Monday, May 6, 2013

வள்ளலாரின் வாய்மை


             வள்ளலாரின் வாய்மை            06-05-2013

உலகீரே!

வள்ளலலாரின் வாய்மையை, அன்றைக்கு அவருடன் இருந்த அடியவர்கள், சீடர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அவரை அடுத்துள்ள சமய மத மார்க்க அறிஞர்கள், மற்றும் எந்த ஒரு உலகியலர்களும் புரிந்துக்கொள்ளவில்லை அல்லது புரிந்துக்கொள்ளமுடியவில்லை என்பதை வள்ளலாரே பல முறை கூறி வருத்தமுற்றார்...இன்றும் வருத்தத்துடனே இருக்கிறார், ஏனென்றால் (ஒருசிலரைத் தவிர) இதுவரை அவரின் மார்க்கத்தை புரிந்துக்கொள்ள யாரும் முன்வரவில்லை.

அப்படி என்ன சொல்கிறது வள்ளலாரின் வாய்மை! பார்ப்போம்...

"வாய்மை" என்றால் ஒருவரால் வெளிப்படுத்தப்படும் "உண்மை" அல்லது "சத்தியம்" என்று சொல்லலாம்.

"வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீதுஇலாது சொலல்" என்ற குறளுக்கு ஏற்ப வள்ளலாரின் வாய்மை - எந்த ஒரு இடத்திலும், எந்த ஒரு செயலிலும், எந்த ஒரு சொல்லிலும், எந்த ஒரு கருத்திலும், எந்த ஒரு முடிவிலும், எந்த ஒரு உயிரினங்களுக்கும் யாதொரு தீதும் இன்றி அருளப்பட்டதாக உள்ளது.

மதங்கள், சமயங்கள், மார்க்கங்கள் என்பவற்றில் பலவகையான தீமைகளுடன் வாய்மையின்றி கற்பணைகளே மிகுந்து காணப்படுவதை யாராலும் மறுக்கமுடியாது. அப்படிப்பட்ட வழிகளில், பழக்கங்களில் நாம் பல ஆயிரம் ஆண்டுகளாக தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்ற காரணத்தினால், வள்ளலாரின் சுத்தமான வாய்மையினை கண்டு அஞ்சுகின்றனர், திகைக்கின்றனர், எதிர்க்கவும் செய்கின்றனர் ஏனெனில் இதுவரை இருளிலே வாழ்ந்த நமக்கு ஒளியைக் கண்டதும் வருகின்ற அச்சம், திகைப்பு, எதிர்ப்பு இயல்பாகவே வருவதுதான், மறுப்பதற்கில்லை.

அன்று வள்ளலாரின் அணுக்கத்தொண்டராக இருந்த காரணப்பட்டு ச.மு.கந்தசாமி பிள்ளை அவர்களும் நெற்றியில் பட்டையும், கழுத்தில் கொட்டையுடன் தமது சமயத்துடனே பின்னி பிணைந்திருந்தார், வள்ளலாரின் வாய்மை அவரை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.

அன்று வள்ளலாருடன் இருந்த முதல் சீடரான கல்பட்டு ஐயாவும் இறுதிவரை யோகம் பயின்றாறே அன்றி வள்ளலாரின் வாய்மை இவரையும் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

அன்று வள்ளலாரின் சீடராக இருந்த தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களும், வள்ளலார் சைவ சமய பாடல்களை பாடும்வரைதான் அவரது உண்மையான ஆதரவு வள்ளலாருக்கு இருந்தது எனச்சொல்லலாம். வள்ளலின் வாய்மை வெளிப்படும் ஆறாம் திருமுறையையினை வெளியிட மறைமுகமாக மறுத்தார். 'ஐயா! எனக்கு பொன் செய்யும் வித்தையை தெரிவியுங்கள்' என்று வேலாயுதனார் கேட்க... அதற்கு வள்ளலார்... நீயுமாமாமா? என்று மனம் வெந்து நொந்ததுதான் மிச்சம்.

