Thursday, May 2, 2013

தியானம் பற்றிய வள்ளலாரின் விளக்கம்



    தியானம் பற்றிய வள்ளலாரின் விளக்கம்   02-05-2013

நமது கேள்வி:

பேரன்புடையீர்! வணக்கம், சுத்த சன்மார்க்கத்தில் தியானம் முதலியவை உண்டா?

வள்ளலார் பதில்:

வணக்கம், கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக!
உலகில் காணும் எந்தவொரு சமயங்கள், மதங்கள் மார்க்கங்கள் அனைத்தும் இறைவனை பற்றி வியம்பி, அந்த இறைவனின் அருள் பெறுவதற்கான வழிமுறைகளைப் பற்றி விளக்குகிறது. ஒவ்வொரு வழியும் வெவ்வேறான அதற்குரிய அனுபங்களை நல்கின்றன. அங்ஙனம் பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கின்ற, பெறப்போகிற அனுபவங்களை அவரவர் பெற்றிருக்கின்ற அறிவு ஒழுக்கத்திற்கு ஏற்றாற்போல் வெளிப்பட்டு சிறப்பாக, உயர்வாக அல்லது போதுமானதாக அமைகிறது என்பதை சத்தியமாக அறிதல் வேண்டும்.

தியானித்தல், உபாசித்தல், ஜபித்தல், சமாதி, விரதம், யோகம் எனக்கு முன்பே அறிந்து சமய, மத மார்க்கங்களில் இன்றும் கடைபிடித்துவரும் சாதனங்களாகும். இந்த சாதனங்கள் ஒவ்வொன்றும் அனுபவங்களைத் தரக்கூடியது என்பதில் சந்தேகம் இல்லை. அவையின் 'அனுபவம்' என்பது அதனதன் 'உண்மை' மற்றும் அதற்குரிய பலனும் எனக் கொள்ளலாம். ஆக, மேற்படி சாதனங்கள் உலகில் காணும் சன்மார்க்கங்களில் அதாவது சமய, மத மார்க்கங்களில் காணப்படுகிறது. எனவே இவை சமய மத அனுபவங்கள் என அழைக்கலாம்.

"சுத்தசன்மார்க்கத்தில் சுத்தம் என்பது சன்மார்க்கம் என்னும் சொல்லுக்குப் பூர்வம் வந்ததால், மேற்குறித்த சமய மத அனுபவங்களை கடந்தது" என்று நான் ஏற்கனவே என்னுடைய உரைநடை பகுதியில் விளக்கியுள்ளதைக் காணவும் (பக்கம் 404). யாம் மிகத்தெளிவாகக் கூறுவது யாதெனில்,

எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாக விளங்குவது சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் ஆகும். எனவே அச்சமயங்களில் உள்ள சாதனங்களும் தடைகளே.

யாம் உங்களுக்கு கட்டளையிடுகிறோம், 'சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும் வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் இலட்சியம் வைக்கவேண்டாம்' (பக்கம் 468)

விந்து, நாத முதலியனவும், சிவா, வசி, ஓம் உட்பட முதலியனவும், ஹரி, சச்சிதானந்தம், பரிபூரணம், ஜோதியுட்ஜோதி, சிவயவசி, சிவயநம, நமசிவய, நாராயணாயநம, சரவணபவாயநம முதலியவும் கொண்டு தத்துவங்களை உபாசித்தும், அர்ச்சித்தும் 'சமய மத சாதகர்கள்' செய்வார்கள். நமக்கு மேற்குறித்த வண்ணம் சாதனமொன்றும் வேண்டாம். (பக்கம் 405)

தியானம் - ஜபித்தல்

மேலும் சமய மதங்களில் தத்துவாதீதத்தைத் தியானித்தும் இடையில் ஜபித்தும் சமய சாதகர்கள் செய்வார்கள். அத்தகைய தியானம் ஜபித்தல் வேண்டுவதில்லை.

சமாதி

கரணலயமாகச் சமாதி செய்தல் சுத்த சன்மார்க்கத்தில் கூடாது. சமாதி பழக்கம் பழக்கமல்ல. சகஜ பழக்கமே சுத்த சன்மார்க்க பழக்கம்.

விரதம் - யோகம்

தத்துவச் சேட்டைகளை அடக்க விரதமிருந்தும், சாதாரண யோகபாகத்தில் மூச்சடக்கியும் செய்யும் சாதனமொன்றும் வேண்டுவதில்லை.

