Wednesday, May 22, 2013

சுத்த சன்மார்க்க கொள்கை

சுத்த சன்மார்க்க கொள்கை

ஆன்மநேய உள்ளங்களுக்கு வணக்கம்!

வள்ளலாரின் 'சுத்த சன்மார்க்க' கொள்கை தற்போது வெகுவாக பரவிவருவது மகிழ்ச்சி அளிப்பதாய் உள்ளது. சுத்த சன்மார்க்க கொள்கையினை பரப்புவதில் இரு வகையினை நாம் பார்க்கிறோம். ஒன்று, தனிப்பட்ட ஒரு நபர் உலகில் உள்ள ஏதேனும் ஒரு ஊடகத்தின் மூலம் சுத்த சன்மார்க்க கொள்கையினை தங்களால் இயன்றவரை பரப்புவது. மற்றொன்று, வள்ளலார் ஏற்படுத்திய 'சங்கத்தின்' மூலம் அக்கொள்கையை பரப்புவது.

மேற்கண்ட இரண்டு வகையுமே, கொள்கை பரவுவதற்கு தேவையானதாக உள்ளது என்பதில் ஐயமில்லை. இங்கு நாம் கவனிக்க வேண்டியவை யாதெனில், தனிநபரோ சங்கமோ எதுவாகினும் 'சுத்த சன்மார்க்க கொள்கை' எது? என்ற புரிதல் இருக்கவேண்டியது மிகமிக அவசியம். அப்போது தான் வள்ளலாரின் அழுக்கற்ற சுத்தமான கொள்கையை பரப்பமுடியும். இங்கு அழுக்கு என்பது, மதங்களில் கூறப்பட்ட நெறிகளை வழிமுறைகளை 'சுத்த சன்மார்க்க கொள்கையாக' அறியாமையால் அல்லது வேண்டுமென்றே, நான் கூறுவது தான் 'சுத்த சன்மார்க்கம்' என்று வள்ளலாரின் கருத்துகளை மாற்றி இவ்வுலகில் பரப்புவது.

இவ்வாறு தவறான கொள்கைகளை பரப்புவதில் தற்போது தனிநபர்களைவிட வள்ளலாரின் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்' என்ற பெயரை பதிவு செய்துவிட்டு அங்கிருக்கும் நிர்வாகிகள், சிறிதும் வள்ளலார் மேல் = அருட்பெருஞ்ஜோதி மேல் அச்சமின்றி = உண்மையின்றி 'சுத்த சன்மார்க்க கொள்கையை' பரப்புவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்களெல்லாம் தங்களது மத கடவுளர்களை, தங்களது வழிபாட்டுத் தலங்களுக்கு / கோயில்களுக்கு சென்று வழிபடுவதே நல்லது.

"சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள், என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாச்சார சங்கற்ப விகற்பங்கள்" ஆகியவை சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கியத் தடைகளாகும் என வள்ளலார் கூறியிருக்கிறார். யார் ஒருவர் மனதில் இவைகள் பற்றாமல் உள்ளதோ அவர்களே சுத்த சன்மார்க்கச் சங்கத்தில் உறுப்பினராக முடியும் அல்லது சுத்த சன்மார்க்கச் சங்கத்தை உருவாக்கி அதன் மூலம் அக்கொள்கையை பரப்பமுடியும்.

ஆனால் இன்று நடப்பது முற்றிலும் வேறாக உள்ளதை காணும்போது கவலை அளிப்பதாகவே உள்ளது. அண்டங்காக்கைக்கும் குயிலுக்கும் பேதம் தெரியவில்லை, கள்ளுக்கும் பாலுக்கும் வித்தியாசம் தெரியாமல் இரண்டையும் ஒன்றாகவே பார்க்கின்றனர். கண்ணாடி வளையலை பொன்னாக நினைப்பது போன்ற நிலையே இவ்வுலகில் மிகவும் பிரபல்யமாக இருக்கின்றன என்பதனால் நாமும் ஏமாறலாமா? இந்நிலை மாற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

கன்னியாகுமரியில் உள்ள ஒரு 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்' ஒரு நூலை வெளியிட்டுள்ளது. அந்நூலில் உள்ள முக்கிய கருத்து என்ன வெனில், "புருவமத்தி" என்பது என்ன? என்பதனை விளக்குவதாக உள்ளது.

இனி, 'புருவமத்தி' என்பது என்ன? என்பதை அந்நூலில் கூறியிருப்பதை முதலில் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்...

