Sunday, February 18, 2018

சூரியன்

வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் ‘சமரச பஜனை’ காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் ‘சன்மார்க்க விவேக விருத்தி’ என்னும் மாதாந்திர மின்னிதழில் ‘பிப்ரவரி – 2018’ ஆம் மாதம் வெளியானவை…

சூரியன்
ஏமம் கனகம் என்பன சூரியனைக் குறிக்கின்றன. சூரியனிடத்தில் பொன்னிருக்கின்றது.  (திருஅருட்பா – உரைநடை நூல் – பக்கம் – 347)

                                  – திருவருட்பிரகாச வள்ளலார்.



அனலி, ஞாயிறு, பகலவன், கதிரவன், ஆதவன், ஆதித்தன், என்றூழ், எல், எல்லி, கனலி, வெய்யவன், வெய்யோன், தினகரன், தினமணி, பானு, உதயன், அருணன், இரவி, அருக்கன், பரிதி, பாஸ்கரன் போன்ற பெயர்கள் எல்லாம் சூரியனின் மறு பெயர்களாக நமது செந்தமிழ் பேசும். சூரியனை குறிக்கும் இச்சொற்கள் தவிர இன்னும் இரண்டு சொற்களாக ஏமம், கனகம் என்பனவற்றையும் வள்ளலார் குறிப்பிடுகின்றார். கனகம், ஏமம் என்பன தங்கத்தின் வேறு பெயர்களாகும். அச்சொற்கள் தங்கத்தை மட்டுமன்றி சூரியனையும் குறிப்பதாக பெருமானார் குறிப்பிடுகின்றார். சூரியனிடத்தில் தங்கம் இருப்பதாக பெருமானார் தமது மெய்யறிவினால் கண்டறிந்ததனால் அதனை ஏமம், கனகம் என்று காரண பெயர்களாக அழைக்கின்றார்.

சூரியன் என்பது ஒரு வாயுக்கோளம் என்று இன்றைய விஞ்ஞானம் உரைக்கின்றது. சூரியனில் முக்கால் பங்கு ஹைட்ரஜன் வாயு நிரம்பியுள்ளது. மீதியில் அதிகம் உள்ளது ஹீலியம் அதன் பிறகு ஆக்சிஜன், கார்பன், நியான் மற்றும் இரும்பு ஆகியவை இருப்பதாக விஞ்ஞான ஆய்வு கூறுகின்றது. இதில் தங்கம் என்பது இருப்பதாக விஞ்ஞானம் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இரும்பு மட்டும் ஒரு சிறிய அளவில் இருப்பதாக அறிவியல் கூறுகின்றது. 

சூரியனிடத்தில் தங்கம் இருப்பதாக வேறு எந்த அருளாளர்களோ அல்லது விஞ்ஞானிகளோ வள்ளலாரின் காலத்திற்கு முன்பும் வள்ளலார் உரைத்த பின்பும் இன்று வரை உரைக்கவில்லை. சூரியன் என்பது நமது பூமிக்கு அருகில் உள்ள ஒரு சிறிய நட்சத்திரம். அப்படியென்றால் இவ்வண்டத்தில் உள்ள எண்ணில்லா நட்சத்திரங்களில் எல்லாம் பொன் இருப்பதாக வள்ளலார் வழியில் அறிகின்றோம். விஞ்ஞான பார்வைக்கு அப்பாற்பட்டு சூரியனில் தங்கம் பெருமளவு இருப்பதாக வள்ளலார் அறிந்ததால் நமது சூரியனை “தங்கம்” என்றே அழைப்பதை பெரும் ஆச்சரியத்துடன் பார்க்கவேண்டியுள்ளது.

நட்சத்திரங்களில் (சூரியன்களில்) பல வகை உண்டு. சிவப்பாக இருக்கக்கூடிய செம்பூதம் என்கின்ற நட்சத்திரம் வடிவில் மிகப்பெரியது. திருவாதிரை (Beteguese) மற்றும் கேட்டை (Antares) நட்சத்திரங்கள் செம்பூதம் என்ற வகையினை சார்ந்தவை. இவை இரண்டுமே சூரியனைவிட பல மடங்கு பெரியவை. வடிவில் சிறிய வெண்மை நிறம் கொண்ட நட்சத்திரத்தை வெள்ளைக் குள்ளன் (White Dwarf) என்கின்றோம். சிவப்பு நிறத்தில் உள்ளதை சிவப்புக் குள்ளன் என்கின்றோம்.

