Tuesday, April 4, 2017

பரஞ்சோதி மகான்


காரணப்பட்டு ச.மு.க. அருள் நிலையம் வெளியிடும் “சன்மார்க்க விவேக விருத்தி” மாத மின்னிதழில் ஏப்ரல்-2017 ஆம் மாதம் வெளியானது…

பரஞ்சோதி மகான்

நமது பரஞ்சோதி மகான் அவர்கள், இந்திய நாட்டின் தென்பகுதியில் "காண்ஸாபுரம்" என்ற ஊரில் 2-5-1900-ஆம் ஆண்டு இரவு 8.30 மணியளவில் பிறந்தார்கள்.

ஞான உதயம்
தாம் வசித்து வந்த ஊரில் 11.11.1911-ஆம் தேதி பகல் 11.00 மணிக்கு மேலை நாட்டு வல்லரசர் ஒருவரின் முடிசூட்டு விழா வைபவம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவதைக் கண்ணுற்ற போது, நமது குருபிரான் அவர்கள் இதயத்தில், அரசனைக் கடந்த பெரியவனாகிய கடவுளைக் காணவேண்டும் என்ற ஏக்கம் உதயமாயிற்று அவ்வேகத்தின் விளைவே கடவுளின்பால் காதலாகி, அக்காதலின் வேகவிவேகமே "பரஞ்சோதி" மகானாக விளைந்ததாகும்.

குருபிரான் அவர்கள் 1919-ஆம் வருடத்திலேயே தனது இளமையில் பணியாளாக பர்மா சென்று விட்டபடியால் தனது தாய்மொழி போல் பர்மா மொழியையே பேசவும் எழுதவும் பழக வேண்டியதாயிற்று. 11.11.1911-ல் ஏற்பட்ட ஏக்கத்தின் காரணமாகவே தனது வாழ்வோடு பற்பல யோக அப்பியாசங்களிடனும், மந்திர தந்திர ஜப தபங்களுடனும் மிக உருக்க நீர் வடித்து அரசனை கடந்த கடவுளை காணவேண்டும் என்ற தீவிரக் காதலால் பற்பல முயற்சிகளில் ஈடுபட்டு, தவ புனித வாழ்வு வாழ்ந்து வந்தார்கள். அதே ஊரில் ஆலயம் ஒன்றில் வசித்து வந்த பெரியவர் ஒருவர் தமது குருபிரானுடைய நல்லெண்ணத்தையும் ஏக்கத்தையும் அவரது விடாமுயற்சியையும் நன்கு கவனித்து வந்தார். விடிவெள்ளி தோன்றும் முன்பாகவே நமது குருபிரான் ஆலயத்திற்கு வருவதையும், வழிபாடுகள் செய்வதில் மிகுந்த உருக்கமிருப்பதையும், அவ்வாலயத்திலேயே வசித்து வந்த அவர் நன்கு கவனிக்க ஒரு சந்தர்ப்பமாக விளங்கிற்று.

எனவே அந்தப் பெரியவர் நமது மகானை வலியநண்பராக்கிக் கொண்டார். நட்பு முதிர்ந்து இரங்கூன் புதுக்காண் ரோட்டின் அருகாமையில் உள்ள பழைய குதிரை மைதானத்தில் 07.11.1938-ஆம் தேதி 11.00 மணி 11 நிமிடத்திற்கு அந்த பெரியவர் மூலம் நமது மகான் உபதேசம் பெற்றார்கள். குருபிரான் அவர்கள் சுமார் 21 ஆண்டுகளாக உருக்க நீர் வடித்துத் தேடிய பொருளை அடையும் மார்க்கம் கிடைத்துவிட்ட ஊக்க வேக விவேகத்தின் விளைவால் "பரஞ்சோதி" என்ற தன்னிலையாகிய பேரின்ப நிலை அடைந்தார்கள்.

நமது குருபிரானைக் கண்ணுற்ற அப்பெரியவர் மிக்க மகிழ்ந்து சிலாகித்தார். 07.07.1938 முதல் தமக்கு தெரிந்த இந்த உபதேசத்தை பிறருக்கும் வழங்கலாம் என்ற அனுமதியையும் வழங்கினார். 08.07.1938-ல் இரங்கூன் டவுனில் சென்று கொண்டிருக்கும் சமயம் ஒரு பெரியவர் மகானைப் பார்த்து, தாங்கள் ஒரு பெரிய குருவைப் போல் விளங்குகிறீர்கள் என்று கூறினார். அன்றிலிருந்து தம் தொழில், மதம் யாவும் விட்டுவிட்டுத் தாம் ஒரு குருவாக வாழ்வது என முடிவெடுத்துக் கொண்டார்கள். அந்நாள் முதல் தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்ற நற்கருணையினால், உலக மக்கள் அனைவருக்கும் இந்த "குண்டலினி" உபதேசத்தை வாரி வாரி வள்ளலாக வழங்கினார்கள்.