1. புருவமையம் இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் நாம் பொட்டு வைக்கிறோம். புருவ மையம் என்றால் எல்லோரும் இதைத்தான் சொல்வர். சிந்தியுங்கள். இரு புருவமையம் என்றா சொன்னார்கள்? புருவமையம் ஒரு புருவத்தின் மத்தி அதன் கீழே உள்ள கண் இதை குழுஉக்குறியாகச் சொல்லி வைத்தனர். காரணம் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். புருவமையம் என்றால் "கண்" என எல்லா சித்தர்களும் வெளிப்படையாகவே சொல்லி வைத்துள்ளனர்.

2. நம் கண்மணியில் ஒளியை நினைக்க நினைக்க ஒளிபெருகும் - அதாவது உஷ்ணம் அதிகமாகும், கண்ணீர் பெருகும் - கண்கள் சிவக்கும் - கண்ணிலே கடுப்பு தோன்றும் தாங்கிக்கொள்ளவேண்டும். கண்களை இமையாமல் விழித்து நேராக நோக்கியிருந்தால் நம்முன்னே ஒளிதோன்றும். இந்நிலை வளர வளர நமக்கு அனுபவம் வர வர நம் கண் முற்றிய கண்ணாகி தூய உஷ்ணம் ஏற ஏற - அனல் பறக்கும் பார்வையுடன் கூடிய நெற்றிக்கண்ணாக மாறும்.

மேற்கண்ட இரண்டு கருத்துக்களை வலியுறுத்தி, அதற்கான பலரது பாடல்களை சுட்டி எடுத்துக் காட்டுகிறது இந்நூல்.

சரி, இந்நூல் உண்மையைத் தானே கூறுகிறது, என்றால் 'சுத்த சன்மார்க்கத்தின் படி" இது பொய்யே. இது சைவ சமயத்தில் கூறப்பட்டிருக்கின்ற "சச்சு தீட்சை" என்னும் கண்களால் செய்யப்படுகின்ற சாதனையாகும். இந்த சாதனையை வள்ளலார் வேண்டாம் என்று மறுத்திருக்கிறார்.

மேலே உள்ள முதல் கருத்தே தவறானது. அதனை தழுவி வந்த இரண்டாவது கருத்தில் உள்ள சாதனையும் நம்மை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும்.

தங்களது மனித பிறவியிலே இருகண்களும் கிடைக்கப் பெறாதவர்கள் கூட தங்களது அகக்கண்ணை திறக்க பெற்றுக்கொள்ளும் மார்க்கம் தான் நமது சுத்த சன்மார்க்கம்.



புருவ மத்தி என்று வள்ளலார் கூறுவது இரு கண்களை அல்ல. நெற்றியில் உள்ள அகக்கண்ணையே குறிப்பிடுகிறார். வள்ளலார் தமது உபதேச குறிப்பில் கூறுவதாவது:-

"நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப்பெற்றுக்கொள்வது நலம். மேற்படி நெற்றிக்கண்ணைத் திறக்கப்பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல் போல் தெரியும். அவன்தான் சுத்த ஞானி. மேற்படி ஞானி தயவோடு ஒருபிரேதத்தைப் பார்த்த மாத்திரத்தில் பிரேதம் உயிர்பெற்று எழும். மேற்படி ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால், உடனே அந்த ஜீவன் பஸ்பமாகிவிடுவன். மேற்படி ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்களுள. மேற்படி கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டும் உள்ளது. மேற்படி பூட்டை அருளென்கிற திறவுகோலைக் கொண்டு திறக்க வேண்டும். ஆதலால், மேற்படி அருளென்பது ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு ஆகும். நாம் தயா வடிவமானால் மேற்படி அனுபவம் நேரும்."

வள்ளலார் உபதேசப்படி, புருவமத்தி என்பது நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணே ஆகும் என்பது விளங்குகிறது அல்லவா. அந்த நெற்றிக்கண்ணை திறந்தவர்களின் அடையாளம் கண்டுகொள்வது எப்படி என்றும் கூறிவிட்டார். அந்த நெற்றிக்கண்ணை திறப்பதற்க்கான வழிமுறைகளையும் இங்கே அற்புதமாக சொல்லிவிட்டார். இங்கு ஆசாரியார் என்று வள்ளலார் குறிப்பிடுவது இறைவனின் அருளும் தயவுமே ஆகும். அல்லது இவ்வுலகில் மேற்படி அடையாளங்கொண்ட ஆசாரியர் ஒருவர் இருப்பின், அவரும் நெற்றிக்கண் திறக்க இதனையேதான் கூறுவார் என்பதில் சந்தேகம் வேண்டாம். மற்றபடி இவ்வுலகில் உள்ள மத குருக்கள், மார்க்க குருக்கள், சமய குருக்கள் அனைவரும் தங்களுக்கு தாங்களே குரு என்றும், ஆசாரியர் என்றும், சாது என்றும் ஞானி என்றும், ஏன் கடவுள் என்றும் கூட பட்டம் வைத்துக்கொண்டு உலாவுவார்கள். இவர்களெல்லாம் வெறும் நடைபிணங்கள், என்று எச்சரிக்கையாக இருப்பது சுத்த சன்மார்க்கிகளின் நல்குணமாகும்.

