Friday, May 24, 2013

முத்தேகபதி மாலை


அருட்பெருஞ்ஜொதி

முத்தேகபதி மாலை

(சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம் என்ற முத்தேகத்தை பெற்ற வள்ளலாரை "முத்தேகபதி" அதாவது முத்தேகத்தைப் பெற்ற இறைவன் என்று பாடியது)

(பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)




சித்தெல்லாம் விளங்கிச் சித்தி வளாகத்திலே
         சிற்றெரும்பும் காணாத
    சர்க்கரை இனிப்பாய் மதங்களெல்லாம் பேசாத 
         சொற்களெல்லாம் பேசியே
பித்தெல்லாம் போக்கி சாதிஇன மதங்களெல்லாம்
         புறமொழிய ஓர்சிறந்த    
    புனிதசுத்த சன்மார்க்கம் சிறந்தோங்க கொடிகட்டி
         பட்டொளிவீசி பறந்ததே
அத்தெல்லாம் நீக்கிஆசார சங்கற்ப விகற்பங்களை  
         அழித்துஇனியும் வீண்காலம்    
    ஆகக்கழிக்காமல் நம்நிலைதெய்வ நிலையறிய விசாரணை
         அளித்ததொரு தெய்வத்திருவே
சத்தெல்லாம்     வித்தாக்கி மூடஅறிவை மண்ணாக்கி
         சாலைசங்களை நீராக்கி
    சகஜப்பழக்கத்தை விளைவித்து எல்லா உயிருள்ளும்
         சங்கமித்தஎந்தை முத்தேகபதியே


உச்சிமுதல் மேனியை மறைத்து நின்அடிகளின்
         உண்மையெலாம் தெரிய
    உருமறைத்து அடிகாட்டியே நடக்கும் திருவே
         உறவாய் வருபவனே
இச்சையின்றி பழக பலவண்ண ஆடைகள்
         இருக்க வெள்ளாடையை
    அணிந்து புறட்சி செய்து உருவாய்
         அருவாய் வருபவனே
பிச்சை எடுக்கவும் கைகளை வீசிநடக்கவும்
         பயந்து திருக்கரங்களை
    பார்ப்பவர்கள் வியக்க கட்டி உலாவியே
         பணிவாய் வருபவனே
அச்சில்நின்று நடுவை நாடி அங்கோர்
         அசையும் நாடியறிந்தங்கே
    ஆடாதே வேறொன்றை நாடாதே சற்றும்     
         அசையாஎந்தை முத்தேகபதியே


உயிருள்ள கல்வியாம் சாகாக்கல்வி பயின்று
         உயிரற்ற கல்வியாம்
    உலகியல் கல்வியை வெறுத்து பட்டம்
         உற்றசாகா அருளாளனே
தாயினும் ஓங்கிய தந்தை மொழியாம்
         தரணியில் எம்மொழிக்கும்
    தருகின்ற கருணை மொழியாம் நமது
         தமிழ்தந்த தமிழனே
ஆயினும் உலகியலரை வேறாக நினையாது
         ஆராகயிருப்பினும் நீவிர்
    ஆன்மநேய உறவன்றோ என்று பொதுவில்
         ஆடுகின்ற அண்ணலே
பாயிலே பஞ்சனையிலே படுத்தாலும் தூங்குமோ
         பாடையும் சுமக்குமோ
    பாழுமிந்த உடம்பையென்றே தூங்காமல் தூங்கிசுகம்
         பெரும்எந்தை முத்தேகபதியே



முன்னம் இருந்த மார்க்கம்பல இறையறியா
         முழங்கும் மதங்கள்பல
    மண்ணில் நீவந்த சமயத்தை தழுவி
         மயங்கிப்பாடிய பாடல்பல
இன்னும் கண்களால் வெறித்தும் மூச்சுகளை
         இழுத்தும் பிடித்தும்
    இசைத்த சாதனைகள் பலகன்னியர் சிலர்
         இடைகாட்டி முகம்காட்டி
தன்முலைக் காட்டியும் கருங்குழியில் செங்கோல்
         தாழாது புலனைந்தையும்
    தாளிட்டு இவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு
         தங்கமேஅணை யர்சுத்த
சன்மார்க்கச் சத்தியச் சங்கத்தை அனைத்திற்கும்
         சமரசமாய் ஏற்படுத்தி
    சாகாவரத்தை தயவினில்பெற்ற முதல்சுத்த சன்மார்க்கி
         சாமியேஎந்தை முத்தேகபதியே


தயவை ஜீவர்களிடம் கொடுத்ததில் கிடைக்கும்
         தாராள இலாபமெனும்
    தாழிடா அன்பை இறைவனிடம் கொடுத்ததில்
         தவறாது அருளைப்பெற்று
பயத்தை பூஜ்ஜியமாக்கி முச்சுடர்களையும் கடந்து
         பார்த்து திகைக்கையில்
    பம்பரமாய் சுற்றிவீழ இருக்கையில் உம்மை
         பிடித்து நிறுத்தி
காயத்துள் ஆகாயத்தில் கலந்தவன் யாரோ
         கலந்தப்பின் நீயாரோ
    கற்பூர மணம் மணக்கிறதுன் உடம்பில்
         காலன் கணக்கும்
சாயம் வெளுக்க பண்ணிய தவம்பலிக்க
         சுடுவதும் புதைப்பதும்
    சேர்ந்த உலகியல் சோதனையை வென்ற
         சோதியேஎந்தை முத்தேகபதியே

