Friday, June 12, 2020

மலைகளும் நதிகளும் - பகுதி-4

மலைகளும் நதிகளும் (Part - 4)

அருட்பெருஞ்ஜோதி               அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி

மலைகளும் நதிகளும்
(Part - 4)

தி.ம.இராமலிங்கம்
(யாத்திரை அனுபவங்கள்)

09-09-2019 – திங்கள் கிழமை – ஹர்துவாரிலிருந்து கராடி (Kharadi) :


இன்று காலை ஹர்துவார் டேரவால் பவனில் காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு (மதிய உணவாக அனைவருக்கும் வெரைட்டி ரைஸ் பொட்டலம் கட்டிக்கொண்டார்கள்) ஹர்துவாரிலிருந்து யமுனாத்ரி செல்ல ஆயுத்தமானோம். ஹர்துவாரிலிருந்து வேன் மூலம் பயணம். ரிஷிகேஷ் ஊரைச்சார்ந்தவரின் வேன் ஏற்பாடாகியது. வேன் ஓனரே டிரைவராகவும் இருந்தார். நாங்கள் சார் தாம் பார்த்துவிட்டு மீண்டும் ஹர்துவார் வரும்வரை இதே வேனில்தான் பயணம் நடைபெற்றது.

சுமார் 11 மணியளவில் எங்களது வாகனம் யமுனை நதி உற்பத்தியாகுமிடம் காண யமுனாத்ரிக்கு புறப்பட்டது. முழுதும் மலைப் பாதையில்தான் பயணம். சாலைகள் ஒருசில இடங்களைத் தவிர பெரும்பாலும் மிக மோசமாகவே இருந்தன. ஆனாலும் யமுனை நதியின் அழகு கண்கொள்ளா காட்சியாக இருந்தது. மலையடிவாரத்தில் தவழ்ந்துச் செல்லும் அழகே அழகு. யமுனை நீர் கலங்கல் இல்லாமல் மிக சுத்தமாக இருந்தது. வாகனம் செல்லும்போதே எனது கைப்பேசி மூலம் பல படங்களை எடுத்துக்கொண்டேன்.  

மதிய நேரம் கடக்கும்போது, வாகனத்திலேயே மதிய உணவு உண்டுவிட்டு தொடர்ந்து பயணம் சென்றுக்கொண்டிருந்தது. எங்குப் பார்த்தாலும் மலையும்,
யமுனை நதியும்தான் காட்சி கொடுத்தன. இப்படியே இரவும் வந்துவிட்டது. இரவு 08.00 மணிக்கு மேல் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லையாம். அதனால் 7.50 மணியளவில் Kharadi கராடி என்னும் ஊரில் உள்ள செண்டர் பேலஸ் ஹோட்டலில் தங்கினோம். இரவு நாங்கள் அழைத்துச் சென்ற சமையல் காரர்கள் அங்கேயே சிற்றுண்டி செய்து அளித்தார்கள். சாப்பிட்டுவிட்டு உறங்கினோம். இன்றைய இரவு 4-ஆம் நாள் இரவாகும். குளிர் என்று சொல்லமுடியா வண்ணம் தமிழகத்தில் இருப்பதுபோலவே இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் பின்புறம் யமுனை நதி சலசலசல என்ற சப்தம் எழுப்பி ஓடிக்கொண்டே இருந்ததை கேட்கவும், பார்க்கவும் முடிந்தது. காலையில் நதியில் குளிக்கலாம் என்று இருக்கின்றேன்.

09-09-2020 இன்றைய பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சில…














10-09-2019 – செவ்வாய் கிழமை – கராடி (Kharadi) இருந்து யமுனாத்ரி :


ஹர்துவாரிலிருந்து யமுனாத்ரி செல்லும் வழியில் நேற்று இரவு கராடியில் தங்கினோம். கராடியிலிருந்து யமுனாத்ரி செல்ல இன்னும் 25 கிலோ மீட்டர்தான்

உள்ளது. நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் பின்னால் யமுனா நதி ஓடிக்கொண்டிருக்கின்றது. மிகவும் அற்புதமான இயற்கை சார்ந்த இடம். இன்று காலையில் அந்நதியில் நீராடலாம் என இருந்தேன். ஆனால் முடியவில்லை. ஹோட்டல் ரூமில் சுடுநீர் வரவே அங்கேயே குளித்து கிளம்பிவிட்டேன். காலையில் சிற்றுண்டி செய்து எடுத்துக்கொண்டு 06.45 மணியளவில் எங்களது வேன் கராடியிலிருந்து கிளம்பியது. பாதை மிக மோசமாக இருந்தது. காலை 08.15 மணிக்கெல்லாம் யமுனாத்ரி அடிவாரத்திற்கு சென்று சேர்ந்துவிட்டோம்.