நியூட்ரான் நட்சத்திரம் (Neutraon Star) இவற்றிலிருந்து வேறுபட்டது. இதற்கு நிறம் கிடையாது. அதனை வெறும் கண்ணால் காணமுடியாது. சாதாரண நட்சத்திரங்கள் பஞ்சு மிட்டாய் போன்றது என்றால் நியூட்ரான் நட்சத்திரங்கள் கமார்கட் மிட்டாய் போன்று கடினமான ஒன்று.

அணுக்களிலேயே மிக எளிதான அணு ஹைட்ரஜன் அணுவே. இத்துடன் ஒப்பிட்டால் கார்பன் அணுவின் உள்ளே ஆறு புரோட்டான்களும் ஆறு நியூட்ரான்களும் இருக்கும். அவற்றை ஆறு எலக்ட்ரான்கள் சுற்றுக் கொண்டிருக்கும். இத்துடன் ஒப்பிட்டால் தங்க அணு ஒன்றில் 79 புரோட்டான்களும் 118 நியூட்ரான்களும் இருக்கும். 79 எலக்ட்ரான்களும் இருக்கும். இரும்பு அணு, நிக்கல் அணு, தாமிர அணு போன்ற வேறு வகை அணுக்களில் இவற்றின் எண்ணிக்கை வேறு விதமாக இருக்கும். இவற்றில் எந்த அணு என்றாலும் அதில் நிறைய காலியிடம் உண்டு.

உதாரணமாக கார்பன் அணு ஒன்று பெரிய கால்பந்து ஸ்டேடியம் அளவுக்குப் பெரியதாக இருப்பதாக கற்பனை செய்து கொள்வோம்.  அந்த ஸ்டேடியத்தின் நடு மையத்தில் ஆறு புரோட்டான்களும் ஆறு நியூட்ரான்களும் நெருக்கியடித்துக்கொண்டு நட்ட நடுவே இருக்கும். இந்த இரண்டும் சேர்ந்து கால்பந்து அளவில் இருப்பதாக வைத்துக்கொண்டால் ஆறு எலக்ட்ரான்களும் ஸ்டேடியத்தின் பவுண்டரியில் இருக்கும். நடுவே வைக்கப்பட்ட கால்பந்துக்கும் ஸ்டேடியத்தின் பவுண்டரிக்கும் நிறைய காலியிடம் இருக்கின்ற மாதிரி கார்பன் அணுவில்  நிறையக் காலியிடம் இருக்கும். எல்லா அணுக்களிலும் இவ்வாறு காலியிடம் உண்டு.

அண்டவெளியில் பல கோடி கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டதாக ஹைட்ரஜன் வாயுக்கூட்டம் ஒரு மொத்தை போல அல்லது மேகக்கூட்டம் போல பரவி அமைந்திருக்கும். அந்த மேகக்கூட்டத்தில் 90 சதவிகிதத்திற்கு மேல் ஹைட்ரஜன் வாயு இருக்கும். எங்கோ ஏதோ ஒரு நட்சத்திரம் வெடித்தது என்றால் அதனால் ஏற்படும் அதிர்ச்சி அலை அண்டவெளியில் பரவும்.  அந்த அதிர்ச்சி அலையின் விளைவாக ஹைட்ரஜன் வாயு அடங்கிய மேகக்கூட்டம் மெல்லச் சுழல ஆரம்பிக்கும். பிறகு அது சற்றே வேகமாகச் சுழலும். இவ்விதம் சுழலச் சுழல அது உருண்டை வடிவம் பெறும். அதன் வடிவம் சுருங்க ஆரம்பிக்கும். அவ்விதம் சுருங்கச் சுருங்க சுழற்சி வேகம் அதிகரிக்கும். அடர்த்தி அதிகரிக்கும். அடர்த்தி அதிகரிக்கும் போது வெளிப்புறத்திலிருந்து மையம் நோக்கி அமுக்கம் அதிகரிக்கும். இதன் விளைவாக அந்த ஹைட்ரஜன் வாயு உருண்டையின் மையத்தில் வெப்பம் அதிகரிக்கும். வெப்பம் பல மில்லியன் டிகிரியை எட்டும்போது ஹைட்ரஜன் அணுக்களின் புரோட்டான்கள் மட்டும் தனியே அலைபாயும். ஒரு கட்டத்தில் இந்த புரோட்டான்கள் ஒன்றோடு ஒன்று சேரும். இதுவே அணுச்சேர்க்கையாகும். (Nuclear Fusion)