சாதனை இன்றி சாதிப்பார் இல்லை. புறத்திலே அது என்று இறைவனைக் காட்ட முடியாது. புருவ மத்தியாகிய திருச்சிற்றம்பலத்தில் மட்டுமே உணரமுடியும் என்கிறார் வள்ளலார்.

பொது உணர் உணரும் போதலால் பிரித்தே
அது எனில் தோன்றா அருட்பெருஞ்ஜோதி (அகவல்)

வேதாந்த நிலை நாடி எனத் தொடங்கும் பாடலில், பொது என்பதற்கு - ஞான பூரண ஆகாயம் என்கிறார் நம்பெருமானார். பிண்டத்தில் ஆகாயம் புருவ மத்தியாகும்.

இறைவனை உள்ளத்தில்தான் காண முடியும். தவத்தை மேற்கொண்டால் ஒழிய வேறு வழியில் இறைவனை அகத்தில் காணமுடியாது. சாதனை என்பது பொதுவாக மூன்று வகையாகும். 1.ஜபம் 2.தியானம் 3.தவம்

1. ஜபம் என்பது, குருவானவர் உபதேசிக்கும் மந்திரச் சொல்லை, அடிக்கடி மனதாலும், வாக்காலும் ஜெபிப்பது.

2. தியானம் என்பது, ஓர் உருவத்தைப் புறத்தில் கண்ணால் கண்டு, கண்டு, பின்னர் அந்த உருவத்தை உள்ளே கண்ணைமூடிக் கொண்டு அகத்தில் காண முயற்சிப்பது.

3. தவம் என்பது, மனதை அடக்கி, எந்த நினைப்பும் தோன்ற விடாமல் நிறுத்துவது.

ஜபமும், தியானமும் - தவம் செய்வதற்கான சாதனைகளாகும், அதாவது மனதை அடக்குவதற்காண பயிற்சியாகும். இவை மட்டுமின்றி இன்னும் பலவேறு சாதனைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

பூரகம், ரேசகம், கும்பகம் என்ற மூன்று பகுதிகளைக் கொண்ட பிராணாயாமம், அசுவகதி, சிம்மகதி என்றெல்லாம் கூறப்படும் மூச்சுப் பயிற்சி, கண்களால் செய்யப்படும் பலவிதமான பயிற்சிகள், ராஜயோகம், அடயோகம், காயகல்பம், துரியம், துரியாதீதம், சாந்தியோகம் என்றெல்லாம் பல விதமான சாதனைகள் உலக மக்களிடையே பரவிவருகின்றன.

இச்சாதனைகளில் எதனைக் கையாண்டால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை யாரே கூறுவர்? பலன் கிடைத்தால்தானே கூறுவதற்கு...

திருமூலர் திருமந்திரம் எண்ணாயிரம் பாடல்களைக் கொண்டது. ஆனால் கிடைத்தது மூன்றாயிரம் மட்டுமே. சாதனைகள் பலவற்றின் விளக்கங்களைத் திருமூலர் திருமந்திரத்தில் காணலாம். ஆனால் இந்த சாதனை மிகச் சுலபமானது, இதில் பலனை வெகுசீக்கிரத்தில் அடையலாம், என்று திருமந்திரம் மட்டுமல்ல வேறு எதுவும் கூறவில்லை.

சாதனைகளில் சுற்றுவழியும் சூதான வழிகளுமே உள்ளன. இந்த உண்மை அறியாமல் அவற்றைக் கடைபிடித்து முயற்சி செய்தோர் முற்காலத்திலும் பலனைக் கண்டார் இல்லை. இப்போதும் காணவில்லை என்கிறார் நம்பெருமானார்.

சுற்றது மற்றவ்வழி மாசூதது என்று
    எண்ணாத் தொண்டரெல்லாம்
    கற்கின்றார் பண்டும் இன்றும் காணார் (3044)

என்கிறது நம்பெருமானாரின் திருஅருட்பா.

தவத்தினால் மட்டுமே இறைவனைக் காண முடியும், அழியா வடிவம் பெறமுடியும் என்று கூறவந்த வள்ளலார், அடிப்படை ஆதாரமாக ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும், இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கங்களையும் முன்னிலைப்படுத்தினார். இவ்வொழுக்கங்களைக் கைவரப் பெற்றவர்கள் மட்டுமே, தவம் செய்ய அருகதை உள்ளவர்கள் என்பார்.

