Sunday, February 18, 2018

சித்தர்கள் பார்வை விண்வெளிப் பயணம்

(வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் சமரச பஜனை காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மாதாந்திர மின்னிதழில் பிப்ரவரி – 2018 –ஆம் மாதம் வெளியானவை…)

சித்தர்கள் பார்வை
       விண்வெளிப் பயணம்

மனிதன் இன்று மேற்கொள்ளும் விண்வெளிப் பயணம் என்பது பூமியை சுற்றி வருவது மற்றும் நிலவில் கால் பதித்ததை கூறலாம். நிலவுக்கு பயணம் சென்று வந்ததும் சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது. எனினும் பூமியின் காற்று பகுதியைத் தாண்டி விண்வெளிப் பகுதியில் பூமியை வலம் வந்த வண்ணம் இன்றைய மனிதன் உள்ளான்.

விண்வெளிப் பயணம் போன்று காலப் பயணம் என்ற ஒன்றையும் கூறுகின்றார்கள். காலப்பயணம் என்பது கொள்கை வடிவில் உள்ளது. இது சாத்தியந்தான் என்று ஸ்டீபன் ஹாகின்ஸ் (Stephen Hopkins) கூறுகின்றார். காலப்பயணம் செய்ய அண்டவெளி புழுத்துளை (Worm hole) தேவைப்படுகின்றது. இத்துளை நம்மை சுற்றியே உள்ளதாகவும் ஸ்டீபன் கூறுகின்றார். இதனுள் செல்ல அணு வடிவம் எடுத்து மிகுந்த வேகத்தில் செல்ல வேண்டுமாம். பணயம் முடிந்தவுடன் மீண்டும் சுய உருவம் பெற வேண்டுமாம். கோள்களின் நகர்வை வைத்து காலம் கணக்கிடப்படுகின்றது. பொருள்களின் மாற்றங்களை காலத்தின் நீளம் கொண்டு கணக்கிடுகின்றோம். பொருள்களில் மாற்றம் செய்யாமல் காலத்தை மட்டும் முன் நோக்கி அல்லது பின்னோக்கி நகர்த்தி பார்ப்பது காலப் பயணமாகும். உதாரணமாக 2500-ஆம் ஆண்டு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதனை நமது உடலில் மாற்றம் இல்லாமல் 2500-ஆம் ஆண்டிற்கு சென்று பார்ப்பது. அல்லது கிறுத்து பிறப்பிற்கு முன்னுள்ள காலத்திற்கு சென்று பார்ப்பது. 

நமது தமிழ்ச் சித்தர்கள் இப்படிப்பட்ட காலப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். கோரக்க சித்தர் தாம் செய்த காலப்பயணத்தின் அனுபவங்களை பாடல்களாக சந்திர ரேகை என்கின்ற நூலில் பாடல் 194 முதல் 199 வரை பதிவு செய்துள்ளார். கலியுகத்தின் பிறப்பு முதல் முடிபு வரை நடக்கும் நிகழ்ச்சிகளை இப்பாடல்களில் உரைத்துள்ளார்.

தமது காலப் பயணத்தை கோரக்கர் பதிவு செய்தது போல் விண்வெளிப் பயணத்தை திருமூலர் பதிவு செய்திருக்கின்றார். இதற்கு “கெவுணம் பாய்தல்” என்ற சித்தர் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. வேற்று கிரக வாசிகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்று நாம் இன்று விவாதித்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் திருமூலர் விண்வெளியில் உள்ள மனிதர்களிடம் பேசியுள்ளார். அவரது பயண விவரங்களை தமது பாடல்களிலும் பதிவு செய்துள்ளார். மேலும் இப்பிரபஞ்சம் 1008 அண்டங்களை உடையது என்ற தகவலையும் கூறுகின்றார்.

