Sunday, November 19, 2017

சித்தர்கள் பார்வை - உயிர் பலியை கண்டித்தல்

வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமி ஐயா அருள் நிலையம் வழங்கும் வள்ளற்பெருமானின் “சன்மார்க்க விவேக விருத்தி” என்னும் மின்னிதழில் “நவம்பர் – 2017” வெளியானவை.

சித்தர்கள் பார்வை
உயிர் பலியை கண்டித்தல்

நவீன மருத்துவ வசதிகள் இல்லாத அன்றைய காலகட்டத்தில் மக்கள் தங்களை துன்புறுத்திய நோயினை தீர்க்க இறைவனிடம் வேண்டினர். அவ்வேண்டுதல் என்பது உயிர்களை பலியிடுதல் வரை சென்றது. தாங்கள் விவசாயத்திற்காக வளர்த்து வந்த ஆடு, மாடு, கோழிகளை இறைவனுக்கு பலி கொடுக்கின்றேன் என்று இறைவன் முன்பு கொலை செய்வார்கள். அந்த கொலைச் செயலை மெச்சி அவ்விறைவர் அவர்களது நோயினை தீர்த்துவிடுவார் என்ற மூடநம்பிக்கை மக்களிடையே இருந்தது. இன்றும் அந்த கொடூர நம்பிக்கை நேர்த்திக்கடன் என்ற போர்வையில் சில துர்கோயில்களில் நடந்தேறுகின்றன. மண்ணில் உருண்டு புரளுதல், மண்சோறு சாப்பிடுதல், தீமிதித்தல், ஊசி, கம்பி, வேல், திரிசூலம் ஆகிய ஆயுதங்களால் உடம்பில் குத்திக்கொள்ளுதல், நிர்வாண பூசை செய்தல், தலையில் தேங்காய் உடைத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல், ஆணி செருப்பில் நடத்தல், உயரத்தில் தொங்குதல், உயிர்களை கொன்று பச்சை ரத்தத்தை குடித்தல் இன்னும் பல கொடூர செயல்கள ஆன்மீகம் என்ற போர்வையில் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

          அன்றைய காலத்தில் வாழ்ந்த சிவவாக்கியர் என்கின்ற சித்தர் இப்பழக்கத்தினை கண்டித்துள்ளார். ஆடு, மாடு, கோழிகளை பிடாரி துர்கோயிலில் பலி கொடுப்பதைக் கண்ட சிவவாக்கியார், நீங்கள் எந்தத் தெய்வம் அருள் செய்யும் என்று பலி கொடுக்கின்றீர்களோ அந்தத் தெய்வமே உங்களை, உங்கள் வாழ்வை உருகுலைய செய்து, உங்களை தேய்வடையச் செய்து, உங்களை மூஞ்சூறு போல் ஆக்கும் என்று சாபமிடுகின்றார். அவருடைய சாபம் இன்றைய பலி கொடுக்கும் மக்களுக்கும் பொருந்துவதாய் உள்ளது. குலதெய்வ வழிபாட்டை தவிர்க்க வேண்டும் என்ற சிவவாக்கியாரின் பாடல்…

தங்கள் தேகம் நோய்பெறின் தனைபிடாரி கோயிலிற்
பொங்கல் வைத்தும் ஆடுகோழி பூசைபலியை இட்டிட
நங்கசொல்லு நலிமிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலத் தெய்வமுங்க ளுருக்குலைப்ப துண்மையே.

கும்பிடும் தெய்வ மெலாம் குல தெய்வமாய் சோடித்தே
நம்பி நாளும் பூசை செய்து நற்படிகள் தந்திட
வெம்பிட வெதும்பிட மிடியதின லிடிபட
தெம்பிட குடிகெடுக்கும் செத்த தெய்வமாகுமே.

நீங்கள் குல தெய்வம் என்று கூறி அந்த தெய்வம் தன்னை காக்கும் என்று எண்ணி, தினந்தோறும் பொங்கல் பூசை செய்து வந்த போதும் அந்த குல தெய்வம் உன் தெம்பை குறைத்து, உன்னை வெம்ப வைத்து, மனம் வெதும்பவைத்து உன் வாழ்வில் இடிவிழுந்தது போன்று கஷ்டம், பிரச்சனைகளை மேலும் அதிகமாக தரும் இந்த குல தெய்வம் என்பது குடியை கெடுக்கும் செத்த தெய்வம் ஆகும் என்கின்றார்.
                       

இந்த வழிபாட்டு முறைகளும் ஆன்மீகம் அல்ல, இந்த முறையும்  ஞானம் அடைய உதவாது, தன்னையறியும் பக்குவத்தை தராது என புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.