யமுனாத்ரி செல்ல இனிமேல் நடந்துதான் செல்ல வேண்டும். அதாவது மலையேற வேண்டும். அடிவாரத்திலிருந்து 05 கிலோமீட்டர் உயரத்திற்கு மலை ஏற வேண்டும். எங்களுடன் வந்திருந்த ஒருசில வயதானவர்கள் வாகனத்திலேயே அமர்ந்துவிட்டனர். மற்றவர்கள் சிற்றுண்டியை எடுத்துக்கொண்டு மலையேற புறப்பட்டனர். நடந்து மலையேற விருப்பம் உள்ளவர்களில் சிலர் மூங்கில் குச்சியினை ஊன்று கோலாக பயன்படுத்தும் பொருட்டு வாங்கிக்கொண்டனர். நான் எதுவும் வாங்கவில்லை. சிலர் நடந்து மலையேற முடியாது என குதிரை மேல் ஏறியும், சிலர் டோலி (மனிதன் மனிதனை சுமப்பது) வைத்துக்கொண்டனர். நானும் என்னுடன் சிலரும் நடந்தே மலை ஏறினோம். வழியில் ஓரிடத்தில் அமர்ந்து சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு தொடர்ந்தோம். வழியெங்கும் இயற்கை அழகை அனுபவித்தோம்.
ஓரிடத்தில் எங்களுக்கு மிக அருகில் யமுனா ஓடிக்கொண்டிருக்கவே, நான் மட்டும் அவ்விடத்தில் இறங்கி யமுனாவில் முதல் முதலாக கால் வைத்தேன். அப்படியே சுர்ர்ர்ர் என்றிருந்தது. அவ்வளவு குளிர்ந்த நீராக ஓடியது. இப்போதுதான் எனக்குப் புரிந்தது… இப்படி ஓடும் ஆறுகளில் மக்களும், விலங்கினங்களும் ஏன் நீர் அருந்தக்கூட வரவில்லை என்று… சற்று நேரம்கூட அந்த ஓடும் நீரில் நிற்க முடியவில்லை. கால் மறுத்துவிட்டதைபோல உணர்ந்தேன். உடனே அங்கிருந்து விலகி மேலே சாலைக்கு வந்துவிட்டேன். நடை பயணம் தொடர்ந்தது.


மேலே செல்ல செல்ல என்னால் நடக்க முடியவில்லை. என்னுடன் வந்தவர்களில் சிலர் பாதி வழியில் குதிரையேறி சென்றுவிட்டார்கள். இறுதியாக வந்த இரமேஷ் அண்ணன் மற்றும் அண்ணியையும் 4 கிலோ மீட்டர் அளவில் தவறவிட்டுவிட்டேன். (அவர்கள் 4 கிலோ மீட்டர் அளவில் ஏறிவிட்டு, இதற்கு மேல் நடக்க முடியாது என கீழே இறங்கிவிட்டார்கள் என எனக்கு பிறகு தெரியவந்தது) இப்போது நான் மட்டுமே தனியாக நடந்துச் செல்ல வேண்டியதாயிற்று. இருந்தாலும் பொதுமக்கள் கூட்டம் சாலை முழுதும் இருந்தது. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஆங்காங்கு உட்கார்ந்துதான் செல்ல வேண்டியதாயிற்று. அவ்வளவு கடினப் பயணமாக இருந்தது. எப்படியோ யமுனாத்ரி உற்பத்தியாகும் இடத்தில் உள்ள கோயிலுக்கு சென்றடைந்தேன். வழியெங்கும் எனக்குப் பிடித்த காட்சிகளை படம் எடுத்துக்கொண்டேன்.








அங்கே மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மதியம் 02.00 மணியளவில் சில்லென்ற காற்று வீசிக்கொண்டிருந்தது. அந்தக்கோயிலில் சுடுநீர் ஊற்றும் இருந்தது. இவ்வூற்று இயற்கையாக உள்ளதாக கூறுகின்றார்கள். ஆனால் எனக்கு அது செயற்கையாக இருக்குமோ என்கின்ற சந்தேகம் உள்ளது. ஏனெனில் அவ்வூற்று எழும் இடத்தை பார்க்க முடியவில்லை. மாறாக பெரிய அளவில் நீச்சல் தொட்டிப்போல் கட்டியிருக்கின்றார்கள். அத்தொட்டியின் கீழே நான்கு மூலைகளிலும் சுடுநீர் உள்ளே வந்துக்கொண்டே இருக்கின்றது. அதிகப்படியான நீர் ஒரு புறம் வெளியேறிக்கொண்டே இருக்கின்றது. இயற்கையான சுடுநீர் ஊற்று கொதிக்கும் தன்மையுடையதாக இருக்குமாம். அதனால் அந்த நீருடன் குளிர்ந்த நீரினையும் கலந்து இந்தத் தொட்டியில் விடுவதாக கூறுகின்றார்கள்.