ஜெகத் மகாகுரு தத்துவ தவஞானி ஞானவள்ளல் பரஞ்சோதி மகான் அவர்கள் 1939-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா வந்தார்கள். 07.01.1938ந் தேதி 11.00 மணி 11 நிமிடத்திற்கு மலர்ந்த பரஞ்சோதி என்ற மலர், ஞானச் செல்வத்தால் உலக மக்களின் அறிவிற்கு எட்டாத அளவிற்கு உயர்ந்தும், கருணை என்ற அருட்செல்வத்தால் இப்பூவுலகெங்கும் அருள் மணம் கமழ்ந்து, கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் அவ்வருள் மணம் வீசிப்பரவி, பரிசுத்தமாகப் பிரகாசிப்பதற்கு காரணப் புருஷராக நமது ஜெகத்குரு திகழ்ந்து வந்தார்கள். 1944-ஆம் ஆண்டு முதல் இந்திய நாடு மட்டுமின்றி மேலை நாடுகள் முழுவதும், தாம் ஒருவராக தனித்தே சென்று எல்லா நாடுகளிலும், ஆங்காங்கே உள்ள சீடர்களைக் கொண்டு அந்தந்த நாடுகளிலும், நகரங்களிலும் சபைகளை ஏற்படுத்தியுள்ளார்கள்.

பர்மா மொழியை தாய்மொழி போல் பேசியும் எழுதியும் பழகியிருந்த தமது குருபிரான் ஞானபீடம் ஏறியதும் "நான் - கடவுள்" என்ற தத்துவ தவஞான நீதிநூலை தமிழில் அருள் பாலித்துள்ளார்கள். உலகமக்கள் அனைவருக்கும் அவரவர்களின் தகுதிக்கேற்பச் சமாதானமாக வாழ வேண்டியதற்குள்ள உணவு, உறக்கம், உடை, தொழில், விவசாயம், அரசியல், விஞ்ஞானம், பேரின்பநிலை முதலியவற்றிற்குச் சரியான விளக்கங்களை எல்லா நாட்டிற்கும் பொதுவாக எளிமையாக விளக்கிக் கூறுவதற்காக "உலக சமாதான ஆலயம்" சென்னையில் 20.07.1946-ல் குருபிரானால் தொடங்கப்பட்டது.

எங்கும் பூரணமான இருட்டில் சூனியத்தில் ஒன்றுமில்லாது ஓர் அணுவாயிருந்த கடவுள் என்ற அனாதியாயுள்ள ஆதி, நான் என்ற துணிகரமாகி வியாபகத்தில் நினைப்பாகி வேகத்தில் சப்தமாகி, உருவத்தில் நெருப்பாகி என்றென்றைக்கும் குறைந்திடாப் பெருக்கம் கொண்ட அந்நெருப்பின் பொறிகளே அணுக்களாகி எங்கும் நிறைந்த இருட்டில் அவ்வணுக்களே வேகமாக பரவி அவ்வேகங்குறைந்ததும், ஆங்காங்கு அவவணுக்களின் இயல்பால் ஒன்றுசேர்ந்து அச்சேர்க்கையால் சுழலுதல், விலகுதல், உருளுதல், புரளுதல் அடங்கிய இழுக்குஞ்சக்தியுள்ள நட்சத்திர கிரக பூமிகளாகி அணுக்களே அணுக்களுக்கு வாகனமும் உணவுமாகி, அதனால் உயிர்களின் வளர்தல், நகர்தல், நடை, ஓட்டம் யாவுமாகி தாவரம் மற்ற உருவங்கள் உட்பட ஊற்றுணர்ச்சியும், தோற்றமும் உள்ள சீவராசிகளாகி, மனிதர்களாகி சுவை, நோவு, இன்பம் இவைகளில் சூக்குமமாகி, அம்மனிதர்களின் அனேக காரியங்களால் உள்ள தொழில் அனுபவகாரணத்தால் பேச்சாலும், நுண்ணறிவாலும், அறிவு உயர்வாகி அதனால் பக்தியோக ஆராய்ச்சிகளாகி, முடிவில் தன்னைத்தான் அறிந்து, இவைகள் யாவும் தன் வேறுபாடுடைய பரிணாம வேகவிளைவாக இருப்பதை விளக்கமாக அறிந்துகொள்வதே ஞானமாகும். இதுவே பிரபஞ்சத் தத்துவம்.

எப்பொருளையும் எடுத்து ஆராய்ந்தீர்களானால், இருள், துணிவு, நினைவு, ஓசை, ஒளி, அணுக்கள் இவை யாவும் பிரிக்கமுடியாது ஒன்று சேர்ந்து இருப்பதை அறியலாம். இதை அறியாதபோது கடவுள் ஒருவன் தனியாக இருக்கின்றான் என்று தேடவும் சொல்லவும் வேண்டியதாக இருந்தது.

