Saturday, December 23, 2017

நாயன்மார்களின் தத்துவங்கள் – தொடர் – 2

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் (டிசம்பர் 2017) வெளிவந்தவை:


நாயன்மார்களின் தத்துவங்கள் – தொடர் – 2



--தி.ம.இராமலிங்கம்.


“…96 கலையே 96 தத்துவமாய்ப் பிண்ட வடிவாயிற்று. அக்கினிகலை 64-ன் குணங்கள் சைவத்தில் 64 திருவிளையாடல்கள் ஆகவும், உண்மை அடியார்கள் 63 அதீதம் ஒன்று ஆகவும் வழங்குகின்றன. சந்திரகலை (சூரியகலை என்பதை சந்திரகலை என்று தவறுதலாக அச்சடித்துள்ளார்கள்) 12மே வைஷ்ணவ பரத்தில் துவாதச ஆழ்வார்களாக வழங்குகின்றன. மற்ற 20 கலையும் கெளமாரம், பாசுபதம், மஹாவிரதம், சாத்தேயம், காணாபத்தியம், காபாலம், செளரம், மகம் மதீயம் (இஸ்லாம்), பெளத்தம், கிறிஸ்துவம் முதலிய சமயங்களில் வழங்குகின்றன. இவற்றின் அனுபவங்களைக் குரு முகத்தில் அறிக.” (திருவருட்பா-உரைநடை நூல்-பக்கம்-351)
அக்கினிகலை 64
சூரியகலை 12
சந்திரகலை 16+4 (நட்சத்திரக்கலை 4)


ஆக மொத்தம் 96 கலைகளையுடையது நமது உடம்பு. நமது உடம்பின் தத்துவத்தை விளக்கவே சமய மதங்கள் முற்படுகின்றன. ஆனால் எச்சமயமும், மதமும் அதனை முழுமையாக விளக்க முடியாமல் குறை இயல்போடு இருக்கின்றன என்பதனை நாம் மேற்காணும் வள்ளலாரின் வாக்கினை வைத்து உணரலாம். அக்கினிகலை 64-னை விளக்க வந்தது சைவ சமயம். சைவ சமயத்தில் உள்ள திருவிளையாடல் புராணமும், பெரிய புராணமும் அதனை கதைகளாக விளக்கி சொல்கின்றன. கதையின் முடிவில் “இக்கதையிலிருந்து நாம் என்ன தெரிந்துக்கொள்கின்றோம்?” என்று நமக்கு நாமே கேட்டுக்கொண்டு அக்கதையிலிருக்கும் நீதியினை எடுத்துக்கொண்டு ஒழுக வேண்டுமே தவிர அக்கதையில் வரும் மாந்தர்களை கடவுளாகவோ, குருவாகவோ, அடியவர்களாகவோ கொண்டு அவர்களை வழிபட்டு வருகின்ற மூடத்தனத்தை அறவே விடவேண்டும் என்பதே வள்ளலாரின் கோட்பாடு.

கலை என்பது என்ன? நமது உடம்பிலுள்ள ஆன்மாவின் அறிவு (ஆன்ம அறிவு) வளர்ச்சியே கலை எனப்படும். கடவுள் நமக்குள் இயங்கும் நிலையை கலை என்கின்றோம். 96 கலைகளும் பூர்த்தியடைந்த ஆன்மாவே மஹாத்மாவாக பரமாத்மாவாக முத்தேக சித்தியராக அருட்பெருஞ்ஜோதியாக பரிணமிக்க முடியும். இந்த 96 கலைகளும் வள்ளற்பெருமானின் உடலிலுள்ள ஆன்மாவில் சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்து முழுமை பெற்றதை நாம் அவரது அனுபவப் பாடல்களைக் கொண்டு அறியலாம். “அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது…” என்று தமது பேருபதேசத்தில் வள்ளலார் கூறுவார். அற்ப அறிவு என்று அவர் கூறுவது நமக்கெல்லாம் இருக்கின்ற உலக அறிவோ, சமய மத சாதி அறிவோ, அறிவியல் அறிவோ, மற்ற எண்ணற்ற படிப்பறிவோ, அனுபவ அறிவோ அல்ல. நாமெல்லாம் இதுவரை ஒரு சிறிதும் கண்டிராத ஆன்ம அறிவின் குறைவினை அவர் ‘அற்ப அறிவு’ என்கின்றார். அனேகமாக அவர் குறிப்பிடும் அந்த அற்ப அறிவு என்பது 96 கலைகளில் இறுதியில் உள்ள 64 கலைகளின் வளர்ச்சியினை குறிப்பிட்டிருக்கலாம்.

64 கலைகளில் ஒரு கலையை நமது ஆன்மா பெற்றுவிட்டால் நாம் ஒரு நாயன்மாருக்கு சமம். இப்படி 64 கலைகளையும் / அறிவினையும் நமது ஆன்மா பெற்றுவிட்டால் 64 நாயன்மார்க்கு சமமாகிவிடுவோம். நமது ஆன்ம வளர்ச்சிக்கு மேற்காணும் சமய மதங்களில் புக வேண்டாம் என்பதே வள்ளலார் கண்ட கலையாகும். ஆன்ம நேய ஒருமைபாட்டோடு ஜீவகாருண்ய இரக்கத்துடன் இருந்தால் நமது ஆன்ம கலைகள் வளர்ந்து இப்பிறப்பிலேயே முதிர்ச்சி அடையும் என்பதே வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்கம் ஆகும்.