விண்வெளி பயணத்திற்கு சிவயோகம் செய்து காய சித்தி அடைந்து உடலை ஒளி உடலாக மாற்ற வேண்டும். இதனால் கணக்கில்லாத வேகத்தில் செல்ல முடியும். மேலும் குளிகை ஒன்றையும் தயார் செய்தார். திரவ பாதரசத்தை அணு மாற்றம் செய்து திடப்பொருளாக மாற்ற வேண்டும். அதன்பின் உலோகங்கள் ரத்தினங்கள் (உப ரசங்கள் 120) பாசானங்கள் ஆகியவற்றின் அணுக்களை திடரூப பாதரசத்துக்குக் கொடுத்து (சாரணை) பாதரசத்தின் நிறையை தங்கத்தின் நிறைக்குச் சமமாக கொண்டு வரவேண்டும். இவ்விதம் ஒரு முறை சாரணை செய்தால் அந்த குளிகைக்குச் ‘சகம்’ என்று பெயர். 14 முறை சாரணை செய்தால் ‘கமலினி’ என்று பெயர். 17 முறை சாரணை செய்தால் ‘சொரூபம்’ என்று பெயர். இந்த கமலின் மற்றும் சொரூப குளிகையினை விண்வெளி பயணத்திற்கு பயன்படுத்தினார்கள்.

அண்டம் இருந்த அடவு சொன்னார் நந்தி
தாண்டியது அஞ்சும் தனித்த அடுக்காக .
ஒண்டிஇருந்தது  ஓடி நுழை என்றார்
கண்டி கமலினி காணீர் சொரூபமே

சொருபத்தை வாய்வைத்து சூட்டிக் கமலினி
அரூபத்தை ஜோதிபோல் அண்டம் நுழைந்திட்டேன்
நிருபத்த கற்பம் நிறையான யோகியும்
தரு வோத்த ஞான சதகோடி சித்தரே

சித்தரை கண்டேன் தெவிட்டாதே பாழித்தேன்
ஓதிய சித்து உனக்கென்ன ஆச்சென்றார்
அத்திய கோடி அறுபது ஆச்சென்றேன்
எத்தி இளஞ்சித்து இன்னம் பார் என்றாரே
--   திருமூலர் கருக்கிடை வைத்தியம்  பாடல் 353, 354

பிரபஞ்சத்தைப் பற்றி சிவன் விளக்கிச் சொன்னார். இப்பிரபஞ்சம் தனித்தனியான ஐந்து அடுக்கு கொண்டது. ஒன்றை ஒன்று ஒட்டி இருந்தது. கமலினி என்ற குளிகையை உடலில் அணிந்தேன். சொரூபம் என்ற குளிகையை வாயில் அடக்கினேன். அண்டவெளி உள்ளே நுழைய அண்டத்தின் வேகமும் எனது வேகமும் ஒத்துப் போகவேண்டும். எனவே ஓடிவந்து அண்டத்துக்குள் நுழை என்று நந்தி சொன்னார்.

          நான் ஒளி உடம்புக்கு மாறினேன். வேகமாக ஓடி வந்து அண்டத்துக்குள் நுழைந்து விட்டேன். நான் நுழைந்து அண்டத்துள் கற்பம் உண்டு. ஞானத்தில் முதிர்ந்த கோடிக் கணக்கான சித்தர்கள் இருந்தனர். அங்குள்ள சித்தர் ஒருவரைக் கண்டு பணிவான வணக்கம் சொன்னேன். அந்த விண்வெளி சித்தர் என்னிடம், ‘எத்தனை வகைச் சித்தி செய்து உள்ளீர்கள்?’ என்றார். நான், ‘அறுபது கோடி சித்திகள் அடைந்து உள்ளேன்’ என்றேன். அதற்கு அவர், ‘இன்னும் நீங்கள் இளமையான சித்தராகவே உள்ளீர்… மேலும் பல சித்திகள் செய்யுங்கள்’ என்றார். பிறகு நான் அங்கிருந்து வெளியேறினேன்.