வள்ளலாருடன் சூழ்ந்திருந்த பொதுமக்களோ, "செத்தாரை எழுப்புதல்" பற்றி வள்ளல் பல இடங்களில் கூறியிருப்பதை யறிந்து, பிணங்களை கொண்டுவந்து அவர்முன் போட்டு எழுப்பச் சொன்னக் கூத்தெல்லாம் நடந்தேறியது.

வள்ளலார் தாம் சொன்ன அந்த வாய்மையால், தம் தேகத்தை ஒளிதேகமாக வேதித்துக்கொண்டதை அறியாத அன்றைய மக்கள் அவரை நேரடியாகவும், மறைமுகமாகவும் புகைப்படம் எடுக்க முயன்று, அதில் அவரது உருவம் விழாததைக் கண்டு வியந்தனர். ஆனால் வள்ளலாரோ "இவர்கள் உண்மை தெரியாமல் எம்மை சுற்றுகின்றனரே!" என்று வருத்தமுற்றார்.

வள்ளலார் அவர்களின் உருவத்தை ஒரு குயவன் மண்ணால் செய்து வந்து அவரிடம் பெருமையாக காட்ட, அதற்கு வள்ளலார் வெகுண்டு, "பிச்! பொன்னான மேனி கல்லானதே!" என்று சொல்லியவாறு அதனை போட்டு உடைத்து, மனம் வெம்பினார்.

இலங்கையைச் சேர்ந்த ஆறுமுக நாவலர், வள்ளலார் அவர்களின் திருஅருட்பாவின் வாய்மையினை கண்டு அஞ்சி, நடுங்கி வள்ளலார் எழுதியது அருட்பா அல்ல மருட்பா என்று வழக்கிட்டார், நாவலரின் பொய்மையால் அவ்வழக்கு தள்ளுபடியாகியது.

இவ்வாறு இன்னும் சொல்லிக்கொண்டே செல்லும் அளவிற்கு வள்ளலார் தனது வாய்மையினால் அன்றைக்கு நிறையவே சொல்லன்னா துன்பத்திற்கு ஆளானார்.

"உண்மை சொல்ல வந்தனனே, என்று உண்மை சொல்ல புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை" என 22-10-1873 அன்று மனத்துன்பத்தை வெளிப்படுத்துகிறார். இப்படிப்பட்ட மனத்துன்பத்தை பல இடங்களில் வள்ளல் வெளிப்படுத்தியுள்ளார்.

சரி, வள்ளலாரின் வாய்மைக்கு இன்றைய உலகம் மதிப்பளிக்கிறதா? என்றால் இல்லை என்றே சொல்லலாம். வள்ளலாரின் பொய்மை கருத்து அடங்கிய சைவ நெறிப் பாடல்களையே இன்னும் பல இடங்களில் பாடியும், அவரை சைவ சமய ஞானிகளுள் ஒருவராகவே இன்றைய உலகமும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

அதுமட்டுமல்ல, அவரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில் பொதுமக்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டு அதனை ஒரு கோவிலாக நினைந்தே வழிபடுகின்றனர்.

அவரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், இன்றைக்கு ஒரு சுத்த சன்மார்க்கியையும் காணமுடியவில்லை. அங்கேயும் சைவர்களும், வைணவர்களும் பட்டையும், நாமமுமாக அணிந்துக்கொண்டு அதனையும் ஒரு மடமாக்கிவிட்டார்கள்.

இன்னும் சிலர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை துவக்கி, வெள்ளாடை சாதுக்களாய் வேடமனிந்து அச்சங்கத்தின் மூலம் மற்ற பொய்யர்கள் நடத்திவரும் யோகா / தியான வகுப்பை தாங்களும் நடத்தி புகழும் பொருளும் பெற முயன்றுவருகின்றனர்.