வள்ளலாரின் பேரிரக்கம், பெருங்கருணை, தவத்திலும் மக்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி, கண்ட கண்ட வழிகளில் செல்லவொட்டாமல் தடுத்து, ஒரு எளிய வழியைக் காட்டுகின்றன. இந்தச் சாதனை வேண்டாம், இது வேண்டும் என்று திட்ட வட்டமாக அறிவுரை தருகின்றார் வள்ளற் பெருமானார்.

அப்படி வழிகாட்டும் பாடல்களில் இதுவும் ஒன்றாகும்,

பற்றுதலும் விடுதலும் உள் அடக்குதலும் மீட்டும்
    படுதலொடு சுடுதலும் புண்படுத்தலும் இல்லாதே
உற்றொளி கொண்டு ஓங்கி எங்கும் தன்மயமாய் ஞான
    உருவாகி உயிர்க்குயிராய் ஓங்குகின்ற நெருப்பே
சுற்றுதலும் தோன்றுதலும் மறைதலும் வெச்சென்றே
    சுடுதலும் இல்லாது என்றும் துலங்குகின்ற சுடரே
முற்றும் உணர்ந்தவர் உளத்தே திருச்சிற்றம்பலத்தே
    முயங்கும் நடத்தரசே என்மொழியும் அணிந்தருளே (4116)

பற்றுதலும்       : மூச்சை உள்ளே இழுத்தலும் (பூரகம்)
விடுதலும்        : மூச்சை வெளியே விடுதலும் (ரேசகம்)
உள் அடக்குதலும் : உள்ளே இழுத்த மூச்சை வெளியே விடாமல் சற்று   நிறுத்துதல்    (கும்பகம்)
மீட்டும் படுதலோடு: இவ்வாறு மீண்டும் மீண்டும் செய்வது
சுடுதலும்        : இந்த பயிற்சியினால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும்
புண்படுத்தலும்    : மூச்சுப் பயிற்சியில் தீவிரமாக ஈடுபடுவோருக்கு ஆசனவாயிலில் இரத்த ஒழுக்கு ஏற்படும் என்பதயே புண்படுத்தலும்
இல்லாதே       : இம்மாதிரியான தவறுதலான சாதனம் கடைபிடிக்காமல்
உற்றொளி கொண்டு: தயவினால் பெற்ற உஷ்ணத்தைக்கொண்டு கதவு திறக்கப்                         பெற்றுக்கொண்டு
ஓங்கி           : அனுபவத்தில் உயர்ந்து
எங்கும் தன்மயமாய்: உடல் முழுவதும் ஒளி மயமாய்
ஞான உருவாகி  : இந்த உடலானது ஞான உடலாக மாறி
உயிர்க்குயிராய்   : உயிரைக்காக்கும் உயிராய்
ஓங்குகின்ற நெருப்பே: ஓங்குகின்ற தவக்கனலே
சுற்றுதலும்       : கண்களிலுள்ள கருவிழியைச் சுற்றுவதும்
தோன்றுதலும்     : கண்களை திறந்தே வைத்திருப்பதும்
மறைதலும்       : கண்களிலுள்ள கருவிழிகளைப் பின்புறமாகத் திருப்பி, வெளியே தோன்றாமல் மறைப்பதும்
வெச்சென்றே சுடுதலும்: கண்களைச் சிறிதும் இமைக்காது உற்றுப் பார்த்துக் கண் உறுத்தலால் உஷ்ணம் நிறைந்து சூடேறிம்படி  செய்தலும் (முறைப்பது அல்லது வெறித்துப் பார்ப்பது)
இல்லாது        : இம்மாதிரியான தவறான சாதனத்தை மேற்கொள்ளாமல்
என்றும் துலங்குகின்ற: என்றும் குறையாது விளங்குகின்ற
சுடரே          : தவக்கனலே
முற்றும் உணர்ந்தவர்: எல்லாம் அறிந்த அறிஞர்கள்
உளத்தே        : உள்ளத்தில்
திருச்சிற்றம்பலத்தே: அறிஞர்களின் புருவமத்தியிலே
முயங்கும் நடத்தரசே: விளங்குகின்ற நடன நாயகனே
என்மொழியும்    : நான் பாடும் பாடலையும் ஏற்றுக்
அணிந்தருளே    : கொண்டு அருள் பாலிப்பாயாக

மேற்கண்ட பாடலின் மூலம் வள்ளற் பெருமான் மூச்சு மற்றும் கண் வழியே செய்யக்கூடிய சாதனங்களை மறுத்தலை தெளிவாக காணலாம்.

