Sunday, November 19, 2017

இந்துமதம் எங்கே போகின்றது…? தொடர்-15

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் வள்ளற்பெருமானின் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் “நவம்பர் – 2017” வெளியானவை.

          இந்துமதம் எங்கே போகின்றது…? தொடர்-15

(அக்னிஹோத்தரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்)

அவன் அதற்கு பதில் சொல்கிறான்…

          “நீ பெண் என்பதால் தெளிவாகவே இருக்கிறாய். நான் ஈட்டும் பொருள் அனைத்தையும் உன்னிடம் தான் ஒப்படைப்பேன். அதே நேரம்… இந்த்ரிய சந்தோசத்தை உன்னுடன்தான் அனுபவிக்க வேண்டும் என்று நீ என்னை கட்டளையிடக்கூடாது. நீ வேண்டுமானால் அதற்கான அழகோடு எப்போதும் இரு. உன் அழகை நீ காப்பாற்றி வைத்திருந்தால் நான் உன்னை விட்டு விலகிச் செல்ல வேண்டிய சந்தர்ப்பம் நேராது…” என்கிறான் அவன்.

          இதைத் தான்…

          “உதுத்தரம் மாரோஹந்தி முர்த்தானம் பத்யு ராரோஹ” கல்யாணம் செய்து போன பெண்… கணவனது தலையில் ஏறி உட்கார்ந்து கொள்ள வேண்டும். அதாவது… அவனது சிந்தனைகளில் எல்லாம் இவளே நிரம்பி இருக்க வேண்டும். அவனது மூளையில் இவளே முழுவதும் இருக்க வேண்டும். அப்போது அவன் பிற பெண்ணை நாடிச் செல்ல மாட்டன் அல்லவா?... என்கின்றது வேதம்.

          கணவன் மூளைக்குள் தன்னை நிரப்ப வேண்டும் என்றால் இவள் எப்படி குடும்பம் நடத்த வேண்டும்?

          “ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்
           தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீ
          அனுமிருத்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்
          சம்மார்ஜன அனுரே பாப்யாம்
          க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆத்மானும் பூஷ்ஹேஸ்யதா”

          கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உனக்கு தெய்வம். அவனை விட்டுவிட்டு வெளியே நீ எங்கேயும் போகக்கூடாது. வென்னீர் போடு, கால் பிடி, கைபிடி, தூங்கினால் விசிறி விடு இப்படி செய்வதால் தான் அவன் மூளையில் நீ குடியேற முடியும்.

          சரியப்பா… அவள் இப்படித்தான் வாழ்கிறாள்… கணவனின் தலையில் ஏறி உட்கார்ந்திருக்கிறாள்… சந்தோசமாக வாழ்க்கை போகிறது. ஒரு நாள்.. வயதானதாலோ… தேக பிரச்சனைகளாலோ கணவன் தலை சாய்ந்து விடுகிறான். அதாவது மரணம் ஸம்பவிக்கிறது. குடும்பமே அழுகிறது. குழந்தைகள் ஒன்றும் தெரியாமல் தன் பிதாவின் மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தன் மேல் பிரேமம் வைத்தவன்… இப்படி பிரேதமாக கிடக்கிறானே என அந்த இளம்பெண் கண்களிலிருந்து நதிகளை பிரசவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்… அவளுக்கு என்ன தேவை?


          ஆறுதல் மொழிகள் தானே. “கவலைப்படாதேம்மா… அவன் விதி அவனை கொண்டு போய் விட்டது. உன்னை நம்பி குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம்… அவர்களை நீ தான் நல்லபடியாக வளர்க்க வேண்டும். அழு… அழுதுவிட்டு உன் குழந்தைகளோடு சந்தோசமாக இரு…”

          இப்படித்தானே சொல்ல வேண்டும்?

          அவளுக்கு வேதம் ஒரு மொழியை வழங்குகிறது பாருங்கள்.

          “பத்யுர் ஜனித்வம் அபி சம்ப பூவ…”
          இப்படி தொடங்கும் மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம்?...

          “உன் ஆம்படையான் இறந்து விட்டான். பாவம்… இனி உன்னை யார் காப்பாற்றுவது?... இனி நீ அவன் வீட்டிலேயே இருந்தால் பாரம் தானே?... சுமைதானே?... உன்னை ஆம்படையான் குடும்பத்தினர் எப்படி தாங்குவார்கள்?... அதனால்..

          ஆமாம்மா… புகுந்த வீட்டுக்கு பாரமாக கண்ணெல்லாம் ஈரமாக இனிமேலும் நீ வாழவேண்டுமா? அதனால் உன் கணவனோடே நீயும் போய்விடேன். அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்துவிடுகின்றோம் சரியா? அவளாக பற்றவைத்துக் கொள்வதை தீக்குளித்தல் என்கிறோம்.