அவரால் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து இயக்கங்களும் இன்னும் இந்து மத கட்டுப்பாட்டில் இருப்பதே வேடிக்கையாகவும், சுத்த சன்மார்க்கிகளுக்கு வெட்கமாகவும், துக்கமாகவும் உள்ளது. இன்னும் சுத்த சன்மார்க்ககாலம் கனியவில்லை என்பதே இது காட்டுகிறது. எப்போது கனியும்? இன்று வருமோ நாளை வருமோ, அறியேன் என் கோவே! "சுத்த சன்மார்க்கத்தை யானே நடத்துகின்றேன்" என வள்ளலார் கூறுவதால், கனியும் காலம் வெகுசீக்கிரம் வருவதற்கு நமது வாய்மையினால் வேண்டுவோம்.

அன்பர்களே 'விரைந்து வாரீர்' என நம் வள்ளலார் அழைக்கிறார் எதற்காக?

நம்மை அவரிடம் அழைத்து,

1. என்னை தெய்வம் என வணங்குங்கள் என்றாரா?   

2. நமக்கு இருகை தூக்கி ஆசீர்வாதம் வழங்கினாரா?

3. நம்மிடம் பொருள்கள் பெற்றுக்கொண்டு வரம் கொடுத்தாரா?

4. சாதனங்கள் ஏதேனும் (யோகா, விரதம், மூச்சு அடக்கப்பயிற்சி, தியானம், தவம்) நம்மை செய்யச் சொன்னாரா? அல்லது சொல்லி கொடுத்தாரா?

5. யாக சாலை அமைத்து ஓமக்குண்டம், பஜனை, சடங்குகள் செய்யச் சொன்னாரா? அல்லது அவர் செய்தாரா?

6. சந்தோசம் என்ற பெயரில் எல்லோரையும் நடனம் ஆடச் சொல்லி களிப்பு உண்டாக்கினாரா? அல்லது அவர்தான் ஆடினாரா?

7. அவரை வணங்கி கால் பாத பூசை செய்யச் சொன்னாரா? அல்லது அவர்தான் யாருக்கேனும் செய்தாரா?

8. மந்திரங்கள் ஓதி அதிசயம் நடக்க செய்வித்து காட்டினாரா?

9. பூசித்து ஏதேனும் பிரசாதம் கொடுத்தாரா? அல்லது வந்தவர்களுக்கு விபூதி வழங்கினாரா?

10. உடல் முழுதும் திருநீறு பூசி ருத்திராட்சை கொட்டை அணிந்திருந்தாரா?

11. என்னுடைய உருவ படத்தை வைத்து பூஜைசெய் எனச் சொன்னாரா? அல்லது அவர் ஏதேனும் படத்திற்கு பூஜை செய்தாரா?

மேற்படி ஏதேனும் ஒன்றையோ அல்லது வேறு ஏதேனும் ஆசார முறையிலோ செய்திடாதவரே நம் "வள்ளலார்". 

வள்ளலாரின் மார்க்க நெறி "வாய்மையும் வல்லமையும்" கொண்டது. "மரணத்தை தவிர்த்துக் கொள்ளலாம்" என்ற மிகப்பெரிய பயனை எந்தஒரு மார்க்கமும் இதற்கு முன் காணவில்லை, அறிவிக்கவும் இல்லை. வள்ளலாருக்கு முன்பு வரையுள்ள அனைத்து சமய மத மார்க்கமும் இப்பயனை தெரிந்திருக்க வில்லை. பெரிய அளவில் உண்மையை தெரிந்திருந்த சைவ சமயத்தில் "இறவாமை" "சாகாக்கல்வி" பற்றி கிடையாது. (சில அருளாளர்கள் வானில் கலந்தது உண்மையான மாயை, ஆனால் அது இறவாமையோ சாகாக்கல்வியோ அன்று...ஏனென்றால் என்னைப்போல் நீங்களும் வானில் கலக்கலாம் என அவர்கள் மக்களிடம் கூறவில்லை...கூறவும்முடியாது, அவர்கள் மீண்டும் பிறப்பெய்துவார்கள், பிறந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள்)

சொர்க்கம், நரகம் என்று கற்பனையாய் சொல்லப்பட்ட மார்க்கங்களில் எங்ஙனம் சாகாக்கல்வி இருக்கும்!