விழித்து விழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல்
    விழிகள் விழித்து இளைப்பதல்லால் விளைவொன்று மிலையே
மொழித்திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும்
    முன்னவ நின் பெருங்கருணை முன்னிடல் இன்றெனிலோ
செழித்துறு நற்பயன் எதுவோ திருவுளந்தான் இரங்கில்
    சிறு துரும்போர் ஐந்தொழில் செய்திடல் சத்தியமே
பழித்துரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின்செயலே
    பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசு மகிழ்ந்தருளே (3816)

முந்தைய பாடலில் விளக்கியது போலவே இந்தப் பாடலிலும் வேண்டாத பயிற்சியை எடுத்துக் காட்டுகின்றார்.

விழித்து விழித்து இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல்:

கண்களைச் சிறிதும் இமைக்காமல் விழித்துப் பார்க்கின்ற பயிற்சியை செய்யும் போது கண்களில் கரிப்பு ஏற்படும். அது அதிகம் ஆகும்போது கண் இமைகள் தாமே இமைத்துவிடும். உடனே மறுபடி இமைக்காமல் விழித்திருக்க முயற்சி செய்வர். அவ்வாறு எத்தனை முறை விழித்து இமைத்தாலும் தவக்கனலாகிய நல்ல உஷ்ணம் தோன்றவில்லை என்றால்

விழிகள் விழித்து இளைப்பதல்லால் விளைவு ஒன்றும் இலையே:

விழித்து விழித்து கண்களானது களைத்துப் போகுமே தவிர பலன் ஒன்றும் இருக்காதே

மொழித்திறம் செய்து அடிக்கடி நான் முடுகி முயன்றாலும்:

ஒரு குருவை நாடி அவரிடம் உபதேசம் பெற்றால் அவர் சீடனது காதிலே "சிவ சிவ" "நமசிவாய" "சரவணபவ" "நாராயணா" போன்று ஏதாவது ஒரு மந்திரத்தை உபதேசிப்பார். சீடனானவன் அந்த மந்திரத்தை மனதாலோ அல்லது வாக்காலோ உச்சரிக்கவேண்டும். அதில் 54 முறை அல்லது 108 முறை என்றெல்லாம் கணக்கும் உண்டு. மந்திர உச்சாடனம் செய்யும் போது எத்தனைதரம் என்று எப்படி எண்ணுவது? அதற்காக ருத்ராட்சமோ, துளசி மாலையோ ஏதோ ஒன்றை வைத்துக்கொள்வார்கள். அந்த மணிகளின் எண்ணிக்கை அநேகமாக 54 ஆக இருக்கும். ஒருமுறை, அந்த மணிகளை ஒவ்வொன்றாகத் தள்ளி, உருட்டிக் கொண்டே, உபதேசித்த மந்திரத்தை ஜெபித்தால் 54 முறை ஜெபித்ததாகும். இரண்டு முறை அதுபோல் செய்தால் 108 முறை ஜெபித்ததாகும். இதற்கு ஜெபம் என்று பெயர். மனம் வேறு நினைவிற்குச் செல்லாமல், காலப்போக்கில் மனம் ஒன்றுபட்டுக் கரணங்கள் அடங்கும், என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இப்போது ஜபிப்பவர்களில் பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டே ஜபிப்பதைக் காணலாம். மனதைக் கட்டுபடுத்தவேண்டும் என்று, சிலர் வேக வேகமாக மந்திரத்தைச் ஜெபிக்கலாம்.

மந்திர மொழியை எவ்வளவு தான், முடுகி முடுகி அதாவது வேக வேகமாக முயற்சி செய்தாலும் இறைவனின் பெருங்கருணை முன்னே வந்து நிற்கவில்லையானால்

செழித்துறு நற்பயன் எதுவோ:

வளமான நல்ல பயன் ஒன்றும் இருக்க முடியாதே

திருவுளந்தான் இரங்கில்:

இறைவா உன்னுடைய திரு உள்ளமானது இரக்கம் கொண்டால்

சிறு துரும்பு மோர் ஐந்தொழில் செயிதிடல் சத்தியமே:

ஒரு சிறிய துரும்புகூட படைத்தல், காத்தல், துரிசு நீக்குவித்தல், பக்குவம், வருவித்தல், விளக்கம் செய்வித்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் சத்தியமாக செய்ய முடியுமே. இது சத்தியம்.

பழித்துரைப்பார் உரைக்க எலாம் பசுபதி நின் செயலே:

எள்ளி நகையாடிக் கேவலமாய் பழிக்கின்றவர்கள் உரைக்கட்டும். இறைவா எல்லாம் நினது செயல்தானே

பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசு மகிழ்ந்தருளே:

என் மீது கருணை கொண்டு என்னையும் பாடுமாறு செய்வித்து அதற்குரிய வெகுமதியும் தந்து அருள்வாயாக.