          வேதம் அவளை தீக்குளிப்பாட்டியது. கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு இதுதான் கடைசி வழியானது. இந்த சதிச்செயல்தான் சுருக்கமாக “சதி” என அழைக்கப்பட்டது. இதை எதிர்த்துதான் ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள் பிற்காலங்களில் போராடினார்கள். ஏன்… சில வருடங்கள் முன்புகூட ராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற ஸ்திரியை கணவனை இழந்தவுடன் தீவைத்து தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள். வேதத்தீயின் வெளிச்சம் காலங்காலமாக கனலடித்துக் கொண்டிருப்பதற்கு  இது ஓர் உதாரணம்.

          பெண்களைப் பற்றிய பல வகையான அலசல்களை வேதத்தை மையமாக வைத்து நாம் இதுவரை பார்த்தோம். இதுபோன்று ‘சதி’ச் செயலகளால் எரிக்கப்பட்ட பெயர் தெரியாத அப்பாவி ஸ்திரிகளிடம் நாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக் கொள்வோம்.

          இப்படி நாம் நினைத்தாலும் பொதுவாகவே பெண்களின் ஆத்மாவை சாந்தியடைய விடாதுபோலிருக்கிறது இன்னொரு மந்த்ரம். இன்றும்… அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும்… கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்க்கிறோம்.

          ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி… அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரித்த தன் தாய்க்கு வருசாவருசம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன்வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள். ஆனால்?

          “என்மே மாதா ப்ரலுலோபசரதி
          அன்னவ் வ்ரதா தன்மே ரேதஹா
           பிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யநாம…”

          “நான் யாருக்குப் பிறந்தேன்… என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது. ஆனால் என் அப்பா யான் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.

          இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை வாத்யார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே. இந்த அர்த்தத்தை விளங்கிக்கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா? உதடுபடக்கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக்கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

          இதுவரை வேதகாலத்தில் பெண்களின் உயர்ச்சி, தாழ்ச்சி, பொதுவான நிலைமைகள் என்று சகலத்தையும் பார்த்தோம். வேதத்தில் சாகித்யம் பெற்ற பெண்கள் இருந்திருக்கின்றார்கள். சாபம் பெற்ற பெண்களும் இருந்திருக்கின்றார்கள். சரி… அதற்கடுத்து வேதம் வகுத்த வரையறைகளை கட்டளைகளாக நெறிமுறைகளாக மாற்றியமைத்துத் தந்த மநுஸ்மிருதியில் பெண்கள் எப்படி வாழ்ந்தார்கள். எப்படி வாழவேண்டும் என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்?

          முதலில் மநுஸ்மிருதி என்றால் என்ன? மநு என்பவர் வகுத்த ஸ்மிருதிகள் அதாவது தர்ம நெறிகள் மநு ஸ்மிருதி எனப்படும். மநு என்பவர் யார்? ஒரு மநு அல்ல, இரண்டு மநு அல்ல கிட்டத்தட்ட பதினைந்து மநுக்கள் இருக்கிறார்கள். மநு என்னும் பொதுவான பெயருக்கு கடவுளின் கட்டளைப்படி சிருஷ்டியின்போது பூமியை காக்க அவரால் நியமிக்கப்பட்டவர்தான் மநு என்கிறார்கள். அதாவது மனிதர்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்று நெறிகளை திட்டமிட்டு வகுக்கத்தான் கடவுளால் மநு அனுப்பப்பட்டார். மநு என்ற சொல்லில் இருந்துதான் மனுசன் என்ற பதமு வந்தது என்றொரு மொழிக்குறிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

          சரி… நாம் பார்க்கப்போகும் மநு யார்? அவர் வகுத்த தர்மசாஸ்திரத்தில் பெண்களைப் பற்றி என்ன சொல்கிறார்? உங்களுக்காக ஒரு காட்சியை கட்டவிழ்த்து விடுகிறேன் மனக்கண்ணால் அதைப் பாருங்கள். வீட்டு வாசலில் சின்னப் பெண் குழந்தை, எட்டு வயதிருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்… விளையாடிக்கொண்டிருக்கிறாள். மரப்பாச்சி (இன்றைய நகர நாகரிகம் வளர்ந்துவிட்ட சூழலில் உங்களுக்குப் புரிகிறதா? மரப்பாச்சி என்றால் மரத்தால் செய்யப்பட்ட உருவப் பொம்மைகள்தான்)களை வைத்துக்கொண்டு மழலை மாறாத அந்தக் குழந்தை விளையாடிக்கொண்டிருக்கும் வேளையில்…