வள்ளலார் அவர்கள் "யாம் கண்ட உண்மையினை இதுவரை யாரும் அறிந்திருக்கவில்லை" என்கிறார். ஆக, இன்றையமட்டும் நாம் பொய்யர்களான தலைவர்களையும், மடாதிபதிகளையும், ஞானிகளையும் சார்ந்து அவர்களின் வழியில் செல்லக்கூடிய தன்மைபடைத்தவர்களாய் இருக்கிறோம். எந்த ஒரு விதத்திலும் தன் அறிவின் நிலைகொண்டு ஏன்? எதற்கு? எப்படி? என தனக்குத் தானே மக்கள் கேட்டுக்கொண்டது கிடையாது. அதற்கு காரணம் அவர்களின் பயமே. அப்பயத்திற்கு காரணம் அவர்கள் நம்பி இருந்த "சாதி சமய கட்டுப்பாடு ஆசாரங்களே" ஆகும். சாதி எப்படிப்பட்டது? அது கொண்ட மதம் எப்படிப்பட்டது? எவ்வளவு விகாரமுடையது? எவ்வளவு வன்முறை கொண்டது? என்பதை இன்றும் நாம் பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். ஆனால் அதிலிருந்து பாடம் படிக்க மறுக்கிறோம், அதனைவிட்டு வெளியில் வர மன உறுதி இல்லை நம்மிடம்.

ஆனால், இன்றையநாளில் சற்றே சிறிது மாற்றம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. பல ஜென்மபிறவிகள் கண்டு காலத்தின் ஆன்ம பக்குவத்தினால் வருவிக்கப்பட்டுள்ள இன்றைய இளைஞர்களின் அறிவில் "உண்மை அறிதலும்" மனதில் "உயர் நேயமும்" செயலில் "கட்டுப்பாடு அற்ற பொது நோக்கமும்" வருவிக்கப்பட்டுள்ளதையும் காண்கிறோம். இதுவே நல்ல தருணம், கூடிய சீக்கிரம் வாய்மை வெளிப்படும்.

சாதி சமய மதங்கள் யாவும் பொய்யென தெரியவரும், எல்லா உயிரும் தம் உயிர்போல் பார்க்கின்ற உணர்வு வரும், எங்கும் "நல்ல விசாரணையே" நடைபெறும், "கடவுள் ஒருவரே" என்ற அறிவு வரும், "சாகாக்கல்வி" கற்க ஆசைவரும், ஆசாரங்களை விடுத்து "பொது நோக்கம்" வரும், நம் உடம்பே "மெய்" எனத் தெரியவரும், மெய்யை பொய்யாக்காமல் இருக்கும் மரணமிலா பெருவாழ்வு நம் அனைவருக்கும் வரும்... வரும்... வரும்...

"வாய்மையே வெல்லும்", "வாய்மை என்றும் வாழி"

"மதத்திலே சமய  வழக்கிலே   மாயை
    மருட்டிலே   இருட்டிலே  மறவாக்
கதத்திலே  மனத்தை    வைத்துவீண் பொழுது
    கழிக்கின்றார் கழிக்கநான்  உன்பூம்
பதத்திலே  மனத்தை    வைத்தனன்  நீயும்
    பரிந்தெனை  அழிவிலா   நல்ல
பதத்திலே  வைத்தாய்   எனக்கிது    போதும்
    பண்ணிய    தவம்பலித்   ததுவே"

 

  

4 comments:

  1. மெளலி சந்த்ரு ஐயா அவர்களுக்கு எமது நன்றி

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி அருமை யான விளக்கம் ஐயா நன்றி வணக்கம்.
    அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌼

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.