளலாருக்கு எவ்வளவு பேராசை பாருங்கள்!... கேட்டுக்கொண்டே இருக்கின்றார். “கேளுங்க… கேளுங்க… கேட்டுக்கொண்டே இருங்க…” என்று சூரியன் எஃப்.எம்.-மில் சொல்வார்களே அதுபோல இறைவனும் வள்ளலாரிடம் சொல்லிவிட்டார் போலும்! கேட்டுக்கொண்டே இருக்கின்றார். ஆனால்… கேட்டதை கொடுத்தாரா அவரது அப்பாவான இறைவன்?

          “கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்லப்
           பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் – தெள்ளமுதம்
           தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்
           எந்தாய் கருணை இது.” (திருவருட்பா-3895)

இதுபோன்று வள்ளலார் கேட்டதை எல்லாம் அருட்பெருஞ்ஜோதி கொடுத்துவிடுகின்றார். இறுதியில் தன்னையே கொடுத்துவிடுகின்றார். அதற்கு மேல் கொடுக்க, இருப்பதுதான் எது…?

          இவ்வாறு என் உள்ளத்தில் எண்ணிவாறு எண்ணியவாறு நான் இன்புறும் வண்ணம் அன்பாக தருகின்ற சபையாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே.  

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.