இந்தப்பாடலில் கண்களால் செய்யப்படும் இமைக்காமல் விழித்துப் பார்க்கும் பயிற்சியும், ஒரு மந்திரத்தை ஜெபிக்கின்ற சாதனையும் வேண்டிய பலனை அளிக்காது என்கின்றார் நமது வள்ளற் பெருமான்.

கிள்ளையைத் தூதா விடுத்தேன் பாங்கிமாரே
அது கேட்டு வரக்காணேன் ஐயோ பாங்கிமாரே

இந்த வரிகளின் பொருளையும் பார்ப்போம்.

கிள்ளையைத் தூதாவிடுத்தேன்:

கிள்ளை என்பது கிளி, கிளி என்ற பறவை நாம் எதைச் சொல்லுகிறோமோ, அதைத் திருப்பிச் சொல்லக்கூடிய ஆற்றல் பெற்றது. ஒரு குரு எந்த மந்திரத்தை உபதேசிக்கின்றாரோ அதைச் சீடன் திருப்பிச் சொல்லுவதால், சீடனையே, இங்கு கிளி என்று உவமானமாகச் சொல்லுகின்றார். மந்திர உச்சாடனமாகிய ஜபித்தலாகிய ஜபம் இறைவனிடம் தூதாக அனுப்பினேன்.

அது கேட்டு வரக்காணேன் ஐயோ பாங்கிமாரே:

என் தோழியர்களே அந்த மந்திர ஜபத்தால் இறைவன் வரவில்லை. அந்த மந்திரத்தைக் கேட்டு இறைவன் வரவில்லை. உண்மை நிலை இதுவானால், மந்திரம் ஜபிப்பதில் பலன் ஒன்றும் இல்லை என்பது வள்ளலார் கருத்தாகிறது.

ஏன் இவ்வாறு கருத வேண்டும்? மந்திரம் ஜபிப்பதற்கு மனம் செயல்பட வேண்டும். மனம் செயல்பட்டால் இறை அனுபவம் ஏற்படாது. மனம் கடந்த நிலையில் தான் இறை அனுபவம் ஏற்படும். எனவே ஜபம் பலனில்லை.

மரணமிலாப் பெருவாழ்வை, மனித தேகம் பெற்ற ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்பதே திருவருட் பிரகாசரின் கருத்தாகும். ஒருநாள் வைகறையில் இறைவனே வந்து வள்ளற் பெருமானை எழுப்பி "நல்யோக ஞானம் எதுவும் புரியாமல் நலிந்து போகாதே, இப்போதே எழுந்து சாதனை செய், நின் எண்ணம் பலிக்க அருள் அமுதம் உண்டு இன்புறுக" என்று கூறினானாம். (பாடல் எண்3674)

இறைவனின் கட்டளைப் படி வள்ளலார் தவம் மேற்கொண்டார். நானே தவம் புரிந்தேன், பெரிய தவம் புரிந்தேன், நான் செய்த தவம் யார் செய்தார், என்றெல்லாம் பாடியுள்ளார். அவரே அப்படியானால், நாம் தவம் செய்யாமல் எதை அனுபவிக்க முடியும்.

தவறான குருவைக் கொண்டு, தவறான சாதனை மேற்கொள்ளக்கூடாது என்பதற்காகவே வேண்டாத சாதனைகளை எடுத்துக் காட்டினார்.

இந்த உடம்பிலே ஆன்மாவானது தனித்தே இருக்கும். அதனால் இந்த உடம்பில் ஏதேனும் கலக்கம் நேரிட்டால் வெளியே போய்விடுகிறது. அந்த ஆன்மாவை உடலின் ஓர் உள் உறுப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளற் பெருமானார்.

அகப்பூ அகவுறுப்பாக்க அதற்கு அவை
அகத்தே வகுத்த அருட்பெருஞ்ஜோதி (அகவல்)

அகம் என்பது ஆன்மா. எவ்வாறெனில் நம் பெறுமானார் கடவுள் காரியப்படும் இடம் அண்டத்தில் 4, பிண்டத்தில் 4 இடங்களில் என்று விளக்குகின்றார்.

                    பிண்டத்தில்      அண்டத்தில்
அகம் என்பது         ஆன்மா          அக்கினி
அகப்புறம் என்பது           ஜீவன்           சூரியன்
புறம் என்பது          கரணங்கள்        சந்திரன்
புறப்புறம் என்பது      இந்திரியங்கள்           நட்சத்திரங்கள்

வள்ளலார் தரும் இந்த விளக்கத்தைக் கொண்டே இந்த வரிகட்குப் பொருள் காண்பது பொருத்தமாக இருக்கும்.

