Friday, March 28, 2014

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

                          சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம்!



சமரசம்-என்பது, இவ்வுலகில் உள்ள வெவ்வேறு வகைப்பட்ட மதங்களையும், மார்க்கங்களையும் பின்பற்றும் அன்பர்கள், இறைநிலை தெரிந்து தாங்கள் இதுவரை பின்பற்றிவந்த மதக்கொள்கையினை அறவே விட்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே உளர் என்ற, ஓர்இறைக்கொள்கையில், சுத்த சன்மார்க்கத்தில் ஒன்றுபடுவதாகும்.

சுத்தம்-என்பது, தூய்மை, ஒன்றுமில்லாமை எனப்பொருள்படும். ஆகையால் மற்ற மதக்கொள்கைகள், வழிபாட்டு முறைகள், சின்னங்கள், குறியீடுகள், உருவங்கள், விழாக்கள் போன்றவைகளை, சுத்த சன்மார்க்கத்தின்மூலம் நீக்கி சுத்தம் செய்வதைக் குறிக்கும்.

சன்மார்க்கம்-என்பது, சத்தான பாதை எனப்பொருள்படும். இங்கு 'சத்து' என்பது, மானிடரின் மரணத்தை தடுக்கக்கூடிய சத்தினை அளிக்கக்கூடியதாகவும், அச்சத்தினை பெறும் வழிமுறையினை, தயவு வழிநின்று, வகுத்தளிக்கும்படியாகவும் சுத்த சன்மார்க்கம் விளங்குகின்றது.

சத்தியம்-என்பது, காலத்தாலும், மாயையாலும், வேறு எதனாலும் மாற்றமுடியாத, அழிக்கமுடியாத ஆகாயம் போன்று யாருக்கும் பிடிபடாத, எவற்றுள்ளும் இருக்கின்ற உண்மை எனப்பொருள்படும். அப்படிப்பட்ட உண்மையினையே சுத்த சன்மார்க்கம் பெற்றிருக்கிறது.

சங்கம்-என்பது, மேற்கண்ட சமரசத்தையும், சுத்தத்தையும், சன்மார்க்கத்தையும், சத்தியத்தையும் ஒருங்கே தமது வாழ்வில் கடைபிடித்து நீடுவாழ அடிகோளும் மானிடர்கள் ஒன்றுகூடுமிடம். மேற்கண்டவைகள் குறித்து சத்விசாரம் செய்யுமிடமாக சங்கம் விளங்கி சுத்த சன்மார்க்க முடிபை பெற ஏதுவாக அமைந்துள்ளது.

அன்பர்களே! நமக்கு முதலில் சமரசம் வரவேண்டும், அடுத்து சுத்தம் வரவேண்டும், அதற்கடுத்து சன்மார்க்கம் வரவேண்டும், அதன்பிறகு சத்தியம் வரவேண்டும், இவை நான்கையும் கடந்தப்பிறகுதான் சங்கத்திற்கே வரவேண்டும் என்பதை நம்பெருமானார் எவ்வளவு அற்புதமாக படிநிலை வைத்து தமது சங்கத்திற்கு பெயர் வைத்துள்ளார் என்பதை எண்ணும்போது மெய்சிலிர்க்கிறது இல்லையா!

ஆனால், நாம் முதல்படியாக சங்கத்திற்கு சென்று அமர்ந்துவிடுகிறோம். நமக்குள் சமரசம் இருக்கின்றதா? சுத்தம் இருக்கின்றதா? சன்மார்க்கம் இருக்கின்றதா? சத்தியம் இருக்கின்றதா? என்றால் இல்லவே இல்லை என்பதே பதில். அதனால்தான் பல சங்கங்கங்களின் நடைமுறைகளில் சமரசம் இல்லை, சுத்தம் அறவே இல்லை, பிறகு எப்படி அங்கு சன்மார்க்கம் விளங்கும்? சத்தியம் நிலைபெறும்?

எனவே சங்கத்திற்கு நாம் வருவதற்குமுன்னர், நம்பெருமானார் சொன்ன மேற்கண்ட முதல் நான்கு படிகளை கடந்தப்பின்னர் வருகைபுரிந்தால் மட்டுமே அது நம்மை இறவா நிலைக்கு இட்டுச்செல்லும். அச்சங்கத்தில் நடுவேதான் நம்பெருமானும் கூடி குலாவுவார். அச்சங்கத்தைத்தான் நம்பெருமானார் நடத்தி முன்கொண்டுச்செல்வார் என்பதனை நாம் உணர்ந்து தெளிவோம்.

இக்கொள்கையினை, தங்களது ஊழால் கடைபிடிக்க முடியாநிலையில்தான் 99 விழுக்காடு மக்கள் இன்று இவ்வுலகில் உள்ளனர். அவர்களெல்லாம் அவரவர் மதங்களை மார்க்கங்களை கடைபிடித்து பிறகு எப்போது உண்மைநிலை தெரியவருகிறதோ, அதாவது நமது மத மார்க்கங்கள் பொய் எனத்தெரியவருகிறதோ, அப்போது சமரசத்தை கடைபிடித்து படிப்படியாக முன்னேற வேண்டும் என்பதே நம்பெருமானாரின் நிலைபாடு.

எனவே சமரசம் இல்லாமல் தொடங்கப்படும் சங்கங்கள் யாவும் வீணே. மேலும் அவை நம்பெருமானாரின் மார்க்கத்தை சத்து இல்லாமல் சொத்தை யாக்கிவிடும். சங்கங்களுக்கு மக்கள் கூட்டம் தேவையில்லை, சமரச நிலையில் ஒருவர் வந்தாலும், அவர் வெகுசீக்கிரம் சுத்தமடைந்து சன்மார்க்கத்தையும், சத்திய நிலையினையும் அடைந்தால் அதுவே, நாம் நம்பெருமானாரின் கொள்கைக்கு நன்றி செலுத்துவதாக அமையும். எனவே சாகாமலிருக்க சமரசத்தை நாடுவோம், சமரசத்தை சுத்தத்தில் காண்போம், சுத்தத்தை சன்மார்க்கத்தில் நிலைநிறுத்துவோம், சன்மார்க்கத்தை சத்தியத்தில் தொடர்வோம், சத்தியத்தை சங்கத்தின்மூலம் பரப்புவோம். அதுவே நம்பெருமானார் உலகுக்கு வகுத்தளித்த "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" ஆகும். இவ்வாறே நாம், நம்பெருமானார் துவக்கிய "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை" யினையும், "சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை" யினையும் காணவேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

அருட்பெருஞ்ஜோதி            அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை            அருட்பெருஞ்ஜோதி

2 comments:

  1. உலகம் எல்லாம் வள்ளலார் வழிவகுத்து தந்த சுத்த சன்மார்க்க கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மரணத்தை வென்று இறைநிலையை அடைய வேண்டும்.இதுவே ஆண்டவரின் விருப்பமாகும்...ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேலு

    ReplyDelete
  2. ஆன்மநேயர் கதிர்வேலு ஐயா அவர்களுக்கு வணக்கம், தங்கள் கருத்து நன்று.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.