என்றே நுழைந்தேன்  அயலொரு அண்டத்தில்
கண்டேன்சிததரை கடிபதுமை போல .
தண்டே கை கூப்பினேன் தடவினேன் தட்டது
அண்ட  நிராகாரத்து  அடைந்த பெரியோர்.
    ---பாடல் 356

பெரியோர் தனைகண்டேன் பேராய்  வலம் வந்தேன்
நரியோ மௌனம் மென்று அப்பால் நுழைந்திட்டேன்
பரிவை அதுகொண்டு பாய்ந்து முடிஏறி
விரிவாம் அடுக்கில் விரைந்து நுழைந்தேனே.
                      --- பாடல் 357

அதன்பின் வேறொரு அண்டத்தில் நுழைந்திட்டேன். அங்கும் சித்தர்களைக் கண்டேன். அவர்கள் அசையாத பொம்மை போல் இருந்தார்கள். அவர்களைக் கைகூப்பி வணங்கினேன். அவர்கள் மேனியினை தடவிப்பார்த்தேன். அவர்கள் பிடிபடவில்லை. அவர்கள் நிராகரன் என்ற கடவுள் நிலை அடைந்த பெரியவர்கள் என்று அறிந்தேன். அவர்களை வலம் வந்தேன். அவர்கள் மெளன யோகத்தில் இருக்கின்றார்கள். பிறகு அந்த அண்ட உச்சிக்குச் சென்றேன். அங்கிருந்து அடுத்த அடுக்குக்குள் விரைவாய் நுழைந்தேன்.

நுழைந்திடில் அண்டத்தில்  நூல்பார்த்த சித்தர்கள்
அழைந்திடு நூல்சொன்னது  ஆர்தான் எனகேட்டேன்
தனஞ்செய வீசண் தாய்கண்டு சொன்னது
களைந் தேழு லட்சம்  கரைகண்டு பார்த்தோமே 
                                      --- பாடல் 358

பார்த்தோம் என்றிறே பராபர சித்தரே
கார்த்தே இந்நூல்தனை கண்டு சுருக்காததேன்
சேர்த்ததே சுருக்க சிவனாலும் கூடாது
மார்த்ததே உண்டாகில் மகத்துவம் சொல்வீரே
                                       ---பாடல் 359

சொல்லிடும் என்றீர் சுகஞான சித்தர்கள்
மல்லிய நந்தி தான் வைத்தர்கேள் ஆயிரம்
பல்லுயிர் பார்க்க பகர்ந்தேழு லட்சமும்
கல்லுயிர் வெட்டுபோல்  காட்டினார் பார்த்திடே
                                         ---பாடல் 360

நான் நுழைந்த அண்டத்தில் சித்தர்கள் நூல்களை படித்துக்கொண்டு இருந்தார்கள். அவர்களிடம், ‘இந்த நூல்களை எழுதியது யார்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஈசன் பார்வதியிடம் சொன்ன ஏழு லட்சம் பாடல்களையும் ஆராய்ந்து பார்த்துவிட்டோம்’ என்றனர். அதற்கு நான், ‘இறைவனுக்கு ஒப்பான சித்தர்களே! ஆராய்ந்து பார்த்தோம் என்கிறீர்கள்… அதனை சுருக்காதது ஏன்?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இவற்றை சுருக்க ஈசனாலும் ஆகாது… அப்படி யாராகிலும் சுருக்கியிருந்தால் அந்த மகத்துவமான நூல் பற்றி சொல்லுங்கள்’ என்றனர். நான், ‘நந்தி என்பவர் உலகில் பல உயிர்கள் பார்த்துப் பயன் பெற ஏழு லட்சம் பாடல்களைச் சுருக்கி ஆயிரம் பாடல்களாக எழுதி உள்ளார். இது கல்வெட்டில் எழுதியது போன்று தெளிவானது. அதை படித்துப் பாருங்கள்’ என்றேன்.

பார்த்திடு என்றிறே நீர்பார்கும் நூல் எங்குண்டு
தேர்த்து மடக்குந் தச்சன பாகத்தில்
ஆர்த்திடு ஒரு நூற்றுஅறுபதாம் அண்டத்தில்
கோர்த்திடு சித்தர் குலாவிப் படிப்பபதே
                                                 ---பாடல் 361

படிக்கின்ற நூலில் பயனெல்லாம் சொல்லுமோ
படிக்கின்ற நூலில் பாய்சுமோ சாரணை
படிக்கின்ற நூலில் பறித்தான் குருவாமோ
படிக்கும் பதினாறும் பாங்காமோ சித்தரே
                                                 ---பாடல் 362