          திடீரென அந்தப் பெண் குழந்தையை… ‘வாம்மா… நேரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. சீக்கிரம் தயாராக வேண்டும். பார்… எல்லோரும் வந்துவிட்டார்கள். இப்போதே குளித்து முடித்து சீவி சிங்காரித்துக் கொண்டால்தானே தாமதம் ஆகாமல் சீக்கிரம் ஆரம்பிக்கலாம் வா… வா…” என்று அழைக்கிறார்கள் அவளது அம்மாவும் அப்பாவும். ‘இரும்மா… விளையாடிட்டு இருக்கேன்… இன்னும் கொஞ்ச நேரம் விளையாடறேனே…”

          ஆனால் மநுஸ்மிருதியின் விளையாட்டு இங்கேதான் ஆரம்பமாகின்றது.

          எட்டு வயது பெண்குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக்கொண்டிருக்கின்றது. இடையில் மநு ஸ்மிருதி விளையாட ஆரம்பித்து விட்டது என்றேனே… மநு எப்படி விளையாடும்?... மரப்பாச்சி வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்த பெண் குழந்தையை வைத்துதான் மநு விளையாடியது!...
         
          என்ன சொல்கின்றார் இவர்?... என்ற கேள்வி எழுகின்றதா?... ஆமாம்… விளையாடிய குழந்தையை சீவி சிங்காரித்து அம்மா கூப்பிடுகின்றாளே எதற்கு? ‘தலைவாரி பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை என்ற அர்த்தத்திலா?... கிடையவே கிடையாது. அந்த எட்டு வயது சுட்டியை மணமேடைக்கு அழைத்துச் செல்கின்றார்கள்… எதற்கு?... மணப் பெண்ணின் பக்கத்தில் இப்போது சின்னச் சின்னக் குழந்தைகளெல்லாம் உட்கார்த்தி வைத்து அழகு பார்க்கின்றார்களே… அதற்காகவா?...
         
          முற்றிலும் கிடையாது… மணப்பெண்ணே அந்த எட்டு வயது சுட்டிதான்.  என்னது… எட்டு வயது பெண்தான் மணமகளா?... குழந்தைக்கு கல்யாணமா?... இதுதான் மநுவின் விளையாட்டு. மநுவின் கட்டளைகள் முன் சின்னப் பெண் குழந்தைகள் வெறும் மரப்பாச்சிகள்.  பெண்கள் மீது மநு தொடுத்த முதல் போர் இங்குதான் ஆரம்பிக்கின்றது.

          வேதம் பெண்களை எவ்வளவு கட்டுப்பாடுகளுக்குள் வைத்திருந்தாலும்… அவள் ருதுவான பின்னர் தான் திருமணம், மதுவர்க்கம் என்றெல்லாம் சடங்குகளை பின்னியது. ஆனால் மநு அப்படியல்ல… எட்டு வயதுக்குள்ளேயே பெண்களை கெட்டியாக பிடித்துக்கொண்டது. மநுபடி பெண்களுக்கு பொதுவான பெயர் க்ருஹிணி. அதாவது வீட்டுக்காரி. வீடுதான் அவள் உலகம். வீட்டுக்குள்தான் அவள் இருக்க வேண்டும். நான் முன்பு சொன்னேனே… வாசலில் விளையாடிக்கொண்டிருந்தாள் என்று திருமணம் வரைக்கும் வீட்டு வாசலில் விளையாடலாம்.
         
          அதன்பிறகு கல்யாணமாகி முழு க்ருஹிணி ஆன பின்னர் வீடுதான் அவள் சகலமும். கல்யாணத்தை மநு கன்னிகாதானம் என்கின்றது. கன்னிகையை தானம் செய்தல் கன்னிகாதானம். கன்னிகா என்றால் அதாவது கன்னிகை என்றால்?... மநு தர்மப்படி எட்டு வயது அடைந்த பெண்கள் அனைவரும் கன்னிகைகள். பின்… கன்னிகைகளுக்கு கல்யாணம் பண்ண வேண்டும். இன்னொருவன் கையில் பிடித்துக் கொடுக்க வேண்டும். அதாவது அவனிடத்திலே இந்த கன்னிகையை தானம் செய்ய வேண்டும். இது கன்னிகாதானம்.

          இதைத்தான்… ‘அஷ்ட வருஷா பலேத் கன்யா...’ என்கின்றார் ஆதிபுருஷர் மநு. இதில் இன்னொன்று… எட்டு வயது தான் கன்னிகைக்குரிய வயது. எட்டு வயது கொஞ்சம் தாண்டினாலும் அவள் கன்னிகை பருவத்தை கடந்து விடுகின்றாள். அதனால், அதன் பிறகு அவளுக்கு செய்வது கன்னிகா தானமல்ல. அதாவது கல்யாணமல்ல.

(தொடரும்)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.