கொல்லா விரதம் குவலயமெலாம் ஓங்குக! கொல்லாமையும், புலால் உண்ணாமையுமே உண்மையான விரதம். இதனை உலகோர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இன்று உங்களில் பலர் / சிலர் செய்யும் உடற்பயிற்சி சிறந்த யோக பயிற்சி, மருத்துவர் ஆலோசனையில் ஓய்வு, மருந்துக்கள் இவைகள் தவிர்க்கமுடியாவைகளாக உள்ளன என்பதனை யாம் அறிவோம். ஆனால் இவை சாதாரண் யோகபாகத்தில் செய்யும் பயிற்சிகள், மற்ற உடற்பயிற்சிகள் இவை நமக்கு உடல் ஆரோக்கியத்திற்கு வழி செய்யக்கூடியதே ஒழிய 'கடவுளின் உண்மையறிதலுக்கான' சாதனமாக இல்லை என்பதை அறியவேண்டும்.

சுத்தசன்மார்க்கத்தில் இறையருள் பெறுவதற்கு எந்தஒரு சாதனமும் நமக்கு வேண்டுவதில்லை, மாறாக...

# கருணை ஒன்றையே சாதனமாக கொள்ளப்படவேண்டும்.

# கருணை என்பது எல்லா உயிர்களிடத்தும் தயவும், ஆண்டவரிடத்தில் அன்பும்     வைப்பது.

# ஆண்டவரிடத்தில் அன்பு என்பது ஆண்டவரின் உண்மை அறிதலே.

# ஆண்டவரின் உண்மையறிதலுக்கு உள்ள ஒரே வழி ஜீவகாருண்யம் ஆகும்.

# ஜீவகாருண்யம் உண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில் 'கடவுளுடைய    பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே ஆகும். (பக்கம் 420)
சுத்த சன்மார்க்கத்தில் கற்கும் கல்வி யாதெனில்...

# ஒழுக்கம் நிரப்பிக் கொள்ளுதல்

# கருணையை மட்டுமே சாதனமாகக் கொள்ளுதல்

# ஆசாரங்களை விட்டொழித்து பொதுநோக்கம் வருவித்துக் கொள்ளுதல்

# நல்ல விசாரணை செய்தல்

ஜலத்தில் இருக்கின்ற பாசியை நீக்குவது போல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்கமுடியாது. அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது. அந்த வசாரத்தைவிட ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றாதிலும் தெய்வத்தை நினைகின்றதிலும் அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் - வனம், மலை, முழை முதலியவற்றிற்குப் போய், நூறு, ஆயிரம் முதலிய வருச காலம் தவஞ்செய்து, இவ்உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள். 

இப்படி தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும், இதை விடக் கோடிப்பங்கு, பத்துகோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக்கொள்ளலாம்.

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரியவொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும், கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத்தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்.

சுத்தசன்மார்க்கம் மூலம் யாம், யோகிகள் முனிவர்கள் பல ஆண்டுகளாக யோகம், தியானம் முதலிய சாதனங்களால் பெற்ற அனுபவங்களை ஒரே நாழிகையில் யோக நிலையை உணரப்பெற்று அன்று மாலையே அதன் பயனையும் இறைவனிடம் யாம் பெற்றுக்கொண்டோம். இந்த அனுபத்தை எமது பாடலில்...

"ஒரு நாழிகையில் யோக நிலையை உணர்த்தி
மாலையே யாகப் பயனை முழுதும் அளித்தாய்!"

என்று குறித்துள்ளேன், நீங்களும் பெறலாம். சுத்த சன்மார்க்கத்தில் அனைத்து அனுபவமும் இறைவனால் மிகச்சுலபாக விரைவில் வெளிப்படுவதாகவும் உள்ளது.

நன்முயற்சியில் பயிலும் "கருணை" எல்லா உண்மையையும் அனுபத்தையும் நமக்கு வெளிப்படுத்தும்.

சுத்த சன்மார்க்கத்தில் மூன்று பயிற்சி உள்ளது, அதனை செய்து வாருங்கள், (பக்கம் 392)

1. உள்ளழுந்துதல்
2. சிந்தித்தல்
3. சிந்தித்தலை விசாரித்தல்

இதன் அடிப்படையிலேயே நாம் "நல்ல விசாரணை செய்தல் வேண்டும். மற்றபடி நமக்கு எந்த சாதனமும் தேவையில்லை, தேவையில்லை, தேவையில்லை....

அருட்பெருஞ்ஜோதி    அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

 





7 comments:

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.