Monday, March 3, 2014

சதாவதானி செய்குதம்பிப் பாவலர்

சதாவதானி செய்குதம்பிப் பாவலர்


சென்னையில் வள்ளலார் வாழ்ந்த காலத்தில் அருட்பா - மருட்பா சொற்போர்கள் மக்களை ஈர்த்தன. ஒரு சாரார் வள்ளலார் பாடியவை அருட்பா இல்லை. மருட்பா என்று வாதிட்டனர். வள்ளலாரின் பக்தர்கள் அதை மறுத்து, சுவாமிகள் பாடியது அருட்பாவேதான் என்று எதிர் வாதமிட்டனர். அருட்பா கட்சியில் மறைமலையடிகள், தொழுவூர் வேலாயுத முதலியார் (இவர் வள்ளலாரின் மாணவர்) ஆகியோர் இருந்தனர். மருட்பா கட்சியில் பெரும்புலவர் கதிர்வேல் பிள்ளையும் அவர் மாணாக்கர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. வும் இருந்தனர். (கதிர்வேல்பிள்ளை காலமாகியப்பின் திரு.வி.க. பின்னர் அருட்பா கட்சிக்கு மாறிவிடுகிறார்)

ஒரு மன்றத்தில் நடைபெற்ற இந்த சொற்போரில் ஒரு முறை புலவர் கதிர்வேல் பிள்ளை ஆரவாரமாக,

'நாதர் முடி மேலிருக்கும் வெண்ணிலாவே - அங்கே
  நாணும் வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே...'

என்று வள்ளலார் பாடியதைப் பழித்தும் இழித்தும் பேசினார்.

பக்தர்கள் ஆண்டவரின் பாதார விந்தைகளையே அடைய விரும்புவர், ஆனால் வள்ளலார் இம்மரபுக்கு முரணாக ஆண்டவன் முடிமீது சென்று அமர ஆசைப்படுகின்றார். இது ஆணவம் அல்லவா? இது அடுக்குமா? இது போன்ற பாடல்களை எப்படி அருட்பா என்று கூறமுடியும்? வள்ளலார் மருட்சியுற்று இப்படிப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். எனவே அவை மருட்பாவே என்ற ஆவேசமாகப் பேசி முடித்தார். செய்குத்தம்பிப் பாவலரால் இந்தப் பேச்சைச் சகித்துக் கொள்ள முடியவில்லை. உடனே விறுவிறுவென்று மேடைக்குச் சென்றார். தலைவரின் அனுமதியை வேண்டி பெற்றபின் இப்படி பேசினார்.

புலவரின் (கதிர்வேல் பிள்ளை) ஆழ்ந்த புலமைக்கும் சொல்லாற்றலுக்கும் தலை வணங்குகின்றேன். அதே சமயம் அவருடைய கருத்திலிருந்து நான் மாறுபடுகிறேன். பிள்ளையவர்கள் எடுத்துக்காட்டிய பாடலில் 'நாதர் முடி' என்பது அச்சுப்பிழையாக இருக்க வேண்டும். வள்ளலார் 'நாத முடி' என்றுதானே பாடியிருக்கிறார்.

நாதம் என்பதற்குப் பிரணவம் என்பது பொருந்தும். அந்த நாதத்திற்கு மேல் சந்திரமண்டலம் இருக்கிறது, அந்தச் சந்திரமண்டலத்தில் போய் அமர்ந்திருக்க தாம் விரும்புவதாக வள்ளலார் கூறுகிறார். இதில் என்ன பிழை இருக்க முடியும்?

நாதம் முடிமேல் என்பது சைவசித்தாந்தம் கூறும் 36 தத்துவங்களில் நாத தத்துவத்தின் மேல் நிலையைக் குறிக்கிறது. அந்த மேல் நிலை பரவெளி எனப்படும் அதை 'சிவானந்தப் பெருவெளி' என்றும் கூறுவர், தாம் அப்பெருநிலையை அடைய வேண்டுமென்பதையே 'நாத முடிமேல் அங்கு நானும் வர வேன்டுகிறேன்' என்று பாடினார்.

பிள்ளையவர்கள் குறிப்பிட்டது திருஅருட்பா ஆகும். திருமுறையில் வெண்ணிலாவை முன்னிலைப்படுத்திப் பாடும் பாடலில் உள்ள இரண்டாவது கண்ணி இந்தக் கண்ணியாகும். இந்தக்கண்ணியின் முன் பின் கண்ணிகளையும் நோக்கிப் பொருள் கொள்ள வேண்டும். அந்தக் கண்ணியில்,

'சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே - நானும்
  தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே'

என்றார், இதில் 'தாழ்ந்து விழ வேண்டுகின்றேன்' என வேண்டியது வள்ளலாரின் பணிவைத்தானே காட்டுகிறது. அவர் ஒன்றும் ஆணவத்தால் தடுமாறவில்லை என்று பேசி முடித்தார். புலவர் கதிர்வேல் பிள்ளையின் முகத்தில் அசடு வழிந்தது. வள்ளலாரின் அன்பர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. கதிர்வேல் பிள்ளையின் எதிர்வேல் பிள்ளை என அவர்கள் செய்குத்தம்பிப் பாவலருக்கு பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். சதாவதானி செய்குதம்பிப் பாவலர் பிறப்பால் இஸ்லாமியரான போதும் வள்ளலாரின் பாடல்களில் மிகப்பெரும் ஈடுபாடு உடையவர் என்பதை அன்று தன் பேச்சால் நிறுவினார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.