பாவிப்பயல் பசி வந்திட்டால் வயிறு
         பகீரென்று எரிகின்றதே
    புத்தி கெடுகின்றதே மனம் சிதறுகின்றதே
         பற்கள் தளருகின்றதே
ஆவிப்போக துடிக்கின்றதே கைகால்கள் சோர்கின்றதே
         அறிவு மயங்குகின்றதே
    அகங்காரம் அழிகின்றதே சித்தம் கலங்குகின்றதே
         இதயம் வேகின்றதே
அவிழ்த்து விட்டநெல்லி மூட்டைப்போல கரணங்கள்
         அடங்க மறுக்கின்றதே
    ஈரல் கரைகின்றதே மேனி கருகுகின்றதே
         இளைத்த மனிதர்களுக்கென்று
புவியிலே ஆகாரம் கொடுத்து பெருந்துன்பம்
         போக்கதருமச் சாலையிலே
    பசிக்கு உணவு அளிக்கின்ற உயிரான
         பதமேஎந்தை முத்தேகபதியே

உலகியலர்கள் எல்லாம் சமரசாமாய் வணங்க
         உண்மைக் கடவுள்
    ஒருவரே என்ற ஞானத்துடன் வணங்க
         உள்ளுணர்ந்து எழுப்பிய
அலகில் பேரொளியாய் விளங்கும் தனிநிலை
         அருட்பெருஞ் ஜோதி
    ஆண்டவரை அவர்விருப்படி எழுந்தருளச் செய்து
         அளவுகடந்த நெடுங்காலம்
பலஅற்புதச் சித்திகளெல்லாம் விளங்க சிற்சபையில்
         பொற்சபையில் புகுந்தருளச்செய்து
    புன்னியனை பொன் வண்ணவனை கண்ணவனை
         பொதுவில் நடமாட
வலமுறு சுத்தசன்மார்க்க ஞானசபையில் எல்லாம்
         வல்லவரை ஓரிறையானை
    வரமெலாம் தரும்படி செய்வித்து அருளிய
         வல்லாஎந்தை முத்தேகபதியே

செத்தாரை எழுப்பும் வல்லமை உடையோனே
         சேர்ந்தாரை நீடுவாழ
    சாகாவரம் அளிப்போனே புலால் உண்போரை
         சாராதே அவர்களை
சுத்தசன்மார்க்கம் புற இனத்தான் என்கிறதே
         சர்வசித்தி வல்லமை
    சார்ந்த இறைவன் உயிர்பலியும் கேட்குமோ
         சிந்திப்பீர் உலகீரே
எத்தனுக்கு எத்தனும் சித்தனுக்கு சித்தனும்
         என்றும் இறுக்க
    எங்கு கண்டோம் இறக்கவே காண்கிறோம்
         அன்று பூட்டிய
வித்தகன் வல்வனின் பூட்டை உடைத்தோனே
         வந்தவன் சென்றவன்
    வாழ்பவன் கணக்கறிந்து மூடப் பழக்கங்களை
         வென்றஎந்தை முத்தேகபதியே

அண்டங்கள் விரிந்துக் கொண்டே இருக்க
         அதைவிடப் பிண்டங்கள்
    அகண்ட விசாலாமுடையது என்றே பிண்டத்தில்
         ஆடுகின்ற தேவனே
கண்களை சிலர் அண்டமாகக் கொண்டு காணவிழைய    
         கடிந்து தயவில்
    கரணங்களும் செயல்படாது புருவ மத்தியில்
         கலையான கண்ணனை
ஆண்டுபல கழியாமல் சடுதியில் உணர
         அழகான உபாயம்
    அளித்தும் பிண்டங்கள் இறந்தால் சுடாமல்
         ஆழ்குழியில் புதைக்க
மண்ணில்மீள அவைகள் எழுந்து வரக்காண்போம்
         மென்றும் அருளை
    மகிழ்தும் நினைந்தும் உணர்ந்தும் நெகிழ்ந்தும்
         மாடியஎந்தை முத்தேகபதியே

அருளே பொருளலல்லாது இவ்வுலகில் வேறு
         ஒன்றையும் பொருளாக
    ஆசையுடன் பார்க்கக் கூடாது என்றே
         உரைத்த சத்தியனே
குருவும் தெய்வமும் ஒன்றாகக் கண்டு
         கற்றதெலாம் அவனிடமே
    குறையா செல்வம் பெற்றதெலாம் அவனிடமே
         களித்ததெலாம் அவனிடமே
மருவும் உலகியலரை நம்பாமல் அம்பலத்திலே
         மாடத்தில் ஓங்கிய
    மாமலையனை அன்பெனும் பிடியுனுள் பிடித்து
         மாயைவென்ற மன்னா
திருவும் உனதுசாகாக் கல்வியும் கற்பக
         தருவாய் என்றும்
    தழைத்தோங்க அருளும் எங்கள் சித்திவளாகத்
         தந்தையேஎந்தை முத்தேகபதியே

2 comments:

  1. ARUTPERUJOTHI ARUTPERUNJOTHI
    THANIPERUNGAURUNAI ARUTPERUNJOTHI

    ReplyDelete
  2. செங்குட்டுவன் ஐயா அவர்களுக்கு எமது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.