இந்த அணுச்சேர்க்கையின் பலனாக ஹைட்ரஜன் அணுக்கள் ஹீலியம் என்ற வேறு அணுக்களாக மாறும். பல மில்லியன் டிகிரி வெப்பம், அமுக்கம் இருக்கும் போதுதான் அணுச்சேர்க்கை நிகழும். அப்போது பெரும் ஆற்றல் வெளிப்படும். வெப்பமும் ஒளியும் தோன்றும். ஒரு நட்சத்திரம் (சூரியன்) இப்படியாகத்தான் உண்டாகின்றது. ஆரம்பத்தில் இருந்த வாயு மொத்தை எவ்வளவு பெரிதாக இருந்தது என்பதைப் பொருத்து நட்சத்திரம் பெரியதாக அல்லது சிறியதாக அமையும்.

நட்சத்திரத்தின் வெளிப்புறப் பொருள் உள் நோக்கி அமுக்கும். அதே நேரத்தில் உட்புறத்தில் நிகழும் அணுச்சேர்க்கையால் ஏற்படும் ஆற்றல் வெளியே வரப் பார்க்கும். இந்த இரண்டும் சரிசமமாக இருக்கின்ற வரையில் நட்சத்திரம் காலம் தள்ளிக்கொண்டிருக்கும். ஒரு நட்சத்திரத்தில் வெளிப்புறத்திலிருந்து உள் நோக்கி அமுக்கும் சக்தியின் அளவு பெருமளவு குறையும் போது அந்த நட்சத்திரம் வெடித்துவிடும். இப்படி வெடிக்கின்ற நட்சத்திரத்துக்கு சூப்பர் நோவா என்று பெயர். இவ்வாறு ஏற்கனவே இருந்த நட்சத்திரம் மடிந்து போன இடத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கும். அதுவே நியூட்ரான் நட்சத்திரமாகும். வெடிப்புக்குப் பிறகு மிஞ்சுவதே நியூட்ரான் நட்சத்திரமாகும்.

அணுவுக்குள் எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை இருக்கும். நியூட்ரான் நட்சத்திரத்தில் நியூட்ரான்கள் மட்டுமே இருக்கும். அந்த நட்சத்திரத்தில் அதுவரை இருந்த புரோட்டான்களும் எலக்ட்ரான்களும் சூப்பர்நோவா வெடிப்பின்போது தோன்றும் பயங்கர வேகத்தில் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஐக்கியமாகி நியூட்ரான்களாகிவிடும். அதாவது ஒரு புரோட்டானுடன் ஒரு எலக்ட்ரான் சேர்ந்து கொண்டால் அது நியூட்ரான் ஆகிவிடும்.  அந்த நட்சத்திரத்தில் அதுவரை அடங்கியிருந்த அணுக்கள் அனைத்திலும் புரோட்டான்களிலிருந்து எலக்ட்ரான்கள் விலகி இருந்தன. அதாவது அந்த அணுக்களில் நிறைய காலியிடம் இருந்தது. புரோட்டான்களுடன் எலக்ட்ரான்கள் ஐக்கியமானவுடன் அதுவரை இருந்த காலியிடம் மறைந்து போய்விடும். எனவே அந்த நட்சத்திரம் வடிவில் சுருங்கி நியூட்ரான் நட்சத்திரமாகிவிடுகின்றது. பஞ்சு மிட்டாயை பசக் என்று அழுத்தினால் அது சிறிய உருண்டையாக மாறிவிடுவது போல அது வரை வடிவில் பெரியதாக இருந்த நட்சத்திரம் வடிவில் சுருங்கி நியூட்ரான் நட்சத்திரமாக உருவெடுக்கின்றது. எனவே ஒரு நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து ஒரு டீஸ்பூன் பொருளை எடுத்து எடை போட்டால் அது ஒரு மலையின் எடைக்குச் சமமாக இருக்கும்.  1967-ஆம் ஆண்டில்தான் முதல் நியூட்ரான் நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டது.