கடவுளின் பெரிய அம்சம் - 9

1.   நான் என்ற துணிவு
2.   நினைப்பு அல்லது வியாபகம்
3.   வேகமாகிய நாதசப்தம்
4.   நெருப்பு அல்லது சோதி
5.   அணுக்களாகிய வெட்டவெளியான ஆகாயம்
6.   நீராகிய தண்ணீர்
7.   மண்ணாகிய பூமி
8.   காற்று
9.   நெருப்பு

கடவுளின் சிறிய அம்சம் - 5

1.   தாவரம்
2.   நீர்வாழ்வன
3.   ஊர்வன
4.   பறப்பன
5.   நடப்பன

உணர்ச்சி அம்சம் - 6

1.   பரிசம்
2.   சுவை
3.   நாற்றம்
4.   கேள்வி
5.   பார்வை
6.   யூகம்


பொன்மொழிகள்

  • ஈசனே மனிதனாகிறான். மனிதனான ஈசனே தன் உயர்ஞானத்தால் தன்னை அறிவான்.
  • புகழை நம்பி அறிவை அடிமைப்படுத்தாதீர்கள். துன்பத்திற்கு அஞ்சி உண்மையை விட்டுவிடாதீர்கள்.
  • ஆயிரம் ஆண்டு வணக்கத்தை விட அரைநிமிட ஆராய்ச்சியே மேல்.
  • அனுபவம் முந்தியது வேதம் பிந்தியது.
  • பெற்றவரும் தாயல்ல! பாலூட்டியவடும் தாயல்ல! வளர்த்தவரும் தாயல்ல! அறிவை அறிவித்தவரே தாய்!
  • பற்றற்ற துணிவாய்ப் பற்றற்ற நிலையில் பற்றற்று இருப்பதுவே முக்தி
  • நாவில் ஒருசிறு நோய் இருந்தபோது நல்லருசி அறியாதது போல், பிறர்மேல் வேறுபாடு சிறிதளவு இருந்தாலும் பேரறறிவுக்காளாக மாட்டார்கள்.
  • குருவுக்கு செய்த தொண்டும் சபைக்குச் செய்த கடமையும் கடனாகாது. துரிதம் கொண்டாவது, தூரம் சென்றாவது மக்களின் துன்பங்களை நிவர்த்திக்க முற்படுவதே துறவறத்தின் செயலாகும்.
  • சுருதி, நூல், சாஸ்திர, வேதமதங்களெல்லாம் சுருக்கிசொல்லொன்றில் அடக்கிச் சுழிமுனையும் கடத்தி சும்மாயிருக்கும் சுகமே உணர்வு.
  • ஞானத்தின் மூதாதை துன்பம்,ஞானத்தின் பரம்பரை பொறுமை, ஞானத்தின் நண்பன் அனுபவம்.
  • நடுப்பகலும் நடுநிசியும் நெடுநேரம் நிலைப்பதில்லை. அதுபோல் உலகத்தின் நெருக்கடியும் மனிதர்களின் துன்பங்களும் நெடுங்காலம் நிலைத்திருக்கா.
  • வறுமையில் பொறுமையுள்ளோர் வல்லவராவார்.
  • இருக்கும் இடத்தில் அழுக்கும், உடுத்தும் உடையின் அழுக்கும், பரு உடலின் மேல் அழுக்கும், உள்ளத்தின் மன அழுக்கும் இல்லாதிருந்தால் அறிவாளியாவர்.
  • உருக்கமும் உணர்தலும் விசுவாசமும் உணர்வும் இருந்தால், தொல்லையும் நோயும் தானே விலகும்.
  • எந்த இடையூறு இன்னல்களையும் அனுபவத்தில் இன்பமாக கருதுகிறவன் எவனோ, அவன் வரும் எதிர்கால உலகில் கோடானுகோடி இன்னல்களைத் தீர்க்கக்கூடிய வன்மை உடையவனாகப் பிரகாசிப்பான்.
  • மயக்கம் தெளியாதவர்கள் - பக்தர்கள், யோகிகள், சித்தர்கள்.
  • மயக்கம் தெளிந்தவர்கள் - அறிவாளிகள், நாஸ்திகர்கள், முக்தர்கள்.
  • எண்ணம், செயல், சொல் சீராய் இருப்பாரே ஜெகதீசன்.
  • கனியைப் பேன்றது ஆன்மா; வாசனையைப் பேன்றது அன்பு; அழகைப் பேன்றது அருள்; சுவையைப் பேன்றது அறிவு.
  • உடலை நடத்துவது ஞாபகம், உடலில் உணர்வது அறிவு, உடலாய் இருப்பது நினைப்பு, நினைப்பாய் உள்ளது நான்.
  • இல்லறமில்லாத துறவறமில்லை; துறவறமில்லாத இல்லறமில்லை.

1 comment:

  1. கற்பனைகளை ஒழித்து உண்மையை நோக்கி அழைத்துச்செல்லும் கருத்து.முடிவில் இதில் எஞ்ஞியுள்ள கற்பனையும் ஒழிந்து நினைவுள்ள காலம் வரையில் நாம் நிலைத்திருப்போம்.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.