அகம் என்பது ஆன்மா, பூ என்பது அசை

அக உறுப்பாக்க என்பது, ஆன்மா தனித்திருக்கும். அதனால் இந்த உடம்பில் கலகம் நேரிட்ட போது ஆன்மா பிரிந்து விடுகிறது. மரணமிலா பெருவாழ்வு பெற வேண்டுமானால் ஆன்மா உடலை விட்டுப் பிரியக் கூடாது. உடலினுள் இருக்கும் இருதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற அவயங்கள் உள் உறுப்பாக இருப்பதால் அவை உடலைவிட்டு நீங்குவதில்லை. அது போல ஆன்மாவையும் இந்த உடலின் அக உறுப்புகளில் ஒன்றாக அதனையும் அக உறுப்பாக ஆக்குவதற்கு

அதற்கு              :          அதன்பொருட்டு
அவை               :          சபை - புருவ மத்தியை
அகத்தே              :          உடம்பினுள்ளே
வகுத்த               :          அமைத்த
அருட்பெருஞ்ஜோதி     :          இறைவனே

திரண்ட கருத்து யாதெனில், ஆன்மா உடலை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும். அதற்கு அதனை அக உறுப்பாக ஆக்க வேண்டும். அதற்குப் புருவ மத்தியாகிய சபையை அகத்தே இறைவன் அமைத்துள்ளான்.

இரவில் பெரிய வெள்ளம் பரவி எங்கும் தயங்கவே
    யானும் சிலரும் படகில் ஏறியே மயங்கவே
விரவில் தனித் தங்கென்னை ஒரு கல்மேட்டில் ஏற்றியே
    விண்ணில் உயர்ந்த மாடத்திருக்க விதித்தாய் போற்றியே (4966)

இரவில் - அறியாமை என்னும் இருளில்

பெரிய வெள்ளம் - மரணம், பிரளயமே பெரிய வெள்ளம்

பரவி எங்கும் தயங்கவே - எல்லா ஜீவர்களிடத்தும் பரவி எங்கும் அதுவே நிற்க (அதைத் தவர்ப்பதற்காக)

யானும் சிலரும் - நானும் என்னைப்போல் சிலரும்

படகில் ஏறியே - படகு என்பது கண்ணைக்குறிக்கும் பரிபாஷை - படகு கண்ணைப்போல் அமைந்திருப்பதைக் கவனிக்கவும். சைவ சமயத்தில் சாகாக் கல்வி ஏக தேசம் சொல்லியிருக்கிறது என்பார் நம்பெருமானார். அந்தச் சைவ சமயத்தில் கண்களைக் கொண்டு செய்யும் சாதனை, சட்சு தீட்சை என வழங்கப்பட்டு வருகிறது. அதனை யானும் சிலரும் பழகினோம் என்பதையே படகில் ஏறி என்கிறார். அவ்வாறு பழகி,

மயங்கவே - இது மரணத்தைத் தவிர்க்குமா, மரணமிலாப் பெரு வாழ்வை அளிக்குமா என்று ஐயப்பாட்டில் செய்வதறியாது மயங்கி நிற்கவே

விரவில் தனித்து அங்கு என்னை - விரைவாக என்னை அங்கு தனியாக அழைத்து

ஒரு கல்மேட்டில் ஏற்றியே - கல் மேடு என்பது நெற்றிக்கண் / புருவ மத்தி / லலாடம் - என்னை லலாடஸ்தானமாகிய புருவ மத்தியில் ஏற்றியே

விண்ணில் உயர்ந்த மாடத்து - விண் என்பது அகாயம். பிண்டத்தில் ஆகாயம் புருவ மத்தி என்பார். மாடம் என்பது மூன்று கண்களையும் இணைந்த முச்சந்தியாகும். பிண்டத்தில் ஆகாயமாகிய உயர்ந்த அனுபவத்தைத் தரக் கூடிய புருவ மத்தியில்

இருக்க விதித்தாய் போற்றியே - நின்று அனுபவிக்கச் செய்தாய் உன் புகழ் வாழி.

மரணத்தைத் தடுக்க வல்லது புருவ மத்தியில் மனதை நிறுத்தித் தவம் செய்வதே என்றும் இதுவே சரியான நெறி என்றும் விளக்குவது அருமை.