பாங்காமோ எட்டெட்டும் பலபல சித்தொடு
வாங்காமல் ஆடலாம் மற்றோர்க்கு கிட்டாது
தேங்காமல் தேங்கும் சிவயோக பூரணம்
தூங்காமல் தூங்கும் சொருபத்தை காட்டுமே
                                                 --- பாடல் 363

அதற்கு, ‘அப்படி சுருக்கப்பட்ட நூல் எங்குள்ளது?’ என்றனர். நான், ‘இந்த அண்டம் உள்ள அடுக்கிற்கு முன்பு உள்ள அடுக்கில் 1600-ஆவது அண்டத்தில் உள்ள பூமியில் வசிக்கும் சித்தர்கள் குழுவாக விரும்பிப் படிக்கும் நூல் ‘நந்தி நூல் 1000’ என்பதாகும் என்றேன். பிறகு அவர்கள், ‘இந்த நூல் சிவன் சொன்ன எல்லா பயன்பாடுகளையும் சொல்லுமா? பாதரசத்திற்கு சாரணை செய்து குளிகை ஆக்கும் முறை சொல்லுமா? தங்கத்தை குரு மருந்தாக மாற்றும் முறை சொல்லுமா? சிவன் சொன்ன பதினாறு அத்தியாயங்கள் அதில் உண்டா? என்றனர்.

          நான், ‘இவை அனைத்தும் உள்ளது. மேலும் 64 சித்திகள் பெறும் முறை, பல சித்து என்னும் அபூர்வ செயல் முறைகள் சொல்லப்பட்டுள்ளது. அதனை செய்து பயன்பெறலாம். சிவ யோகம் செய்முறை முழுமையாக சொல்லப்பட்டுள்ளது. தூங்காமல் தூங்கும் சொரூப சித்தி என்ற முத்தி நிலை பெறலாம். இது சிவ யோகிக்கு கிடைக்கும் பிறருக்கு கிடைக்காது’ என்றேன்.

காட்டும் மென்றீர் நூலை கைக்குள்ளாறீபேர்சொல்லும்
நாட்டிய வாசிக்கு குருநாத நந்தி தான்
கூட்டினார் சித்தர்க்குக்கொடுத்தார் தான் இந்நூலை
ஆட்டிய மூலர் தான் அறைநத நூல் என்பரே
---பாடல் 364

அறைந்துநீர் சொல்லவோ என்ற திருமூலர்
மறைத்தே மயங்கியே வார்த்தையால் நீர்சொன்னீர்
குறைந்திடுமோ நூலை கொடுத்தாக்கால் பூரணம்
உரைதேழு லட்சமும் ஒண்ணாக் கரிதென்னே
---பாடல் 365

அரிதல்ல காணும் அகப்பட்டால் வாசிதான்
புரிதல்ல மூலத்தில் புகட்டினால் வாசியை
எருதல்ல நந்தி எழுநூறும் ஒணறாகப
பெரிதல்லோ நூலை பேசவறி நீரே
---பாடல் 366

‘சொரூப சித்தியை காட்டும் நூலினை எழுதியவர் பெயர் சொல்லுங்கள்’ என்றனர். நான், ‘எனக்கு வாசி யோகம் சொல்லிக் கொடுத்து இந்த நூல் எழுத குருவானவர் நந்தி என்கின்ற சிவன். அதனை சுருக்கி எழுதி சித்தர்களுக்கு கொடுத்தவர் திருமூலர் என்று சொல்வார்கள்’ என்றேன்.

அதற்கு அச்சித்தர் ‘சிவன் சொன்ன ஏழுலட்சம் பாடலை சுருக்கி எழுதுவது அரிதான செயல். அத்தகைய அருமையான நூலை திருமூலனாகிய நான் எழுதினேன் என்றால் நூலின் பெருமை குறைந்துவிடும் என்று கருதினீர்கள். ஆகையால் நூல் எழுதியவர் பெயரை மறைத்தும் தெளிவாக சொல்லாமல் மயக்கியும் நீர் சொன்னீர்’ என்று சொன்னார்.