என்னுடன் வந்திருந்த சிலர் எனக்கு முன்னமே அந்த சுடுநீரில் குளித்து முடித்துவிட்டிருந்தார்கள். நானும் அந்த சுடுநீர் தொட்டியில் இறங்கி குளித்துவிட்டு மேலே வந்தேன். அப்படியே அங்கிருந்து சற்று தள்ளி யமுனை இறங்கி ஓடிவந்துக்கொண்டிருக்கின்ற இடத்தில் ஒரே கூட்டமாக இருந்தது. நானும் அங்குச் சென்றேன். வெறும் ஜட்டி துண்டுடன் குளித்துவிட்டு அக்கூட்டம் இருக்குமிடம் நோக்கிச் சென்றேன். யமுனை மிக வேகமாக மேலிருந்து கீழ் நோக்கி ஓடிவருகின்ற இடம் அது. சற்று நேரம் பார்த்தேன். நாங்கள் இருக்குமிடத்திற்கும் மேலேயிருந்து எங்கிருந்தோ யமுனை வந்துக்கொண்டிருந்தது. எனவே இவ்விடம் யமுனை உற்பத்தியாகவில்லை என்பது புரிந்தது. உடனே யோசிக்காமல் ஓடும் நீரில் இறங்கி தலையை தண்ணீருக்குள் தாழ்த்தினேன். நீர் சில்லென்று இருந்தது. உடம்பு வலி எடுத்துக்கொண்டது. அதனை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மீண்டும் ஒரு முறை தலையை தண்ணீருக்குள் விட்டேன். சற்று ஏமாந்தால் நம்மை அடித்துச் சென்றுவிடும் அளவிற்கு நீரின் வேகம் இருந்தது.


இரண்டாவது முறையாக நீரில் முழுகி எழுந்தப்பிறகுதான் பார்க்கின்றேன். என்னைத் தவிர யாரும் அந்த நீரில் குளிக்கவில்லை என்று! ஒரு கூட்டம் நான் குளிப்பதைப் பார்த்து அவர்களது மொழியில் என்னை ஏதோ எச்சரிக்கின்றார்கள். நான் எதனையும் கண்டுக்கொள்ளாமல் உடனே அவ்விடத்திலிருந்து கிளம்பிவிட்டேன். இறைவனே என்னை அங்கு குளிக்கச்சொன்னது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. பிறகு மீண்டும் வெந்நீர் ஊற்றுக்கு வந்து சுடுநீரில் குளித்துவிட்டு, ஆடைகளை மாற்றிக்கொண்டு திரும்ப முடிவெடுத்தேன். மதியம் 03.00 மணியளவில் அங்கிருந்து எங்களது குழு கிளம்பியது. இதில் சிலர் மேலே வரும்போது நடந்து வந்து, கீழே இறங்குகையில் குதிரையில் சென்றவர்களும் உண்டு. நானும் இன்னும் சிலரும் நடந்தே திரும்பினோம். கீழ் இறங்குகையில் அவ்வளவு சிரமம் தெரியவில்லை. 04.30 மணிக்கெல்லாம் கீழே இறங்கிவிட்டோம்.

நாங்கள் சென்றவுடன் வேன் புறப்பட்டுவிட்டது. மீண்டும் நாங்கள் தங்கியிருந்த கராடி என்னும் ஊர் நோக்கிச் சென்றோம். வழியில் ஓரிடத்தில் மண் சரிவு ஏற்படுவதாகக் கூறி, காவலர்கள் சிலர் வாகனத்தில் இருந்தவர்களை எல்லோரையும் இறங்கச்சொன்னார்கள். வாகனம் செல்லும் பாதையிலிருந்து கீழிறங்கி ஆற்றின் வழியே சென்று குறிப்பிட்ட இடத்தைக் கடந்து பிறகு மேலேறி பாதைக்கு வந்தோம். அவ்வாறு கீழிறங்கி ஆற்றில் கால் வைத்து நடந்து வந்ததும் ஒரு இனிமையான அனுபவத்தைக் கொடுத்தது. வேன் ஓட்டுனர் மட்டும் மெல்ல வாகனத்தை ஓட்டி அந்த குறிப்பிட்ட இடத்தை கடந்துவந்துவிடவே, நாங்கள் மீண்டும் வாகனத்தில் ஏறி பயணத்தை மேற்கொண்டோம். கராடியில் நாங்கள் தங்கியிருந்த செண்டர் பேலஸ் ஹோட்டலுக்கு மாலை 06.30 மணிக்கெல்லாம் வந்து சேர்ந்தோம். அறையில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே இன்றைய இரவை அங்குக் கழித்தோம். இரவு நாங்கள் எங்களுடன் அழைத்துச் சென்ற சமையல் காரர்கள் மூலம் சிற்றுண்டி செய்து சாப்பிட்டோம். இது எங்களுக்கு 5-ஆம் நாள் இரவாகும். 

தொடரும்...



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.