இவ்வுலகில் சுத்த சன்மார்க்கம் வழங்கும் முன்னர் 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த சித்தர் பெருமக்கள் இப்படிப்பட்ட ஆன்ம கலைகளை வளர்க்க யோக முறையினை நாடினர். குறிப்பாக குறிப்பிட வேண்டுமாகில் திருமூலர் என்கின்ற சித்தர் இந்த யோக நெறியினை விளக்கமாக கூறியுள்ளார். நமது உடம்பில் ஓடும் சுவாசக் காற்றினை சந்திரக் கலை, சூரியக் கலை, அக்னி கலை என்று பிரித்தனர். விந்து அல்லது இடது புறம் ஓடும் நாசிக்காற்றினை சந்திரக்கலை என்றனர். நாதம் அல்லது வலது புறம் ஓடும் நாசிக்காற்றினை சூரியக்கலை என்றனர். விந்து நாதம் இவையிரண்டும் இணைந்து ஓடும் சமமாக ஓடும் நாசிக்காற்றினை அக்னி கலை என்றனர். 

சந்திர கலை 16+4= 20 வகையான ஆன்ம அறிவுடையது அல்லது ஆன்ம வளர்ச்சியுடையது அல்லது ஆன்ம அனுபவமுடையது. கலை என்பதை ஆங்கிலத்தில் Division  என்று சொல்லலாம். சந்திர கலை என்பது இடது நாசி ஓட்டத்தின்போது ஏற்படும் ஆன்ம அனுபமாகும். இவ்வனுபவம் நமது ஆன்ம வளர்ச்சியின் முதல் கட்டம் எனலாம்.

சூரிய கலை 12 வகையான ஆன்ம வளர்ச்சியுடையது. சந்திர கலைக்கு பிறகு சூரிய கலை வளரும். சூரியகலை முழுதும் வளர்ச்சியடைந்து விட்டால் நமது ஆன்மா 32-ஆவது கலை நிலையில் நிற்கும். சூரிய கலை என்பது வலது நாசி ஓட்டத்தின்போது வளரும். இவ்வனுபவம் நமது ஆனம வளர்ச்சியில் இரண்டாம் கட்டம் எனலாம்.

அக்னி கலை 64 வகையான ஆன்ம வளர்ச்சியுடையது. சந்திர கலை, சூரிய கலைக்கு பிறகு இறுதியாக அக்னி கலை வளர ஆரம்பிக்கும். அக்னி கலை முழுதும் வளர்ச்சியடைந்துவிட்டால் நமது ஆன்மா 96 – ஆவது கலையில் நிற்கும். இதற்கு மேற்பட்டு கலைகள் கிடையாது. ஆன்மா தனது இயற்கை ஒளியை பெற்று நிற்கும். ஆயிரங்கோடி சூரிய பிரகாசத்தை அடையும்.  பரிபூரணம் இதுவே. அக்னி கலை வளர்ச்சியானது நடுநாடி அல்லது சுழுமுனையில் ஓடும்போது (இருபக்க நாசியிலும் சமமாக சுவாசம் ஓடுவது) உருவாகும். அக்னி நாடி சுவாசம் சாதாரணமாக அரிதாகவே ஏற்படும். யோகத்தால் மட்டுமே இதனை தொடர்ந்து சுவாசிக்க முடியும். இவ்வனுபவம் நமது ஆன்ம வளர்ச்சியில் இறுதி கட்டம் எனலாம்.

பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
பத்தினொடு ஆறும் உயர்கலை பான்மதி
ஒத்தநல் அங்கியது எட்டெட்டு உயர்கலை
அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே.

எட்டுஎட்டு அனலின் கலையாகும் ஈராறுள்
சுட்டுப் படும் கதிரோனுக்கும் சூழ்கலை
கட்டப்படும் ஈர் எட்டாம் மதிக்கலை
ஒட்டப்படா இவை ஒன்றோடு ஒன்றாவே.

எட்டுஎட்டும் ஈராறும் ஈரெட்டும் தீக்கதிர்
கட்டிட்ட சோமனில் தோன்றும் கலைஎன்ப
கட்டப்படும் தாரகைக் கதிர்நூல் நால்உள
கட்டிட்ட தொண்ணூற்றாறு ஆறும் கலாதியே.

எல்லா கலையும் இடைபிங்கலை நடு
சொல்லா நடுநாடி ஊடேதொடர் மூலம்
சொல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
நல்லார் திருவடி நண்ணி நிற்பரே.