பேசுவதற்கு அரிதான நந்தி எழுதிய ஏழுலட்சம் பாடல்களை அவரே சுருக்கி 700 பாடல்களாக எழுதி உள்ளார். மூலாதாரத்தில் இருந்து வாசி யோகம் செய்து வாசி யோகம் சித்தி பெற்றவர்களுக்கு இவ்விதம் சுருக்கி எழுதுவது அரிதான செயல் இல்லை. வாசி யோக சித்தர்கள் பெற்ற உயர்ந்த அறிவால் சிவனின் பாடல்களை புரிந்து அதன் சாரத்தை சுருக்கி விடுவார்கள், என்றார் அச்சித்தர் என்னிடம் கூறினார்.

திருமூலரின் பிரபஞ்ச பயணப் பதிவின் மூலம் சிவ வழிபாடு இப்பூமியில் மட்டுமல்லாது பிரபஞ்சம் முழுக்க இருப்பதையும், மனிதர்கள் எங்கும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும், பிரபஞ்ச மனிதர்களும் தமிழையே பேசுகின்றார்கள் என்பதும் தெளிவுறுகின்றது. மேலும் இந்த பூமியில் முதன் முதலில் பிரபஞ்ச பயணத்தையும், கால பயணத்தையும் செய்து அதனை தமது பாடல்களில்  பதிவும் செய்தவர்கள் நமது தமிழ் சித்தர்களே என்பதில் பெருமிதம் கொள்வோம்.  

மேலும் இப்பிரபஞ்சத்தில் முதல் முதலாக நமது பூமியில்தான் தற்போது அருட்பெருஞ்ஜோதி வழிபாடு இறையருளாள் உண்டாகியது. அதன் மூலம் மரணமிலா பெருவாழ்வு பெற்ற ஒரே மனிதர் வள்ளலார்தான். இவர் காலப்பயணம், விண்வெளிப்பயணம் போன்ற எதனையும் மேற்கொள்ளாமல் இருந்த இடத்திலிருந்தே அனைத்து அண்டங்களிலும் நடக்கும் செயல்களை காண்பதும், அங்குள்ள செயல்களை நடத்தும் வல்லமை பெற்றவர். இவர் அடைந்த மொத்த சித்துகள் எண்ணிலடங்காதவை. ஆடுறு சித்துகள் மட்டும் 647 கோடிகள். மற்றும் கூட்டுறு சித்திகள், அறிவுறு சித்திகள், கரும சித்திகள், யோக சித்திகள், ஞான சித்திகள் என எண்ணற்ற சித்திகளை பெற்று ஐந்தொழிலையும் செய்யும் சித்தினையும் வள்ளலார் பெற்றதை எண்ணி, மற்ற அண்டங்களில் உள்ள சிவ வழிபாடு செய்யும் சித்தர்கள் எல்லாம் தற்போது நமது பூமி உள்ள அண்டத்திற்கு வந்து அருட்பெருஞ்ஜோதி வழிபாடு செய்யும் நமது பூமியில் உள்ள வடலூர் வந்து தரிசித்து, அருட்ஜோதி வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். சித்தர்கள் எல்லாம் சுத்த சன்மார்க்கிகள் ஆக விருப்பம் தெரிவித்து பூமியில் பிறக்கவும் ஆவலாக உள்ளனர். 

தற்போது சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் நம்மில் அனைவரும், இதற்கு முன்னர் ஏதோ ஒரு அண்டத்தில் சிவ வழிபாடு செய்துக்கொண்டிருந்த சித்தர்கள்தான் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். நமது பயணம் மரணமிலா பெருவாழ்வில் இனிதுற முடிய இறைவனை வேண்டுவோம்.

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி   



5 comments:

  1. சிவயோகம் செய்து, ''காய சித்தி'' எவ்வாறு அடைவது? இந்த பிளாகிலேயே விளக்கினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. காய சித்தி அடைந்தபிறகு, சிவயோகம் பற்றி விளக்குவதுதான் சிறந்தது. சுத்த சன்மார்க்கத்தில் சிவயோகம் என்பது “உயிரிரக்கம்” ஆகும். உயிரிரக்கத்துடன் இருந்தால் சன்மார்க்க சித்திகளை பெற்றுக்கொள்ளலாம்.

      Delete
  2. மிக்க நன்றி மிகவும் பயனுள்ள பதுவு

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.