நமது சூரியனுக்கு அருகில் நியூட்ரான் நட்சத்திரம் எதுவும் இல்லை. நமக்கு மிக அருகில் இருப்பதாக சொல்லப்படும் நியூட்ரான் நட்சத்திரம் 500 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இது சப்த ரிஷி மண்டலத்துக்கு அருகே உள்ளது.                                             
நாம் இதுவரை ஏன் நியூட்ரான் நட்சத்திரத்தை பற்றி தெரிந்துக்கொண்டோம் என்றால்?... கோடானுகோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அண்டவெளியில் இரு நியூட்ரான் நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக சமீபத்தில் மோதிக்கொண்டன. அந்த மோதலில் டன் கணக்கில் தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற உலோகங்கள் உண்டானதை விஞ்ஞானிகள் தொலைநோக்கிகள் மூலம் கண்டனர். தங்கம் அண்டவெளியில் மிதப்பதை பார்த்து அதிசயித்தனர்.

நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதிக்கொண்ட போது உண்டான தங்கம் கொஞ்சநஞ்சமல்ல. பூமியின் எடையை போன்று 200 மடங்கு அளவுக்குத் தங்கமும், பூமியின் எடையைப் போன்று 500 மடங்கு பிளாட்டினமும் உண்டானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வளவு தங்கமும் பிளாட்டினமும் கட்டி வடிவில் உண்டாகவில்லை. நுண் துணுக்குகள் வடிவில் தோன்றின. நாளடைவில் இவை அண்டவெளியில் உள்ள ஹைட்ரஜன் வாயுவுடன் கலந்துவிடும். தங்கம், பிளாட்டினம் போன்ற தனிமங்கள் பூமியில் உண்டாவதில்லை. நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதல்களின்போதுதான் தங்கம், பிளாட்டினம் போன்ற அதிக எடை கொண்ட தனிமங்கள் உண்டாகின்றன என்று இப்போது விஞ்ஞானிகளுக்கு தெரியவந்துள்ளது.

இந்த தங்கம், பிளாட்டினம் வகை அணுக்கள் மிக நுண்ணிய துணுக்குகளாக அண்டவெளியில் மிதந்து கொண்டிருக்கும். எனினும் அண்டவெளியில் வாயு வடிவலான ஹைட்ரஜன்தான் அதிகம். ஒரு கட்டத்தில் இந்த ஹைட்ரஜன் ஒரு பெரிய முகிலாக ஒன்று திரண்டு நட்சத்திரமாக உருவெடுக்கும். அந்த நட்சத்திரத்தில் மேற்படி தங்கம், பிளாட்டினம் அணுக்களும் ஒரு வகை வாயுவடிவில் அடங்கியிருக்கும். எனவே நட்சத்திரம் முழு உருப்பெறும் போது கிரகங்களும் தோன்றும். அந்த கிரகங்களில் தங்கம் அடங்கியிருக்கும். ஆரம்பத்தில் நெருப்புக் குழம்பாக இருந்த கிரகங்கள் ஆறி கெட்டிப்படும்போது தோன்றும் பாறைகளில் தங்கம் இடம் பெற்றிருக்கும். தற்போது நமது பூமியில் இவ்வாறே தங்கம் கிடைக்கின்றது. நாம் அணியும் தங்கம் என்றோ அண்டவெளியில் நியூட்ரான் சூரியனிடமிருந்து உற்பத்தியானதே.

அண்டவெளியில் நிகழும் நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதல் பதிவு செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும். அமெரிக்காவில் உள்ள லிகோ (LIGO) எனப்படும் இரட்டை ஆராய்ச்சிக்கூடங்கள்தான் முதலில் இதைக் கண்டுபிடித்தன.


சூரியனிடத்தில் பொன் இருக்கின்றது என்றும் சூரியனுக்கு ‘தங்கம்’ என்று வள்ளலார் பெயர் வைத்ததும் எவ்வளவு சத்திய வார்த்தையாக அமைந்துள்ளது என்பது  இன்றைய விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏமம், கனகம் என்பது சூரியனையே குறிக்கும். சூரியன் இல்லை என்றால் தங்கம் இல்லை என்பதை வள்ளலார் ஒருவரே இவ்வுலகில் குறிப்பிட்டுள்ளார் என்பதை நினைக்குந்தோறும் ஒவ்வொரு சுத்த சன்மார்க்கியும், ஒவ்வொரு தமிழனும், ஒவ்வொரு இந்தியனும், ஒவ்வொரு உலகியலரும் பெருமைப்படத்தக்கதாக அமைந்துள்ளது வள்ளலாரின் வாக்கு.   

                                     –தி.ம.இராமலிங்கம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.