சூரிய கலை 12, சந்திர கலை 16, நட்சத்திர கலை 4, அக்னி கலை 64 என 96 கலைகள் உள்ளதை மேற்காணும் திருமந்திரம் கூறுகின்றது. மூலாதாரத்திலிருந்து மூன்று நாடிகளிலும் அதாவது சூரிய, சந்திர, அக்னி நாடிகளிலும் சுவாசத்தை ஒரு சேர சேர்த்து தலைவரை கொண்டு சேர்ப்பவரே திருவடியை அடைவர் என்கின்றது திருமந்திரம். இவ்வாறு 96 கலைகள் உடைய ஆன்மாவே அருட்பெருஞ்ஜோதியாக பரிணமிக்க முடியும் என்று ஏற்கனவே பார்த்தோம். ஆனால் சுத்த தேகம் எடுக்க இந்த 96 கலைகள் மட்டும் போதுமா? என்றால் போதாது. திருமந்திரம் உட்பட சமய மதங்கள் எல்லாம் இந்த 96 கலைகள் அல்லது தத்துவத்திற்குள் அடங்கிவிடுகின்றன. அதற்கு மேற்பட்ட அனுபவத்தை அவைகள் காட்டாது. திருமந்திரம் உட்பட சமய மத மார்க்கங்களில் காட்டப்பட்டுள்ள சாகாக் கல்வி என்பது இந்த 96 தத்துவத்திற்குள் அடங்கிய சாகா அனுபவத்தையே சொல்லியும் அடைந்தும் காட்டியிருக்கின்றது. உண்மையில் இது சாகாக் கல்வியல்ல என்பது வள்ளலாரின் அனுபவ வாக்கு.


“…இது போல் சமயத்திலும் தேகசித்தியும் ஏமசித்தியும் முள. மேற்குறித்த சமய மதங்களில் விரிவு அனந்தகோடி. அந்த சித்திகள் யாவும் அவ்வச்சமய மதங்களின் கர்த்தா மூர்த்தி தலைவன் தலைவி முதலியவர்கள் பதப்பிராப்தி வரையிலும் நிற்கும்…” (திருவருட்பா-உரைநடைநூல்-பக்கம்-387)

எனவே யோகத்தால் 96 தத்துவங்களை / கலைகளை அடைதல் கூடாது. “யோகம் செய்தல் வேண்டுவதில்லை…மூடம் உண்டாகும்…உண்மை” (திருவருட்பா-உரைநடைநூல்-பக்கம்-388) என்று வள்ளலார் கூறுவதை பார்க்கின்றோம். சதா அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தையே சிந்தித்து கொண்டிருத்தல் வேண்டும். சமய வாதிகள் அவ்வச்சமய மந்திரங்களை சிந்தித்தல் நலம். யோகம் வேண்டுவதில்லை என்பதே இங்கு முக்கியம். யோக நூலான திருமந்திரம் வேண்டுவதில்லை என்பதே இங்கு முக்கியம். வள்ளற்பெருமான் யோகம் செய்து இந்த 96 கலைகளை அடையவில்லை என்பது இங்கு முக்கியம்.

“கடவுளின் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடாது…” (திருவருட்பா-உரைநடைநூல்-பக்கம்-98) இவ்வாறு இரக்கத்தால் மட்டுமே நாம் நமது ஆன்மாவின் 96 கலைகளை அடைய முற்படவேண்டும். அவ்வாறு அடைவது மட்டுமன்றி அதற்கும் மேற்பட்டு இருக்கின்ற சுத்த தேகத்தை அடைதல் வேண்டும். 96 தத்துவங்களுக்கும் மேற்பட்டு இருக்கும் தனிப் பொருள் வெளியை அடைய வேண்டும். 96 கலைகளும் இறைவனின் வசம் உள்ளன. அவ்வாறு இருக்கும் 96 கலைகளையும் தன்வசப்படுத்த வேண்டும்.

தத்துவா தீத தனிப்பொருள் வெளியெனும்
அத்திரு அம்பலத் தருட்பெருஞ் ஜோதி (47)

தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே (1141)

யோக நிலையில் 96 கலைகளை அடைந்தவர்க்கும் இரக்க நிலையில் 96 கலைகளை அடைந்தவர்க்கும் அருள் நிலையில் மிகுந்த வேறுபாடு இருக்கும். நடுக்கத்துடனும் உடல் வலிமை குன்றியும் உள்ள 96 வயது அன்பருக்கும், திட ஆரோக்கியத்துடனும் திட மனதுடன் உள்ள 96 வயது அன்பருக்கும் உள்ள விக்தியாசத்தை முறையே நாம் அவ்விரு நிலைக்கும் காணலாம். சைவ சமயத்தில் அக்னி கலையில் சொல்லப்பட்டிருக்கின்ற 64 கலைகளும் யோக மார்க்கத்தில் வந்தவையே. யோக மார்க்கத்தில் உண்டாகும் 64 சித்திகளையே பெரியபுராணமும், திருவிளையாடல் புராணமும் கதைகளாக சித்தரிக்கின்றன. நாம் இனி நாயன்மார்களின் கதைகளில் காணப்படும் ஒவ்வொரு கலையினையும் அது தரும் சித்தியினையும் பற்றி காண்போம்.

--தொடரும்…

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.