Friday, June 12, 2020

யார் அந்த சித்தர் ஆவி?




யார் அந்த சித்தர் ஆவி?

கடந்த சில நாட்களாக ஆவிகள் பற்றிய திரு.விக்ரவாண்டி இரவிச்சந்திரன் அவர்களுடைய விளக்கங்களை கவனித்து வந்தேன். 15 வருடங்களுக்கு முன்பு அவர் எழுதிய ஆவிகள் பற்றின புத்தகங்களையும் படித்துள்ளேன். நீண்ட வருடங்களுக்குப் பின்பு அவருடைய வீடியோக்களை தற்போது சில நாட்களாக பார்க்க நேர்ந்தது.

எனக்கு ஒரு காலத்தில் ஆவிகள் மேல் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆவிகள் இருப்பதை நம்புகின்றேன். காரணம், ஆவிகளிடம் பேசும் முறையை நான் நேரில் எங்களது வீட்டிலேயே கண்டேன். மீடியேட்டர் கை வைத்ததும் கவிழ்த்து வைத்த டம்ளர் தானாக நகர்வதை கண்ட பிறகு நம்பவேண்டியதாயிற்று. அந்த ஆவிகள் நாம் கேட்கும் கேள்விகளுக்கு 90% தவறான பதில்களையே தரும்.

அந்த வகையில், திரு.விக்ரவாண்டி ரவிச்சந்திரன் அவர்கள் ஏதோ ஒரு சித்தர் ஆவியினை தொடர்புகொண்டு அடிக்கடி மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்து வருகின்றார். சித்தர் ஆவி என்ன கூறுகின்றதோ, அதனை அப்படியே பொதுமக்களுக்கு கூறுவது இவரது வழக்கமாக உள்ளது.

கொரோனா நோய் வராமல் தடுக்க தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சம் பழ ஜூஸ்ஸில் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் ஒரு ஸ்பூன் உப்பையும் சரிசமாகக் கலந்து அருந்தச் சொல்லி இந்த சித்தர் ஆவி கூறுகின்றதாம். சரி… நல்லது.

அடுத்ததாக இந்த சித்தர் ஆவி, குலதெய்வ வழிபாட்டை விடாமல் கடைபிடிக்க வேண்டும் என்று கூறுகின்றதாம். மேலும், உயிர் பலி கொடுத்து வழிபடுபவர்கள் அவ்வழக்கத்தை, வள்ளலார் சொன்னார் அல்லது அது மூடபழக்கம் என சொல்லி விட்டுவிடக்கூடாதாம். தொடர்ந்து உயிர் பலி இடவேண்டுமாம். இதனால் உயிர்பலி இடுபவர்களுக்கு எவ்வித பாவமும் வந்தடையாதாம். மேலும் அந்த குல தெய்வத்திற்கு எவ்வளவு உயிர் பலி இடுகின்றொமோ அந்த அளவிற்கு அந்த கடவுளுக்கு சக்தி அதிகமாகுமாம்.
இப்படி கோயிலில் உயிர் பலி இடுவதால் அந்தக் குடும்பங்கள் நல்ல நிலையில் வாழ்வதாகவும், உயிர் பலி இடாத குடும்பங்கள் அதாவது பரம்பரையாக உயிர்பலி இடும் குடும்பங்கள், தற்போது அப்பழக்கத்தை விட்டுவிட்டதால் துன்பப்படுவதையும் உதாரணமாகக் கூறி, அந்த சித்தர் ஆவி உயிர்பலிகளை மக்களிடையே தூண்டிவிடுகின்றதை அவ்வீடியொ மூலம் கவனிக்க முடிகின்றது. சிலர் உயிர்பலி கொடுத்தும் எங்களது குடும்பத்தில் இப்படிப்பட்ட விரும்பத்தகாத சோக நிகழ்வுகள் நடந்துவிட்டனவே? எனக் கேட்டால்... அதற்கு வினைப்படி அது நடந்தே தீரும் என சொல்கின்றதாம் சித்தர் ஆவி.

யார் அந்த சித்தர் ஆவி? என்று திரு.விக்ரவாண்டி இரவிச்சந்திரன் அவர்கள் பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டும். ஒரு அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவது எவ்வளவு கடினம் என வள்ளலார் அவர்களுக்கு தெரியும். பல சமூகங்கள் வள்ளற்பெருமானால் திருந்தி இரக்கத்தின் பாதையில் சென்றுகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ”ஆவி”யின் பெயரில் சமுதாயத்தை திசை திருப்பும் செயல் அழகாய் இல்லை. அந்த சித்தர் ஆவியை வன்மையாக கண்டிக்கின்றேன். திரு.விக்ரவாண்டி இரவிச்சந்திரன் அவர்கள், வேறு ஒரு நல்ல அருளாளரின் ஆவியினை தொடர்புகொண்டு இனி மக்களுக்கு புத்திமதிகள் சொல்ல வேண்டும் என நான் இதன்மூலம் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.   


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.