ஓடத்தில் நின்று ஒரு மாடத்தில் ஏற்றி மெய்
ஊடத்தைக் காட்டினீர் வாரீர்
வேடத்தைப் பூட்டினீர் வாரீர் (4451)

ஓடம் என்பது பரி பாஷை. ஆற்றிலோ, கடலிலோ செலுத்தும் ஓடத்தை எண்ணிவிடக்கூடாது. இங்கு ஓடம் என்பது கண்களையே குறிக்கும். அதே போல் மாடம் என்பதும் நமது இரண்டுக் கண்களுடன் நெற்றிக்கண்ணையும் இணைக்க கிடைக்கும் முக்கோண வடிவம். அதாவது புருவ மத்தி. இதைத்தான் புறவழிபாடாக வீடுகளிலும் கோயில்களிலும் மாடம் அமைத்து அங்கே அகல் விளக்கு ஏற்றி வைத்து வழிபடுவது.

ஓடத்தில் நின்று - கண்களால் செய்யக்கூடிய பயிற்சியினை செய்தபோது அதனை தவிர்த்து அதிலிருந்து

ஒரு மாடத்தில் ஏற்றி - என்னைப் புருவ மத்தியில் பயிற்சி செய்ய ஏற்றுவித்து

மெய் ஊடகத்தைக் காட்டினீர் வாரீர் - மெய்யூடு + அத்தைக் காட்டினீர். உடம்பினுள்ளே முடிவான அனுபவத்தை (அத்து = எல்லை, முடிவு) காட்டினீரே வாரீர்.

வேடத்தைப் பூட்டினீர் வாரீர் - வேடம் என்பது ஒருவர் மற்றொருவராகக் காட்சி அளிப்பது. அதாவது 'நான் இருக்கும் இடத்தில் (புருவ மத்தியில்) இறைவன் வந்து அமர்ந்தான்' என்பார் நம் பெருமானார். இந்நிலையில் இறைவனே நம்பெருமானாரின் வேடத்தை பூண்டதாக பொருள், எம்வேடத்தை பூட்டியவரே வாரீர்.

மேலும் நிறைய பாடல்கள் நம்பெருமானார் சாதனை செய்வது பற்றி பாடியுள்ளார்கள். புறக்கண்களால் செய்யக்கூடிய சாதனை சுத்த சன்மார்க்கத்தில் இல்லை.

நமது அகக்கண்ணை (புருவ மத்தி) திறக்க தேவையான உஷ்ணம், மற்ற சாதனங்கள் மூலம் கிடைப்பதை விட மிகவும் எளிதாக உடலில் எந்தவித வலியும் இன்றி ஆயிரம் மடங்கு அதிக உஷ்ணத்தை, இறைவனை நினைப்பதினாலும், பாடுவதிலும் கிடைக்கும், மேலும் அகக்கண்ணைத் திறக்க ஜீவகாருண்யம், தயவு என்னும் சாதனம் தேவை என்கின்றார் நம்பெருமானார். இதன் விரிவு தான் சுத்த சன்மார்க்கம். இக்கருத்தினை அடிகோலியே அனைத்து சுத்த சன்மார்க்க சங்கங்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டுமாய் வள்ளல் அடி பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.

கற்பூரம் மணக்கின்ற தென்னுடம்பு முழுவதும்
    கணவர்திரு மேனியிலே கலந்தமணம் அதுதான்
இற்பூத மணம்போலே மறைவதன்று கண்டாய்
    இயற்கைமணம் துரியநிறை இறைவடிவத் துளதே
பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகர்
    புண்ணியனார் திருவடிவில் நண்ணியவா றதுவே
நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி
    நான்கண்டேன் நான்புணர்ந்தேன் நான்அதுஆ னேனே.

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை       அருட்பெருஞ்ஜோதி

 





















  

   
  




8 comments:

  1. Sutha Sanmargam manithanai theivamaga nilaipera seiyum vazhi

    ReplyDelete
  2. மெளலி சந்த்ரு ஐயா அவர்களுக்கு வணக்கம், தங்களது ஒப்புமைக்கு நன்றி. வழிதவறாமல் செல்வோம்.

    ReplyDelete
  3. பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இல்லாமல் பிறப்பின் முக்கியத்துவம் அறிய பெற வேண்டும், என்பதே இதன் பொருள்.

    ReplyDelete
    Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete
  4. சிறந்த அசாரியரை கொண்டு நடு கண் பூட்டை திறந்து கொள்வது நலம் இந்த வாசகம் உரைநடை பகுதியில் எந்த பக்கத்தில் (எந்த தலைப்பில்) உள்ளது அய்யா

    ReplyDelete
    Replies
    1. பக்கம் 418 - ஞான சித்தியும் ஒளிநிலையும் என்ற தலைப்பில் உள்ளது ஐயா.

      ஆதலால், நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம். ஏனெனில், மேற்படி நெற்றிக் கண்ணைத் திறக்கப்பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல்போல் தெரியும்.

      Delete
  5. Replies
    1. அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா.

      Delete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.